முற்பிறப்பு, இப்பிறப்பு, அடுத்த பிறப்பு என மூன்று ஜென்மங்களைப் பற்றித் தெரிவிப்பது ஜோதிட சாஸ்திரமாகும்.

Advertisment

ஜாதகக் கட்டத்திலுள்ள பன்னிரண்டு பாவங்களில் முற்பிறப்பைக் குறிப்பது ஒன்பதாம் பாவமாகும். இப்பிறப்பைக் குறிப்பது முதல் பாவமாகும். அடுத்த பிறப்பைத் தெரிவிப்பது ஐந்தாம் பாவமாகும். ஜென்ம லக்னத்திற்கு பத்தாமிடம் கர்மஸ்தானம் எனப்படும். அதாவது இந்தப் பிறவியில் அனுபவிக்கப்போகும் பிரார்ப்த கர்மங்களைக் குறிக்கும் இடமாகும்.

முற்பிறப்பில் செய்த கர்மங்களைக் குறிப்பது ஆறாம் பாவமாகும். அடுத்த ஜென்மத்தில் அனுபவிக்கப்போகும் கர்மங்களைக் குறிப்பது ஆறாம் பாவத்தின் ஒன்பதாம் பாவமான இரண்டாம் பாவமாகும். அடுத்த பிறப்பைக் குறிக்கும் ஐந்தாமிடத்திற்கு பத்தாவதாக வருவது இரண்டாமிடம். எனவே இரண்டாமிடம் அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டியதைக் குறிக்கும்.

murugan

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு இரண்டாமிடம் வாய், உண்ணும் உணவைக் குறிப்பது. எனவே இந்த ஜென்மத்தில் நாம் பிறர் இட்ட அன்ன ஆகாரங்களை சாப்பிடுவதால், அடுத்த ஜென்மத்தில் நாம் அவர்களுக்கு கடன்பட்டவர்களாகிவிடுகிறோம்.

இந்தப் பிறவியில் நமக்கு சோறு போட்டவர்கள் நம் பெற்றோர். எனவே நாம் அவர்களுக்குக் கடன்பட்டவர்கள். இதன் அடிப்படையிலேயே பித்ரு வழிபாட்டில் சோற்றுப்பிண்டம் வைக்கப்படுகிறது.

லக்னம் ஜாதகரைக் குறிக்குமிடம். லக்னத்திற்கு ஒன்பதாமிடம் ஜாதகருடைய தந்தையைக் குறிக்குமிடம். ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாம் பாவம் தந்தைக்குத் தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடம்.

Advertisment

ஜாதகர் இப்பிறப்பில் தன்னிச்சையாகச் செய்யும் தெய்வ வழிபாட்டைக் குறிக்கும் இடம் ஒன்பதாம் இடமாகும். எனவே ஒன்பதாமிடம் ஜாதகரின் இஷ்ட தெய்வம் அல்லது உபாசனா தெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது.

ஜாதகரின் தந்தையைக் குறிப்பது ஒன்பதாமிடம் என்பதால், தந்தை தெய்வத்திற்கு சமமானவராவார். தந்தை வழிபட்ட தெய்வத்தைக் குறிக்குமிடம் ஒன்பதிற்கு ஒன்பதாமிடமான ஐந்தாமிடமாகும். எனவே ஐந்தாமிடம் குலதெய்வத்தைக் குறிக்குமிடமாகக் கருதப்படுகிறது.

தந்தையின் தந்தையான பாட்டனாரைக் குறிக்குமிடமாகவும் ஐந்தாமிடம் வருவதால், பாட்டனாரும் தெய்வத்திற்கு சமமானவராவார். இதன் அடிப்படையில் பார்க்கும்போது ஐந்தாமிடம் பித்ரு வழிபாட்டைக் குறிக்குமிடமாகவும் அமைகிறது.

கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு.

மேலும் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு பன்னிரண்டாவதாக அமையும் பாவமானது அந்த குறிப்பிட்ட பாவத்திற்கு எதிராகச் செயல்படும் அல்லது அந்த பாவத்தை அழிக்கும்.

இதன்படி பூர்வஜென்ம கர்மத்தைக் குறிக்கும் பாவமான ஆறாம் பாவத்தை அழிக்கவேண்டுமானால் அதற்குப் பன்னிரண்டாவதாக வரும் ஐந்தாம் பாவம் குறிக்கும் குலதெய்வ வழிபாடு மற்றும் ஒன்பதாம் பாவம் குறிக்கும் பித்ருக்கள் வழிபாடு, உபாசனை தெய்வ வழிபாடு ஆகியவற்றைத் தவறாமல் செய்துவரவேண்டும். இதனால் முன்ஜென்ம வினைகளால் வரும் பிரச்சினைகளிலிருந்தும், இடையூறுகளிலிருந்தும் நாம் காப்பாற்றப்படுவோம்.

இந்த ஜென்மத்தில் நாம் செய்யும் கர்மங்களைக் குறிக்கும் பத்தாம் பாவத்திற்கு பன்னிரண்டாவதாக வரும் ஒன்பதாமிடம் இஷ்ட தெய்வ வழிபாட்டைக் குறிக்குமிடம். எனவே இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் வினைகளிலிருந்து விடுபட, முதலில் நம் பெற்றோர்களை நல்லமுறையில் பேணிக்காத்து, அவர்களுடைய அன்பும் ஆசியும் எப்பொழுதும் நமக்குக் கிடைக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

பல தலைமுறையாக தொடர் சாதனை செய்துவரும் மிகப்பெரிய நிறுவனங்களின் வளர்ச்சிக்குக் காரணம் முறையான குலதெய்வ, உபாசனை தெய்வ மற்றும் பித்ருக்கள் வழிபாடே ஆகும்.

