சென்ற இதழ் தொடர்ச்சி...
உடலைப் பிரிந்த ஒரு ஜீவன் ஆறு மாதங்கள் தொடர்ந்து பயணித்து பித்ரு லோகத்தை அடைந்து, சிறிது காலம் தங்கி, பின் பயணித்து, தான் உடலை நீத்த ஓராண்டு முடிவில், அதே திதியில் தர்மதேவதையின் வைவஸ்தவம் என்னும் நகரை அடைகிறது.மிகப்பெரிய புண்ணிய நகரமாகிய அதன் அழகையும் ஒளியையும் புனிதத்தையும் புராதன நூல்கள் விவரிக்கின்றன.பூவுலகில் வாழ்ந்தபோது தெய்வத்திடம் பக்தி, சத்தியத்தைக் கடைப்பிடித்தல், மற்ற உயிர்களிடம் கருணை, திருக்கோவில்களை தரிசிப்பது, புனர்நிர்மாணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுதல், பித்ரு பூஜைகளைத் தவறாது செய்தல் போன்ற காரியங்களைச் செய்துள்ள உத்தம ஜீவர்களை, தர்மராஜன் தங்கமயமான தனது சிம்மாசனத்திலிலிருந்து இறங்கிவந்து கையைப் பிடித்து அன்புடன் வரவேற்று, சம ஆசனமளித்து மரியாதை செய்து, அவரவரது புண்ணிய காரியங்களுக்கேற்ப பிற புண்ணிய உலகங்களுக்கு அனுப்பி வைக்கிறார்.
அந்த உலகங்களில் தாங்கள் செய்துள்ள நற்செயல்களுக்கேற்ற காலம்வரை சுகங்களை அனுபவித்து அந்த உத்தம ஜீவன்கள் மீண்டும் பூமிக்குத் திரும்பி முற்பிறவியைவிட உயர்ந்த பிறவியை எடுக்கிறார்கள்.
இதற்கு மாறாக, உலகில் வாழ்ந்தபோது மமதையினால் பாவம் செய்தவர்கள் புண்ணிய உலகங்களுக்குச் செல்லாமல் வேறுசில உலகங்களுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் பூவுலகில் மனிதர்களாகவோ அல்லது பிராணிகளாகவோ அல்லது புழு, பூச்சிகளாகவோ பிறவி எடுக்கின்றனர்.
இவ்விதம் பிறவி, மரணம், மறுபிறவி என்ற பயணத்தின்போது அவரவர்களுடைய பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள் செய்யும் பித்ருபூஜையின் பலன்கள் சூரியபகவானால் நம்மிடமிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்கென்றே படைக்கப்பட்டுள்ள பித்ரு தேவதைகளின் திருக்கரங்களில் ஒப்படைக்கப்படுகின்றன.
அவ்விதம் ஒப்படைக்கப்பட்ட பித்ரு பூஜா பலன்களை பித்ரு தேவதைகள் எடுத்துச் சென்று, நமது மறைந்த மூதாதையர் எங்கிருக்கிறார்களோ, எப்பிறவி எடுத்திருக்கிறார்களோ அதற்கேற்ப உணவாகவும், நீராகவும் மாற்றிக்கொடுத்துவிடுகின்றனர். இதனால் பசி, தாகம் நீங்கி நம் முன்னோர்கள் மன நிறைவடையும்போது அந்தப் புண்ணியத்தின் பலனை பித்ரு தேவதைகள் ஏற்று சூரிய பகவானும் அளித்துவிடுகின்றன. சூரியன் அந்தப் பலனை நமக்குத் திரும்பத் தந்துவிடுகிறார்.
நமது முன்னோர்களில் சிலர் மகத்தான புண்ணியத்தைச் செய்து, அதன் பலனாக பிறப்பு- இறப்பு அல்லாத முக்தி நிலையை அடைந்திருந்தால், அத்தகைய பித்ருக்களுக்கு நாம் செய்யும் பூஜா பலன்களை இறைவனே ஏற்றுக்கொண்டு, அதற்குப் பிரதிபலனாக பல நன்மைகளை நமக்கு அளித்தருள்கிறான்.
