மேஷம்

இந்த புது வருடத்தில், மேஷ ராசியின் அதிபர் செவ்வாய், லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே இந்த வருடம், மேஷ ராசியினர் நினைத்த அனைத்தும் அழகாக நிறைவேறிவிடும். எண்ணியவை எல்லாம் எண்ணியவாறே ஈடேறும் என்று ஆசீர்வதிப்பார்களே, அதுபோல் அனைத்தும் கைகூடிவரும். இதில் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும். நினைப் பதை நல்ல செயலாக நினையுங்கள். ஏனெனில் கொஞ்சம் கோக்குமாக்கு யோசனை எட்டிப்பார்க்கும். வேறென்ன, ஒரு துணையை செட்டப் பண்ணலாமா என்று ரொம்ப நாளாக மனசில் ஓடிக்கொண்டே இருக்கும். இந்தமாதிரி வௌங்காத யோசனைகள் எல்லாம் வேண்டாம். செல்வம், செல்வாக்கு பெருக, நல்ல நட்பு கிடைக்க, முயற்சிகளில் முன்னேற்றம், வாழ்வின் அபிவிருத்தி என இவை சார்ந்து சிந்தனை செய்யுங்கள். இந்த வருடம் அத்தனையும் நடக்கும். நல்லன எல்லாம் கூடிவரும்.

மிக மேன்மையான பணவரவு தரும். உங்களில் அனேகம் பேர் வெளிநாட்டு பணப்புழக்கம் பெறுவீர்கள். சிலருக்கு வீடு, மனை விற்ற பணம் கிடைக்கும். சிலருக்கு வழக்கில் வெற்றி பெற்று, அவை சார்ந்த தொகை கிடைக்கும். இதில் கவனிக்கத் தக்க ஒன்றுண்டு. பணவரவு அதிகமாக இருந்தாலும், செலவும் மிக அதிகமாகவே வரும். எனவே, வரும் தொகையை கையில் வைத்திருக்காமல், உடனே முதலீடு செய்துவிடுங்கள்.

உங்களில் சிலர், புது வீட்டுக்கு பணம் கட்டுவீர்கள். சிலர் பழைய வீட்டை விற்று, அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்வீர்கள். சிலரின் வீடு, மனை மேல் இருந்த வழக்கு முடிவுக்கு வந்து, நன்மை தரும். உங்களில் சிலர் புதுவிதமாக, மாடலாக வீடு கட்டுகிறோம் என்று, கிறுக்குத்தனமாக எதையாவது செய்து கொண்டிருப்பீர்கள். வாகன யோகம், மனை, வயல் யோகம் உண்டு. உங்கள் தாயார் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். ஆரம்பக் கல்வி மாணவர்கள், பள்ளி மாறக்கூடும். மீனவர்கள் வெளிநாடு சென்று மீன் பிடிப்பர். விவசாயிகள் வெளிநாட்டு பழங்கள். பூக்களை தங்கள் வயலில் முயன்று பார்ப்பர். சிலர் பெட்ரோல் டீலர் ஷிப்பில் முதலீடு செய்வார்.

Advertisment

பங்கு வர்த்தகம், மிக மேன்மை தரும். அதில் வரும் அதிக பணத்தை, மீண்டும் அதிலேயே முதலீடு செய்வீர்கள். கலைஞர்கள் மிக மேன்மையும், புகழும் பெறுவர். வெளிநாட்டிலும் இவர்கள் புகழ் பெறுவர். இவர்களில் சிலர் ஆன்மிக மேன்மைக்கும், அரசு வளர்ச்சிக் கும் நன்கு செலவளிப்பர். அல்லது ஒரு ரூபாய் கொடுத்து விட்டு, ஒன்பது ரூபாய் கொடுத்ததாக விளம்பரம் செய்து கொள்வர். ஆரோக்கிய மேம்பாட்டுக்காக நடக்க ஆரம்பித்துவிடுவீர்கள். அடிக்கடி அனைத்தை யும் மறந்துவிடுவீர்கள். அல்லது ரொம்ப சந்தேகப் படுவீர்கள். சிலருக்கு பாதத்தில் நரம்பு சுருட்டிக் கொள்ளும். சிலர் நடப்பதற்கு சற்று சிரமம் இருப்பதாக உணர்வீர்கள். கழுத்தில் நீர் கோர்த்து வீங்கியதுபோல் இருக்கும். அடிக்கடி வாயு பிரியும் அவஸ்தை ஏற்படும்.

ஒருசிலருக்கு அரசுப்பணி கிடைக்கும். அதிலும் ஆசிரியப்பணியில் அரசு பணி வாய்ப்பு உண்டு. வேறு சிலருக்கு ஒரு தடை, தாமதத்துக்குப் பிறகு வெளியூர், வெளிநாட்டு பணி கிடைக்கும். வேலை கிடைக்க, பண செலவு இருக்கும். இப்போது உங்கள்மீதுள்ள வழக்குகளில், நிச்சயம் வெற்றி கிடைக்கும். வெற்றியின் பயன் சற்று ஊசலாட்டத்திற்கு பின் கைக்கு கிடைக்கும்.

திருமணம் ஆகாதவர்களுக்கு, கண்டிப்பாக கல்யாணம் நடந்துவிடும். திருமணத்தில் கட்டுக்கடங்காத செலவுகள் உண்டு. சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வரன் அமைவார்கள்.

Advertisment

வியாபாரம் சம்பந்தமாக வெகு பயணம் வரும். சிலர் புதிதாக வணிகத்தில், முதலீடு செய்வர். சிலர் சினிமா விநியோகஸ்தராக மாறுவர். எந்த வியாபாரம் ஆரம்பித்தாலும், அதில் அலைச்சல் அதிகமிருக்கும்.

