சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வரை யிலான 12 பாவங்கள் பற்றி சென்ற இதழ்களில் பார்த்தோம். அடுத்து கன்னி லக்னத்தாரின் 12 பாவங்கள் பற்றிக் காணலாம்.
கன்னி லக்னம்
கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் எப்பொ ழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்பு வார்கள். உலக விஷயங்களை கேட்டுத் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் இருக்கும். பேச்சிலும் செயலிலும் பிறர் மனதைப் புண்படுத்த மாட்டார்கள். குறிப்பிட்ட வேலையை குறிப் பிட்ட நேரத்தில் செய்துமுடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றியமைத்துக்கொள்ளும் குணம் கொண்ட வர்கள். ஆதலால் இவர்களை யாரும் எளிதில் ஏமாற்றிவிட முடியாது. எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படு வார்கள்.
நன்னடத்தையும், வசீகரத் தோற்றமும் படைத்த இவர்கள் அனைவரிடத்திலும் சகஜமாகப் பழகுவார்கள். எவ்வளவுதான் கற்றிருந் தாலும், அகம்பாவமின்றி தாம் கற்றதை பிறருக்கு போதிப்பார்கள். பிறரையும் நல்ல வழியில் நடக்கக் கற்றுக் கொடுக்கும் சுபாவம் கொண்டவர்கள். ஆதலால் இவர்களின் மத்தியஸ்தத்திற்கு நல்ல மரியாதையுண்டு. பிரசங்கம் செய்வது, உபன்யாசங்கள் செய்வது ஆகியவை இவர்களுக்கு மிகவும் பிடிக்கும். உறவினர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வார்களே தவிர, இவர்களுக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். மிருதுவான வார்த்தைகளால் நயமாகப் பேசி பிறரை வசியப்படுத்தும் பேச்சாற்றலும் அறிவாற்றலும் கொண்டவர்கள். தவறுசெய்பவர்களைக்கூட தன் அன்பான பேச்சாற்றலால் திருத்திவிடும் இயல்புடையவர்கள். தன்னைத் தாழ்த்திப் பிறரை உயர்த்தும் நற்குணம் உடையவர்கள்.
மற்றவர்களுக்கு உதவிசெய்வதிலும், தானதருமம் செய்வதிலும் முன்னின்று செயல்படுவார்கள். புத்தகம் படிப்பதில் பிரியம் கொண்டவர்கள். சிறந்த அறிவாற்றல் கொண்டிருப்பார்கள்.
இளமைக்காலங்களைவிட முதுமைக் காலத்தில் பொன், பொருள் சேர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். ஐந்து வயதில் நெருப்பாலும், பத்து வயதில் ஜூரத் தாலும், 18 வயதில் மன வியாதியாலும் அவதிப் படுவார்கள். சூடு, வாய்வு போன்ற நோய்களால் அவதிப்படுவார்கள். லக்னத்தை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும், சுக்கிரன்- புதன் ஆட்சி, உச்ச, கேந்திர, திரிகோணங்களில் அமையப் பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும்.
1-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்தைக்கொண்டு தோற்றம், உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
கன்னி லக்னத்தின் அதிபதி புதன் என்பதால், நல்ல அறிவாற்றல், மற்றவர்களை வழிநடத்தும் திறன், எதிலும் நுண்ணறிவுடன் செயல்படும் ஆற்றல் ஆகியவை இருக்கும். புதன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர, திரிகோணத் தில் அமைவது சிறப்பான அமைப்பாகும். 8-ஆம் அதிபதி செவ்வாய் சுபகிரகங்களான சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் பலம் பெற்றிருந்தாலும், சனி பலம் பெற்றிருந்தாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். புதன்- குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்களுடன் பலம் பெற்றிருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும்.
சுக்கிரன், புதன் கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்றால் செல்வம், செல்வாக்குடன் வாழும் யோகம் உண்டாகும். குரு, சனி கேந்திரங் களில் அமையப்பெற்றிருந்தால் சகலவிதமான யோகங்களை அளிக்கும்.
லக்னாதிபதி புதன் சுபகிரகங்களான சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்களுடன் பலம் பெற்றிருந்தால், சிறப்பான உடலமைப்பு, அழகிய தோற்றம், மற்றவர்களை வழிநடத்தும் ஆற்றல் இருக்கும். ஜென்ம லக்னத்தில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்றாலும், புதன் பலவீனமாக இருந்தாலும் மூர்க்க குணம், பிடிவாதம், அழகற்ற முக அமைப்பு இருக்கும்.
