பித்ருக்கள் என்பவர்கள் நம் தந்தை, தாய்வழியில் வாழ்ந்து மறைந்த 21 தலைமுறை முன்னோர்கள்.

Advertisment

பித்ரு தோஷம், சாபம் என்ற இரண்டு விஷயங்களை இங்கு தெளிவு செய்ய விரும்புகிறேன்.

தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள்படும். பித்ருக்களாகிய நம் முன்னோர்கள் பூமியில் வாழ்ந்த காலத்தில் என்ன குண இயல்போடு இருந்தார்களோ, அதே குண இயல்பு ஆன்மாவாக மாறிய பின்னரும் மாறாது.

பித்ருக்களாகிய முன்னோர்கள் தானம், தர்மம் செய்த நல்லவராக இருந்தால், தனக்கு திதி கொடுக்கவில்லை என்றாலும் வருத்தத்தோடு தன் சந்ததியினருக்கு ஆசி வழங்கத் தயாராக இருப்பார்கள். இவ்வகைக் குற்றம் பித்ரு தோஷம். இத்தகையவர்களுக்குத் தரும் திதி, தர்ப்பணம் ஜாதகருக்கு பெரும் பலன் கிடைக்கச் செய்கிறது.

Advertisment

tharpanam

சொத்துப் பிரச்சினை, பிறர் வாழ்வில் முன்னேற்றத்தைத் தடுப்பது, சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படுத்துவது, மாமனார்- மாமியார் பிரச்சினை, பிள்ளை இல்லா சொத்தை அனுபவிப்பவர்கள் போன்ற காரணங்களால்- கோபத்தால்- மனவேதனையால் இயற்கை அல்லது இயற்கைக்கு மாறான மரணமடைந்தவர்களின் ஆன்மா எளிதில் அடங்காமல், தன் தலைமுறையினரை வாட்டி வதைப்பது பித்ரு சாபம்.

பித்ரு தோஷம், சாபம் மிகப்பெரிய குற்றமாக ஜாதகரை வதைக்கிறது. இந்த பித்ரு தோஷம்தான் திதிகள்மூலம் திதி சூன்யத்தை ஏற்படுத்துகிறது.

Advertisment

ஒரு மனிதன் இந்த பூமியிலே பிறப்பதற்குக் காரணம், அவன் முற்பிறவியில் செய்த பாவமும் புண்ணியமும் ஆகும். பாவ, புண்ணியங்களை அனுபவிப்பதற்காகவே இப்பூமிக்கு வருகிறான். அதனால் நாம் வாழும் பூமிக்கு "தர்ம கர்ம பூமி' என்று பெயர்ஒருசிலர் அவர்கள் நினைத்ததை நினைத்தபடியே செய்துவிடுகிறார்கள். ஒருசிலர் நினைத்ததை திட்டமிட்டுச் செய்கிறார்கள். ஒருசிலரோ நினைத்த மாத்திரத்திலேயே செய்துவிடுகிறார்கள். வேறுசிலர் எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு ஆவலுடன் செய்தாலும் நினைத்த விஷயத்தை அடைய முடிவதே இல்லை. "இதற்கெல்லாம் நான் பிறந்த நேரமே காரணம்' என்று சிலர் பேசக்கேட்டிருக்கிறோம்.

ஜாதகத்தில் 9-ஆவது இடம்தான் "உயர்வானதை அடைவது'. அதாவது நாம் இந்த உலகத்தில் வந்து நம் ஆசைகளை அடைகின்ற பகுதி. அந்த 9-ஆவது இடத்திற்கு ஒருவரது ஜாதகத்தில் நல்ல அமைப்பிருந்தால், அவர் அதிர்ஷ்டசாலியாக மாறுகிறார். எண்ணியதையும் அடைந்துவிடுகிறார்.

ஒன்பதில் மோசமான கிரகங்கள் அல்லது பாவ கிரகங்களின் பார்வை இருக்கப் பிறந்தவர் தடுமாறுகிறார்; போராடுகிறார்; அந்த இலக்கை அடைவதற்கு அதிக கஷ்டப்படுகிறார். இதுதான் ஜோதிட ரகசியம்.

ஜோதிட ரீதியாக பித்ரு தோஷத்தை நமது ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களை வைத்து அறியமுடியும்.

