ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்
4-ஏ, நான்காவது கிழக்கு குறுக்குத் தெரு, (பிரியா நர்சரி பள்ளி அருகில்)
கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை-14. அலைபேசி: 99440 02365.
இந்த வார ராசிபலன் பகுதியை 2021 புத்தாண்டுப் பலன்களாக எழுதியுள்ளேன்.
-ஜோதிடபானு
இந்த வார கிரக பாதசாரம்:
சூரியன்: பூராடம்- 2, 3, 4.
செவ்வாய்: அஸ்வினி - 3, 4.
புதன்: உத்திராடம்- 3, 4, திருவோணம்- 1.
குரு: உத்திராடம்- 4, திருவோணம்- 1.
சுக்கிரன்: கேட்டை- 1, மூலம்- 1, 2.
சனி: உத்திராடம்- 2.
ராகு: மிருகசீரிடம்- 1, ரோகிணி- 4.
கேது: கேட்டை- 3, 2.
இந்த கிரக மாற்றம்:
7-1-2021- சனி அஸ்தமனம்.
இந்த வார சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
4-1-2021- கன்னி.
7-1-2021- துலாம்.
9-1-2021- விருச்சிகம்.
31-12-2020 நள்ளிரவு 12.00 மணியளவில் 2021 புது வருடம் உதயமாகிறது. வியாழன், அமரபட்ச துவிதியை திதி, பூச நட்சத்திரம், கடக ராசி, கன்னி லக்னம். சனி தசை இருப்பு.
பொதுப்பலன்
1-1-2021- தேதி எண் 1- சூரியன். கூட்டு எண் 7- கேது. நவகிரகத்தில் சூரியனும் கேதுவும் பகையென்றாலும் எண்கணிதப்படி 1ம், 7ம் நட்பு கிரகங்களாகும். எனவே, 2021 என்பது 5- புதன் ஆதிக்கம். லக்னம் கன்னி என்பது புதன் லக்னம். எனவே, கன்னி ராசி அல்லது கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும்; பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந் தவர்களுக்கும்; கடக ராசி, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் 2021 புதுவருடம் பொலிவு தரும் ஆண்டாக அமையுமென்பதில் சந்தேகமில்லை. தவிரவும் புதன் தசாபுக்தி, சனி தசாபுக்தி நடப்பவர்களுக்கும் 2021-ஆம் ஆண்டு இனிய ஆண்டாக அமையும். தடைப்பட்ட திருமணங்களும் சுபமங்கள நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவேறும். 12-க்குடைய சூரியனும் 3-ல் உள்ள கேதுவும் புதுவருட கிரகங்களாக வருவதால், உங்கள் கனவுகளும் திட்டங்களும் தடைகளைக் கடந்து வெற்றியைத் தேடித்தரும்! குறிப்பாக பூணூல் அணிந்தவர்களால் உங்களுக்கு பேராதரவும் பெரும் உதவியுமாக அமையும். அதேபோல ராஜாங்க முயற்சிகள் சாதகமாகவும் வெற்றியாகவும் அமைவதோடு, பெண் சமூகத்தாரால் (தாய்க் குலத்தவரால்) உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)
மேஷ ராசிக்கு 2021 புத்தாண்டு 4-ஆவது ராசியிலும், 6-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. பொதுவாக எல்லா ஆங்கிலப் புதுவருடமும் கன்னி லக்னத்தில்தான் பிறக்கும். நட்சத்திர ராசி மாறும். கன்னி லக்னத்தின் அதிபதி புதன் மேஷ ராசிக்கு 10-ல் இருக்கிறார். அவரோடு குரு, சனி சேர்க்கை. குரு 9-க்குடையவர். சனி 10-க்குடையவர். தர்மகர்மாதிபதி சேர்க்கை. எனவே, ஆங்கிலப் புதுவருடம் எல்லாவகையிலும் உங்களுக்கு தங்குதடையில்லாத வெற்றிகளையும், முன்னேற்றங் களையும் தருமென்பதில் சந்தேகமில்லை. நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் முன்னேற்றமாகவும் திருப்தியாகவும் வெற்றியாகவும் அமையும். மேஷ ராசிக்கு 10-ல் குரு நீசபங்க ராஜயோகமாக இருந்து வருட லக்னமான கன்னியைப் பார்க்கிறார். எனவே, கடந்த காலத்தில் தடைப்பட்ட எல்லா காரியங்களும் இப்போது நடந்து முடிந்துவிடும். புது முயற்சிகளும் கைகூடும். வருட லக்னத்திற்கு 4-ல் சூரியன் இருப்பதால் பூமி, வீடு, வாகனம் சம்பந்தமான திட்டங்கள் செயல்படும். 9-ஆமிடம் தகப்பனார் ஸ்தானம். ராசிக்கு 9-ல் சூரியன் (தகப்பனார் காரகன்) நிற்க, அவருக்கு வீடுகொடுத்த குரு ராசிக்கு 10-ல் நீசபங்ச ராஜயோகம் பெற்று தர்மகர்மாதிபதி யோகம் பெறுவதால், தகப்பனார்வகையில் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும். தகப்பனாரை இழந்தவர்களுக்கு தகப்ப னார் பார்த்த அரசு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வழிவகை உண்டாகும். பிதுரார்ஜித சொத்துப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தேக ஆரோக்கியத்திலும் தெளிவு தெரியும்.