கன்னி லக்னத்திற்கும், 10-ஆம் வீட்டிற்கும் அதிபதியான புதனும், 2, 9-க்கு அதிபதியான சுக்கிரனும் யோகப்பலனைத் தரும். 5, 6-க்கு அதிபதியான சனி மத்திமப் பலனைத் தரும். 12-ஆம் அதிபதி சூரியனும், 3, 8-க்கு அதிபதியான செவ்வாயும், 4, 7-க்கு அதிபதியும், பாதகாதிபதியுமான குருவும் அதிக கெடுதலைத் தரும். ஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் இருபுறமும் பாவகிரகங்கள் இருப்பது நல்லதல்ல. செவ்வாய் கேந்திர, திரிகோணத்தில் இருப்பது உத்தமம். பாவகிரகங்கள் ஜென்ம லக்னத்திற்கு இருபுறமும் இருந்து, புதன் நீசம் அல்லது வக்ரம் பெற்றால் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.
கன்னி லக்னத்திற்கு சுக்கிரன், புதன் தசாபுக்தி நடைபெறும் காலங்கள் பொற்கால மாகும். செவ்வாய் தசா புக்தி நடைபெறும் காலங்கள் சோதனை நிறைந்த காலங்களாகும்.
கன்னி உபய லக்னம் என்பதால், 7, 11-க்கு அதிபதியான குருவும், சந்திரனும் மாரகாதிபதிகள். இதனால் குரு, சந்திரன் தசா புத்திக் காலங்களில் ஆரோக் கியத்தில் பாதிப்புகள் உண்டாகும்.
2-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக்கொண்டு தனம், வாக்கு, கண் பார்வை, குடும்பம், வசதிவாய்ப்பு போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.
கன்னி லக்னத்திற்கு தன ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோணத்தில் அமைந்தோ, சுபர் பார்வை யுடனோ இருந்து, தனகாரகன் குருவும் கேந்திர, திரிகோணத்தில் இருந்தால், செல்வம், செல்வாக்குடன் வாழும் உன்னத அமைப்புண்டாகும். சுக்கிரனுக்கும், குருவுக்கும் இருபுறமும் பாவிகள் இருப்பது நல்லதல்ல.
சுக்கிரன்- புதன், சனி போன்ற நட்புகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் சிறப்பான வசதிவாய்ப்பு இருக்கும். சுக்கிரன் பலமாக இருந்து, 9-ல் பாவகிரகங்கள் இல்லாமலிருந்தால், தந்தையால் செல்வம், செல்வாக்கு, பூர்வீகவழியில் நல்ல வசதி வாய்ப்புகள் அமையும். சுக்கிரன்- குரு நட்புகிரக வீட்டில் பாவகிரகச் சேர்க்கையின்றி இருந்தால், சிறப்பான வாழ்க்கை உண்டாகும்.
சந்திரன், குரு, சுக்கிரன் கேந்திர, திரிகோணங் களில் பலமுடன் சுபர்வீட்டில் இருந்தால், நல்ல பணவசதியுடன் கொடுக்கல்- வாங்கலில் அனுகூலமான பலன் உண்டாகும். சுக்கிரன், புதன் 3, 6, 8, 12-ல் அமையப்பெற்றாலும், பாவிகள் சேர்க்கையுடன் இருந்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் அதனை சேமிப்பதில் சிரமம் உண்டாகும்.
2-ஆம் வீடு குடும்ப ஸ்தானமாகும். 2-ல் சுபகிரகங்கள் அமையப்பெற்று, குரு கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்று, பாவகிரகப் பார்வை 2-ஆம் வீட்டிற்கு இல்லாமலிருந்தால், அமைதியான குடும்ப வாழ்க்கை, குடும்பத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன், சந்திரன் சுபர்வீட்டில் பலத்துடன் அமையப்பெற்று பாவிகள் தொடர்பில்லாமல் இருந்தால், அமைதியான குடும்ப வாழ்க்கை மற்றும் எல்லா வகையிலும் குடும்பம் விருத்தியாகும் அமைப்புண்டாகும்.
2-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு- கேது போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு ஏற்படும். 2-ல் பாவகிரகங்கள் அமையப்பெற்று, அதன் தசை நடைபெறும் காலத்தில் குடும்பத்தில் ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும்.
கண்களுக்குக் காரகனான சூரியன், சுக்கிரன் வலுவாக இருந்து, சுபகிரகங்கள் பார்வை செய்தால், கண் பார்வை சிறப்பாக இருக்கும். சூரியன், சுக்கிரன் பாவகிரகச் சேர்க்கை பெற்று 2, 6, 8, 12-ல் அமையப்பெற்றாலும், சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் 2, 8, 12-ல் அமையப்பெற்றாலும், சூரியன் பலமிழந்தாலும், சூரியன், சுக்கிரன் இருவருக்கும் இருபுறமும் பாவிகள் அமையப்பெற்றாலும் கண்களில் நோய் உண்டாகும். சூரியன், சுக்கிரனுடன், சந்திரன் பாவகிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், கண்களில் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.
