டமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு ஆகியவற்றை சமுதாயத்தில் ஏற்படுத்த முன்னோர்கள் உருவாக்கிய அற்புத நெறிமுறையே திருமணம்.

Advertisment

குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண்- பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டுமல்ல; இயற்கை நியதியும்கூட. மணவாழ்க்கை சிலருக்கு எளிதாகக் கூடிவந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்குப் பிறகு கூடிவரும். ஒருசிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமணப் பேச்சை எடுத்ததுமே, "ஜாதகம் பார்த்தாச்சா? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா' என உற்றார்- உறவினர், அக்கம்பக்கத்தினர் மாறிமாறிக் கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்குண்டு. சில கிரகச் சேர்க்கைகள், தசாபுக்திகள், கோட்சார நிலை போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றிச்சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

மகிழ்ச்சியான திருமண வாழ்வுக்கு இன்னலைத் தரும் சில முக்கியமான தோஷங்கள் உள்ளன. அவை:

Advertisment

செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷம், காலசர்ப்ப தோஷம், கிரகண கால தோஷம், சனி தோஷம், சூரிய தோஷம், சுக்கிர தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், புனர்பூ தோஷம், மாங்கல்ய தோஷம், தார தோஷம், கிரக இணைவுகள் தரும் தோஷம், திதி சூன்ய தோஷம், பிரம்மஹத்தி தோஷம், பித்ரு தோஷம், குலதெய்வ சாபம், விஷக் கன்னிகா தோஷம்.

செவ்வாய் தோஷம்

ஜாதக தோஷங்கங்களில் பொதுவாக மக்களிடையே பிரபலமாக உள்ளது செவ்வாய் தோஷம்.

ஜாதகக் கட்டத்தில் லக்னம், ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். இதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரிவரவில்லை. சுக்கிரனும் செவ்வாயும் ஒன்றையொன்று ஈர்க்கும் கிரகங்கள் என்பதால் தோஷம் ஏற்பட வாய்ப்பில்லை.

பாவகரீதியாக செவ்வாய் நின்ற தோஷத்தினால் உண்டாகும் பாதிப்புகளின் அளவீடுகள்:

Advertisment

2- 25 சதவிகிதம்; 4- 50 சதவிகிதம்; 7- 75 சதவிகிதம்; 8- 100 சதவிகிதம்; 12- 25 சதவிகிதம்.

பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட 2, 7, 8-ஆம் இட செவ்வாய்க்கு 2, 7, 8-ஆம் இட தோஷ ஜாதகத்தையும்; 4, 12-ஆம் இட செவ்வாய் தோஷ ஜாதகத்தை 4, 12-ஆமிட தோஷ ஜாதகத்துடன் மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு- கேது தோஷம்

நிழல் கிரகம், சர்ப்பங்கள் என அழைக்கப்படும் ராகு- கேதுக்கள் மனிதர்களை கர்மவினையை அனுபவிக்கச் செய்வதில் வல்லவர்கள்.

முன்ஜென்ம கர்மாவைப் பிரதிபலிக்கும் ராகு- கேதுக்கள் 1, 2, 5, 7, 8, 12 ஆகிய இடங்களில் அமர்ந்தால் திருமணவாழ்வில் தோஷத்தை உருவாக்குகின்றன.

1-ல் நின்ற ராகு- கேது நிலையில்லாத குணம், மகிழ்ச்சியின்மை, தாமதத் திருமணம், மணவாழ்வில் நிம்மதியின்மை, பற்றற்ற நிலையை உருவாக்கும்.

2-ல் நின்ற ராகு- கேதுக்கள் அமைதியற்ற குடும்ப சூழ்நிலை, வாக்கில் கடுமை, மனக்குறையை ஏற்படுத்தும்.

5-ல் நின்ற சர்ப்பங்கள் ஊழ்வினைப் பயனை அனுபவிக்கச் செய்யும். சூழ்ச்சி, வஞ்சம், தாமத புத்திர பாக்கியம், புத்திரர்களால் நிம்மதிக்குறைவு, எதிர்மறை எண்ணம், நினைப்பதற்கு மாறான வாழ்க்கை ஆகியன உருவாகும்.

7-ஆம் இட சர்ப்பங்களினால் இல்லற இன்பக்குறைபாடு, காலதாமதத் திருமணம், வாழ்க்கைத்துணையால் வருந்தும் நிலை ஏற்படும்.

