மீன லக்னம் 6-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்களைக் காணலாம்.
7-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு ஏழாம் பாவத்தைக் கொண்டு மணவாழ்க்கை, கூட்டுத்தொழில் போன்றவற்றை அறியலாம்.
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் வீடு களத்திர ஸ்தானம் மட்டுமன்றி, உபய லக்னம் என்பதால் பாதக ஸ்தானமுமாகும். 7-ஆம் அதிபதி புதன் கேந்திர- திரிகோண ஸ்தானங்களான 4, 5, 7, 9, 10-ல் அமைந்து, சுபர் பார்வையுடன் இருந்தாலும், 7-ல் பாவகிரகங்கள் இல்லாமலிருந்தாலும், களத்திரகாரகன் சுக்கிரன் கிரகச்சேர்க்கை யின்றி கேந்திர- திரிகோண ஸ்தானங் களில் பலமாக இருந்தாலும் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சந்திரனுக்கு 7-ல் பாவிகள் இல்லாமலிருப் பதும், சந்திரனுக்கு 7-ஆம் அதிபதி பாவிகள் சேர்க்கையின்றியிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதன்மூலம் திருமண வாழ்வில் மகிழ்ச்சி, சிறப்பான அன்யோன்யம், கட்டில் சுகம் உண்டாகும்.
புதன் பலமாக அமைந்து, கிரகச்சேர்க்கை யின்றி இருந்து, குரு பார்வை பெற்றிருந் தாலும், 7-ஆம் வீட்டிற்கும் சுக்கிரனுக்கும் குரு பார்வை இருந்தாலும், 7-ல் பாவிகளில்லாமல் சுபர்களிருந்தாலும் இளமையில் திருமணம் நடைபெறும்.
களத்திரகாரகன் சுக்கிரனுக்கு 7-ஆம் வீடான கன்னி நீசவீடு என்பதால், சுக்கிரன் 7-ல் அமைந்து, அதனுடன் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் சேர்க்கை பெற்றால், மணவாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். சனி, ராகு 7-ல் அமைந்தாலும், 7-ஆம் அதிபதி புதன் சேர்க்கை பெற்றாலும் கலப்புத் திருமணம் உண்டாகும்.
மீன லக்ன ஆண் ஜாதகத்தில் புதன், சுக்கிரனும், பெண்களுக்கு புதன், செவ்வாயும் சனி, ராகு போன்ற பாவகிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும், நீசம் பெற்று பாவிகளுக் கிடையே அமைந்தாலும் மணவாழ்க்கை நன்றாக இருக்காது. பாவகிரகச் சேர்க்கை பெறுவதால், வாழ்க்கைத்துணைக்கு தீராத நோய்கள் உண்டாகும். 7-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமைந்தாலும், 7-க்கு 8-ஆம் வீடான 2-ல் பாவிகள் அமைந்தாலும் வாழ்க்கைத்துணைக்கு உடல் பாதிப்புகள் ஏற்படும்.
7-ஆம் வீடு களத்திர ஸ்தானம் மட்டுமன்றி, கூட்டுத்தொழில் ஸ்தானமுமாகும். உபய லக்னமான மீன லக்னத்திற்கு 7-ஆமிடம் பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத்தொழில் செய்யக்கூடாது. எதிலும் தனித்து செயல்படுவது, கூட்டுத்தொழில் செய்வதென்றால் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. 7-ஆம் அதிபதி திரிகோண ஸ்தானங்களான 5, 9-ல் அமைந் தாலும், சுபர் பார்வையுடன் 3, 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும் அவர்களுக்கு கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். பொதுவாக, வெளிநபரைவிட கணவன்- மனைவியுடனோ, மனைவி- கணவனுடனோ கூட்டுசேர்ந்து தொழில்செய்வது நல்லது.
8-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 8-ஆம் வீட்டைக் கொண்டு ஆயுள், ஆரோக்கியம், எதிர்பாராத தனச்சேர்க்கை பற்றி அறியலாம்.