ஒவ்வொரு வருடமும், ஏதோ ஒருவித துன்பம் வரத்தான் செய்யும். எனினும் மேஷ ராசியாருக்கு வரும் துன்பங்களும். இடையூறுகளும். நீர்க்குமிழிபோல் காணாமல் போய்விடும்.

இந்த வருடம் யோகம் எங்குள்ளது எனத் தேடவேண்டாம். அது உங்கள் கையில், உங்களிடமே உள்ளது. உங்களில் அனேகருக்கு. பூர்வீகம் சம்பந்தமான ஒரு அதிர்ஷ்ட நிகழ்வுண்டு. வாரிசுகள் உங்களுக்கு ஒரு யோக விஷயத்தைக் கொடுப்பர். சிலர் வெளிநாடு அல்லது தந்தை சார்ந்து நல்மகிழ்வு பெறுவர். சிலரின் திருமணம் ஒரு வாழ்வின் உயர்வை கைகாட்டும். அரசு மிக மேன்மை தரும். ஆக, இந்த வருடம் முழுவதும் நல்ல யோகம் தரும் அமைப்பு உள்ளது. நன்கு அனுபவித்து மகிழுங்கள்.

தொழில்புரிவோர் சற்று கவனமாக இருக்கவேண்டும். உங்கள் தொழிலின் மேன்மை, செழிப்பை உணரும் சில அரசியல்வாதிகளும், சில பல ரௌவுடிகளும் எங்களுக்கும் பங்கு கொடுத்தால்தான் ஆச்சு என அடம்பிடிப்பர். இதனால் லாபத்தின் அளவு உங்களுக்கு குறைவாகக் கிடைக்கும் நிலை உருவாகும். எனவே, இந்த வருடம் தொழில் நிலை சிறப்பை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது.

உங்கள் ராசிநாதனே, லாப ஸ்தானத்தில் நன்கு அமர்ந்துள்ளார். எனவே லாபத்திற்கு கேட்பானேன்.

அது பாட்டுக்கு மடை திறந்த வெள்ளமாய் வரும். இதில் ஒரு விஷயம் என்னவெனில், ஒரு லாபம் என்பது சும்மா ஒத்தையாக வராமல், ஒரு இம்சையைக் கூடவே கூட்டிக்கொண்டு வரும். மற்றும் நீங்கள் நினைக் கும் எண்ணங்கள் நன்கு நிறைவேறும் அதில் ஒரு கள்ளத்தனமும், கபடமும் நிறைந்திருக்கும்.

மேஷ ராசியில் நிறைய ஜாதகர்கள், அரசியல் பிரவேசம் செய்வர். அரசியலில் அடிப்படை சூதும் வாதும் தானே! அது இவர்கள் கற்று தேர்ந்து விட்டுத்தான் அரசியல் என்ட்ரி கொடுப்பர். இந்த வருடம் இந்த அரசியல் வழியாக, நிறைய இரகசிய பயணம், வெளியே தெரியாத பரிவர்த்தனைகள், அன்டர் கிரவுண்ட் வேலை என படு சுறுசுறுப்பாக இருப்பர்.

மகிழ்ச்சியான செலவுகள் நிறைய இருக்கும் வெளிநாட்டு பயணம், திருட்டுத்தனமான செலவுகள், ஜாலிடூர், முன்பு வாங்கிய கடனை அடைக்கும் செலவு, நிறைய முதலீடு என செலவும், பயணமும் இருந்து கொண்டே இருக்கும்.

ஆக, மேஷ ராசியாருக்கு இந்த குரோதி புது வருடம் மிக நன்மைகள் தரப் போகிறது. உங்கள் உயர்வை பொறுக்க முடியாமல், சில பல இடையூறுகள் வரும்தான். ஆனால் அதனை சமாளித்து விடலாம். செலவும் நிறைய இருக்கும். கொஞ்சம் கவனமாக இருங்கள். மற்றபடி ஓ.கே.தான்.

பரிகாரம்: சூரியனார் கோவில் சென்று வணங்கவும். வீரபத்திரரை விளக்கேற்றி வணங்குவது நல்லது. மருதமலை முருகரை வழிபடவும்.

சனி, செவ்வாய் சேர்க்கை இருப்பதால் பைரவருக்கு, செவ்வாய்க்கிழமையில், செவ்வரளிப்பூ, சாம்பார் சாதம் இவற்றோடு மண் அகல் விளக்கில் இலுபபை எண்ணெய் ஊற்றி, 27 மிளகை மூட்டை கட்டி, சிகப்பு நிற திரியில் விளக்கேற்றி வணங்கவும்.

திருமணமான புது தம்பதிகளுக்கு. படுக்கை, தலையணை, மெத்தை என உங்களுக்கு முடிந்த உதவிகளை தேவையறிந்து செய்யவும்.

ரிஷபம்

இந்த புது வருடம், ரிஷப ராசியாருக்கு ரொம்ப குதூகலமான வருடம்தான். ராசிநாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருப்பதால் வெகு நன்மைகள் கிடைக்கும். கூட இருக்கும் ராகு, அடிமனசில் புதைந்துள்ள உருப்படாத ஆசைகளையும், அமர்க்களமாக நிறைவேற்றி தருவார். மட்டமான எண்ணங்களை ரசித்து அனுப்பவீர்கள். இந்த ஆள் மட்டமான பயல், அவன் கூட சேரவே கூடாது என வீட்டில் யாரை நோக்கி எச்சரிக்கிறார்களோ, அவர்கூட சேர்ந்து, உட்கார்ந்து விருந்துண்டு மகிழ்வீர்கள். நிறைய சட்டப்புறம் பான கேளிக்கைகளில் ஈடுபட்டு, ஜென்ம சாபல்யம் அடைவீர்கள். இதனையறிந்த உங்கள் வீட்டினர், நீ எக்கேடோ கெட்டொழி என்று எரிச்சல் படுவர். இந்த வருடம் உங்களுக்கு சாதாரண ஆசைகள் வராது. பேராசைகள் வந்து, உங்களை ஆட்டி படைக்கும்.