8-ஆம் இட சர்ப்பங்களால் பிரச்சினையான மணவாழ்க்கை, குடும்பச் சண்டை வீதிக்கு வந்து அவமானம், வாழ்க்கைத்துணையின் பேச்சும் செயலும் மனவருத்தம் தரும்படியாகவும் அமையும்.

12-ஆம் இட சர்ப்பங்களால் தூக்கமின்மை, நோயுள்ள களத்திரம், குடும்பத்தை விட்டுப் பிரிதல், தேவையற்ற விரயம் ஆகியன ஏற்படும்.

1, 7, 2, 8-ஆமிட சர்ப்ப தோஷத்தின் வீரியம் அதிகம். எனவே இந்த தோஷ அமைப்புள்ள ஜாதகங்களை அதே சமதோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்குப் பரிகாரமாகும். உதாரணமாக, லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தைச் சேர்ப்பதே பொருத்தமாகும்.

5, 12-ல் நிற்கும் சர்ப்பங்களின் வலிமை குறைவு. 5-ல் சர்ப்பமுள்ள ஜாதகத்திற்கு 5-ல் சர்ப்பமில்லாத ஜாதகத்தை இணைப்பது சிறப்பு.

மேலே கூறப்பட்ட எல்லா தோஷங்களும் குரு சம்பந்தம் பெற்றால் தோஷத்தின் வீரியம் குறையும். இதே விதிவிலக்குடன் உள்ள ஜாதகத்தை இணைப்பது சிறப்பு.

காலசர்ப்ப தோஷம்

லக்னம் உட்பட அனைத்து கிரகங்களும் ராகு- கேதுவின் பிடியில் அடைபட்ட நிலையில் இருப்பது காலசர்ப்ப தோஷம். இத்தகைய அமைப்பைப் பெற்ற ஜாதகருக்கு 33 வயதுவரை வாழ்க்கை போராட்டக்களமாக இருக்கும். திருமணம், குழந்தை, தொழில் என எல்லா பாக்கியமும் காலம் தாழ்த்தியே ஏற்படும்.

இந்த காலசர்ப்ப தோஷம் இரண்டு வகைப்படும்.

ராகுவை நோக்கி ஏழு கிரகங்களும் சென்றால் சிறப்பான அமைப்பாகும். இது காலாமிருத யோகம்.

கேதுவை நோக்கி ஏழு கிரகங்களும் சென்றால் விலோமா யோகம். இது சோதனை மிகுந்த அமைப்பாகும். காலதாமதத் திருமணம் செய்வது நலம்.

கிரகண தோஷம்

பூமியில் கிரகணம் சம்பவிக்கும் நாளுக்கு முன், பின் ஏழு நாட்கள் பிறக்கும் குழந்கைளின் வினைப்பதிவு மிகவும் கடுமையாக இருக்கும். ராகு- கேது, சூரியன், சந்திரனுடன் செவ்வாய், சனி சம்பந்தம் பெறுபவர்கள் அசுபப் பலனையும், குரு மற்றும் லக்ன சுபரின் சாரம் பெற்றவர்கள் எதையும் வென்று வெற்றி வாகை சூடுபவர்களாகவும் இருக்கிறார்கள்.

சனி தோஷம்

கர்மகாரகன் மற்றும் ஆயுள் காரகனாகிய சனி பகவான் 1, 2, 5, 7, 8 மற்றும் 12-ல் அமர்ந்தால் திருமண வாழ்வு இன்னல் நிறைந்ததாகும். இத்துடன் அசுப கிரகங்களான சூரியன், செவ்வாய், ராகு- கேது இணைந்தால் தோஷம் இரட்டிப்பாகும். சனிக்கு திரிகோணாதிபதிகள் மற்றும் குரு தொடர்பு இருப்பின் தோஷம் குறையும்.

1, 2, 7, 8, 12-ல் உள்ள சனிக்கு இதே அமைப்புள்ள ஜாதகத்தையும், 5-ல் உள்ள சனிக்கு 5-ல் சனியில்லாத ஜாதகத்தையும் இணைத்தல் சிறப்பு.

சூரிய தோஷம்

ஜாதகக் கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். 2-ல் அமர்ந்த சூரியன் குடும்பம் அமைவதை காலதாமதப் படுத்துகிறது. 7-ல் அமர்ந்த சூரியன் களத்திரத்திற்கு தோஷத்தை ஏற்படுத்துகிறது.