நமது முன்னோர்களில் எவரெவர் முக்தி நிலையை அடைந்துள்ளனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள முடியாதென்பதால், பித்ரு பூஜைகளைத் தொடர்ந்து நாம் செய்யவேண்டும்.
நாம் செய்யும் எந்த பித்ரு பூஜையும் வீணாவதில்லை. அதனால் திருப்தியும் மனநிறைவும் மகிழ்ச்சியும் அடைந்து, நம் பித்ருக்கள் நம்மை ஆசிர்வதிக்கும்போது, அந்த ஆசி நம்மை ஏராளமான துன்பங்களிலிலிருந்து காப்பாற்றிவிடுகிறது.
சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று, தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீர் தரப்படவில்லை என்றால், அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒருசில பித்ருக்கள் சாபம்கூட தந்துவிட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் பகல் 11.00 மணிமுதல் 12.00 மணிவரை சுமார் ஒரு மணி நேரத்தில்தான் பித்ருக்கள் நாம் படைக்கும் அமாவாசைப் பண்டத்தை ஏற்கத் தயாராக இருக்கிறார்கள். அதைப்போலவே இறந்தவர்களுக்கு, அவர்கள் இறந்துபோன திதிதான் முக்கியம். அன்றைய தினத்தில் மட்டுமே அவர்கள் நம்மை நாடிவருகிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அமாவாசை மற்றும் இறந்துபோன திதியில் மட்டுமே அவர்கள் வருகிறார்கள். எனவே அதைவிடுத்து அவர்கள் இறந்துபோன தேதியைக் கணக்கிட்டுத் திதி கொடுப்பது வீணானதுதான். ஒரு மாதம் என்பது இறந்து போனவர்களுக்கு ஒரு நாள். அந்த ஒருநாளில் அவர்கள் மறைந்துபோன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் திருப்தியைத்தேடி வருகிறார்கள்.
அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்ப்பணம் போன்றவற்றைக் கொடுக்கவேண்டும்.
பொதுவாக ஒரு வருடத்தில் இத்தனை திவசம் கொடுக்கவேண்டும் என்று சாஸ்திரங்களில் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டுக் கொடுப்பதுதான் திவசம் என்றாலும், இறந்துபோனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை திவசம் கொடுக்க வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது. ஆன்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடைய உறவினர்கள் செய்யும் இந்த 16 திவசங்கள் அவர்களைத் திருப்திப்படுத்தி, அவர்கள் ஜென்மசாபல்யம் அடையச் செய்துவிடுகிறது. திவசங்கள் கட்டாயமாக இறந்தவரது குடும்பத்தாரால்தான் செய்யப்பட வேண்டும். இறந்துபோனவர்களின் 10-ஆம் நாள், 16-நாள் காரியங்கள் மற்றும் மாதாமாதம் ஒரு திவசம், 27-ஆம் நாள் ஒரு திவசம், 12-ஆம் மாதத்துக்கு முன்பு ஒன்று என மொத்தமாக 16 முறை திவசங்கள் செய்வது இறந்துபோனவரின் ஆன்மாவைக் குளிரச்செய்துவிடும்.
இறந்தவர்களின் ஆன்மா, அது மேற்கொள்ளும் யாத்திரை, அப்போது அவர்களுக்காக நாம் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் என எல்லாவற்றையுமே கருட புராணம் விளக்கமாகக் கூறுகிறது. எல்லாருமே இறந்தவர்களின் முதல் ஆண்டுக்குள் 16 முறை திவசம் கொடுப்பது நல்லது. வாழும்போது நட்சத்திரம்; வாழ்ந்தபிறகு திதி என்பதே நம்முடைய மரபு.
ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு. இவற்றில் மன்வாதி நாட்கள் 14; யுகாதி நாட்கள் 4; யுகாந்த நாட்கள் 4.
மாதப்பிறப்பு நாட்கள் 12; அமாவாசை 12; மகாளய பட்சம் 14; வியதீபாதம் 12; வைதிருதி 12; அஷ்டகா 4; அன்வஷ்டகா 4; பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
தோஷம் நீங்க ஒருமுறை பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நட்சத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம் செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
மாதம்தோறும் கொடுப்பது திவசமா? அதை யார் வேண்டுமானாலும் செய்யலாமா என்பது போன்ற பல்வேறு சந்தேங்கள் மக்களிடையே உள்ளன.
