துலா லக்னத்தில் பிறந்தவர்களில் 2-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
3-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீடு முயற்சி ஸ்தானமாகும். இதைக்கொண்டு இளைய உடன்பிறப்பு, தைரியம், துணிவைப் பற்றி அறியலாம்.
துலா லக்னத்திற்கு 3-ஆம் வீட்டதிபதியான குரு கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்றாலும், செவ்வாய் வீடான மேஷம், விருச்சிகம் மற்றும் சூரியன் வீடான சிம்மத்தில் அமையப்பெற்றாலும், குரு- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று அமையப்பெற்றாலும் சிறப்பான ஆண் உடன்பிறப்பும், அவர்களின்மூலம் உன்னத உயர்வும் உண்டாகும். குரு- சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்று அமையப்பெற்றாலும், 3-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் வலு வாக அமையப்பெற்றாலும் வலுவான சகோதரி யோகம் உண்டாகும்.
3-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் அமையப்பெற்று, 3-ஆம் அதிபதியான குருவும், செவ்வாயும் பகை, நீசம் பெறுவதும், அஸ்தங்கம் பெறுவதும், வக்ரம் பெறுவதும் சகோதர, சகோதரிவழியில் தோஷத்தை உண்டாக்கும்.v 3-ஆம் பாவம் முயற்சி ஸ்தானம் ஆகும். உபஜய ஸ்தானமான 3-ஆம் வீட்டில் பாவகிரங்கள் அமையப் பெறுவது ஒருவகையில் சகோதர தோஷத்தையும், காதுகளில் பாதிப் பையும் ஏற்படுத்தும் என்றாலும், எடுக்கின்ற முயற்சியில் வெற்றி, சொந்த முயற்சியால் அனுகூலம், தைரியம், துணிவை ஏற்படுத்தும்.
3-ஆம் வீட்டில் குரு தனித்து அமைவது சிறப்பல்ல. ஏதாவது ஒரு கிரகச் சேர்க்கையுடன் இருப் பதுதான் உன்னத அமைப்பாகும்.
4-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக்கொண்டு தாய், வீடு, வாகனம், கல்வி யோகத்தைப் பற்றி அறியலாம்.
துலா லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி சனி ஆட்சி, உச்சம் பெற் றாலும், கேந்திர, திரிகோணங்களில் சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வை பெற்றிருந்தாலும் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். தாய்க்காரகன் சந்திரன் கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். சனி, சந்திரன் பலமிழக்காமல் இருப்பது தாய்க்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். சனி பலமிழப்பதும், வக்ரம் பெறுவதும், சனி நின்ற வீட்டிற்கு 4-ஆம் அதிபதி பலமிழப்பதும் தாய்வழியில் சாதகமற்ற பலனை உண்டாக்கும். 4-ஆம் வீட்டில் ராகு, கேது அமை வதும், சந்திரனின் வீடான கடகத்தில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைவதும் தாய்க்கு நல்லதல்ல.
4-ஆம் வீட்டைக் கொண்டு அசையா சொத்து யோகத்தைப் பற்றித் தெளிவாகக் கூறலாம்.
சனி, லக்னாதிபதி சுக்கிரன் சேர்க்கை பெற்றோ, புதன் சேர்க்கை பெற்றோ இருந்தால் வீடு, வாகன யோகம் பலமாக அமையும். சனி- சுக்கிரன் சேர்க்கை பெற்று பலம்பெற் றால், மாளிகை போன்ற வீடு உண்டாகும். சனி- செவ்வாய் சேர்க்கை பெற்று சுபர் பார்வையுடன் இருந்தாலும், 4-ஆம் வீட்டில் செவ்வாய் அமையப்பெற்றாலும் பூமி யோகம், மனை யோகம் உண்டாகும். சனி- புதன் சேர்க்கை வாகன யோகத்தை பலப்படுத்தும்.
சனி பலமிழந்தோ வக்ரம் பெற்றோ ராகு, சூரியன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால் அசையா சொத்து உண்டாக இடையூறுகள் உண்டாகும். சனி பலம்பெற்று அமையப்பெற் றால் பழைய வீடு, பழைய வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டாகும். சனி- சுக்கிரன் இணைந்து பலம்பெற்றால் நான்கு சக்கர வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். சந்திரன், சனி இணைந்து பலம்பெற் றால் வீடு, வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற் றால் வாகனங்கள் உண்டாக இடையூறு ஏற்படும். சந்திரன் பலமாகி குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை பெற்றிருந்தால், தாய்வழியில் அசையா சொத்து யோகமும், வாகன யோகமும் உண்டாகும். சனி பலம் பெற்று சுக்கிரன், புதன் சேர்க்கையோ, சுக்கிரன், புதன் வீட்டிலோ அமையப்பெற்று, சனி தசை வந்தால் அசையா சொத்து யோகம் தங்குதடையின்றி வந்துசேரும்.