8-ல் அமர்ந்த சூரியன் திருமணத்தடையை ஏற்படுத்தும். மகர, கும்ப லக்னத்தாருக்கு 7, 8-ல் அமர்ந்த சூரியன் விதிவிலக்கு பெறும். சூரிய தோஷம் உள்ள ஜாதகத்திற்கு இணையான தோஷமுள்ள ஜாதகத்தை இணைப்பதே நன்று.

சுக்கிர தோஷம்

களத்திர காரகரான சுக்கிரன் 7-ல் அமர்வது (காரகோ பாவக நாஸ்தி) திருமணத்தைத் தாமதப்படுத்துகிறது. பெண்களைவிட ஆண்களே மிகவும் பாதிப்படைகிறார்கள். 7-ல் சுக்கிரன் அமையப் பெற்ற ஜாதகருக்கு 6, 7, 8-ல் சுக்கிரன் உள்ள ஜாதகத்தை இணைப்பது சிறப்பு.

களத்திர தோஷம்

ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான களங்களான 1, 2, 7, 8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ஆம் பாவாதிபதி நீசம், அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

களத்திர தோஷம் அமையப்பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை, காலதாமதத் திருமணம், களத்திரத்தின்மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.

vishnu

புத்திர தோஷம்

ஒருவரின் ஜனன ஜாதகத்தில், ஆண் ஜாதகமாயின் லக்னத்திற்கு 5-ஆம் இடத்தைக் கொண்டும், பெண் ஜாதகமாயின் 5, 9-ஆம் இடத்தைக் கொண்டும், குருவின் வலிமையைக் கொண்டும் புத்திர பாக்கியத்தைத் தீர்மானிக்கலாம்.

5-ஆம் அதிபதி அல்லது 5-ஆம் இட அதிபதி நீசம், வக்ரம், அஸ்தங்கம், பகை வீட்டில் தஞ்சம், 6, 8, 12-ல் மறைவு, 5-ல் நின்ற குரு புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். புத்திர தோஷமுள்ள ஜாதகத்திற்கு புத்திர தோஷமற்ற ஜாதகத்தை இணைக்கவேண்டும்.

புனர்பூ தோஷம்

சனி, சந்திரன் சம்பந்தத்தால் உருவாகும் கடுமையான- கருணையற்ற தோஷம். தாலி கட்டும் நேரத்தில்கூட திருமணத்தை நிறுத்தும் வல்லமை படைத்த தோஷம் இது. வசதியற்றவர்களை புனர்பூ தோஷம் பாதிப்பதில்லை.

மாங்கல்ய தோஷம்

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். 8-ஆம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுள் ஸ்தானம் மற்றும் தாம்பத்திய உறவுபற்றிக் கூறும் இடமாகும்.

அதாவது லக்னத்துக்கு 8-ஆம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும்.

8-ஆம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தை ஏற்படுத்தும்.

இதில் 8-ஆம் இடத்தை சுபகிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ஆம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

8-ஆம் பாவகம் மிகவும் வலுவுள்ள ஜாதகத்தை இணைப்பதே நல்லது.

கிரக இணைவுகள் தரும் தோஷம்

சிறப்பான மணவாழ்வைத் தடைசெய்வதில் கிரக இணைவுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. சில குறிப்பிட்ட கிரக இணைவுகள் மணவாழ்வையே முறிக்கும் வல்லமை படைத்தவை.

● 6, 7, 8 ஆகிய பாவகாதிபதிகள் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் பெறுவது.

● சூரியனுடன் சுக்கிரன், செவ்வாய் இணைவு.

● சந்திரன்- கேது, சுக்கிரன்- கேது, செவ்வாய்- கேது இணைவு பெறுதல்.

இதேபோன்ற கிரக இணைவு பெற்ற ஜாதகத்தை இணைத்தால் சிறிது பிரச்சினைகளைக் குறைக்கும்.

தார தோஷம்

2, 7-ஆம் அதிபதி 9-ல் அமர்வது கடுமையான தாரதோஷம். இவர்களுக்கு 40 வயதிற்கு மேலேதான் திருமணம் நடக்கிறது. இவர்களுக்குத் திருமணம் இல்லாத திரைமறைவு வாழ்க்கை நிச்சயம் உண்டு.

7-ஆம் அதிபதி 11-ல் சம்பந்தம் பெற்றால் இரண்டு திருமணம் நடந்துவிடும்.

