அதிர்ஷ்டலட்சுமி எப்போதுதான் கண் திறப்பாளோ என ஏங்கும் வாசகர்கள் பலருண்டு. வாழ்வில் வசந்தங்கள் வாசல் ஏறிவரும் காலம் எது? சிரிப்பும் சிருங்காரமும் சிறப்படைவது எப்போது என அறியவிரும்பும் ஜோதிட நெஞ்சங்களுக்கான வரிகள் இவை- குரு அருளால்.
சந்திர கேந்திரங்களில் உங்களின் குருபகவான் உலவும் கோட்சாரங்களில், அந்த குருவுக்கு 8, 6, 3-ஆம் ராசியில் பகலவன் சஞ்சரிக்கும் மாதங்களில் (நன்ய் பழ்ஹய்ள்ண்ற்) குடிசையில் பிறந்தவரும் கோபுர உச்சிக்குச் செல்லமுடியும் என்பது ஆதித்ய நியதி. விளக்கமாகச் சொல்வதென்றால், இந்த ஆண்டின் குருவுக்கு 3, 6, 8-ஆம் வீட்டில் சூரியன் நகரும் மாதங்களில் சாமானியனும் சர்வசக்தி படைத்தவனாக முடியும். திடீர் தனப்பிராப்தி, நிலம், வீடு, சொத்து மதிப்பு கூடி நல்ல விலை கிடைத்தல், தொழில்துறையிலும் பெரிய ஆதாயங்கள் கிடைத்தல், கள்ளச்சந்தை, பங்கு மார்க்கெட்- இப்படி ஏதாவது ஒருவழியில் உயர்வடைவீர்கள். அதிர்ஷ்டலட்சுமி உங்களின் கரம் பிடிப்பாள்.
இனிவரும் வரிகளில் சிறந்த பண்டிதர்கள் குறித்த யோக முகூர்த்தக் காலப்படி, 12 ராசி வாசகர்களுக்கும் மிக அதிர்ஷ்டமான காலங்களைத் தொகுத்தளிப்பதில் பெருமை கொள்கிறேன்.
மேஷ ராசி வாசகர்களுக்கு
உங்களின் ஜாதகப்படி தனகாரகன் குருபகவான் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலங்களில், அந்த ஆண்டின் கார்த்திகை, ஆனி, புரட்டாசி மாதங்களில் வரும் அஸ்வினி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் நடைபெறும் தினங்களில் தனவரவு அமோகமாக உண்டு. அதிர்ஷ்ட முகூர்த்தம் இவை. கடகத்தில் குரு உலவும் ஆண்டுகளில் அமையும் மாசி, மார்கழி, புரட்டாசி மாதங்களின் கார்த்திகை, பரணி, அஸ்வினி நாட்களில் பம்பர் பரிசுகள், கேட்ட இடத்தில் கடன் கிட்டும்- மானியத்துடன். பணக் கவலை தீர்க்கப்படும் காலமிது. பணநாயகர் குரு துலா ராசியில் உலவும் காலங்களில் வரும் பங்குனி, மார்கழி, வைகாசி மாதங்களில் அஸ்வினி, பரணி, கார்த்திகை நாட்கள் பெரும் தனவரவு தரும். பாக்கெட் நிரம்பும் நாட்களிவை.
ரிஷப ராசி அன்பர்களுக்கு
சுபிட்சகாரகன் சுக்கிரனின் அருளாசி பெற்ற ஆண்- பெண்களின் குரு ரிஷபத்தில் உலவும் கோட்சாரத்தில் வரும் மார்கழி, ஐப்பசி, ஆடி மாதங்களின் மிருகசீரிடம், ரோகிணி, கார்த்திகை நட்சத்திர நாட்களில் மிக தனயோகம் கிட்டும். அதிர்ஷ்டமான நாட்கள் இவை. பணம், புகழ், அந்தஸ்து தரும். குரு சிம்ம ராசியில் நகரும் ஆண்டுகளில் பங்குனி, தை, ஐப்பசி மாதத்தில் வரும் ரோகிணி, மிருகசீரிட நட்சத்திர நாட் களில் தனயோகம் சித்திக்கும். விருச்சிக ராசியில் குரு வரும் காலங்களில் தை, ஆனி, சித்திரை மாதங்களில் அமையும் மிருகசீரிடம், ரோகிணி மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்கள் மிக அதிர்ஷ்டமானவை. செல்வம் வந்துசேரும். ஏதாவது ஒருவழியில் பணக்கஷ்டம் நீங்கும்.
