துலா லக்னம்

துலா லக்னத்தில் பிறந்தவர்கள் நேர்மையே குறிக்கோளாகக் கொண்டிருப்பார்கள். நீதியையும், நேர்மையையும் நிலைநாட்ட இவர்கள் விரும்புவதைப்போலவே மற்றவர்களும் இருக்கவேண்டுமென நினைப்பார்கள். அப்படி நடக்காவிட்டால் ஆத்திரம் அடைவார்கள். தராசு எவ்வளவு சிறியதாக இருந்தாலும், எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அவ்வாறே மற்றவர்களையும் எடைபோட்டு வைத்திருப் பார்கள்.

வசீகரத் தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்டவர்கள். எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமான மனநிலையைக் கொண்டவர்கள். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடுவார்கள். வாக்கு சாதுர்யம்கொண்ட இவர்களிடம் பேசி ஜெயிப்பது இயலாத காரியமாகும். வெளிவட்டாரங்களிலும் நண்பர்களிடமும் சரளமாகப் பேசும் இவர்கள், வீட்டில் ஒன்றுமே தெரியாதவர்போல இருப் பார்கள். எதற்கும் சளைக்காமல் பாடுபடுபவர்கள் என்பதால், தோல்விகளைக்கண்டு துவண்டுவிட மாட்டார்கள்.

துலா லக்னத்தில் பிறந்தவர்கள் நல்ல சுகவாசி. தன் குலத்தின் பெயரைக் காப்பாற்றுவார்கள். இளம்வயதிலேயே திருமணம் செய்துகொள்ளும் யோகம் கொண்டவர்கள். செல்வம், செல்வாக்கு, சுகபோக வாழ்க்கை யாவும் இயல்பாகவே அமையும்.

Advertisment

ஆடம்பரப் பிரியரான இவர்கள் வாசனைப் பொருட்கள்மீது பிரியம் கொண்டவர்கள். பெரிய நட்பு வட்டாரம் இருக்கும். அதிக தானதருமங்கள் செய்வார்கள்.

இவர்களுக்கு ஏழு வயதில் தீயாலும், 19 வயதில் சித்தப் பிரம்மையாலும், 28 வயதில் நீராலும், 42 வயதில் ரகசிய நோயாலும் கண்டங்கள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. ஜென்ம லக்னத்தை சுபகிரகங்கள் பார்வை செய்தால், சுமார் 85 வயதுவரை ஆயுள்கொண்டவர்களாக வாழ் வார்கள்.

ssy

Advertisment

இனி துலா லக்னத்தாரின் 12 பாவப்பலன்களைக் காணலாம்.

லக்ன பாவம்

ஜென்ம லக்னத்தைக்கொண்டு உடலமைப்பு, ஆயுள், ஆரோக்கியம், செல்வநிலை போன்றவை பற்றி அறிலாம்.

லக்னாதிபதி சுக்கிரன் கேந்திர, திரிகோணத் தில் அமையப்பெறுவது அற்புதமான அமைப் பாகும். துலா லக்னத்திற்கு கேந்திர, திரிகோண ஸ்தானங்களான 4, 5-க்கு அதிபதியான சனி வலுவான யோகக்காரகன். உச்ச கேந்திராதி பதியான சந்திரனும், பாக்கியாதிபதி யான புதனும் யோகத்தை அள்ளித்தரும்.

லக்னாதிபதியான சுக்கிரனும், சனியும் வலுப்பெற்று அமையப்பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும். சுக்கிரன் அசுரகுரு. நவகிரங்களில் சுபகிரகமான வியாழன் தேவகுரு ஆகும். 3, 6-க்கு அதிபதியான குரு லக்னாதிபதி சுக்கிரனுக்கு பகை என்பதால், அதிக கெடுதலைத் தருவார். துலா லக்னத்திற்கு பாதகாதிபதியான சூரியன் மிகவும் கொடியவர். ஜென்ம லக்னத்திற்கு 2, 7-க்கு அதிபதியான செவ்வாய் நன்மை, தீமை கலந்த பலனைத் தரும் என்றாலும், சர லக்னம் என்பதால்- செவ்வாய் மாரகாதிபதி என்பதால், செவ்வாயின் தசா, புக்திக் காலங்களில் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர, திரிகோணத்தில் சுபர்வீட்டிலோ சுபகிரகப் பார்வையுடனோ அமையப்பெற்றாலும், புதன், சுக்கிரன், குரு போன்ற கிரகங்கள் கேந்திர, திரிகோணத்தில் இருந்தாலும், குரு, சுக்கிரன் வலுப்பெற்று அமையப்பெற்றிருந் தாலும், சுக்கிரன் வலுப்பெற்று அமைந்திருந் தாலும், சுக்கிரன், சனிக்கு 2, 12-ல் பாவிகள் இல்லாமலிருந்தாலும், சுக்கிரன், சனி, புதன் வலுப்பெற்றிருந்தாலும், சுக்கிரன், சந்திரன் பலம்பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும்.