உங்களின் அனைத்து ஆசைகளும் நிறைவேறும் எனில் அதற்கு பணம் வேண்டுமல்லவா? அத்தனை தேவைக்கும் உரிய பணம் வந்துசேரும். வரும் வழி இருளாகவும், கருப்பாகவும் இருக்கும் அதனாலென்ன! நாய் விற்ற காசு குரைக்குமா என்ன! பல விதங்களிலும் பணம் வரவழைத்து, சில சமயம் நீங்களே தேவையான பணம், டாலர் இவற்றை பக்காவாக அச்சிட்டு, செலவளிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

கலைஞர்கள், இந்த வருடம் நிஜமாகவே வேலை வாய்ப்பும், புகழும், செல்வச் செழிப்பும், அரசியல்வாதிகள் அணுசரணையும் பெறுவர். டி.வி. கலைஞர்களும் தொடர்ச்சியான வாய்ப்பும் வளமும் பெறுவர். சற்று கிசுகிசு செய்திகள் மட்டும் உங்களை மிக எரிச்சல் படுத்தும்.

காதல் எண்ணிக்கையை எண்ணி கட்டுபடியாகாது.

எல்லா மதம், அனைத்து நாட்டிலும் உங்கள் காதல் கொடிக்கட்டி பறக்கும். அவ்வளவு ஏன், இந்த ரிஷப ராசியின் வயதானவர்களும் தடுமாறிக்கொண்டு லவ் பண்ணுவர்.

இந்த வருடம் பாதம் வீங்கிக் கொள்ளக்கூடும். பாதத்தில் நரம்பு பிடித்து கொள்ளவும் செய்யும். சிலருக்கு காலில் விஷக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

நிறைய ரிஷப ராசியினர், முன்பு பார்த்த வேலையில் மீண்டும் இணையலாம். சிலர் புத்தி அடிப்படை வேலைகள் அல்லது வங்கி வேலை, சினிமாவில் எடிட்டிங், வேலை வெளிநாட்டில் ஆசிரியப்பணி அல்லது கம்ப்யூட்டரில் பாடம் நடத்தும் வேலை என இவை கிடைக்கக் கூடும்.

ss

எதிரிகளின் பெருக்கம் அதிகரிக்கும். எதிரிகள் மிக பலமாகி, உங்கள் கண்ணில் விரலை விட்டு ஆட்டுவர். கடனும் அதிகரிக்க வாய்ப்புண்டு.காதல் கல்யாணம் கன்ஃபார்ம் கல்யாணம் முடித்துவிட்டு ஓடிப் போகலாம். அல்லது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக் கொள்ளலாம். காதல் தொழில் செய்யும் இடத்தில் தொடங்கும். இந்த திருமணம் குடும்பத்திற்கு, மிகுந்த வருத்தம் தரும். இப்போது வியாபாரம் ஆரம்பித்தால், அதில் உங்கள் தந்தையின் உதவி இருக்கும்.

இந்த வருடம் வெளியில் இருந்தெல்லாம், உங்களுக்கு எந்த துன்பமும் வராது. அப்படியே அரசு அதிகாரிகள் மூலம் தொல்லை ஏற்பட்டாலும், நிறைய செலவுசெய்து அதனை சரிக்கட்டிவிடுவீர்கள். வீடு விஷயம் மட்டும் ரொம்ப எச்சரிக்கையாக இருங்கள்.

தர்மகர்மாதிபதி எனும் யோகத்தில் உங்கள் அதிர்ஷ்டம் மிளிர்கிறது. இந்த யோகம் வெளிநாட்டு முதலீடுகளைத் தரும். சட்டத்துக்குப் புறம்பான வருமானம் தரும். உங்கள் எண்ணங்களை ஏதோ ஒரு மட்டமான வழியிலாவது ஈடேற்றிவிடும். சேவைத்திலகம் எனும் பட்டம் தரும். வாரித்தரும் வள்ளல் பெரு மகன் எனும் சிறப்பை வழங்கும். நீங்கள் யோகம் எனும் வழியில் செம கெத்தாக அலைவீர்கள். உண்மையை மட்டும் வாய் திறந்து சொல்ல இயலாது.

இந்த வருடம் பங்குதாரரைச் சேர்த்துக்கொண்டு, அவரின் முதலீடை கையகப்படுத்தி, உங்கள் பெயரில் தொழில் தொடங்கிவிடுவீர்கள். பங்குதாரர் ஏதாவது கணக்கு கேட்டாலும், கோபமாக பேசினாலும்.

அவர்களை ஏதோ ஒரு வழியில் கூல் ஆக்கி விடுவீர்கள். ஏற்கெனவே தொழில் நடத்திக் கொண்டிருந்தவர்களும். வெளிநாட்டு சந்திப்புகள்மூலம் நல்ல அனுகூலம் பெறுவீர்கள்.

குறுக்குவழி லாபம் அதிகம் கிடைக்கும்.

அதற்கும் கொஞ்சம் முதலீடு செய்யவேண்டுமல்லவா!

அதற்கு கொஞ்சம் செலவழியும். சிலர் வீட்டை, சினிமா டி.வி போன்றவற்றிற்கும் வாடகைக்கு விட்டு நல்ல பணவரவு பெறுவர். போட்டிகளில் கலந்து கொண்டும் யோக வரவு பெறுவர். சிலர் கைவேலைகள், கைத்தொழில் மூலம் இதுவரை இல்லாத அளவிற்கு, வெளிநாடு வரை விற்பனையாகி நல்ல லாபம் கிடைக் கக்கூடும். பங்கு வர்த்தகமும் நல்ல லாபம் தரும்.

