என்னிடம் பலரும் "1, 5, 9 பாவகங்கள் வலிமையுள்ள ஜாதகம் மட்டுமே வெற்றி வாகை சூடும் என்று எழுதுகிறீர்கள். மற்ற எந்த பாவகமும் ஒரு ஜாதகரை வாழவைக்காதா' என கேட்கிறார்கள். 12 கட்டமும் சேர்ந்தால்தான் ஜாத கம். 1, 5, 9 வலிமையுள்ள ஜாதகம் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல், தானே எழுந்து நிற்கும். 1, 5, 9 பாவகங்கள் வலிமை குறைந்தாலும், மறைவு ஸ்தானங்களோடு சம்பந்தம் பெறா தபோது, பாதிப்பு வெளியே தெரியாமல் மானம் காப்பாற்றப்படும். 1, 5, 9 பாவகங்கள் மறைவு ஸ்தானங்களோடு சம்பந்தம் பெறும்போது, இழப்பீடு செய்யமுடியாத நிலையில் பாதிப்பு இருக்கும்.
மேலும் 12-ஆம் அதிபதி, 12-ல் நின்ற கிரகம் சுபமா? அசுபமா என்பது பலரின் சந்தேகம். அதனால் 12-ஆம் பாவகம் தொடர்பான கருத்துகளை இந்த கட்டுரையில் தருகிறேன். 12-ஆம் பாவகம் என்பது, ஒருவரின் சாபத் தால் ஏற்படும் துயரம். இது தலை முறைக்கும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
12-ஆம் பாவகத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் செய்த பாவ, புண்ணியத்தின் பலன் என்ன என்பதே. இதையே விரிவாகச் சொன்னால் முக்தி அல்லது மோட்சம் என்னும் பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத் தவுடன் நிம்மதியான தூக்கம் வருமா? வெளி நாட்டு வேலை, தொழில் அமையுமா என்பது போன்றவற்றை அறியமுடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், இடது கண், தியாக சிந்தனை, தற்கொலை, ராஜதுரோகம், ஜாதி மாறுதல், தாய்மாமனால் பெறும் சுகதுக்கங்கள், தந்தையின் தாய், தாயின் தந்தை பிரிவினை, தலைமறைவாதல் போன்றவற்றையும் அறியமுடியும். இதனை விரயஸ்தானம் அல்லது அயன, சயன, போகஸ்தானம் எனவும் அழைக்கலாம்.
12-ஆம் அதிபதி, பன்னிரு பாவகங்களில் அமரும்போது ஏற்படும் விளைவுகள்
12-ஆம் அதிபதி 1-ல் இருந்தால், ஜாதகர் வரவுக்குமீறி செலவுசெய்வார். கடன் பெற்றும் வீண்செலவு செய்யத் தயங்கமாட்டார். சோம்பேறியாக இருப்பதுடன், சொந்த ஊரைவிட்டு அடிக்கடி நீண்டதூரம் பயணம்செய்யும் தொழிலில் இருப்பார். வீண்வம்பு, வழக்கு, விரோதங்களைத் தானே உருவாக்குவார்.
12-ஆம் அதிபதி 2-ல் இருந்தால், கொடுத்த வாக்கைக் காப்பாற்றமுடியாத நிலை இருக்கும். சோறு கிடைத்த இடம் சொர்க்கம் என, பிறவியின் நோக்கமே நல்ல உணவு சாப்பிடுவதுதான் என்று லட்சியமில்லாமல் இருப்பார். உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமை, வருமானமே இல்லாத நிலை அல்லது வரும் சொற்ப வருமானமும் விரயம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இணக்கமில்லாமல் வீணாக ஊர்சுற்றித் திரிவார்.
12-ஆம் அதிபதி 3-ல் இருந்தால், இளைய சகோதரர்வழியில் விரயச்செலவு இருக்கும். சிறிய செயலுக்கு அதிக முயற்சிசெய்யும் நிலை, செயல்திறன் குறைவு, இளைய சகோ தரவழி கருத்து வேறுபாடு இருக்கும். சிறு ஆயுள் கண்டம் இருக்கும். செவித்திறன் குறைவு, காதில் பிரச்சினை- அதற்கு வைத்தியம் செய்தல் போன்ற செலவு இருக்கும்.