சந்திரன், புதன் பலமிழந்து, சுக்கிரன், குரு பலம்பெற்றிருந்தாலும், சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தாலும் மத்திம வயதுவரை ஆயுள் உண்டாகும். சுக்கிரன் வக்ரம், பகை, நீசமாகி, சனி, புதனும் பாவிகளுக்கிடையே அமையப்பெற்றாலும், சனி நீசம்பெற்று, சுக்கிரனும் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும், சந்திரன், குரு 3, 6, 8, 11-ல் மறைந்து, இருபுறமும் பாவிகள் அமையப்பெற்றாலும், சூரியன், சனி, செவ்வாய் போன்ற பாவிகள் இணைந்து லக்னத்தில் அமையப்பெற்றாலும், 6, 8, 11-ல் அமையப்பெற்று சுக்கிரன் பலமிழந்தாலும், சூரியன், சந்திரன் இணைந்து 2, 12-ல் பாவிகள் இருந்தாலும் இளம் வயதில் உடல்நிலை பாதிப்புகள், கண்டங்கள் உண்டாவது மட்டுமின்றி, பெற்றோருக்கும் தோஷத்தை உண்டாக்கும்.

துலா லக்னத்திற்கு புதன், சுக்கிரன், சனி, சந்திரன் போன்ற கிரகங்களின் தசா, புக்திக் காலங்களில் வாழ்வில் மறக்கமுடியாத இனிய சம்பவங்கள், பொருளாதார நிலையில் ஏற் றங்கள் உண்டாகும்.

குரு, சூரிய தசை நடைபெறும் காலங்களில் வாழ்வில் அளவுக்கதிகமான கஷ்டங்கள் ஏற்படும். சூரிய தசை நடைபெறும் காலங்களில் அரசாங்கவழியில் கடுமையான சோதனைகளை சந்திக்கநேரிடும். குரு தசைக் காலத்தில் தேவையற்ற எதிர்ப்புகளை சந்திக்கும் சூழ்நிலை, செவ்வாய் தசைக் காலங்களில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.

2-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக் கொண்டு பொருளாதார நிலை, வாக்கு வலிமை, குடும்ப ஒற்றுமை போன்றவற்றை அறியலாம்.

துலா லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி செவ்வாய் கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் தாராளமான பணவரவு உண்டாகும். செவ்வாய்- குரு, சூரியன், சந்திரன் போன்ற நட்பு கிரக வீட்டில் அமையப் பெற்றாலும், நட்பு கிரகச் சேர்க்கை பெற்றிருந் தாலும் செல்வம், செல்வாக்குடன் வாழும் அமைப்பு கிட்டும். தனகாரகன் குரு பலமிழக் காமல் இருப்பதும், 2-ஆம் வீட்டை குரு பார்வை செய்வதும் தாராளமான தனவரவை ஏற்படுத்தும். செவ்வாய் நின்ற வீட்டிற்கு 2-ஆம் வீட்டதிபதி கேந்திர, திரிகோணத்தில் இருப்பது தாராள பணவரவைத் தரும். செவ்வாயே 7-ஆம் அதிபதி என்பதால், செவ்வாய் பலம்பெற்று சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தால் பெண்கள்வழியில் செல்வம், செல்வாக்கு உண்டாகும்.

செவ்வாய்- சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கைபெற்றோ வக்ரம்பெற்றோ, சுபர் பார்வையின்றி இருந்தால் பணவரவில் தட்டுப்பாடு உண்டாகும். குடும்பத்தில் ஒற்று மைக்குறைவு, தேவையில்லாத கஷ்டநஷ் டங்கள் ஏற்படும். 2-ஆம் வீட்டில் சூரியன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கும். செவ்வாய் நின்ற வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமையப்பெற்றால் பணக் கஷ்டம், குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

2-ஆம் வீடு வலது கண்ணைக் குறிக்கும் ஸ்தானமாகும். செவ்வாய்- சூரியன், சந்திரன், சுக்கிரன், ராகு, சனி போன்ற கிரகச் சேர்க்கை பெற்று வலுவிழந்தாலும், 6, 8, 12-ல் அமையப் பெற்றாலும், 2-ல் சூரியன், சனி, ராகு, சந்திரன் போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும் கண்களில் பாதிப்புண்டாகும். 2-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் கண் பார்வை சிறப்பாக இருக்கும். 2-ஆம் வீடு வாக்கு ஸ்தானம் என்பதால், செவ்வாய் வலுப்பெற்று குரு போன்ற சுபகிரகங்கள் சேர்க்கையுடன் வலிமையாக அமையப்பெற்றால் தைரியம், துணிவு, நல்ல பேச்சாற்றல், பேச்சால்- வாக்கால் முன்னேறும் அமைப்புண்டாகும்.

செவ்வாய் தனக்கு நட்பு கிரகமான குரு, சூரியன், சந்திரன் சேர்க்கைப்பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமையப் பெற்றாலும், நட்பு வீட்டில் அமையப்பெற்றாலும் அமைதியான குடும்ப வாழ்க்கை உண்டாகும். 2-ஆம் வீட்டில் சனி, ராகு அமையப்பெற்றாலும், சந்திரன் நீசபங்கமின்றி 2-ல் அமையப்பெற் றாலும் குடும்பத்தில் ஒற்றுமைக்குறைவு, வீண்வாக்கு வாதங்கள், பொருளாதாரரீதியான சங்கடங்கள் உண்டாகும்.

செவ்வாய்- குரு, சந்திரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப் பெற்றால், நல்வழியில் பணம் சம்பா திக்கும் அமைப்பு, சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்துடன் வாழும் யோகம் உண்டாகும்.

செவ்வாய்- சனி, ராகு போன்ற கிரகச் சேர்க்கை பெற்று பலமுடன் அமையப் பெற்றால், சில தவறான வழிகள்மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை, கடின வார்த்தைகளை அதிகம் உபயோகிக்கக்கூடிய நிலை ஏற்படும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001