ரிஷப ராசியினர் இந்த வருடம் தொடங்கியவுடன் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்து, அதன் தலைமைப் பொறுப்பை ஏற்று, தாங்கள் பிறந்த இடத்தில், ஒரு ரூபாய் செலவளித்து நூறு ரூபாய் லாபம் பெற்றுவிடுவார். சுற்றியுள்ளவர்கள் இவனுக்கு எங்கே இருந்து இவ்வளவு பணம் கிடைக்கிறது என சுரண்டு போய் விக்கித்துப்போய் விடுவர். வேறென்ன, கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் முழு முயற்சியில் இறங்கிவிடுவார். இதில் முக்கியமான விஷயம் இவர் விளையாட்டாகத்தான் கட்சி தொடங்குவார். யாரும் எதிர்பாராத விதமாக தேர்தலில் ஜெயித்து பிறரை கதிகலங்கச் செய்துவிடுவார்.

இந்த வருடம் இவர் பிறந்த இடத்துக்குத்தான் அதிகமாக பயணம் மேற்கொள்வார். அல்லது பிறந்த ஊரில் ஒரு இடம் விடாமல் சுற்றிக் கொண்டிருப்பார். அது அரசியல் அல்லது அரசுப்பணி அல்லது தந்தை அல்லது மூத்த சகோதரன் என காரணம் ஏதோ ஒன்று இருக்கும்.

பிறந்த ஊர் அலைச்சலும், செலவும் அதிகமிருக்கும்.

இந்த வருடம் ரிஷப ராசியாருக்கு மிக நல்ல நன்மைகளே கிடைக்கிறது.

பரிகாரம்: ஒரு முறை ஸ்ரீரங்கம் சென்று ஸ்ரீரங்கநாத பெருமாளை கேவிக்கவும். சனி+செவ்வாய் சேர்க்கைக்கு, வெள்ளிக்கிழமை, வெண்தாமரைப்பூ, சேமியா பாயசம் இவற்றோடு, வெள்ளைத் துணியில் 24 மிளகுப் பொட்டலம் கட்டி, தாமரை நூல் திரியில், தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபமேற்றவும்.

அந்தணர்களில், வேதம் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு, வஸ்திரம் வாங்கிக் கொடுக்கவும்.

மிதுனம்

மிதுன ராசியின் அதிபதி புதன். இவர் நீசமாகி வக்ரமாகி உள்ளார். எனவே உச்ச நிலையை அடைகிறார்.

இந்த வருடம் சற்று தேங்கி நின்று, தடையாகி பின் வேகம் எடுத்துச் செல்லும். உங்கள் ராசிநாதன் இருக்கும் நிலையானது உங்கள் காரியத்தில் கண்ணாக இருக்கச் செய்யும். சுயநலமாக சிந்திக்கத் தூண்டும் பிறருக்கு உதவி செய்து, நீங்கள் ஏமாற்றம் அடைந்ததால் ஏற்பட்ட பின் விளைவாக வும் இருக்கக்கூடும். உங்கள் செயல்களில் சற்றே கிரிமினல் தனங்களை சேர்த்து கோர்த்து விடும். உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களை, "ஆள் முன்ன மாதிரி இல்லப்பா ரொம்ப மாறிட்டான்' என முனகுவர்.

காசேதான் கடவுளடா என்ற எனும் எண்ணம் வலுக்கும். எதிலும் லஞ்சப் பணம் வருவதற்குரிய அத்தனை வழிகளையும் கண்டறிவீர்கள். உங்களின் விடாமுயற்சி வெற்றியாகி, பணம் வந்து கொட்டும். பணம் எண்ணுவதற்கு வசதியாக பணம் என்னும் மெஷின் வாங்கி வைத்துக் கொள்வீர்கள். அந்த பணம், அதிக யோசனையைக் கொடுத்து வீட்டில் எவ்வளவு பணம் இருந்தால் இன்கம்டக்ஸ்காரன் வந்து அள்ளிவிட்டுப் போய்விடுவான் என நீங்களே சிந்தித்து சிந்தித்து, நிறைய தொழில்களில் சைலன்ட் பார்ட்னர் ஆகி விடுவீர்கள். சிலர் தங்கள் வாரிசுகளின் பெயரில் பெரிய தொழில் கூடங்களை திறந்துவிடுவீர்கள். சிலர் வெளிநாட்டிற்கு சென்று முதலீடு செய்து விடுவீர்கள் மிதுன ராசி பெண்களுக்கு கரு தங்குவதில் சற்று சிரமம் ஏற்படும். எனவே கர்ப்பமான பெண்கள், முழு மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தால் அழகாக, ஆரோக்கியமான குழந்தையை பெற்று எடுக்கலாம். ரொம்ப நாள் குழந்தைக்காக மருத்துவ உதவி பெற்றவர்கள், இந்த வருடம் செயற்கை கரு வளர்ச்சி மூலம் வாரிசு கிடைக்க வழிவகை உண்டாகும் உங்களின் சில பெண் வாரிசுகள், கல்வி விஷயமாக வெளிநாடு செல்வர்.

கலைஞர்கள் சினிமா அல்லது டிவியில் மிகப் பெரிய வாய்ப்பு பெறுவர். அட்சய நடன இசை கிராமிய கலைஞர்களும் தங்களது கலை உலக பயணத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்துவர். உங்களின் சிலரின் மருமகன் அரசியல் உளவியல் சேர்ந்தவராக அமைவார். உங்கள் தந்தைக்கு ஒரு அறுவை சிகிச்சை நடக்கும் சூழ்நிலை ஏற்படும். உங்களுக்கு காலில் அடிபடக்கூடும். வெளிநாட்டு தொழிற்சாலை யில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு அரசியலில் மந்திரி களுக்கு உதவியாளராக இருக்க முடியும்.

