ர்மாவைக் கழிக்கும் சிவபெரு மானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷ விரதம் மிகவும் முக்கியமானதாகும். மனிதர்களின் தோஷமான பாவத்தினையும், பிரதான தோஷங்களையும் நீக்குவதால் பிரதோஷம் எனப்பட்டது. பொதுவாக பலருக்கும் மாதத்தில் வரும் வளர்பிறை- தேய்பிறை பிரதோஷங்களை மட்டும்தான் தெரியும். ஆனால் மொத்தம் 20 வகை பிரதோஷங்கள் இருக்கின்றன. அவை நம் பிறவிகள்தோறும் பின்தொடரும் தோஷம் மற்றும் சாபங்களை நீக்கி, நம்மை வாழ்வாங்கு வாழவைக்கும்.

1. தினசரி பிரதோஷம்

தினமும் பகலும் இரவும் சங்க மிக்கும் சந்தியா காலமான 4.30 மணி முதல் 6.30 மணிவரையுள்ள காலமாகும்.

இந்த நேரத்தில் சிவனை தரிசிப்பது மிகவும் உத்தமம். நித்தியப் பிரதோஷத்தை ஒருவர் ஐந்து ஆண்டுகள் முறையாக வழிபட்டால் அவர்களுக்கு முக்தி உறுதி என்று சொல்கிறது இந்து சாஸ்திரம்.

Advertisment

2. பட்சப் பிரதோஷம்

அமாவாசைக்குப் பிறகு வளர் பிறையில் 13-ஆம் திதியாக வரும் திரயோதசி திதியே பட்சப் பிரதோஷ மாகும். இந்த திதியின் மாலை நேரத்தில் பட்சி லிங்க வழிபாடு (பறவைகள் பெயர் கொண்ட ஊர்) செய்வது மிகவும் உத்தம மாகும். (மயிலாடுதுறை, மயிலாப்பூர் போன்றவை.)

3. மாதப் பிரதோஷம்

Advertisment

பௌர்ணமிக்குப் பிறகு தேய்பிறைக் காலத்தில் 13-ஆவது திதியாக வரும் பிரதோஷமாகும். இந்த திதியின் மாலை நேரத்தில் லிங்க வழிபாடு- பல்வேறு லிங்க வகையில் செய்வது உத்தமப் பலனைத் தரும்.

4. நட்சத்திரப் பிரதோஷம்

பிரதோஷ திதியாக திரயோதசி திதியில் வரும் நட்சத்திரங்களுக்குரிய ஈசனை பிரதோஷ நேரத்தில் வழிபடுவது நட்சத்திரப் பிரதோஷமாகும்.

5. பூரணப் பிரதோஷம்

சதுர்த்தசி திதி சேராத திரயோதசி திதி மட்டும் பூரணப் பிரதோஷமாகும். இந்த பிரதோஷத்தின்போது சுயம்புலிங்கங்களை தரிசனம் செய்வது மிகவும் உன்னதமான பலனைக் கொடுக்கும். பூரண பிரதோஷ வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இரட்டைப்பலனை அடை வார்கள்.

6. திவ்யப் பிரதோஷம்

பிரதோஷ தினத்தன்று துவாதசியும் திரயோதசியும் சேர்ந்துவந்தால் அல்லது திரயோதசியும், சதுர்த்தசியும் சேர்ந்துவந்தால் அது திவ்யப் பிரதோஷமாகும். இந்த நாளில் மகாலிங்கேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை செய்தால் பூர்வஜென்ம வினை முழுவதும் நீங்கும்.

7. தீபப் பிரதோஷம்

பிரதோஷ தினமான திரயோதசி திதியில் தீபதானங்கள் செய்வது, ஈசனுடைய ஆலயங்களை தீபங்களால் அலங்கரித்து வழிபடுவது சாலச் சிறந்தது. இந்த வழிபாட்டினால் சொந்த வீடு அமையும்.

ss

8. சப்தரிஷிப் பிரதோஷம்

வானத்தில் "வ' வடிவில் தெரியும் நட்சத்திர கூட்டங்களே சப்தரிஷி மண்டலமாகும். இது அபயப் பிரதோஷம் என்றும் அழைக்கப் படுகின்றது. இது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங் களில் வானில் தெளிவாகத் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக வழிபாடு செய்து சப்தரிஷி மண்டலங்களை தரிசித்து வழிபடுவதே அபயப் பிரதோஷம் எனும் சப்தரிஷிப் பிரதோஷமாகும். இந்த வழிபாட்டி னைச் செய்பவர்களுக்கு ஈசன் பாரபட்சமின்றி அருள்பாலிப்பார்.

9. மகாப் பிரதோஷம்

ஈசன் விஷம் உண்ட நாள் கார்த்திகை மாத சனிக்கிழமை திரயோதசி திதியாகும். எனவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்துவரும் பிரதோஷம் மகாப் பிரதோஷமாகும். இந்த மகாப்பிரதோஷம் அன்று எமன் வழிபட்ட சுயம்புலிங்க தரிசனம் செய்வது உத்தமம். குறிப்பாக திருக் கடையூர், சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் ஆலயம், திருச்சி மரவட்டம் மண்ணச்சநல்லூர், திருப் பைஞ்ஞீலி சிவாலயம், குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் பாதையில் ஸ்ரீவாஞ்சியம் சிவனை வழிபட வேண்டும்.