மிதுன ராசி புத்திசாலிகளுக்கு
உங்களின் யோக முகூர்த்தங்கள் எவை எனக் கேட்டால் உங்கள் ராசியிலேயே குரு உலவும் கோட்சார ஆண்டின் தை, ஆவணி, கார்த்திகை மாதங்களின் புனர்பூசம், திருவாதிரை, நட்சத்திர நாட்கள் மிக யோகம் தரும். வங்கிக் கடன் மற்றும் வாராக்கடன் உடன் வந்து பையை நிரப்பும் அதிர்ஷ்ட நாட்கள் இவை. கன்னி ராசியில் குரு வரும் காலம் மாசி, சித்திரை, கார்த்திகை மாதங்களின் மிருகசீரிடம், புனர்பூசம், திருவாதிரை நட்சத்திரமுள்ள நாட்கள் யோகபலம் தருபவை. குருபகவான் ஆட்சிபெற்று தனுசு ராசியில் உலவும் கோட்சார ஆண்டின் ஆடி, வைகாசி, மாசி மாதங்களில் வரும் புனர்பூசம், திருவாதிரை நட்சத்திர நாட்கள் அதிகயோகம் தரும். எந்தவழியிலாவது பணம் கிட்டும். மீன ராசியில் குரு உலவும்போது மிதுன ராசி தொழிலதிபர்கள், ஆசிரியர்களுக்கு ஆவணி, வைகாசி, ஐப்பசி மாதங்களில் வரும் திருவாதிரை, புனர்பூசம், மிருகசீரிடம் நட்சத்திர நாட்கள் அதிர்ஷ்டம் தரும்.
கடக ராசி உள்ளங்களுக்கு
மிகவும் யோகமான "லக்கி' நாட்கள் சொல்லவேண்டு மானால், கடகத்தில் குரு சஞ்சரிக்கும் ஆண்டின் மாசி, மார்கழி, புரட்டாசி மாதங்களில் அமையும் ஆயில்யம், பூசம் ஆகியவையே. துலா ராசியில் குரு வரும் கோட்சாரத்தில் பங்குனி, மார்கழி மாதங்களின் பூசம், புனர்பூசம், ஆயில்ய நட்சத்திர நாட்கள் ஆயிரமாயிரமாக வரவுகளை வழங்கும் அதிர்ஷ்ட முகூர்த்த நாட்கள் இவை. குறிப்பாக மேஷத்தில் குருபகவான் நகரும் காலம் கார்த்திகை, ஆனி, புரட்டாசி மாதங்களில் வரும் ஆயில்யம், புனர்பூசம், பூச நட்சத்திர நாட்கள் யோகமானவை. சுபகாரியங்களுக்குப் பயன்படுத்த ஆதாய வரவு மிகும்.
சிம்ம ராசி நெஞ்சங்களுக்கு
பணத்திற்குக் காரக கிரகம் குரு உங்கள் ராசிமீது வரும் ஆண்டுகளில், தை, பங்குனி, ஐப்பசி மாதத்தில் வரும் உத்திரம், மகம், பூர நட்சத்திர நாட்கள் மிக யோகம் தரும். பெரிய கான்டிராக்ட், அரசியல், உயர்பதவி அனுகூலம் உண்டு. விருச்சிக ராசியில் குரு உலவும்போது தை, ஆனி, சித்திரை மாதத்து உத்திரம், பூரம், மக நட்சத்திர நாட்கள் மிக அதிர்ஷ்டமானவை. பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கை தரும் அதிர்ஷ்ட நாட்கள் இவையே. கும்பத்து குருவாகி புரட்டாசி, ஆடியில் வரும் மகம், பூரம், உத்திர நாட்கள் மகா தனயோகம் தருவது நியதி. ரிஷப ராசியில் குருவந்து ஆடி, ஐப்பசி மாதத்தின் மகம், பூர நட்சத்திர நாட்களும் நன்மைகள் பல தரும். வேலை அழைப்புக் கடிதம், புரமோஷன் தகவல் ஆனந்தமளிக்கும் அதிர்ஷ்ட நாள் உங்களுக்கு இதுவே.