திருமணமாக வேண்டியவர்களுக்கு திருமணம் கை கூடி வரும். வரன் மிகவும் புகழ்பெற்றவராக இருப்பார் அல்லது அரசியல் பின்புலம் உடைய குடும்பமாக அமைவார். பத்திரிகை துறை அல்லது டி.வி போன்றவற்றை சேர்ந்தவராக அமைவர். எது எப்படி இருப்பினும் திருமணம் திருமண சம்பந்தம் மட்டுமின்றி, இது தொழில் சம்பந்த நிகழ்வாகவும் இருக்கும்.

உங்கள் துன்பங்களின் காரணம் உங்கள் தொழிலும், அதிலுள்ள கள்ளத்தனமும், உங்களின் அளப்பரிய முதலீடுகளும் தான். ஏன் உங்கள் அழகான வீடாகக் கூட இருக்கலாம். இது சம்பந்தமாக வழக்கும் ஏற்படும். எனினும் அதிலிருந்து தப்பிவிடுவீர்கள் யோக நிகழ்வுகள் நன்றாகவே இருக்கும். ஒன்று உங்களுக்கு வந்து கொண்டிருக்கும் அளப்பரிய அதிர்ஷ்டத்தை பிறரிடம் கூறி பெருமை அடித்துக்கொள்ள முடியாது. இன்னொன்று வருகிறது புறவாசல் வழியாகவே வரும். வேறு சிலரின் கள்ளப் பணத்தையும் நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். ஆக, இந்த வருடம் உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கு; ஆனா இல்லை எனும் நிலைமை தான். இந்த அதிர்ஷ்டசாலி லீகலில் உங்கள் தாய்மாமனும் மூத்த சகோதரனும் ஒட்டி உறவாடுவார்கள்.

மிதுன ராசியாரின் தொழில் வளம் மிக பெருகும்.செழிப்பாக வளரும். உங்கள் யூகங்கள் தொழிலை மிக மேன்மையாக அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். சில வாரிசுகளின் பயணமும், உழைப்பும் தொழிலை முதன்மைக்கு நகர்த்தும். உங்கள் தொழில் வெளிநாட்டிலும் பரவி பரவசமாகும். இந்த வருடம் தொழில் தொடங்கலாமா என யோசித்து கொண்டிருந்தவர்கள் செகண்ட் தாட் இன்றே சட்டென்று தொழில் தொடங்கி விடுங்கள். அதற்கான தரவுகளும், அரசு ஆதரவும் அபரிதமாக கிடைக்கும் உங்கள் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் அதே நேரத்தில். நீங்கள் அரசாங்கத்துக்கு அதிக அளவில் வரி செலுத்தும் நிலை உண்டாகும்.

அரசியலில் நீங்கள் நேரடியாக நுழையா விட்டாலும் உங்கள் உடன்பிறப்பு, தந்தை, வாழ்க்கைத் துணை, மாமியார் என இவர்களில் யாரையாவது அரசியலில் இறக்கிவிடுவீர்கள். நிச்சயமாக பதவியை அடைந்து விடுவீர்கள்.

பரிகாரம்: திருவெண்காடு சென்று தீபமேற்றி வணங்கவும். சனி+செவ்வாய்க்குரிய பரிகாரம். புதன் கிழமை, மரிக்கொழுந்து மாலை, பாசிப்பருப்பு கலந்த பொங்கலுடன் அகலில் இலுப்பை எண்ணெய் ஊத்தி, 23 மிளகாய் பச்சை நிற துணியில் மூட்டை கட்டி, பச்சை நிற திரியிட்டு ஏற்றவும். அருகிலுள்ள பள்ளிகளின் தேவையை அறிந்து உதவுங்கள்.

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரன் வெகு வேக கிரகம். இந்த புத்தாண்டில் இவர் அமர்ந்திருப்பது விரைய வீட்டில் நல்ல நாளிலே. இந்த கடக ராசிக்காரர்கள் ஓடி கொண்டு இருப்பார்கள். சும்மா ஆடுறவனுக்கு சலங்கை கட்டின கதையாகி விடும். எப்போதும் ஒரு பரபரப்பு இருந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் இவர்களுக்கு கிடைக்கும் தலைமை பதவி சுகம். காணாததை கண்டது மாதிரி குதிப்பர். அவசரத்தில் அண்டாவுக்குள் கை போகாது என்பர். அதுபோல் இந்த வருடம் இந்த கடக ராசியார் எளிதில் முடிய வேண்டிய வேலைகளையும் சிக்கலாகி தவிப்பர்.

குழந்தை வரம் வேண்டுவோர், பிராத்தனைகள் மட்டுமே செய்ய இயலும். உங்கள் வாரிசுகளினால் கொஞ்சம் அவமானப்பட நேரிடும். அது வாரிசுகளின் காதல் விஷயமாகவும் இருக்கலாம். வெகு துன்பத்தைத் தரும். பங்கு வர்த்தகம் பக்கம் கூட தலை வைத்து பார்க்கக்கூடாது. பங்கு வர்த்தகம் வெகு நஷ்டம் கொடுக்கும். கலைஞர்கள் தங்கள் தொழில் சார்ந்து சுமாரான நன்மை பெறுவர். ஆனாலும் வேறு வகையான வழியில் வெகு துன்பப் பட நேரிடும். முக்கியமாக சினிமா கலைஞர்களின் இரண்டாம் திருமணம் மட்டமான முறையில் பேசு பொருளாகும்.

உங்களுக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய் மிகும். தலை ரொம்ப வலிக்கும். அதற்கு மருத்துவர் கண்ணாடி போட்டுக்கொள்ள சொல்வார். கடக ராசியினருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். உங்கள் மீதுள்ள வழக்குகளில் வெற்றி மற்றும் பெருமையும் கிடைக்கும்.