"திதி, திவசம் குறித்து சாஸ்திரம் கூறுவது என்னவென்றால், திவசம் வேறு; தர்ப்பணம் வேறு. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் எல்லாரும் செய்யவேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்கினி என எல்லா தேவர்களுக்கும் நீர்நிலைகளில் நின்று ஜலத்தை அள்ளிவிட்டு "ஆதித்யா தர்ப்பயாமி' என ஒவ்வொரு தேவருக்கும் செய்வதே தர்ப்பணம். தர்ப்பணம் என்றால் "திருப்தி செய்வது' என்று பொருள். நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது'ஆனால், அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும் நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இந்த இரு நாட்களில் மட்டுமே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் இதை ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.
திவசம் என்றால் இறந்தவர்கள் எந்த மாதம், எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம், அந்தத் திதியில் (பஞ்சமி என்றால் அந்த மாதப் பஞ்சமி) பிராமணரை அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு. ஹோமம் வளர்த்து முதலிலில் தேவர்களைத் திருப்தி செய்யவேண்டும். பின்னர் மூன்று தர்ப்பைப் புல்லிலில் இறந்துபோனவர்கள் மற்றும் அவர்களது முன்னோர்கள் என அனைவரையும் மானசீகமாக வரவழைத்து, அவர்களின்மேல் பிண்டம் வைத்து உணவளிக்க வேண்டும். அந்த பிண்டத்தை பசுக்களுக்கு அளித்து, பிராமணருக்கு அரிசி, காய்கறிகள், தட்சிணை அளித்து ஆசி பெறவேண்டும். பின்னர் படையலிலிட்டு, காக்கைக்கு உணவிட்டு, அதன்பிறகே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும்.
இதுவே திவசம் எனப்படுகிறது. இது வசதியுள்ளவர்கள் செய்யக்கூடியது. வசதியில்லாதவர்கள் அந்த திதியில் நீர்நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம்.
ஆனால் திவசமோ, தர்ப்பணமோ திதியைப் பார்த்து மட்டுமே தர வேண்டும். தந்தை இல்லாதவர்கள் மட்டுமே திவசம், தர்ப்பணம் செய்யவேண்டும்.
ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிரார்த்தம் செய்யும்போது, சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதைக் கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்திரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.
மகாளய பட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும் பசியும் மிக அதிகமாக இருக்கும்.
அதனால் அவர்கள் அருளைப்பெற வேண்டுமானால் அந்த 15 நாட்கள் சிரார்த்தம் செய்யவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். அதாவது அப்பா வகையைச் சார்ந்த பித்ருக்கள் "பித்ருவர்க்கம்' எனப்படுவார்கள். அம்மா வகையைச் சார்ந்த பித்ருக்கள் "மாத்ருவர்க்கம்' எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் "காருணீக வர்க்கம்' எனப்படுவார்கள். இவர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணங்களைச் செய்யவேண்டும்.
தாய்- தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவுகொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்யவேண்டும். அதுதான் சிறப்பானது. முழுப் பலன்களையும் தரவல்லது. குடும்பத்தில் சந்நியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.
தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியைப்பெற வழிவகை ஏற்படும்.
தலைமுறையாகத் தொடர்ந்துவரும் சில பித்ருதோஷத்தில் இரண்டு, மூன்று ஆன்மாக்களின் தாக்கம் இருக்கும். சிலருக்கு என்னவென்று இனம்புரியாத பித்ரு தாக்கம் அவஸ்தை தரும். பல சமயங்களில் என்ன மனத்தாங்கலால் ஆன்மா சாந்தியடைய முடியவில்லை என்று புரியாது. பலபேருக்கு பித்ரு தாக்கம் தண்டனை தரும் நிலையில் இருக்கும். இதுபோன்ற நேரங்களில் பித்ரு தாக்க வலிலிமையை சோழிப் பிரசன்னம்மூலம் அறியலாம்.
பித்ரு பூஜைகளின் மகத்தான புண்ணியப் பலன் அளவற்றது என்பதையும், எக்காரணத்தைக் கொண்டும் பித்ரு பூஜைகளை விட்டுவிடக்கூடாது என்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.
செல்: 98652 20406