கலைக்காரகன் சுக்கிரன் 2-ஆம் அதிபதி என்பதால், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய வசீகரமான பேச்சாற்றல் இருக்கும். சுக்கிரன் பலம்பெற்று, சந்திரன், சூரியன், குரு சுபர்சேர்க்கையுடன் கேந்திரங்களில் அமையப்பெற்றால், நல்ல வாக்குவண்மை, சிறந்த பேச்சாற்றல் உண்டாகும். சுக்கிரன் சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால், மற்றவர்களிடம் கனிவாகப் பேசும் திறன் உண்டாகும். சுக்கிரன்- புதன் சேர்க்கை பெற்று சுபர்வீட்டில் அமையப்பெற்று, 2-ஆம் வீட்டை சுப கிரகங்கள் பார்த்தால், வாக்கால்- பேச்சால் ஏற்றங்கள் ஏற்படும். 2-ல் செவ்வாய் அமையப்பெற்றால் பிடிவாத குணமும், புதன் அமையப்பெற்றால் நல்ல வாக்குவண்மையும், குரு அமையப்பெற்றால் சாஸ்திர சம்பிரதாயங்களில் ஈடுபாடும், சனி, ராகு- கேது அமையப்பெற்றால் பொய் சொல்லும் சுபாவமும் உண்டாகும்.
3-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக்கொண்டு சுயமுயற்சி, வீரம், விவேகம், ஆண்மை பலம், இளைய சகோதர, சகோதரி யோகம் போன்றவற்றைத் தெளிவாகக் கூறலாம்.
3-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலும், உபஜெய ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், சுபர்வீட்டில் சுபர் சேர்க்கை பெற்றாலும் முயற்சியில் வெற்றி, அனுகூலங் கள் உண்டாகும்.
கன்னி லக்னத்திற்கு சகோதரகாரகன் செவ்வாயே 3-ஆம் அதிபதி என்பதால், சகோதர பாக்கியமும், அவர்களால் அனுகூலமும் இருக்கும். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர, திரிகோணங் களில் அமையப்பெற்றோ, 3, 11-ல் சூரியன், குரு போன்ற ஆண் கிரகங்கள் அமையப் பெற்றோ இருந்தாலும், செவ்வாய், சூரியன், குரு சேர்க்கை பெற்றாலும் சகோதர பாக் கியம் உண்டாகும். செவ்வாய்- சூரியன், குரு சேர்க்கையாகி லக்ன கேந்திரத்திலோ, சந்திர கேந்திரத்திலோ அமையப்பெற்றால், சகோதர பாக்கியம் உண்டாகும்.
3-ஆம் வீட்டில் சுக்கிரன் அமையப் பெற்றாலும், செவ்வாய்- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும் சகோதரி யோகம் உண்டாகும். செவ்வாய்- ரிஷபம், கடகம், துலாத்தில் அமையப்பெற்று, சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, ஆண்கிரகத் தொடர்பில்லாமலிருந்தால் சகோதரி யோகம் உண்டாகும்.
3-ல் சனி, ராகு இருந்தாலும், செவ்வாய்- சனி சேர்க்கை பெற்று கடகத்தில் அமையப் பெற்றாலும், பாவகிரகச் சேர்க்கையுடன் பலமிழந்திருந்தாலும், சகோதர பலமில்லை. செவ்வாய் பலமிழந்து, சனி, ராகு சேர்க்கை பெற்று, சுபர் சம்பந்தமின்றி இருந்தால், சகோதரபாக்கியமில்லை. மேஷம், விருச்சிகத்தில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றிருந்தால் சகோதரவழியில் அனுகூலமற்ற பலன் உண்டாகும்.
கன்னி லக்னத்திற்கு 3-ஆம் அதிபதி செவ்வாய், கலை- இசைக்குக் காரகன் சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், உடன் சந்திரன் இருந்தாலும் கலை சம்பந்தப் பட்ட விஷயங்களில் நாட்டம் இருக்கும். 3-ஆம் வீடு சந்திரனுக்கு நீச வீடு என்பதால், சந்திரன் 3-ல் நீசம் பெறாமல் சுக்கிரனுடன் இணைந்து பலமாக இருந் தால் இசைத்துறையில் ஈடுபாட்டைக் கொடுக்கும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001