உங்கள் தொழிலில், உங்களுக்கு சமமான எதிரிகள் தோன்றுவர். பணக் கணக்குகள் வில்லனாகும் திருமண விஷயம் என்பது, நிறைய வில்லங்கத்தோடு நடக்கும். அனேகமாக காதல் திருமணமாக இருக்கும். அதுவும் ஊரை போல் நாட்டைப் போல் திருமணம் மண்டபம், கோவில்களில் நடக்காமல் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும். திருமணத்தில் சண்டையும் ரத்தம் சிந்துதலும் உண்டு கலப்பு திருமணமாக இருக்கும். நாடு விட்டு நாடு வந்தும் கல்யாணம் ஆகும். சில ஏமாற்று நபர்கள், பெண்ணை காதலித்து தவிக்க விட்டு, பெண் குழந்தை யோடு பஞ்சாயத்து பேசி திருமணம் செய்வர். வியாபார பங்குதாரர்கள் பொல்லாதவர்களாக இருப்பர்.

ஏற்கெனவே கடக ராசியாருக்கு அஷ்டம சனி உள்ளது. இந்த சூழலில் அங்கு செவ்வாயும் இணைந்துள்ளார். உங்கள் வீட்டில் வயதானவர்கள் இருப்பின் அவர்களை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள் சிறுநீரகம், அடி வயிறு அல்லது காலில் அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படும். வயதானவர்கள் பெயரில் பைரவருக்கு சனிக்கிழமை தோறும் விளக்கேத்தி அர்ச்சனை செய்யவும்.

கடக ராசியின் பெற்றோர் அதிர்ஷ்ட காற்றை அனுபவிப்பர். மற்றைய கடக ராசியினர் வீடு வாங்குவது, வாகனம் புக் பண்ணுவது, ஒப்பந்தம் கையெழுத்திடுவது, வெளிநாட்டு வர்த்தக தொழிலில் முதன்மை அடைவது என ஒரே ஓஹோதான். உயர்கல்வி கற்கும் முதுநிலை கல்வி மாணவர்கள் அரசு உதவியுடன் ஒரு தொழிலை தொடங்க இயலும். அதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கு அளப்பரிய நன்மைகளை அளித்தாலும் தொழில் மட்டும் சற்று நெருடலாக உள்ளது. உங்கள் தொழிலில் ஏதோ ஒரு நெருக்கடி ஏற்படும். அது உங்களின் உடல்நிலை பாதிப்பால் அல்லது உங்கள் வாரிசும் மனைவியும் சண்டையிடுவதாலும் தொழில் அல்லாடும், இடத்தின் மீதுள்ள பூர்வீக வழக்கும் உங்களை தலைசுற்ற வைக்கும். இத்தனை கலயபுரத்திலும், வணிகம், வியாபாரத்தை இழுத்து மூடாமல் உங்கள் தந்தை அல்லது அவரது ஆசீர்வாதம், பற்றிய குடும்பத்தார், நிறைய பணம் என இதில் ஏதோ ஒன்று தொழிலை கரை சேர்த்து விடும். சூரிய வழிபாடு, உங்கள் தொழிலுக்கு வலு சேர்க்கும்.

லாபாதிபதி உச்சம். எனவே பணவரவு, எண்ணிய எண்ணம் ஈடேறுதல் இவை டபுள் ஓகே தான். அரசியலில் உங்கள் தந்தையின் அனுசரணை அதிகம் உண்டு. வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இந்த வருடம் தேர்தல் வந்தால், நிறைய செலவோடு, வெற்றிபெறுவீர்கள்.

பரிகாரம்: உங்கள் ராசிநாதன் பன்னிரண்டில் இருப்பதால், இந்த வருடம் கண்டிப்பாக, ஒரு தடவையாவது கடல் ஓரம் அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். இராமேஸ்வரம் இதற்கு ஏற்ற கோவில் ஆகும். கடக ராசிக்கு அஷ்டமச்சனி நடப்பதால், அறந்தாங்கி எட்டியத்தளி என்ற ஸ்தலம் சென்று வழிபடவும்.

சனி+ செவ்வாய் சேர்க்கைக்கு திங்கட்கிழமைகளில், அல்லி பூ மாலை, ஜவ்வரிசி பாயசம், சந்தன கலர் துணியில் 20 மிளகை மூட்டை கட்டி தீபம் ஏந்தவும். எப்போதும் அலைந்து கொண்டே வேலை செய்யும் வயதான பெண்களின் தேவையைக் கேட்டறிந்து உதவுங்கள்

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரியன்.

அவர் 9-ஆமிடத்தில் உச்சத் தன்மையுடன் ஜொலிக்கிறார்.

கூடவே குருபகவானும் உள்ளார். நல்ல காலத்திலேயே ரொம்ப பந்தா பண்ணும் நீங்கள் இந்த வருடம் பண்ணுகிற அலப்பறைகளுக்கு வரைமுறையே இல்லாமல் போய்விடும். உங்கள் பூர்வீக பரம்பரை பற்றியெல்லாம் சும்மா அடித்து விடுவீர்கள். எல்லோரும் உங்களை மதித்து பணிந்து வணங்க வேண்டுமென அடம் பண்ணுவீர்கள். சில சமயம் உங்கள் செயல்கள் அல்பத்தனமாக தெரியும். அட அவன் என்ன நினைச்சால் என்ன நான்தான் ஃபர்ஸ்ட் என ஒத்தக் காலில் நிற்பீர்கள்.

இந்த வருட கிரக நிலைப்படி சிம்ம ராசியினரின் பணம் அத்தனையும் எங்காவது லாக் ஆகிவிடும். அல்லது பணத்தை வாங்கியவர்களால் திருப்பித் தர இயலாமல் போய்விடும். வெளிநாட்டில் ஒளித்து வைத்த பணம், திரும்ப உங்கள் கைக்கு வர தடுமாறும். பணத்தை கைக்கு கொண்டு வரும் முயற்சிகள் கடும் தோல்வி அடையும். பணம் மிக பத்திரமாக, மறைவாக இருக்கும். ஆனால் அனுபவிக்க முடியாது. பேப்பரில் சர்க்கரை என எழுதி ருசித்தால் இனிக்குமா அதுபோல் தான் பண சம்பந்த டாக்குமெண்ட் கையில் இருக்கும்; பணம் வராது.