1-ல் சம்பந்தம் பெறும் கிரகம் சார்ந்த காரகத்துவக் குற்றம் புரிந்து மறைந்த ஆன்மாவின் மறுபிறப்பே ஜாதகர்.

5-ல் சம்பந்தம் பெறும் கிரகம் சார்ந்த காரகத்துவக் குற்றம் செய்து மறைந்த ஜாதகரின் தந்தைவழி ஆன்மா ஜனனம் அல்லது தோஷ, சாபமாக இருக்கும்,

9-ல் சம்பந்தம் பெறும் கிரக காரகத்துவக் குற்றம் சார்ந்த, மறைந்துபோன, ஓடிப்போன, காணாமல்போன, துர்மரணம் அடைந்த தந்தைவழி முன்னோர்களின் சாந்தியடைய முடியாத ஆன்மாவின் ஜனனம், தோஷம், சாபமாக இருக்கும்.

இப்படியுள்ள ஆன்மாக்கள் தம் நிறைவேறாத ஆசையை, தாம் பாதியில் விட்டுவந்த வாழ்க்கையை தங்களுடைய வாரிசுகளின்மீது புகுத்தி அனுபவிக்கின்றனர். இது மிகவும் நிதர்சனமான உண்மை. நம் வீட்டில் குழந்தைகள் செய்யும் சில செயல்கள் நம் தாய்- தந்தை, தாத்தா- பாட்டியை நினைவுகூர்வதாக இருக்கும்.

ஜோதிடரீதியாக பித்ரு தோஷத்தை உணரும் வழிகள்:

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன், ராகு- கேது, மாந்தி சம்பந்தம்; 9-ஆம் அதிபதி, ராகு- கேது, மாந்தி சம்பந்தம்; 1, 5, 9 உடன் சம்பந்தம் பெறும் கிரகத்தை வைத்து பித்ரு தோஷத்தை தெளிவாக உணரமுடியும்.

9-ஆம் அதிபதியோடு சம்பந்தம் பெறும் கிரகம் சூரியனாக இருந்தால் தந்தைவழி பங்காளி வகையறாக்கள், தந்தையைக் கொன்ற குற்றம், தந்தை பிறரைக் கொன்ற குற்றமாகும்.

சந்திரனாக இருந்தால் தாய், சித்தி, பெரியம்மா, அத்தை போன்ற பெண்கள் தொடர்பான குற்றத்தினால் உருவானது.

செவ்வாய் எனில் சகோதரன், சகோதரிமூலம் உருவான குற்றமாகும்.

புதன் எனில் மாமன், நண்பன், நண்பி மற்றும் அலித்தன்மையுள்ள இளம்பெண்கள்மூலம் உருவான குற்றமாகும்.

குரு எனில் பிராமணன், ஆசிரியர், வணங்கத்தக்க பெரியவர்கள், குழந்தைகளால் ஏற்பட்ட குற்றம்.

சுக்கிரன் எனில் மனைவி, மருமகள், மத்திம வயதுப் பெண்களால் ஏற்பட்ட சாபமாகும்.

சனி எனில் வேலைக்காரகர்கள், பிச்சைக்காரர்கள், தம்மைவிட தாழ்ந்த நிலையில் உள்ளவர்களிடம் பெற்ற ஆன்ம சாபமே.

ராகு எனில் விதவை, இஸ்லாமியர், ஆசை நாயகி, விஷம் அருந்தி இறந்தவர் சாபம்.

கேது எனில் வாழாவெட்டி, கிறிஸ்துவர், மனநிலை பாதித்தவர்களின் சாபம்.

கால பகவான் நமது ஒவ்வொரு சுவாசத்திற்கும் கணக்கெழுதி வருகிறார். நமது தவறான சிறு அசைவுகூட பின்னாளில் பெரிய விளைவாக உருவாகி நம்மை வாட்டி வதைக்கும்.

பித்ரு தோஷம் குடும்பத்திற்கு இருக்கிறதா என்பதை அறியும் எளிய வழிமுறைகளை இங்கு காண்போம்.