மீன லக்னத்திற்கு 8-ஆம் அதிபதியான சுக்கிரன் கேந்திர- திரிகோண ஸ்தானங்களில் அமைந்தாலும், சுபகிரகச் சேர்க்கை பெற்று, நட்பு வீட்டில் பலமாக அமைந்தாலும், ஆயுள்காரகன் சனி ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர- திரிகோணங்களிலோ, நட்பு வீடுகளிலோ அமைந்தாலும் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும்.
சுக்கிரன் தனக்கு நட்பு கிரகமான சனி, புதன் சேர்க்கை பெற்றாலும், லக்னாதிபதி குரு பார்வை பெற்றாலும் நல்ல ஆரோக்கியமும், எவ்விதப் பிரச்சினைகளுமின்றி வாழ்க்கை நடத்தக்கூடிய அமைப்பும் ஏற்படும். சுக்கிரன் பலமிழந்தாலோ, பாவிகள் சேர்க்கை பெற் றாலோ, வக்ரம் பெற்றாலோ ரகசிய நோய்கள், சர்க்கரை வியாதி, அடிக்கடி ஆரோக்கிய பாதிப்பு, உடல் பலவீனம் உண்டாகும்.
8-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், ராகு- கேது போன்ற பாவிகள் அமைவதும், 8-ஆம் வீட்டை பாவிகள் பார்வை செய்வதும், சனி வக்ரம் பெறுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றிருந்தாலும், 8-ஆம் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவகிரகங்கள் இருந்தாலும், கிரகங்களின் இயல்பிற்கேற்ப ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும்.
8-ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகளில் ஏதேனும் இருகிரகங்கள் அமைந்தாலும், இருகிரகங்கள் சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும் விபத்துகளை எதிர்கொள்ள நேரிடும். சுக்கிரன், சூரியன் சேர்க்கை பெற்று, 6-ல் பலமிழந்து அமைந் தால் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், இதயக் கோளாறு, கண்களில் பாதிப் புண்டாகும். 8-ஆம் வீட்டில் சூரியன் நீசமா வதால், அதனுடன் சுக்கிரன் அமைந்து நீசபங்கம் பெற்றால் நல்லது. அதுவே நீசபங்க ராஜயோகம் ஏற்படாமலிருந்து, பாவகிரகச் சேர்க்கை பெற்றால், கடுமை யான உடல் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
8-ல் செவ்வாய் அமைந்தாலும், செவ்வாய், சுக்கிரன் இணைந்து பலமிழந்து காணப்பட்டாலும் ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், கண்களில் பாதிப்பு, வெட்டுக்காயம், ரகசிய நோய்கள் உண்டாகும்.
புதன் பலமிழந்து, சுக்கிரன் சேர்க்கை பெற்றால், ஞாபகக்குறைவு, நரம்புத் தளர்ச்சி போன்ற பாதிப்பு ஏற்படும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றாலும், சந்திரன் பலவீனமாக 8-ல் இருந்தாலும் நீர்த்தொடர்புள்ள உடல் பாதிப்புண்டாகும். 8-ல் குரு, பாவிகள் பார்வை அல்லது சேர்க்கையுடன் அமைந்தால் வாயு சம்பந்தப்பட்ட பாதிப்பு வயிற்றுக் கோளாறு உண்டாகும்.
சனி 8-ல் அமைந்தால்- உச்சம் பெறுவதால் நீண்ட ஆயுள் உண்டாகும். சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று வேறிடத்தில் பலவீனமாக இருந்தால், உடல் பலவீனம், ஆரோக்கிய பாதிப்பு ஏற்படும். 8-ஆம் வீட்டில் ராகு அமைந்து, பாவிகள் பார்வையுடன் இருந்தால் செரிமானக்கோளாறு, விஷத்தால் கண்டம், எதிர்பாராத உடல் பாதிப்புகள் உண்டாகும். ராகு 8-ல் பாவகிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், தவறான பழக்கவழக்கங்கள் ஏற்படும். மீன லக்னத்திற்கு குரு லக்னாதிபதி என்பதால், 8-ஆம் வீட்டை குரு பார்வை செய்தாலும், சுக்கிரனை குரு பார்வை செய்தாலும் நீண்ட ஆயுள், நல்ல ஆரோக் கியம் உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001