4-ஆம் அதிபதி சனியும், கல்விக்காரகன் புதனும் பலமாக அமையப்பெற்றால், நல்ல அறிவாற்றல், கல்வியில் நிறைய சாதனை செய்யக்கூடிய அமைப்பு, கல்வியால் பெயர், புகழ் அடையும் அமைப்பு உண்டாகும். சனியும், சனிக்கு 4-ஆம் அதிபதியும், புதனும், லக்னாதிபதியும் பலம்பெற்றிருந்தால் பலவிதத் தொழில்களைக் கற்று வித்தகராகும் வாய்ப்பு உண்டாகும்.
4-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால், கற்ற கல்விமூலம் நல்ல நிர்வாகத் திறனுடன் உயர்பதவிகளை வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சனி- செவ்வாய் சேர்க்கை பெற்றால் பொறியியல், தொழில்நுட்பம் தொடர்புடைய கல்வி, 4-ல் சந்திரன், கேது அமையப் பெற்றால் மருந்து, ரசாயனம், கடல் சார்ந்த கல்வி, சனி- புதன் சேர்க்கை பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், பங்குச் சந்தை சார்ந்த கல்வி, 4-ல் குரு, சுக்கிரன் அமையப்பெற்றால் கலை, இலக்கியம், இசை, வேதங்கள் தொடர்புடைய கல்வி, சந்திரன், புதன், கேது, சனி இணைந்து 4-ல் இருந்தால் கணிதம், வியாபாரத் தொடர்புடைய கல்வி, செவ்வாய்- ராகு 4-ல் அமையப்பெற்றால் மருந்து, ரசாயனம், அந்நிய மொழிகளில் நாட்டம் உண்டாகும். 4-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் அமையப்பெற்றால் இசை, சங்கீதம் போன்றவற்றில் ஈடுபாடு ஏற்படும். 4-ஆம் வீட்டில் சந்திரன், சனி அமையப்பெற்றால் உணவுவகை, கடல்சார்ந்த கல்வி, சந்திரன், ராகு இருந்தால் ரசாயனம் தொடர்புடைய கல்வி யோகம் உண்டாகும்.
5-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவத்தைக் கொண்டு உயர்கல்வி, பூர்வீக சொத்துகள், புத்திர பாக்கியம் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.
துலா லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும், தனக்கு நட்பு கிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் பலமாக அமையப்பெற்றாலும் பூர்வீகவழியில் சொத்துகள் சேரும். சனி 7-ல் நீசம், வக்ரம் பெற்றாலும், சூரியனின் வீடான சிம்மத்தில் அமையப்பெற்றாலும், விருச்சிகத்தில் அமையப்பெற்றாலும், 5-ல் செவ்வாய், சூரியன், ராகு போன்ற பாவிகள் அமையப்பெற் றாலும் பூர்வீகவழியில் அனுகூலமற்ற பலனை உண்டாக்கும். 5-ல் செவ்வாய், ராகு அமையப் பெறுவது, சனி, ராகு, செவ்வாய் போன்ற பாவிகள் சேர்க்கை பெறுவது வாழ்வில் நிறைய பகைமையை ஏற்படுத்தும்.
சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும், கல்விக் காரகன் புதன் சேர்க்கை பெற்றாலும், 5-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், உயர்கல்விமூலம் அனுகூலங் கள், உயர்கல்வியில் சாதனை செய்யும் அமைப்பு உண்டாகும்.
5-ஆம் வீடு புத்திர ஸ்தானம் என்பதால், சனி பலமுடன் அமையப்பெற்று, புத்திரகாரகன் குருவும் பலமுடன் அமையப் பெற்று, சனிக்கு 5-ஆம் அதிபதியும் பலமுடன் அமையப் பெற்றால், சிறப்பான புத்திர பாக்கியம், புத்திரவழியில் சிறப்பு, ஏற்றம், உயர்வு உண்டாகும். சனி பலமிழக்காமல், புத்திர காரகன் குரு, ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் 5-ல் வலிமை யுடன் அமையப்பெற்றாலும் ஆண் புத்திர பாக்கியம் உண்டாகும்.
சனி பலம்பெற்று, 5-ஆம் வீட்டில் பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால், பெண் குழந்தை யோகம் உண்டாகும். 5-ஆம் வீட்டில் ஆண், பெண் கிரகங்கள் அமையப் பெற்றிருந்தாலும், சனி ஆண், பெண் கிரகச் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்தாலும் ஆண், பெண் புத்திர பாக்கியம் உண்டாகும்.
புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டில் ராகு- கேது, புதன் அமையப்பெற்றாலும், சனி- மேஷம், மிதுனம், சிம்மத்தில் அமையப்பெற்றாலும், வக்ரம் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகும்.
சனி- ராகு, கேது, புதன் சேர்க்கை பெறுவது சிறப் பல்ல. புத்திரகாரகன் குரு பலமாக அமையப் பெறுவது அனுகூலத்தை உண்டாக்கும். குரு பாவிகள் சேர்க்கை பெற்றாலும், வக்ரம் பெற் றாலும், குருவின் வீடான தனுசு, மீனத்தில் பாவிகள் அமையப்பெற்றாலும் புத்திரர்களால் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.
சனி, இரு பாவிகளுக்கிடையே இருப்பதும், பகை, நீச வீட்டில் அமையப்பெறுவதும், சனி பலமிழந்து ராகு- கேது, புதன் சேர்க்கை பெறு வதும் புத்திர தோஷமாகும். சனி பலம்பெற்று புதன், ராகு சேர்க்கை பெற்றால் தத்துப் புத்திர யோகம் உண்டாகும்.
6-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் வீட்டைக் கொண்டு ருண, ரோகம், பகை, கடன், சிறை செல்லும் அமைப்பு போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.
துலா லக்னத்திற்கு குரு 6-ஆம் அதிபதி. 6-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும், குரு பலமிழந்து, சூரியன் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் இருந் தாலும் உஷ்ணநோய்கள், கண்களில் பாதிப்பு உண்டாகும். 6, 8, 12-ல் குரு, சந்திரன் இணைந் திருந்தால் நீர்த்தொடர்புள்ள பாதிப்புகள் உண்டாகும். குரு 6-ஆம் அதிபதி என்பதால், வலுவிழந்தால் குடலிறக்கம், வாயுத் தொல் லைகள், வயிறு பாதிப்பு ஆகியவை உண்டாகும்.
குரு, சுக்கிரன் இணைந்து பலமிழந்து காணப் பட்டால் ரகசிய நோய்கள் உண்டாகும். குரு, சனி இணைந்து, பலமிழந்து, மறைந்து காணப் பட்டால் பித்தம், வாதம், எலும்பு சம்பந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். ராகு, பாவிகள் சேர்க்கை பெற்று 6, 8-ல் இருந்தால் ரணம், ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, தோல் சம்பந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகும். குரு 6, 8-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும், 6, 8-ல் உள்ள பாவகிரகங்களைப் பார்வை செய்தாலும் சிறுசிறு நோய்கள் ஏற்பட்டாலும் நிவர்த் தியாகக்கூடிய நிலை உண்டாகும்.
6-ஆம் வீட்டை சனி போன்ற பாவிகள் பார்வை செய்தால், தேவையில்லாத எதிர்ப்புகள் நிலவும். 6-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றால், எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை உண்டாகும். பாவிகள் பார்வை 6-ஆம் வீட்டிற்கு இருப்பது எதிர்ப்புகளை அதிகரிக்கும். சனி, ராகு 6-ல் அமையப்பெற்று, சுபர் பார்வையின்றி அமைந்து உடன் குருவும் பலமிழந்திருந்தால், சில சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு, தேவையில்லாத எதிர்ப்புகளை சந்திக்கும் நிலை உண்டாகும். குரு, சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றால் நோய்கள் உண்டாகும்.
குரு- சனி, ராகு போன்ற கிரகச் சேர்க்கை பெற்று, வலுவிழந்து 3, 6, 8, 12-ல் அமையப்பெற் றால், அரசாங்க தண்டனைக்கு ஆளாகக்கூடிய நிலை உண்டாகும். குரு பாவிகள் சேர்க்கைப் பெற்று, பாவிகளுக்கிடையே அமையப்பெற்று வலுவிழந்திருந்தால் பலவகை மனக்கஷ்டம், வம்பு, வழக்குகள், விரோதங்கள் ஏற்படும். 6, 8-ல் சனி, செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டால்- உடன் குரு பலமிழந்து காணப்பட்டால் பகைவர் களால் ரணம், பலவகை துன்பங்கள் உண்டாகும்.
குரு- சனி, ராகு போன்ற கிரகச்சேர்க்கை பெற்றால், பலவகை வம்பு, வழக்குகள், பொருட்சேதம் ஏற்படும். குரு பலமிழந்து சனி, ராகு, சூரியன் போன்ற கிரகச்சேர்க்கை பெற் றால், கடன்களால் நிம்மதியற்ற நிலை, சனி பலமிழந்தால் வாழ்வின் பிரதான காலத்தில் கடன் வாங்கும் நிலை உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001