திருமணத்தடை, குழந்தைப் பேறின்மை, குழந்தை பிறந்தவுடன் இறந்து போதல்; நெடுநாளாக வியாதியால் அவதிப்படுதல்; மூன்று தலைமுறைகளாகத் தொடரும் ஏழ்மை, வருமானமின்மை, குடும்ப வளர்ச்சியின்மை; மனவருத்தம் போன்ற கஷ்ட நஷ்டங்கள்; நல்ல நண்பர்களோடு விரோதம்; தந்தை, தாயாரை இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்கள்; பணம் மற்றும் சொத்து, பொன், பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை வஞ்சிக்க முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படுதல்; இறைபக்தியில் ஈடுபட முடியாமல், வாழ்நாள் வீணாகுதல்; சுற்றத்தாரோடு ஒற்றுமையின்மை; குடும்பத்தில் நிம்மதியின்மை, வெறுமை ஏற்படுதல்; தந்தை, மகன் பகைவனைப்போல மாறும் சூழல்; மனைவியுடன் சேர்ந்து வாழமுடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை; காலை நேரத்தில் வீட்டில் வரும் சண்டை, காலை எழுந்தவுடன் அதீத பசியுணர்வு, அதீத காம உணர்வு-இதுபோன்ற கெடுதல் தரக்கூடிய செயல்கள் வீட்டில் அதிகம் நடைபெற்றால் பித்ரு தோஷம் இருக்கிறதென்று புரிந்துகொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற எண்ண அலைகளே காரணம். அந்த எண்ண அலையில் சிக்கியுள்ள ஜாதகர் தன் வாழ்க்கையை சீர்செய்ய உதவும் எளிய வழிமுறையே "திதி', "தர்ப்பண'மாகும். மறுபிறவிகள் எடுத்தாலும் அல்லது முக்திடைந்தாலும் அல்லது பித்ரு லோகத்திலேயே இருக்கும் காலத்திலும் நம் பித்ரு பூஜைகள் எவ்விதம் அவர்களைச் சென்றடைகின்றன இனி என பார்க்கலாம்.

இறந்தபின் உயிரின் பயணம்!

சரீரத்தை விட்டுவிட்ட ஜீவன் மரணமடைந்த தினத்திலிருந்து ஒன்பது நாட்கள் சரீரமில்லாமல் இப்பூவுலகிலேயே வாசம் செய்கிறது. இந்த ஒன்பது நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றைப் போக்குவதற்காகவேதான் விசேஷ பூஜைகளைச் செய்கிறோம்.

பத்தாவது தினத்தன்று அந்த ஆத்மாவுக்குக் கட்டை விரல் போன்ற அளவும் அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் ஏற்படுகிறது. அந்த சூட்சும சரீரத்தின்மூலம் அந்த ஆத்மாவின் மேலுலகப் பயணம் ஆரம்பிக்கிறது.

அன்றுதான் ஒரு சிறிய சடங்குமூலம் அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.

பின்பு சந்திரன், செவ்வாய் போன்ற பல கிரகங்களையும் கடந்து, ஆறாவது மாதம் அந்த ஜீவன் அழகான நீரூற்றுகளும், சோலைகளும், அட்சயவடம் என்ற விருட்சங்களும், குன்றுகளும் நிறைந்த பித்ருக்களின் உலகை அடைகிறது.

ஆறு மாத இடைவிடாத பயணத்தால் ஏற்பட்ட களைப்பு நீங்க அந்த ஜீவன் மனமகிழ்ச்சியுடன் பூமியில் தனது பிள்ளைகள் திதி பூஜையின்மூலம் அளிக்கும் உணவை (அமுதம்) உண்டு. அதனால் மனநிறைவு பெற்றுத் தங்களுக்கு பக்தியுடன் உணவளித்ததற்காகத் தனது குழந்தைகளை ஆசிர்வதிக்கிறது.

சிறிது காலம் பித்ருக்களின் உலகில் தங்கி இளைப்பாறி மனநிறைவு பெற்ற அந்த ஜீவன், மீண்டும் தன் பயணத்தைத் தொடர்கிறது.

தான் உலகில் உடலைத் துறந்த ஓராண்டு முடிவில், அதே திதியன்று தர்மதேவதையின் வைவஸ்வதம் என்ற தலைநகரத்தை அடைகிறது.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406