12-ஆம் அதிபதி 4-ல் இருந்தால், தாயார், வீடு, வாகனவகையில் செலவு இருக்கும். சிலர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வாகனத்தை மாற்றிக்கொண்டே இருப்பார். இவர்களுக்கு வாஸ்துக் குறையுள்ள மனையே அமையும். வீட்டை இடித்துக்கட்டியே பாதி ஆயுளையும், மன நிம்மதியையும் குறைத்துக் கொள்வார்கள். ஒருசிலருக்கு சொந்த வீடு பாக்கியமே இல்லாமல், வாடகை வீட்டைக்கூட மாற்றிக் கொண்டே இருப்பர். தவறான நிலத்தை வாங்குவது, நிலத்தினால் நட்டம் இருக்கும். கடனுக்காக வீட்டைவிற்கும் நிலைகூட வரும். அழகு, ஆடம்பரப் பொருள்மீது ஆர்வம்கொண்டு விரயம் செய்வார்கள். தாயாரின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடு இருந்துகொண்டே இருக்கும். சிறுவயது குழந்தைகள் கல்விக்காகப் பெற்றோரைப் பிரிந்து, விடுதியில் தங்கும் நிலை ஏற்படும்.
12-ஆம் அதிபதி 5-ல் இருந்தால், புத்திர பாக்கியமின்மை ஏற்படும். 5- ஆம் அதிபதி 12-ல் இருந்தாலும் புத்திர பாக்கியம் ஏற்படுவதில் சிரமம், காலதாமதம் ஏற்படும். 5, 9-ஆம் அதிபதிகள் 12-ஆம் பாவகம், 12-ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் புத்திர தோஷம், புத்திர சோகம் இருந்தே தீரும். புத்திர பாக்கியத்தைத் தீர்மானம் செய்வதில் 5, 9-ஆம் பாவகத்துடன் 12-ஆம் அதிபதி, 12-ல் நின்ற கிரகத்தின் பங்கு அதிகம். 12-ஆம் அதிபதி அல்லது 12-ல் நிற்கும் கிரகம் லக்ன சுபர்களோடு சம்பந்தம் பெற்றால் மட்டுமே சாத்தியம். ஒருசிலருக்கு 9-ஆம் பாவக வலிமையால் புத்திர பாக்கியம் இருந்தால்கூட அற்ப புத்திரர் அல்லது குழந்தைகளால் வீண் விரயம், அவமானம் ஏற்படும். 12-ஆம் அதிபதி 5-ல் இருந்தால், உயர்கல்வி வாய்ப்பு குறையும். பூர்வீக சொத்தை இழக்கநேரும் அல்லது பூர்வீகத்தைவிட்டு வெளியேறநேரும். ஒருசிலருக்கு அந்திமக் காலத்தில் சொந்த பூமிக்கு வருவார்கள். குலதெய்வக் குற்றம் தீர்க்கமுடியாமல் இருக்கும். ஆன்மிக நாட்ட மிகுதியால் தன் தகுதிக்குமீறி ஆன்மிக செலவு செய்வார்கள்.
6-ஆம் அதிபதி 12-ல் இருந்தால், உறவினர் களே பகையாவார்கள். குறிப்பாக தாய் மாமன்வழி விரயம் அல்லது கருத்து வேறுபாடு இருக்கும். எப்பொழுதும் கோப உணர்வு, பழிதீர்க்கும் எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். விரோதிகளிடம் பொருள் இழக் கும்நிலை ஏற்படலாம் அல்லது எதிரிகளை சமாளிக்க வீண்செலவு செய்துகொண்டே இருப் பார். சிலருக்கு காலம் முழுவதும் கடன், நோய்த் தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். வெளி யூரில் வேலைபார்க்கும் நிலை இருக்கும்.
12-ஆம் அதிபதி 7-ல் இருந்தால், சுமாரான திருமண வாழ்வே அமையும். குடும்ப வாழ்வு சிறக்காது. களத்திரத்தின்மூலம் செலவு இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்குக் கூட்டுத் தொழில் சிறக்காது. நண்பர்கள்மூலம் பொருள் விரயம் இருக்கும். சிலருக்கு அவ்வப் போது கடும்விபத்து, கண்டங்களை சந்திக்க நேரும். கௌரவக் குறைவும், வெளியே சொல்ல முடியாத பிரச்சினையும் ஏற்படும்.