கன்னி ராசி வாசகர்களுக்கு
கோட்சாரத்தில் குருபகவான் கன்னி ராசியில் வரும் காலத்தில் மாசி, கார்த்திகை, சித்திரை மாதங்களில் வரும் அஸ்தம், சித்திரை, உத்திர நட்சத்திர நாட்களில் அதீத தனவரவுண்டு. தனுசுவில் குரு உலவும் கோட்சார ஆண்டில் மாசி, ஆனி, வைகாசி மாதங்களில் வரும் அஸ்தம், சித்திரை நாட்களில் அதிர்ஷ்டம் அரவணைக்கும். மீனத்தில் குரு வரும் காலம் ஐப்பசி, ஆனி மாதங்களில் அமையும் சித்திரை, அஸ்த நாட்களில் யோக முகூர்த்தம், தனவரவு மேன்மை உண்டு.
துலா ராசி யோகசாலிகளுக்கு
குருபகவான் கடகத்தில் சஞ்சரிக்கும் ஆண்டில் நடைபெறும் மாசி, மார்கழி, புரட்டாசி மாதத்தின் விசாகம், சுவாதி, சித்திரை நாட்களில் யோகம் மனமகிழ்ச்சி தரும். மேஷ ராசியில் குரு சஞ்சரிக்கும் காலம் நடைபெறும் கார்த்திகை, ஆனி, புரட்டாசி மாதங்களின் சுவாதி, விசாக நட்சத்திர நாட்கள் மகாதனயோகம் தரும் அதிர்ஷ்ட முகூர்த்தம்.
விருச்சிக ராசி வாசகர்களுக்கு
உங்கள் மனக்கவலை, பணக் கவலைகள் தீர, குருபகவான் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கும் ஆண்டில், தை, சித்திரை, ஆனி மாதங்களில் நடப்பில் வரும் கேட்டை, விசாகம், அனுஷ நட்சத்திர நாட்களில் புதுத்தொழில் ஆரம்பம், புதுமனைப் புகுதல், குழந்தைகளுக்கு சுபகாரியம் செய்தல், தங்க ஆபரணங்கள் வாங்குதல் சிறப்பு. மிக அனுகூலமான வரவுகள் அதிகம் இருக்கும் முகூர்த்த நாட்கள் இவை. கும்ப ராசியில் குரு உலவும்போது, புரட்டாசி, ஆனி மாதங்களில் வரும் கேட்டை, விசாக நட்சத்திர நாட்கள் மிக அதிர்ஷ்டம் தரும். ரிஷப ராசியில் குரு நகரும் வருடத்தின் ஐப்பசி, மார்கழி மாதங்களில் நடப்பில் வரும் விசாகம், கேட்டை நட்சத்திர நாட்கள் மகா தனயோகம் தரும் மிக அதிர்ஷ்ட முகூர்த்தம். பெரிய இடத்து சம்பந்தம் சுபமாகப் பேசி முடிக்கப்படும்.
தனுசு ராசி பிரமுகர்களுக்கு
கன்னி ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலங்களில் வரும் மாசி, சித்திரை, கார்த்திகை மாதங்களில் நடப்பில் வரும் உத்திராடம், மூலம், பூராட நட்சத்திர நாட்களில் பொன்பொருள் சேர்க்கை, பரிசு, பணவரவு எதிர்பாராமல் கிட்டும். வெளிநாட்டு வரன் நிச்சயிக்கப்படும்.
தனுசு ராசியின்மீது குரு நகரும் ஆண்டு களில் மாசி, வைகாசி மாதத்தில் வரும் பூராடம், உத்திராட நட்சத்திர நாட்களில் தனயோகம், அதிர்ஷ்டம் மிகும். குருவீடான பெண் ராசி மீனத்தில் பொன்னவன் ஒளிரும் காலங்களில் ஆவணி, ஐப்பசி, வைகாசி மாதத்தின் பூராடம், உத்திராட நட்சத்திர நாட்கள் பெரும் செல்வம் தானாகச் சேரும் மிக அதிர்ஷ்ட நாட்கள். தீட்டிய திட்டங்கள் அன்றே செயல்பாட்டிற்கு வரும்.
