ஒருவருக்குத் திருமணம் நடப்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். ஒருவரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்க அவருடைய ஜாதகத்திலிலிருக்கும் லக்னத்திற்கு 2-ஆம் அதிபதியும் சுக்கிரனும் முக்கியமானவை.
ஒருவரின் ஜாதகத்தில் 2-ல் 2-ஆம் அதிபதி இருந்தால், அது சுபகிரகமாக இருந்தால், அவருடைய வாழ்க்கை ஆனந்தம் நிறைந்ததாக இருக்கும். 2-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகரின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். அந்த சுக்கிரனை குரு பார்த்தால் திருமண வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். ஏதாவது பிரச்சினைகள் இருந்தாலும், அவை தானாகவே விலகிவிடும்.
லக்னாதிபதியும் 7-க்கு அதிபதியும் சுபகிரகத்தால் பார்க்கப்பட்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருந்து அல்லது லக்னத்தில் இருந்து, அந்த ஜாதகத்தில் 7-க்கு அதிபதி 9 அல்லது 10-ல் இருந்தால் ஜாதகருக்கு திருமணத்திற்குப் பிறகு நிலைமைகள் மாறும். மேலும் சந்தோஷம் வந்துசேரும். 7-க்கு அதிபதி 10 அல்லது 11-ல் இருந்தால், ஆணாக இருந்தால் மனைவி வந்தபிறகு, பெண்ணாக இருந்தால் கணவன் வந்தபிறகு மகிழ்ச்சி, பதவி உயர்வு, பண வரவு ஆகியவை தேடிவரும்.
7-க்கு அதிபதி 5-ல் இருந்தால், அந்த ஜாதகருக்கு திருமணம் நடந்தபிறகு சந்தோஷமும், பதவி உயர்வும் கிடைக்கும்.
5-க்கும் 9-க்கும் அதிபதி 7-ஆம் அதிபதியுடன் சேர்ந்து 10 அல்லது 11-ல் இருந்தால், அவருக்கு திருமணம் நடந்தபிறகு பெயர், புகழ் கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் புதன், 2-ல் சுக்கிரன் இருந்து 7-க்கு அதிபதி 10-ல் இருந்தால், திருமணத்திற்குப் பிறகு அவருக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு கிட்டும். இங்கேயே இருந்தால், செய்யும் தொழிலில் பெரிய அளவில் வெற்றிகிட்டும்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும் 4-க்கு அதிபதியும் லக்னத்தில் அல்லது 9-ல் இருந்தால் அல்லது சுக்கிரன் சுய வீட்டில் அல்லது உச்சமாக இருந்தால் அவருக்கு திருமணத்திற்குப்பிறகு சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் கெட்டுப்போயிருந்தால் அல்லது செவ்வாய், ராகுவுடன் இருந்தால், அவருக்கு திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும் அல்லது திருமணம் நடைபெற்றபிறகு பிரச்சினைகள் உண்டாகும்.
ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி கெட்டுப்போனால் அல்லது 2-ஆம் பாவத்தில் சூரியன், சுக்கிரன், சனி அல்லது செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி, ராகு அல்லது ராகு, சூரியன், சுக்கிரன் இருந்தால் அவருக்கு திருமணம் நடத்தபிறகு பிரச்சினைகள் உண்டாகும். மனதில் நிம்மதி இருக்காது.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சனி 4, 7 அல்லது 8-ல் இருந்தாலும், சுக்கிரன், ராகு, சனி அல்லது சுக்கிரன், செவ்வாய், ராகு 7, 8-ல் இருந்தாலும் அவருக்கு திருமண விஷயத்தில் தடைகள் இருக்கும். திருமணம் நடந்த பிறகும் பிரச்சினைகள் உண்டாகும். செவ்வாய், சனியுடன் சேர்ந்து விரய ஸ்தானத்தில் இருந்து, 7-ல் பாவ கிரகம் இருந்தால் அல்லது 7-ஆம் அதிபதி அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்தால், அவருக்கு திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் இருக்கும்.
பரிகாரங்கள்
திருமண வாழ்க்கையில் தடைகள் இருந்தால், தினமும் சிவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்யவேண்டும். திங்கட்கிழமை சிவனுக்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்யவேண்டும்.
வெள்ளிக்கிழமை விரதமிருப்பது நல்லது. அல்லது ஒருவேளை மட்டும் உணவருந்தலாம்.
பெண்கள் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்ற வேண்டும். எலுமிச்சம்பழத்தில் ஏற்றக்கூடாது. கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும்.
வருடத்திற்கொருமுறை குலதெய்வத்தை பூ, பழம் வைத்து வழிபடவேண்டும்.
ஆண்கள் செவ்வாய்க்கிழமை ஆஞ்சனேயரைச் சுற்றிவந்து வழிபடுவது சிறந்தது. பெண்கள் விநாயகரை நான்குமுறை சுற்றிவந்து வணங்கவேண்டும்.
வீட்டில் தென்கிழக்கில் நீர் பிடித்து வைப்பதைத் தவிர்க்கவும். படுக்கையறையில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைப்பது நல்லதல்ல. கதவுக்கு மேலேயும், தெற்கு திசையிலும் கடிகாரம் இருக்கக்கூடாது.
மேற்கண்டவற்றைக் கடைப்பிடித்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
செல்: 98401 11534