பரிகாரம்: திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் தட்சிணாமூர்த்தி ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடவும்.
ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)
ரிஷப ராசிக்கு 3-ஆவது ராசியான கடகத்திலும், 5-ஆவது லக்னமான கன்னியிலும் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கிறது. 3-ஆமிடம் தைரிய, வீரிய பராக்கிரம, சகோதர ஸ்தானம். 5-ஆமிடம் எண்ணம், திட்டம், மனது, மக்கள், மகிழ்ச்சியைக் குறிக்கும் ஸ்தானம். எனவே, புதுவருடம் உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரும். உங்கள் நீண்டகாலத் திட்டங்களும் கனவுகளும் நிறைவேறும். குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிகள் இடம்பெறும். சகோதர ஒற்றுமையும், நண்பர்களின் நல்லாதரவும் உங்களுக்குப் பேராதரவாக அமையும். தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பதும் உயிர்காப்பான் தோழன் என்பதும் உங்களுக்கே பொருந்தும். கடந்தகால அட்டமத்து, சனியில் நீங்கள் அனுபவித்த துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் இக்காலம் பரிகாரமாக எல்லாம் நல்லபடியாக அமையும். அட்டமத்துச்சனியில் தொட்ட பல காரியங்கள் விட்டுப்போயிருந்தாலும், இடைவெளியாக இருந்தாலும் அவை எல்லாவற்றையும் எடுத்து முடிக்கலாம். தொடுத்து முடிக்கலாம். ரிஷப ராசிக்கு 7-ல் சுக்கிரன் அமர்ந்து ராசியைப் பார்ப்பதாலும் 9-ல் குரு நீசபங்ச ராஜயோகம் பெற்று ராசியைப் பார்ப்பதாலும் எல்லாவகையிலும் உங்களுக்கு நல்ல பலன்களாக- மனநிறைவான பலன்களாக நடப்பது உறுதி. பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேர்வதும், விலகியிருந்தவர்கள் இணைந்து பழகுவதும் இக்காலகட்டத்தின் சிறப்பம்சமாகும்.
பரிகாரம்: மதுரை- திருப்பரங்குன்றத்தில் இன்ஜினியரிங் காலேஜ் போகும் வழியில், கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப் பா சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும்.
மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மிதுன ராசிக்கு 2-ஆவது ராசியான கடகத்திலும், 4-ஆவது லக்னமான கன்னியிலும் புதுவருடம் பிறக்கிறது. 2-ஆமிடம் வாக்கு, தனம், குடும்ப ஸ்தானம். 4-ஆமிடம் பூமி, வீடு, வாகன, சுக ஸ்தானம். இந்த இரண்டிலும் கடந்த காலத்தில் உங்களுக்கு நிலவிய இன்னல்களும் இடைஞ்சல்களும் துன்பங்களும் விலகி ஓடிவிடும். மிதுன ராசிக்கு அட்டமத்துச்சனி நடைபெற்றாலும், குருவோடு சேர்ந்த காரணத்தால் தர்மகர்மாதிபதி யோகம் ஏற்படுவதாலும் அவருடன் ராசிநாதன் புதன் இருப்பதாலும் அட்டமத்துச்சனி பொங்குசனியாக விளங்கும். இழந்ததை மீண்டும் பெறலாம். வரவேண்டிய பொருட்கள் வந்துசேரும். தொலைந்த பொருளும் திரும்பக் கிடைக்கும். காணாமல் அல்லது கோபித்துப் போனவர்களும் வீடு திரும்புவார்கள். அப்படி இழந்ததை மீண்டும் பெறுவதற்கு வசதி இருப்பவர்கள் கார்த்தவீரியார்ஜுன ஹோமம் செய்யலாம். கும்பகோணம் அருகில் குடவாசல்வழி சேங்காலிபுரத்தில் கார்த்தவீர்யார்ஜுன யந்திர பூஜை செய்யலாம். ஜனன ஜாதகத்தில் 2, 5, 9, 11-ஆமிடத்து அதிபதி தசாபுக்திகள் நடந்தால், 8-ஆமிடம் அதிர்ஷ்ட ஸ்தானமாக மாறி எதிர்பாராத யோகங்களை அடையலாம். 8-ஆமிடம் என்பது மரணத்தையும் குறிக்கும்; அதிர்ஷ்டத்தையும் குறிக்கும்; எதிர்பாராமல் வருவதும் கண்ணுக்குத் தெரியாமல் வருவதும் இந்த இரண்டும்தான்.
பரிகாரம்: திருச்சி அருகில் திருவெள்ளறையில் சிவப்பிரகாச சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது. 500 ஆண்டுகளுக்குமேல் பழமையானது. சென்று வழிபடவும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)
உங்கள் ராசியில்தான் 2021 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. அதேபோல ராசிக்கு 3-ஆவது லக்னமான கன்னியில் பிறக்கிறது. கடக ராசியை 10-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். கன்னி லக்னத்தை நீசபங்கம் பெற்ற குரு பார்க்கிறார். எனவே, இந்த வருடம் எல்லாவகையிலும் உங்களுக்கு லாபம் தரும் வருடமாகவும் நன்மை தரும் வருடமாகவும் அமையும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். செயல்களும் தங்குதடையில்லாமல் ஈடேறும். 9-க்குடைய குருவும், 10-க்குடைய செவ்வாயும் கடக ராசியைப் பார்ப்பது மிகச்சிறந்த யோகமாகும். தர்மகர்மாதிபதி யோகமாகும். திருக்குறளில் "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்' என்று ஒரு குறள் உண்டு. அதன்படி உங்கள் வைராக்கியத்தினாலும் விடாமுயற்சியினா லும் நீங்கள் நினைத்தவற்றை நிறைவேற்றி திருப்தியடையலாம்; வெற்றிபெறலாம். உங்கள் வெற்றிக்குப் பக்கபலமாக குருவருளும் திருவருளும் காரணமாக அமையும். திருமணமாகாதவர்களுக்குப் பெற்றோரும், திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத்துணையும் பக்கபலமாக நின்று உங்களுக்கு பலம் சேர்ப்பார்கள். அதேபோல நண்பர்களின் நல்லாதரவும் துணையாக அமையும். 10-ல் செவ்வாய் ஆட்சி பெறுவதால் செய்யும் தொழில் விருத்தியடையும். 11-க்குடைய சுக்கிரன் 11-ஆமிடத்தைப் பார்ப்பதால் லாபம் பெருகும்.
பரிகாரம்: சிங்கம்புணரியில் வாத்தியார் கோவில் என்னும் முத்துவடுக சித்தர் ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடவும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
சிம்ம ராசிக்கு 12-ஆவது ராசியிலும், 2-ஆவது லக்னத்திலும் 2021 ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. 12-ஆமிடத்தை செவ்வாயும், 2-ஆமிடத்தை குருவும் பார்ப்பதால் சுபமங்கள விரயச் செலவுகள் உண்டாகும். பூமி, வீடு, மனை, கட்டடம் சம்பந்தப்பட்ட வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். அதற்காகக் கடன் வாங்கவும் தயங்கவேண்டாம். கடன் கிடைக்கும். அதேபோல உரிய காலத்தில் கடனும் அடைபடும். ராசிநாதன் சூரியன் 5-ல் திரிகோணம் பெறுவதால் உங்கள் நீண்டகாலக் கனவுகளும் திட்டங் களும் விருப்பங்களும் நிறைவேறும். 10-ல் ராகு இருந்தாலும், 10-க்குடைய சுக்கிரன் 10-ஆமிடத்தையே பார்ப்பதால் சொந்தத்தொழில் ஆரம்பிக்கும் யோகம் உண்டாகும். ஏற்கெனவே தொழில் செய்கிறவர்களுக்கு வேறுபல இடங்களில் கிளைகள் ஆரம்பிக்கும் யோகமும் உண்டாகும். உணவு, ஆடை, அலங்காரம், ஏற்றுமதி- இறக்குமதி துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் நற்காலம்; பொற்காலம். 9-ல் செவ்வாய் ஆட்சி பெறுவதால் பூர்வீகச்சொத்து பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பங்காளி வகையிலுள்ள வம்பு வழக்குகளும் இணக்கமாக முடியும். எல்லாம் நன்றாக நடந்தாலும் குரு, சனி, புதன் 6-ல் மறைவதால் ஒரு முறைக்குப் பலமுறை கடுமையாக முயற்சி செய்துதான் ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றவேண்டும். காரியத் தோல்வியில்லை! போராடி நிறைவேற்றவேண்டும்.