மகர ராசி அன்பர்களுக்கு
துலா ராசியில் குருபகவான் அமர்ந்த ஆண்டில் நடப்பில் வரும் பங்குனி, வைகாசி, மார்கழி மாதத்தின் அவிட்டம், திருவோண நட்சத்திர நாட்களில் பெரும் செல்வம் சேரும்; மிக அதிர்ஷ்ட முகூர்த்தம். கடக ராசியில் குருபகவான் உலவும் கோட்சாரங்களில் புரட்டாசி, மார்கழி, மாசி மாதத்தில் வரும் உத்திராடம், திருவோணம், அவிட்ட நட்சத்திர நாட்களில் மிக தனவரவு எதிர்பார்க்கலாம். தொட்டது துலங்கும் முகூர்த்தம். மேஷத்தில் குரு நகரும் காலத்தில் கார்த்திகை, புரட்டாசி, ஆனி மாதங்களில் நடப்பில் வரும் உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்கள் மிக உன்னதமான பொருள்வரவு தரும். நீண்டநாள் பேசிக்கொண்டிருந்த வது- வரன்கள் சட்டென பேசி முகூர்த்தம் குறிக்கப்படும்.
கும்ப ராசி தர்மசிந்தனையாளர்களுக்கு
விருச்சிக ராசியில் குரு வரும் கோட்சார ஆண்டின் தை, ஆனி, சித்திரை மாதத்து சதயம், பூரட்டாதி நட்சத்திர நாட்கள் மிக அதிர்ஷ்டமானவை. போட்டி பந்தயங்கள், நிலம் பதிவு, பி.எப். இன்சூரன்ஸ் தொகை இனங்களில் ஆதாய வரவுண்டு. கும்ப ராசிக்கு குருப்பெயர்ச்சியான ஆண்டில் வரும் சித்திரை, புரட்டாசி மாதங்களில் சதயம், பூரட்டாதி நட்சத்திர நாட்கள் மிக அதிர்ஷ்டமானவை. நீண்டநாள் வாராக் கடன் வசூலாகும். வழக்குகளில் சாதகமாக தீர்ப்பு வரும் நாள். சிம்ம ராசியில் குரு உலவும் கோட்சாரங்களில் நடப்பில் வரும் தை, ஐப்பசி மாதத்து அவிட்டம், பூரட்டாதி, சதய நட்சத்திர நாட்கள் மிக அதிர்ஷ்ட தன முகூர்த்தம்.
மீன ராசி ஜாதகர்களுக்கு
குருவின் ஆட்சி வீடான தனுசு ராசியில் சஞ்சரிக்கும் ஆண்டுகளில் நடக்கும் ஆடி, மாசி, வைகாசி மாதங்களில் நடப்பில் வரும் ரேவதி, பூரட்டாதி நட்சத்திர தினங்கள் மிகயோகமான பலன்கள் நடக்கும். எதிர்பார்த்த மற்றும் திடீர் தனவரவு தரும் முகூர்த்தமிது. மிதுன ராசியில் குரு நகரும்போது வரும் ஆவணி, தை மாதத்து பூரட்டாதி, ரேவதி, உத்திரட்டாதி நட்சத்திர நாட்கள் மகா தனயோகம் தரவல்லவை. மீன ராசியில் குரு சஞ்சரிக்கும் கோட்சாரத்தில் வரும் ஐப்பசி, வைகாசி, ஆவணி மாதங்களில் நடப்பில் வரும் பூரட்டாதி, ரேவதி நட்சத்திர நாட்கள் மிக அதிர்ஷ்டமானவை. எதிர்பார்த்த உத்தியோக உயர்வு, மேல்வரு மானம், புதிய நகை, பத்திரப் பதிவு போன்ற சுபகாரியங்கள் திடீரென அரங்கேறும் அதிர்ஷ்ட முகூர்த்த நாட்கள்.
முடிவுரையாக, உங்களின் ராசி, லக்னம் எதுவானாலும் ஜாதகப்படி 1, 5, 9-க்குரிய கிரக தசாபுக்திகளின் நடப்பில்தான் இஷ்டபூர்த்தி, தன மேன்மை, ஆனந்த வாழ்வளிக்கும் என்பது ஜோதிட நியதி.
செல்: 75399 10166