எட்டாமிடத்தில் ராகுவும், ஏழாமிடத்தில் சனியும் இருந்து பெரிய இக்கட்டுகளைக் கொடுக்க முற்படும்போது உங்கள் வாரிசுகள் அரணாக இருந்து காப்பாற்றுவர். இதன் மூலம் சிம்ம ராசியினர் கெத்து குறையாமல் காப்பாற்றப் படுவர். காதல் விஷயங்கள் சொல்கிறபடி இல்லை. பங்கு வர்த்தகம் லாபம் வருமா, வராதா என குழப்பியடிக்கும்.

சினிமா கலைஞர்கள், அவர்களின் படத்தை, அவர்களே மறைமுகமாக விளம்பரம் செய்து, படத்தை ஓட செய்வார்.

சிறுநீர் பிரச்சினை, மூத்திரக்கல் தோன்றுவது என வலி வரும். இதனால் அடிவயிற்றில் வலி எடுக்கும். உங்களில் நிறைய சிம்ம ராசியினர் அரசு வேலைக்கு செல்ல இயலும். சிலர் ஆசிரியர் வேலைக்குச் செல்வர். சிலர் கள்ளக்கணக்கு எழுதும் அக்கவுண்ட்ஸ் துறையில் சேர்ந்துவிடுவர். உங்கள் எதிரிகள் பம்மி, இருட்டிலிருந்து கல் எறிவர். எதிரிகளை இனங்காண இயலாமல் தவிப்பீர்கள். வழக்குகள் கிணற்றில் போட்ட கல் மாதிரி இருக்கும்.

உங்கள் பெற்றோர் சம்மதத்துடன் ஒன்று விருப்பத் திருமணம் அல்லது கலப்பு மணம் என ஒன்று நடக்கும். இப்போது தொடங்கும் வியாபாரத்தில் உங்கள் பெற்றோரே பங்குதாரர் ஆகிவிடுவர்.

சிம்ம ராசிக்கு எதிர்பார்த்த துன்பமே வரிசை கட்டி நிற்கும். சப்தம சனியும் அஷ்டம ராகுவும் உங்களை வூடு கட்டி உதைப்பார்கள். ஏதோ ராசியாதிபதி உச்சமும் உடன் குரு சேர்க்கையும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள்.

அதிர்ஷ்டம், யோகம் எல்லாம் உங்களுக்கு நீங்களே உண்டாக்கிக்கொள்ள வேண்டியதுதான். உங்கள் வாரிசு கொஞ்சம் உதவுவார். உங்கள் பெற்றோரின் ஆதரவு உங்களின் யோகத்தை பெருக்கும். மற்றபடி ரொம்ப அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க வேண்டாம்.

தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சம் இருப்பதோ 8-ஆம் வீட்டில். எண்ணத்தைச் சொல்ல விளக்கேற்றி வைத்து கூடையை போட்டு மூடின மாதிரி, தொழில் செழிப்பு வெளியே தெரியாது. மற்றும் உங்களால் முழுமையாக அனுபவிக்க இயலாது. சிலருக்கு தொழிலாளர்கள் ரொம்ப பிரச்சினை செய்வர். அபரிமிதமான லாபம் கிடைக்க வாய்ப்பிருப்பினும், அது உங்கள் கைக்கு வந்து சேராது. நீங்கள் என்ன நினைத் தாலும், அதற்கு ஜஸ்ட் ஆப்போசிட்டாக நடந்து தொலைக்கும்.

சிம்ம ராசியார், தேர்தலில் பங்குபெறுவது, நன்மை தராது. நீங்கள் நிற்கும் தொகுதியில் செலவு மட்டும் மானாவாரியாக செய்ய வேண்டியிருக்கும். ஆனால் டெபாசிட் கூட கிடைக்காது. நோட்டாவிடம் தோற்றுப் போவீர்கள். தேர்தலில் நிற்பது எனும் ஆணியே புடுங்க வேண்டாம்.

உங்களுக்கு நிறைய செலவு ஆகும். ஆனால் முக்கால்வாசி செலவுக்கு கணக்கே எழுத முடியாது. எல்லாம் மறைமுக செலவாக இருக்கும். நிறைய இரகசிய பயணங்கள் செல்லவேண்டி இருக்கும். வெளிப்படையாக நடமாட முடியாது.

பரிகாரம்: சூரியனார் கோவில் சென்று தரிசனம் செய்து வணங்கவும். சூரியன் எதிரில் குரு இருப்பார். அவரையும் நன்கு சேவித்துக்கொள்ளவும்.

சனி + செவ்வாய் சேர்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை பன்னீர் பூமாலை மற்றும் அகல் விளக்கில் புங்கம் எண்ணெயில் 19 மிளகை மூட்டை கட்டி சிகப்பு நிற திரி கொண்டு தீபம் ஏற்றவும்.

கன்னி

கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார். அவர் உங்களின் 7-ஆமிடத்தில் நீசம் பெற்று வக்ரம் பெற்றுள்ளார். எனவே நீசபங்க ராஜயோகம் பெறுகிறார். எனவே இந்த வருடம் பெரிய சந்தேகத்தோடு நல்லவை எல்லாம் நடக்குமா என வருந்தும்போது நல்லன நடக்கும். ராசியில் அமர்ந்துள்ள கேது தொட்டதெற் கெல்லாம் சந்தேகம் தருவார். இந்த சந்தேகம் கொடுக்கும் பயத்தை, ராசியாதிபதி நீக்கி வருவதோடு மட்டுமல்ல நன்மையும் தருவார். ரொம்ப புஸ்ஸென்று போய்விடுவோம் என நினைத்ததற்கு மாறாக பெரும் மலர்ச்சி ஏற்படும்போது என் செய்வீர்கள். வேறென்ன மானாவாரியாக லவ் பண்ணுவீர்கள்.