12-ஆம் அதிபதி 8-ல் இருந்தால், வழக்குகளில் வெற்றிகிட்டும். வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே தங்கும் நிலை ஏற்படும். நிறைய அனுபவ முதிர்ச்சியுடையவர். இவர்களுக்கு ‘நித்திய கண்டம்- பூரண ஆயுள். பலமுறை ஆயுள்கண்டம் இருக்கும். ஆனால் தீர்க்காயுள். நினைத்ததை நடத்தியே முடிப்பவர். அதாவது சதிவேலை செய்வார். பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியக் குறைவு இருக்கும். இவர்களுக்கு மறைவு வாழ்க்கை உண்டு. வம்பு, வழக்கால் வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.
12-ஆம் அதிபதி 9-ல் இருந்தால், பாக்கிய ஸ்தானம் வலிமை குறையும். ஆன்மிகம் என்ற பெயரால் மக்களை ஏமாற்றுவார். பெரி யோர்களை அவமதித்து சாபம் வாங்குவார். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். தந்தையைப் பிரிந்து வாழ்வார் அல்லது தந்தையால் வீண் விரயம் ஏற்படும். குலத்தொழிலைச் செய்து நஷ்டம் அடைவார்.
12-ஆம் அதிபதி 10-ல் இருந்தால், எந்தத் தொழிலும் செய்தாலும் நஷ்டம். தொழிலுக்காகப் பயணம்செய்ய நேரும் அல்லது அலைச்சல் மிகுந்த தொழில் செய்வார். உத்தியோகமே சிறந்தது என்றாலும், உழைப்பிற்கேற்ற ஊதியம் இருக்காது. தொழில் தொடர்பான மன உளைச்சல் இருந்துகொண்டே இருக்கும்.
12-ஆம் அதிபதி 11-ல் இருந்தால், உல்லாச வாழ்க்கையை விரும்பி ஆடம்பர செலவுசெய்வார். மூத்த சகோதரவழியிலும், இளைய மனைவிமூலமும் விரயம் மிகுதியாக இருக்கும். இந்த அமைப்பினர் பழைய பொருள் அல்லது நலிந்த தொழிலை எடுத்து நடத்தினால் லாபம் கிடைக்கும். வெற்றிக்காக நேரங்காலம் பார்க்காமல் உழைப்பதால் வெற்றிக்கனி இவரைத் தேடிவரும்.
12-ஆம் அதிபதி 12-ல் இருந்தால், கட்டுக்கடங்காத விரயம், சொத்து விரயம் இருந்துகொண்டே இருக்கும். தூர தேசத்தில் வாழும் நிலை ஏற்படும். பன்னிரண்டாம் இடத்து அதிபதியின் தசை நடப்பதும் கூடாது. அங்குள்ள நோய்களின் தாக்குதலுக்கு ஆளாவார். 12-ஆம் பாவத்தில் நின்ற கிரகத்தின் தசை நடந்தல், அந்த கிரகங்களுக்குரிய நோய்கள் தாக்கும். மரணம் அல்லது அதற்கு ஒப்பான கண்டத்தை அடைவார். 12-ஆம் அதிபதியுடன் சேர்ந்த கிரகங்களின் தசையும் நடக்கக்கூடாது. எந்த நோய்க்கு எந்த மருந்தை எடுப்பதென்று தெரியாமல் குழம்புவார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் 12-ஆம் இடம் சுத்தமாக இருப்பது நலம். 12-ல் சுபகிரகம் இருந்தால் சுபவிரயம் என்றும், அசுபகிரகம் இருந்தால் வீண்விரயம் ஏற்படும் என்றும் பொதுவான கருத்து நிலவிவருகிறது. இது தவறான கருத்து. 12-ல் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம்பெற்ற கிரகம் இருந்தால் 50 சதவிகிதப் பலனும், 12-ல் நிற்கும் கிரகம் லக்ன சுபர் அல்லது லக்ன சுபரின் சாரம்பெற்று, குரு பார்வை பெற்றால் 100 சதவிகிதம் சுபவிரயமும் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றபடி 12-ல் நிற்கும் கிரகம் என்றுமே மதில்மேல் பூனைதான். 12-ல் சுபகிரகம் இருந்தால், நிம்மதியான தூக்கம் அல்லது படுத்தவுடன் தூக்கம் வரும். அசுப கிரகம் இருந்தால் கண்கள் மட்டும் மூடியிருக்கும்; ஏதாவது சிந்தனையுடன் அந்த ஜாதகரும் ஆரோக்கியமாகவே இருப்பார். 12-ஆம் இடத்தில் எந்த கிரகத்தின் ஆட்சி, உச்சம், நீசம் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின், ஜாதகர் அந்த கிரகத்திற்குரிய நோய்கள் தாக்கி அவதிப்படுவார். அதேபோல் பன்னிரண்டாம் இடத்து அதிபதியும் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கக்கூடாது. அந்த ஜாதகர் பரம்பரை நோயால் துன்பப்படுவார்.
பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதியுடன் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது சேர்ந்திருந்தாலோ அல்லது இவர்களில் ஏதாவது ஒரு கிரகம் பன்னிரண்டாம் இடத் திற்கு அதிபதியாக இருந்தாலோ அல்லது இந்த கிரகங்களின் நட்சத்திர பாதத்தில் நின்றாலோ, அந்த ஜாதகர் சொந்த ஊரைவிட்டு வேறிடங்களில் இருப்பார். இவர் செய்யும் வேலைகளின்மூலம் நோய்கள் தாக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், தொற்று நோய்கள் உடனே வரக்கூடும்.
12-ஆம் பாவாதிபதி, பன்னிரண்டாம் இடத்தில் நின்றால், அந்த ஜாதகருக்கு வெளிநாட்டு யோகம் அமையும். வெளிநாடு களில் தங்கி தொழில்செய்யும் நிலை உருவாகும். இருப்பினும் மூட்டுவலி, முதுகுத் தண்டுவட வலி, மூலநோய் வரக்கூடும். இரவில் உறக்கம் கெடுவதால் உண்டாகும் நோய்களும் ஏற்படும்.
12-ஆம் இடத்தின் அதிபதியை சுபகிரகங்கள் பார்த்தால் வெளிநாட்டு யோகம், வெளிநாட்டில் தொழிலமைக்கும் யோகம், வெளிநாட்டுப் பணம் சேர்ப்பது, வெளிநாடுகளுக்குச் சென்றுகொண்டே இருப்பது, முழுமையான தாம்பத்திய சுகம், நிம்மதியான தூக்கம், தூக்கத்தில் தெய்வங்கள், மூதாதையர்கள் வந்து பேசுவது என்று நடக்கும். இதுவே அசுப கிரகப் பார்வை இருந்தால் சிறைவாசம் அல்லது தீராத நோய்கள் ஏற்படும்.
12-ஆம் பாவத்தில் நிற்கும் கிரகங்கள்
12-ல் சூரியன் நின்றால், ஜாதகர் வெளிநாடு சென்றுவர வாய்ப்பு கிடைக்கும் அல்லது பயண அலைச்சல் மிகும். மேலும் உடல்நிலையில் ஏதாவது பிணி இருந்துகொண்டே இருக்கும். கண் நோய் இருக்கும். தந்தை, தந்தைவழி உறவினர்களிடம் இணக்கம் இருக்காது.
12-ல் சந்திரன் நின்றால் சிறுவயதில் தண்ணீர் கண்டம் உண்டு. ஜாதகருக்கு ஜலதோஷம், வலிப்பு நோய், முடக்குவாதம், கணையம், நெஞ்செரிச்சல், வாயுத் தொல்லை இருக்கும். இவரின் வாக்கை ஓடும் தண்ணீரில்தான் எழுதவேண்டும். சத்தியம் சர்க்கரைப் பொங்கல். சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது. உடலைப் பற்றி எப்போதும் கவலை இருந்துகொண்டே இருக்கும். தாயின் அன்புக்காக ஏங்குவார்.
12-ல் செவ்வாய் நின்றால், ஜாதகர் மனநிம்மதியற்ற நிலையிலேயே இருப்பார். உடல்சூடு, வேனல் கட்டிகள், சிலந்திக் கட்டிகள், மூலநோய் வரும். கால்களில் காயம், வெட்டுப்படுதல், தோல் அரிப்பு தோன்றும். உடன்பிறந்த சகோதரர் ஆதரவு குறையும். பணவசதி, சொத்து இருந்தாலும் அனுபவிக்க முடியாது. மறைமுக எதிரிகள் அதிகம் உண்டு.