7, 9 அதிபதி லக்னத்துடன் சம்பந்தம் பெறும் ஜாதகர்கள் தங்களின் மணமுறிவுக்கு தாங்களே காரணமாகிறார்கள்.

ஐ.டி. கம்பெனியில் வேலை செய்பவர்களை தார தோஷம் மிகவும் பாதிப்படையச் செய்கிறது. ராகுவின் தாக்கம் அதிகமிருப்பதே காரணம்.

திதி சூன்ய தோஷம்

அமாவாசை, பௌர்ணமி தவிர்த்து ஏனைய திதிகளில், சூரிய ஒளிக்கதிர் ஜனன ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவங்களுக்குக் கிடைக்காமல் போவதால் திதி சூன்ய பாதிப்பு ஏற்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷம்

ஜனன ஜாதகத்தில் குருவும் சனியும் பெறும் சம்பந்தம் பிரம்மஹத்தி தோஷத்தை உருவாக்கும். இத்துடன் கேது சம்பந்தம் தோஷத்தைக் கடுமையாக்கும். இத்துடன் 1, 5, 9 வலிமை குறைந்தால் முன்னேற்றம் பாதிக்கப்படும். இதனால் வறுமை, நிம்மதியற்ற வாழ்க்கை, திருமணத்தடை, குழந்தைப்பேறின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். குரு, சனி தொடர்புடன் 1, 5, 9 வலிமை பெற்றவர்கள் அரசியலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.

பித்ரு தோஷம்

பித்ருக்கள் என்பவர்கள் நமது குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள். நமது தந்தை, தாய்வழி மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு- இறைவனடி சேர்ந்த ஆன்மாக்களுக்கு திதி தர்ப்பணங்கள் தந்து முறையான வழிபாடு செய்து அவர்களது ஆசியைப் பெறவேண்டும். பித்ரு லோக அதிபதியான சூரியன் சந்திரனுடன் இணைந்த அமாவாசை நாளில் பித்ருக்கள் பூலோகம் வந்து, தான் வாழ்ந்த இடங்கள் மற்றும் தம் வாரிசுகளைப் பார்க்க வருவதாக ஐதீகம்.

ஜாதகத்தின் 1, 5, 9-ஆம் பாவகத்தைக் கொண்டு பித்ருதோஷத் தாக்க வலிமையைக் கண்டறிந்து, முறையான பித்ரு வழிபாட்டை மேற்கொண்டால் நமது செயல்கள் அனைத்தும் சித்தியாகும்.

குலதெய்வ சாபம்

தெய்வங்களில் மிகவும் வலிமையானது குலதெய்வமாகும். இது பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப்படுத்தக்கூடாது.

குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. முறையான குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளாதவர்கள் குலதெய்வ சாபம் ஏற்பட்டு காரியத்தடையை அதிகம் சந்திக்கிறார்கள். முறையான குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது சிறந்த பலன் தரும்.

விஷக் கன்னிகா தோஷம்

ஜனனகால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவங்களான 1, 2, 7, 8 ஆகியவை முழுவதும் கெட்டு, பாவகாதிபதிகளும் சுக்கிரனும் வலிமையற்றிருந்தால் அந்த ஜாதகம் விஷக் கன்னிகா தோஷமுடையதாகும். இந்த தோஷமுடைய ஜாதகருக்குத் திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது.

இத்தகைய தோஷம் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது. இவர்களுக்குத் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு. 2-ஆவது திருமணமோ, வாழ்க்கை இழந்த நபரையோ திருமணம் செய்யும்போது தோஷத்தின் வீரியம் குறையும்.

திருமணத் தடைக்கு இவ்வளவு தோஷங்கள் இருக்கின்றன. கிரக இணைவுகளே திருமணத்தடைக்கு முக்கிய காரணம். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும், எந்த விளைவாக இருந்தாலும் தசாபுத்தி, கோட்சார கிரகங்கள் தொடர்பு பெறும் காலங்களில் மட்டுமே சுப- அசுப விளைவுகள் ஏற்படும்.

திருமணத்தைப் பொருத்தவரை எப்படியான பிரச்சினைகள் இருந்தாலும் இணைக்கும் ஜாதகமே சரியான தீர்வு தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

ஸ்தூலப் பொருத்தமான நட்சத்திரப் பொருத்தத்தைவிட, சூட்சுமப் பொருத்தம் என்னும் ராசிக்கட்டத்தை வைத்துப் பொருத்துவதே நிரந்தரத் தீர்வு தரும்.