ஜோதிட ரீதியாக பித்ரு தோஷத்தை உணரும் வழிகள்ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், ராகு- கேது, மாந்தி சம்பந்தம்; ஒன்பதாம் அதிபதி, ராகு- கேது, மாந்தி சம்பந்தம்; சூரிய கிரகணம், சந்திர கிரகணத்திற்கு ஏழு நாட்கள் முன்- பின் பிறக்கும் குழந்தைகள் கடுமையான பித்ரு தாக்கம் இருப்பதைக் குறிக்கும்.

சூரியன், ராகு சேர்க்கை தந்தைவழி பித்ரு தோஷத்தையும், சூரியன், கேது சேர்க்கை தாய்வழி பித்ரு தோஷத்தையும் குறிப்பது.

1, 5, 9 பாவங்களுடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்து பித்ரு தோஷத்தைத் தெளிவாக உணரமுடியும். ஜாதகம் பார்க்க வருபவர்களில் பலர் "எங்கள் தலைமுறைக்கே முன்னோர் வழிபாடு செய்யும் பழக்கம் இல்லை' என்று கூறுகிறார்கள். பலர் "ஏன் முன்னோர் வழிபாடு செய்ய வேண்டும்?' என்றும் கேட்கிறார்கள்.

தாய்- தந்தையின் மரபணுவில் உருவாவதே குழந்தை. முன்னோர்களின் மரபணுவில் தோன்றிய நமக்கு முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், சாந்தியடைந்த ஆன்மாவின் ஆசி பெறவும் பித்ரு கர்மாக்களைச் செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

பித்ரு சாபம், பித்ரு தோஷம் எப்படி உண்டாகிறது என்று பார்க்கலாம்.

"பித்ருக்கள்' என்ற சொல் இறந்துபோன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தைவழியில் (பிதுர்வழி பித்ருக்கள்) மற்றும் தாய்வழியில் (மாதுர்வழி பித்ருக்கள்) இறந்துபோன முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. அவற்றையே நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு அனுபவிக்கும்போது, பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணியப் பலனையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும்போது அவர்களைப் பேணிக்காத்து பசியினைப் போக்க வேண்டும். அதேபோல் அவர்கள் மறைந்தபின்பும் பசியைப் போக்கவேண்டும். இதுவே பிதுர்க்கடன் எனப்படும். இதையே திருவள்ளுவர் "நீத்தார் கடன்' என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். இத்தகைய முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு நாம் செய்யும் வழிபாடுதான் பிதுர்க்கடன் தீர்த்தல் எனப்படுகிறது. நமது பித்ருக்கள்தான் கடவுளரின் அருளை நமக்கு வெகுஎளிதாகப் பெற்றுத்தரும் வல்லமை பெற்றவர்கள். பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களிலுள்ள நீர்நிலைகளில் வந்து தங்குவர்.

அப்போது நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியைப் போக்காமல் இருந்தால் அவர்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

கோபம் கொண்ட பித்ருக்கள் கொடுக்கும் சாபம் தெய்வத்தின் அருளையே தடைசெய்யும் வலிமை கொண்டது. எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்திலுள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் தொடர் வறுமை, படிப்பு, வேலை, திருமணம், மணவாழ்க்கையில் பிரச்சினை, குழந்தையின்மை, குழந்தைகளால் பிரச்சினை என ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும்.

தொடரும் கடன் பிரச்சினைக்கு முன்னோர் வழிபாடே சிறந்த பரிகாரமாகும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்புதான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும்வரை ஜாதகத்திலுள்ள எந்த யோகமும் பலனைத் தராது.

பிதுர் தோஷமும் பரிகாரங்களும்

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு- கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாகக் கருதப்படும். ராகுவும் கேதுவும் நமது முன்வினைகளைப் பிரதிபலிப்பவை. ராகு தந்தைவழிப் பாட்டனாரையும், கேது தாய்வழிப் பாட்டனாரையும் குறிக்கும் கிரகங்களாகும். ராகுவும் கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ- புண்ணியக் கணக்கினைத் தெளிவாகக் காட்டுவதோடு மட்டுமல்லாமல், அந்த பாவங்களைத் தீர்க்க முடியுமா முடியாதா என்பதையும் காட்டும். கிரகங்களில் மிகவும் வலிமையானவை ராகு- கேதுக்களே.

மேலே குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு- கேது அமைந்திருந்தால் பல பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. அது மட்டுமில்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருளைப் பெறுவதால், அவர்களது பாவ- புண்ணியங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதியாகும்.

பித்ருகர்மாக்களைக் கடைப்பிடிக்கும் வழிமுறைகளில் முதலில் தோஷ காலம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

தந்தை அல்லது கணவர் இறந்தால் ஒரு வருடம்; தாய் அல்லது மனைவி இறந்தால் ஆறு மாதம்; பிள்ளைகள் இறந்தால் ஐந்து மாதம்; சகோதரன்- சகோதரி இறந்தால் மூன்று மாதம்; தாத்தா- பாட்டி, நெருங்கிய உறவினர் இறந்தால் ஒரு மாதம் தோஷ காலமாகும்.

இனி அடைப்புக்காலம் பற்றிக் காண்போம்.

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியம். அந்த நட்சத்திரத்தைக் கொண்டு ஆன்மா அடங்கும் விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்கு "தனிஷ்டா பஞ்சமி' என்று பெயர்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 98652 20406