12-ல் புதன் நின்றால், அந்த ஜாதகரின் புத்தி கெட்டவழியில் சென்று பணத்தை செலவுசெய்வார். சோம்பல், மறதி உள்ளவர். கல்வி, சகல வித்தைகளும் பாதியில் நின்று போகும். தனக்கு வரக்கூடிய நோய் களுக்கு, தானே காரணமாக இருப்பார். சமூகத்துடன் ஒன்றமாட்டார். மந்தமான போக்குடையவர். இவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வாரிசு குறைவு படும். நரம்பு, வலிப்பு தொடர் பான நோய், கால்களில் ரத்த ஓட்டம் சரியில்லா மல்போவது போன்ற நோய்கள் வரும்.
12-ல் குரு இருந்தால், சாஸ்திர ஞானம் மிகும். அதனால் பயன் இருக்காது. நற்பெயர் கிடைப்பது சிரமம். ஜாதகர் உடல்பருமனால் அவதிப்படுவார். வெளிநாடு செல்வார். பணம், பொருள் சேர்க்கை உண்டு. ஆனால் எந்த நேரமும் ஏதாவது வலி இருந்துகொண்டே இருக்கும். சிலருக்கு திருமணம் சரியானமுறையில் நடைபெறாது. நடந்தாலும் பிரம்மச்சாரியாகவே வாழவிரும்புவார்.
12-ல் சுக்கிரன் இருந்தால், கணக்கில் வராத கருப்புப் பணம் கையில் வைத்திருப்பார்.
ஜாதகர் நல்ல உடல் ஆரோக்கியம் பெற்றிருப் பார். தாமதத் திருமணம் ஏற்படும். தீராத பாலுணர்வு கொண்டவராகவும் இருப்பார். உடலைக் கெடுக்கும் போதை வஸ்துகளுக்கு அடிமையானவர். படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்குவார். 12-ல் சுக்கிரன் சுபம்.
12-ல் சனி இருந்தால், உடல்ஊனம் இருக்கும். ஜாதகருக்கு மிகவும் கஷ்டமான வாழ்க்கை உண்டாகும். கோபத்தினால் இழப்பும் நட்டமும் மிகுதியாக இருக்கும். முன்னேற்றத் திற்கு பணம் தடையாக இருக்கும். உடலில் நரம்பு பாதிப்பு, பாதங்களில் விரல் பாதிப்பு என எந்த நேரமும் ஏதாவது நோய் உடலை வருத்திக்கொண்டிருக்கும். வெளிநாட்டு அலைச்சல் மிக்கவர். சுபவிரயமே இருக்காது.
12-ல் ராகு நின்றால், குறுக்குவழியில் சம்பாதிக்க நினைப்பார். வெளிநாட்டு வாய்ப்புகிட்டும். ஒழுக்கக்குறை இருக்கும். விரயம் கட்டுக்கடங்காமல் இருக்கும். சேமிப்பு கரையும். உடலில் ரத்தக் குறைவு, உடல் தளர்வு இருக்கும். ஜலதோஷம், சுவாசக் கோளாறு, கண்பார்வைக் குறைவு, பாத வெடிப்பு, பாதப்புண்கள், பருவகால நோய்கள் வரக்கூடும்.
12-ல் கேது இருந்தால், ஜாதகர் உலகிலுள்ள அனைத்து துக்கங்களையும் அனுபவிப்பவர். இளமைக் காலத்திற்குமேல் பெரும் பணம் சம்பாதிப்பார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மிகவும் கஞ்சன். இது கடைசிப்பிறவி- மோட்சத்தை அடைவார்; மறுபிறவி இல்லை என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
12-ல் கேது இருந்தால், 5, 9-ஆம் அதிபதியுடன் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தேவதையை உபாசனை செய்தால் நிச்சயம் சித்தியும் மோட்சமும் கிட்டும். நான்கு வேதங்கள் சொல்லும் சித்தியும் முக்தியும், யோகம், ஞானம், மோட்சம் ஆகியவற்றில் அடங்கிவிடுகின்றன. மனிதனை லௌகீக வாழ்வில் ஈடுபடச் செய்வது ராகு என்றால், மோட்சத்தைத் தருவது கேதுதானே. உலக வாழ்வில் பற்றற்ற நிலையை அடைய ஆசையை உண்டாக்கும் ராகு, ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்பதையும் உணரவைப்பதால் முக்தி அல்லது மோட்சத்தை வழங்க ராகு, கேது தகுதி பெறுகிறார்கள்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406