காதல் விஷயங்கள் உங்களை ரத்தக் களறியாக்கும். கலைஞர்கள் தொழில் மேன்மை பெற்றாலும், மறைமுக எதிரிகளால் இன்னல் அனுபவிப்பர். கன்னி ராசியினர் வாரிசு மற்றும் கலை சம்பந்தமாக காவல் துறையிடம் சந்திப்பு நிகழ்த்த வேண்டியிருக்கும்.

கன்னி ராசியினர் ஒரு விபத்தை எதிர்கொள்வர். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உங்களை பயமுறுத்துவதற்காக கூறவில்லை. சற்று எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். வழக்குகளில் வெற்றியை எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் எதிரிகள் மிக மூர்க்கமாக உள்ளனர். வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். மிகச் சிலர் காவல்துறை அல்லது வழக்கறிஞர் வேலையில் கிரிமினல் சார்ந்து பணிபுரியக்கூடும்.

"கிடக்கிறது கெடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில் வை' என்ற கதையாக வீட்டில் ஆயிரம் பிரச்சினை ஓடினாலும் நீங்கள் இஷ்டப்பட்டவருடன் காதல் கல்யாணம் செய்துகொள்வீர்கள். சரி கல்யாணம் முடிஞ்சது. ஒழுங்காக காலம் தள்ளுவீர்களா என்றால் ம்கூம். அது நடக்காது. இது சரிப்பட்டு வரலை என அடுத்த லவ். ப்ராஜக்டை ஆரம்பித்து விடுவீர்கள்.

கன்னி ராசிக்கு வியப்பான அனுகூலம் தென்படுகிறது. ஒன்று 12-ஆம் அதிபதி சூரியன் 8-ல் நின்று, விபரீத ராஜயோகம் பெறுகிறார்.

இன்னொன்று 8-ஆம் அதிபதி செவ்வாய் 6-ல் மறைந்து அவரும் விபரீத ராஜயோகம் பெறுகிறார். கெட்டவன் கெட்டில் கிட்டிடும் ராஜயோகம் எனும் அமைப்பில் இரு யோகம் கிடைக்கிறது. எனவே இந்த கன்னி ராசியினர் எத்தனை அழும்பு செய்தாலும், அத்தனையிலிருந்தும் தப்பி விடுவர் அல்லது காப்பாற்றப்படுவர். இந்த வருடம் உனக்கான ராஜ்ஜியம் நீ நடத்து ராசா. முன்னேற வேண்டும் என எண்ணும் கன்னி ராசியினர் இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நிஜமாகவே நல்லன எல்லாம் கூடிவரும்.

அதிர்ஷ்டம் உங்கள் கையை பிடித்துக்கொண்டே சுற்றும். உங்களுக்கும் யோகத்துக்கும் செமத்தயாக கெமிஸ்ட்ரி ஒத்துப் போகிறது. ஜமாய் ராசா.

ஆனால் அத்தனை யோகநிகழ்வுகளிலும் ஒரு கள்ளத்தனம், திருட்டுத்தனம், ஒளிந்திருக்கும்.

இந்த வருடம் உங்களில் நிறைய கன்னி ராசியினர் அரசியல் தொடர்புடைய தொழிலில் ஈடுபடுவீர்கள்.

அரசியல் எனில், நேரிடையாக தேர்தலில் வேட்பாளராக நிற்பதுடன் கூடவே, அரசியல் பொதுக் கூட்டங்களுக்கு ஒலி, ஒளி அமைப்பு மேடை அமைப்பது, கூட்டம் கூட்டிவருவது, பண விநியோகம், எதிரிகளை வண்டை வண்டையாக திட்டுவது, உள்ளடி கபட வேலை செய்வது என எத்துனை உள்ளதோ. அவை அனைத்தையும் 10-ஆம் அதிபதியுடன்கூட உள்ள ராகு செவ்வனே செய்து ஊக்கப்படுத்துவார். தொழில் ஓஹோதான்.

உங்கள் லாப அதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். எனவே நீங்கள் வாழ்வின் எந்த தளத்தில் இருப்பினும் தொழில் லாபம் நன்கு கிடைக்கும். இந்த வருடம் கன்னி ராசியினர் அனேகமாக அரசியல் சார்ந்த தொழிலில் நல்ல லாபம் பெற இயலும். மேலும் சிலர் அரசியல் சார்ந்து சமையல் காண்ட்ராக்ட் எடுப்பர். இந்த வருடம் லாபம் வெற்றி உங்களை அருகில் வைத்து அழகு பார்க்கும்.

இந்த விரயாதிபதி சூரியன் உச்சமெனில் அதிக செலவு உண்டு. சரிதான். ஆனால் அவர் 8-ஆம் வீட்டில் மறைந்து விபரீத ராஜயோகம் பெறுகிறார். எனவே உங்கள் செலவு அலைச்சல் என அனைத்தும் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். நீங்கள் எவ்வளவு அலைகிறீர் களோ, எத்தனை செலவு செய்கிறீர்களோ, அத்தனை அளவு வெற்றி உங்களுக்கு கிடைக்கும் என்பது உறுதி.

பரிகாரம்: திருக்கோஷ்டியூர் சென்று வணங்கவும்.செவ்வாய் + சனி சேர்க்கைக்கு புதன்கிழமை வில்வ மாலை, தயிர் சாதம், அகல் விளக்கில் 23 மிளகை பச்சை நிறத் துணியில் மூட்டை கட்டி, தாமரை தண்டு திரியில் தீபம் பைரவருக்கு ஏற்றவும். நிறைய கல்யாணம் பண்ணக் கூடாது.

-ராசிகüன் தொடர்ச்சி வரும் இதழில்...