பரிகாரம்: பொன்னமராவதி அருகில் செம்பூதி என்னும் ஊரில் சிவந்திலிங்க சுவாமிகள் தம்பதி சகிதமாக ஜீவசமாதியாக விளங்குகிறார்கள். சென்று வழிபடவும்.
கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
உங்கள் ராசிக்கு 11-ஆவது ராசியிலும், உங்கள் ஜென்ம லக்னமான கன்னியிலும் புதுவருடம் பிறக்கிறது. தொட்டதெல்லாம் துலங்கும். விட்டதெல்லாம் வந்துசேரும். பட்டதெல்லாம் துளிர்க்கும். இட்டபடியே எல்லாம் இனிதாக ஈடேறும். 9-க்குடைய சுக்கிரனை 8-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். எதிர்பாராத யோகங்களும் அதிர்ஷ்டங்களும் தேடிவரும். பட்டம் பதவிகளும் மதிப்பும், மரியாதையும் கூடிவரும். 5-ல் நீசபங்க ராஜயோகம் பெற்று குரு உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம். திருமணத்தடை விலகும். வாரிசு யோகம் ஏற்படும். ஏற்கெனவே மணமானவர்களுக்கு தாம்பத்திய ஒற்றுமையும், கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் யோகங்களும் முன்னேற்றங் களும் உண்டாகும். உங்கள் ராசியிலேயே வருட லக்னம் பிறப்பதால் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். அரசியல், ஜாதி, சமய சங்கங்களில் அங்கம்வகிக்கும் பெருமையும் உண்டாகும். 9-ஆமிடத்து ராகு ஆன்மிக ஈடுபாடும் குலதெய்வ வழிபாடும் சிறப்பாக அமைவதற்கு வழிவகை செய்யும். திரிகோணாதிபதி தசாபுக்தி நடப்பவர்களுக்கு கோவில் திருப்பணி செய்யும் பாக்கியம் உண்டாகும். முக்கியப் பொறுப்பேற்று நிதிவசூல் செய்து கும்பாபிஷேகமே நடத்தும் வாய்ப்புகளும் அமையலாம். தேக ஆரோக்கியத்திலும் மன உற்சாகத்திலும் குறையேதுமில்லை.
பரிகாரம்: நாமக்கல் அருகில் சேந்த மங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் ஸ்வயம் ப்ரகாச சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடவும்.
துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
துலா ராசிக்கு 10-ஆவது ராசியிலும், 12-ஆவது லக்னத்திலும் ஆங்கிலப் புதுவருடம் பிறக்கிறது. தொழில் வளம் சிறப்பாக அமையும். புதியதொழில் முயற்சிகளும் சிறப்பாக அமையும். ஒரு சிலர் வேலைதேடி வெளிநாடு போகலாம். கைநிறைய சம்பாதிக்கலாம். ஏற்கெனவே வெளிநாட்டில் இருந்தவர்களும் குடும்பம்- மனைவி, மக்களைப் பிரிந்தவர்களும் தாயகம் திரும்பி மனைவி, மக்கள், குடும்பத்தோடு இணைந்து மகிழலாம். மனநிறைவை அடையலாம். திருப்தியடையலாம். ராசிக்கு 4-ல் சனி ஆட்சியாகவும், குரு நீசபங்கமாகவும், பாக்கியாதிபதி புதனோடு சேர்ந்திருப்பதாலும் எல்லாவகையிலும் உங்கள் மனம் விரும்புவதுபோல் நிறைவேறும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திட்டங்கள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் அல்லது விரும்பிய இடப்பெயர்ச்சியும் எதிர் பார்க்கலாம். உத்தியோகமில்லாதவர்கள் உத்தியோக வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். சொந்தத்தொழில் செய்கிறவர்களுக்கு தொழில் முன்னேற்றமும் லாபமும் உண்டாகும். ஒருசிலர் புதிய கிளைகளை ஆரம்பித்து தொழிலை விருத்தியடையச் செய்யலாம். லாபம் பெருகுவதால் பூமி, இடம், மனை இவற்றில் முதலீடு செய்யலாம். திருமண யோகம், வாரிசுயோகம் உண்டாகும். 7-ல் உள்ள செவ்வாய்க்கு சிலர் செவ்வாய் தோஷம் என்பார்கள். செவ்வாய் சொந்தவீட்டில் ஆட்சி பெறுவதால் தோஷத்திற்கு இடமில்லை.
பரிகாரம்: திருவள்ளூர் மற்றும் திருத்தணி சாலையில் ஆற்காடு குப்பம் பஸ் ஸ்டாப்- அனுமந்தராய சுவாமி ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடவும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
விருச்சிக ராசிக்கு 9-ஆவது ராசியிலும், 11-ஆவது லக்னத்திலும் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. ராசிநாதன் செவ்வாய் 6-ல் மறைந்தாலும் மேஷத்தில் ஆட்சி பெறுகிறார். செவ்வாயின் பார்வை 9-ஆமிடம், 12-ஆமிடம், ஜென்ம ராசி மூன்றுக்கும் கிடைக்கிறது. 9-ஆமிடம் என்பது ஆங்கிலப் புதுவருட ராசியாகும். 12-ஆமிடம் என்பது வருட லக்னத் திற்கு 2-ஆமிடமாகிறது. எனவே, புதுவருடம் இனிய வருடமாகத் திகழும். பொருளாதாரத்தில் நிறைவு பெறலாம். குடும்பத்தில் அமைதியான போக்கு காணப்படும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்றுசேரலாம். ஏழரைச்சனிக் காலத்தில் வெளிநாடு போய் வேலைபார்த்தவர்கள் தாயகம் திரும்பி தன் குடும்பத்தாரோடு இணைந்து மகிழலாம். உள்ளூரில் நல்ல தொழில் தொடங்கி நல்ல சம்பாத்தியம் அடையலாம். அதனால் வீடு வாசல் போன்ற யோகங்களையும், தங்கம் பொனா பரணம் போன்ற சேர்க்கைகளையும் சேமிப்புகளையும் உண்டாக்கலாம். ஜென்ம கேது, சப்தம ராகு திருமணத்தடை தாமதங்களை ஏற்படுத்தினாலும், நீசபங்க ராஜயோகம் பெற்ற குரு 7-ஆமிடத்தைப் பார்ப்பதால் நல்ல குடும்பம், நல்ல மனைவி, மக்கள் அமையும். ஒருசிலர் சம்பள வேலையிலிருந்து விடுபட்டு சொந்தத் தொழில் தொடங்கலாம். குடும்பத்தாரையோ நண்பர்களையோ பங்குதாரர்களாகச் சேர்த்து செயல்படலாம்..