10. உத்தம மகாப்பிரதோஷம்

சிவபெருமான் விஷம் அருந்திய நாள் சனிக்கிழமையாகும். அந்த கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும். சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில் சனிக்கிழமை களில் திரயோதசி திதியன்று வரும் பிரதோஷம் உத்தம மகாப்பிரதோஷமாகும். மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்றது.

11. ஏகாட்சரப் பிரதோஷம்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் மகாப்பிரதோஷத்தை ஏகாட்சரப் பிரதோஷம் என்பர். அன்றைக்கு சிவாலயம் சென்று "ஓம்' என்ற பிரணவ மந்திரத்தை எத்தனை முறை ஓதமுடியுமோ அத்தனை முறை ஓதுங்கள். பின் விநாயகரை வழிபட்டு அன்னதானம் வழங் கினால் பலவிதமான நன்மைகள் ஏற்படும்.

12. அர்த்தநாரிப் பிரதோஷம்

ஆண்டுக்கு இரண்டுமுறை மகாப்பிர தோஷம் வந்தால் அதற்கு அர்த்தநாரிப் பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் சிவாலயம் சென்று வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடக்கும். பிரிந்துவாழும் தம்பதிகள் ஒன்றுசேர்வார்கள்.

13. திரிகரணப் பிரதோஷம்

ஆண்டுக்கு மூன்றுமுறை மகாப்பிர தோஷம் வந்தால் அது திரிகரணப் பிரதோஷமாகும். இந்த வழிபாட்டை முறை யாகக் கடைப்பிடித்தால் அஷ்டலட்சுமிகளின் ஆசியும் கிடைக்கும். பிரதோஷ வழிபாடு முடிந்ததும் அஷ்டலட்சுமிகளுக்குப் பூஜை செய்வது மிகவும் நல்லது.

14. பிரம்மப் பிரதோஷம்

ஒரு ஆண்டில் நான்கு மகாப்பிரதோஷம் வந்தால் பிரம்மப் பிரதோஷமாகும். இந்த பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் முன்ஜென்ம பாவம் நீங்கி, தோஷங்கள் விலகி நன்மைகள் சேரும்.

15. அட்சரப் பிரதோஷம்

ஆண்டுக்கு ஐந்துமுறை மகாப்பிரதோஷம் வந்தால் அது அட்சரப் பிரதோஷமாகும். தாருகாவனத்து ரிஷிகள் "நான்' என்ற அகந்தை யில் ஈசனை எதிர்த்தனர். ஈசன் பிட்சாடனர் வேடத்தில் வந்து தாருகாவன ரிஷிகளுக்குப் பாடம் புகட்டினர். தவறை உணர்ந்த ரிஷிகள் அட்சரப் பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து விமோசனம் பெற்றனர்.

16. கந்தப் பிரதோஷம்

சனிக்கிழமையும் திரயோதசியும் கார்த் திகை நட்சத்திரமும் சேர்ந்து வருவது கந்தப் பிரதோஷமாகும். முருகப்பெருமான் சூரசம் ஹாரத்திற்குமுன் வழிபட்ட இந்த பிரதோஷ வழிபாடு வெற்றியை ஈட்டித்தந்தது. அன்றைய தினம் நாம் பிரதோஷ காலத்தில் முறையாக விரதமிருந்து வழிபாடு செய்தால் முருகப் பெருமானின் அருள்கிட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

17. சட்ஜப்பிரபா பிரதோஷம்

ஓர் ஆண்டில் ஏழு மகாப்பிரதோஷம் வந்தால் அது சட்ஜப்பிரபா பிரதோஷமாகும். தேவகியும், வசுதேவரும் கம்சனால் சிறைப் பிடிக்கப்பட்டனர். ஏழு குழந்தைகளை கம்சன் கொன்றான். எனவே எட்டாவது குழந்தை பிறப்பதற்குமுன், ஓர் ஆண்டில் வரும் ஏழு மகாப்பிரதோஷத்தை தேவகி கடைப் பிடித்ததால் கிருஷ்ணனை ஈன்றெடுத்தாள். அந்த கிருஷ்ணனே கம்சனை வதம் செய்தார். எனவே முற்பிறவி வினைகள் நீங்கி, பிறவி யெனும் பெருங்கடலை எளிதில் கடக்க லாம்.

18. அஷ்டதிக் பிரதோஷம்

ஓர் ஆண்டில் எட்டு மகாப்பிரதோஷங் களை வழிபட்டால் அஷ்டதிக் பாலகர்கள் மகிழ்ச்சியடைந்து நீடித்த செல்வம், புகழ், கீர்த்தி ஆகியவற்றைத் தருவார்கள்.

19. நவகிரகப் பிரதோஷம்

ஓர் ஆண்டில் ஒன்பது மகாப்பிரதோஷம் வந்தால் அதற்கு நவகிரகப் பிரதோஷம் என்று பெயர். இந்த பிரதோஷத்தில் முறையாக விரதமிருந்து வழிபட்டால் சிவனின் ஆசியால் நவகிரகங்களின் அருள்கிட்டும்.

20. துத்தப் பிரதோஷம்

அரிதிலும் அரிது- ஓர் ஆண்டில் பத்து மகாப்பிரதோஷம் வருவது; இது துத்தப் பிரதோஷம் எனப்படும். விரதமிருந்து பிரதோஷத்தை அனுஷ்டித்தால் பிறவிகள் தோறும் தொடரும் தோஷங்கள், பாவங்கள் நீங்கி, பிறவிக் குறைப்பாடுகளை அகற்றும்.

செல்: 98944 94915