8-ஆம் பாவகத்தால் ஒருவருடைய இறப்பின் ரகசியம்பற்றி அறியலாம். இறப்பிற்குப் பிறகு பிறப்பின் ரகசியம் பற்றி 12-ஆம் பாவகத்தில்தான் அறியமுடியும். நம் உடலைவிட்டுப் பிரிந்த உயிர் மீண்டும் உடலுக்குள் செல்ல கிட்டத்தட்ட ஒரு மணிநேரம்வரை போராடிப் பார்க்கும். மீண்டும் அந்த உடலுக்குள் சென்று தங்கமுடியாது என்பதை உணர்ந்தபின்புதான் அந்த உடலைவிட்டு உயிர் வெளியே நிற்கும்.
பிரிந்த உயிர் ஏறக்குறைய மூன்று நாட்கள் அந்த உடலைப் பார்த்துக்கொண்டே இருக்கும்.
அல்லது உடம்பை எரித்த சாம்பலைத் தண்ணீரில் கரைக்கும்வரை நோக்கிக்கொண்டே இருக்கும். இது ஒரு வகையான வேதாந்த ரகசியம். அந்த மூன்று நாட்களில் உயிரானது தான் விரும்பிய அறை, கட்டில், உயிரோடிருந்தபொழுது உபயோகித்த பொருட்கள் என்று வீட்டையே சுற்றிவரும். சில உயிர்கள் மௌனமாக இருந்துவிட்டுச் செல்லும். சில உயிர்கள் அழுதுபுரண்டுகொண்டிருக்கும். இவை யாவும் 12-ஆம் இடத்தின்மூலமாக அறியமுடியும்.
ஒருவர் ஜாதகத்தில் 12-ஆம் இடம் சுத்தமாக இருந்தால் அந்த ஜாதகர் ஆரோக்கியமாக இருப்பார். லக்னத்திற்கு 12-ல் எந்த கிரகமும் ஆட்சி, உச்சம், நீசமாக இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின் ஜாதகர் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் தாக்கி அவதிப்படுவார். அதேபோல லக்னத்திற்கு 12-ஆம் இடத்திற்குரிய அதிபதியும் ஆட்சி, உச்சம் பெற்றிருத்தல் கூடாது. அப்படியிருப்பின் பரம்பரை நோயால் அவதிப்படுவார். 12-ஆமிடத்து அதிபதியின் தசை நடத்தல் கூடாது. இந்த ஜாதகர் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளவர். அங்குள்ள நோய்களின் தாக்குதலுக்கு ஆட்படுவார். 12-ஆம் பாவகத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்தால் அந்த கிரகத்தினுடைய நோய்கள் தாக்கும். 12-ஆமிடத்திற்குரிய அதிபதியே பாதகாதிபதியாக இருந்தால், அந்த ஜாதகர் அதற்கு ஒப்பான கண்டத்தை அடைவார். 12-ஆமிடத்து அதிபதியுடன் சேர்ந்த கிரகங்களின் தசையும் நடக்கக்கூடாது. அது சுபகிரகமானாலும் சரி- ஜாதகரை படாதபாடு படுத்திவிடும். எந்த நோய்க்கு எந்த மருந்தைச் சாப்பிடுவது என குழம்பிவிடுவார்கள்.
12-ஆமிடத்து அதிபதியுடன் சூரியன், செவ்வாய், சனி, ராகு அல்லது கேது சேர்ந்திருந்தாலோ, இவர்களில் ஏதாவது ஒரு கிரகம் 12-ஆமிடத்துக்கு அதிபதியாக இருந்தாலோ அல்லது இந்த கிரகங்களின் நட்சத்திர பாதங்களில் நின்றாலோ, அந்த ஜாதகர் சொந்த ஊரைவிட்டு வேறிடங்களில் வசிப்பார். இவர் செய்யும் வேலைகளின்மூலம் நோய்கள் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவென்பதால் தொற்றுநோய்கள் உடனே வரக்கூடும்.
12-ஆமிடத்து அதிபதியை சுபகிரகங்கள் பார்த்தால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வெளிநாட்டுத் தொழில்யோகம், வெளிநாட்டுப் பணம் சேர்ப்பது, வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டே இருப்பது, முழுமையான தாம்பத்திய சுகம், நிம்மதியான தூக்கம், தூக்கத்தில் தெய்வங்கள், மூதாதையர்கள் வந்துபோவது நடக்கும். இதுவே அசுப கிரகப் பார்வையாக இருந்தால் சிறைவாசம், குஷ்டம், கண்ணிற்குப் புலப்படாத கிருமி தாக்கத்தினால் நோய்கள் ஏற்படும்.
இப்படிப்பட்ட நிலையில் பிறப்பின் ரகசியம் அமையுமேயானால் கீழுள்ளவாறு பரிகாரங்கள் செய்துவர நன்மைகள் நடக்கும்.
பரிகாரம்-1
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவகிரகங்களுக்குரிய தானியங்கள் 27 மட்டும் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து வேண்டிவர நன்மைகள் நடக்கும்.
பரிகாரம்-2
வசதியுள்ளவர்கள் 12-ஆம் அதிபதி யார் என்று தெரிந்துகொண்டு, அதற்குரிய நவகிரக தலத்திற்கு நேரில்சென்று வழிபட்டுவந்தால் நலமுண்டாகும்.
செல்: 94871 68174