பரிகாரம்: திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் ஸ்ரீமதத் ஓதசுவாமிகள் என்னும் சுப்பையா சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடவும். திருவாதிரை மற்றும் கேட்டை நட்சத்திரத்தில் பூஜை நடைபெறும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
இந்த ஆங்கிலப் புத்தாண்டு தனுசு ராசிக்கு 8-ஆவது ராசியிலும் (கடகம்), 10-ஆவது லக்னத்திலும் (கன்னி) பிறக்கிறது. வாழ்க்கையில் அன்றாடத் தேவைகளுக்கு எந்தக் குறையும் ஏற்படாது. என்றாலும் பத்து ரூபாயில் முடியவேண்டிய காரியத்தை இருபது ரூபாயில் முடிக்கவேண்டியது வரும். அதாவது ஒன்றுக்கு இரட்டிப்பாக செயல்படவைக்கும். ஜென்ம ராசிநாதன் குரு 2-ல் நீசபங்கம் பெற்று 10-ஆமிடத்தைப் பார்ப்பதால், தொழில்துறையில் புதிய அணுகுமுறைகளும், யோசனைகளும் முன்னேற்றகரமான மாற்றத்தை ஏற்படுத்தும். 10-க்குடைய புதன் 2-ல் குருவோடு சம்பந்தப்படுவதால் லாபமும் உண்டாகும். 2-க்குடைய சனி 2-ல் ஆட்சி; குரு சேர்க்கை. பொருளாதாரத்திலும் செயல்களிலும் முன்னேற்றமும் திருப்தியும் எதிர்பார்க்கலாம். 12-ஆமிடத்தை 12-க்குடைய செவ்வாய் பார்க்கிறார். சுபவிரய மங்களங்கள் உண்டாகும். அது வீடு, மனை, வாகனம், திருமணம் சம்பந்தப்பட்டதாக அமையும். 6-ஆமிடத்தைப் பார்க்கும் குரு மேற்கண்ட சுபப் பலன்களுக்கான கடன் வாங்கும் யோகத்தையும் தருவார். தேக ஆரோக்கியத் தில் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பாதிப்புகளுக்கு இடம் ஏற்படாது. வீழ்வது எழுவதற்கே என்ற நம்பிக்கையோடும் உறுதியோடும் செயல்படுவீர்கள். சிலர் உத்தியோகத்தில் இடமாற்றங்களைச் சந்திக்கலாம். தெய்வத் திருப்பணிகள் நிறைவேறும்பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
பரிகாரம்: திண்டுக்கல் அருகில் கசவனம் பட்டி என்னும் ஊரில் ஜோதி மௌனகுரு நிர்வாண சுவாமிகள் ஜீவசமாதி சென்று வழிபடவும். மூல நட்சத்திரத்தில் சமாதி அடைந்தார்.
மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 7-ஆவது ராசியான கடகத்திலும், 9-ஆவது லக்னமான கன்னியிலும் பிறக்கிறது. கன்னி ராசிநாதன் புதன் உங்கள் ஜென்ம ராசியில் குரு, சனியுடன் இணைந்திருக்கிறார். புதன் உங்கள் ராசிக்கு 9, 10-க்குடைய திரிகோணாதிபதி. அவர் லக்னத்தில் ஆண்டு பிறப்பதால் நித்திய வாழ்க்கையில் நிறைவும் நிம்மதியும் ஏற்படும். உத்தியோக மேன்மை, கடல்கடந்த வேலைவாய்ப்பு, நல்ல சம்பாத்தியம் உண்டாகும். 7-ஆமிடத்தை குரு பார்ப்பதால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணயோகம், திருமணமானவர்களுக்கு சந்தான பாக்கியம் எல்லாம் இந்த ஆண்டில் எதிர்பார்க்கலாம். எண்ணிய எண்ணங்களையும், திட்டங்களையும், கருதிய காரியங்களையும் குருவருளும் திருவருளும் நடத்தித் தரும். வியாபாரத்தில் லாபமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் பெருகும். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், விவகாரம், வியாஜ்ஜியங்களில் சாதகமான பலன்களை எதிர்பார்க்கலாம். 3-ஆமிடத்தை சனி பார்க்கிறார். சகோதர- சகோதரிவகையில் சகாயமும் ஆதரவும் உண்டாகும். அவர்கள் வகையில் சுபச் செலவுகளும் ஏற்படும். 4-ல் செவ்வாய் ஆட்சி என்பதால், வீடு அல்லது மனை போன்றவகையில் முதலீடுகள் உண்டாகலாம். ஆரோக்கியத்திலும் தெளிவான நிலை காணப்படும். வைத்தியச்செலவுகள் விலகும்.
பரிகாரம்: கரூர் அருகில் நெரூர் சென்று சதாசிவப் பிரம்மேந்திராள் சுவாமிகள் ஜீவசமாதியை வழிபடவும். காவிரிக்கரையில் சந்நிதி அமைந்துள்ளது.
கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 6-ஆவது ராசியிலும் (கடகம்), 8-ஆவது லக்னத்திலும் (கன்னி) பிறக்கிறது. கடந்த டிசம்பர் 2020 முதல் கும்ப ராசிக்கு ஏழரைச்சனி ஆரம்பம். அதில் முதல்கூறு விரயச்சனி நடக்கிறது. ஏழரைச்சனி நடந்தாலும் கும்ப ராசிநாதனும் சனி என்பதால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தமாட்டார் என்று நம்பலாம். பணவரவும் இருக்கும். அதேசமயம் செலவுக்கும் பஞ்சமிருக்காது. சுபச்செலவுகள் நேரும். 11-க்குடைய குரு 12-ல் இருப்பதால் தொழில்துறையில் சில செலவுடன்கூடிய மாற்றங்கள் நிகழும். 3-ஆமிடத்தில் செவ்வாய் ஆட்சி என்பதால் மேற்கண்ட மாற்றத்திற்கு சகோதர வகையில் ஆதரவு உண்டாகும். அவர்களுடனான நல்லுறவும் ஒத்துழைப்பும் மனதிற்கு தைரியத்தைத் தரும். 4-ல் உள்ள ராகு தாய்சுகம் அல்லது தன்சுகத்தில் வைத்தியச் செலவுகளை உண்டாக்கும். குரு 4-ஆமிடத்தைப் பார்ப்பதால் சிறுசிறு வைத்தியச்செலவுகளோடு நோய் விலகும். சிலர் புதிய வீடு கட்டும் அல்லது கட்டிய வீட்டை வாங்கும் திட்டத்தை செயல்படுத்தலாம். அதற்குண்டான வகையில் வங்கி அல்லது தனியார்க் கடனை எதிர்பார்க்கலாம். முதல் சுற்று ஏழரைச்சனி மந்தமான பலன்களையும், இரண்டாம் சுற்று பொங்குசனி எல்லாக் காரியத்திலும் துரித வேகச் செயல்பாடுகளையும், மூன்றாம் சுற்று சனி நடப்பவர்களுக்கு இரண்டும் கலந்த பலன்களையும் வழங்குவார்.
பரிகாரம்: பொன்னமராவதி மற்றும் புதுக்கோட்டை பாதையில் குழிபிறை அருகில் (பனையூர் ஒடுக்கம்) ஞானி சாது புல்லான் சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடவும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்கள் ராசிக்கு 5-ஆவது ராசியிலும், 7-ஆவது லக்னத்திலும் பிறக்கிறது. 5-ஆமிடம் திரிகோணம். 7-ஆமிடம் கேந்திரம். ஆக, இரண்டும் சேர்ந்து உங்களுக்கு பொலிவு தரும் வருடமாக விளங்கும். மீன ராசிநாதன் குரு 11-ல் நின்று 3, 5, 7-ஆமிடங்களைப் பார்க்கிறார். எனவே சகோர சகாயம், நண்பர்கள் ஆதரவு, தீட்டிய திட்டங்கள் நிறைவேற்றம், மகிழ்ச்சிகரமான செயல்பாடு, பிள்ளைகளின் நலன்கருதி எடுத்த காரியத்தில் வெற்றி, திருமண பாக்கியம், குழந்தைப்பேறு போன்ற பலன்களை இந்த வருடம் உங்களுக்கு வழங்கப்போகிறது. 2-ஆமிடம்- குடும்பம், தனம், வாக்கு, வித்தை முதலியவற்றைக் குறிக்கும். 2-க்குடைய செவ்வாய் ஆட்சி பெறுவதால் மேற்கண்ட பலன்கள் கொண்டாடும் வகையில் அமையும். பங்காளி, தாயாதிவகையில் இவ்விதமான பலன்களை எதிர்பார்க்கலாம். கடந்த காலத்தில் இருந்துவந்த தொழில் பிரச்சினைகள் மாறி நல்ல தீர்வு கிடைக்கும். வாது வழக்குகள், சூது சூழ்ச்சிகள் எல்லாம் தோற்றுப்போகும். போராடி வெல்லலாம். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மேன்மை, வியாபாரத்தில் அனுகூலம். சம்பாத்தியம் எல்லாம் நிறைவாக நடைபெறும். 9-ல் சுக்கிரன், கேது, 9-ஆமிடத்தைப் பார்க்கும் செவ்வாயால் கேடு கெடுதிக்கு இடமில்லாமல் யோகப் பலன்களாகவே நடைபெறும்.
பரிகாரம்: நாகப்பட்டினம் அருகில் வடக்குப் பொய்கை நல்லூரில் கோரக்கர் சித்தர் ஜீவசமாதி உள்ளது. சென்று வழிபடலாம்.