கும்ப லக்னம் 2-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங் களைக் காணலாம்.

3-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டைக் கொண்டு சுயமுயற்சி, இளைய சகோதர அமைப்பு, வீரம், விவேகம் பற்றித் தெள்ளத் தெளிவாக அறியலாம்.

கும்ப லக்னத்திற்கு சகோதர காரகன் செவ்வாயே 3-ஆம் வீட்டிற்கும் அதிபதியா வார். லக்னாதிபதி சனிக்கு செவ்வாய் பகை கிரகம் என்பதால், சகோதரவழியில் ஒற்றுமை சிறப்பாக இருக்காது. செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர- திரிகோணங் களில் அமைந்தோ, ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சூரியன் சேர்க்கை பெற்றோ, 3, 11-ல் வேறுகிரகங்கள் அமையாமல் குரு, சூரியன், செவ்வாய் அமைந்தால் ஆண் சகோதர பாக்கியமும், ஆண் சகோதரர்களால் அனுகூலமான பலன்களும் உண்டாகும். செவ்வாய்- சூரியன், குரு சேர்க்கை பெற்று ஜென்ம லக்னத்திற்கோ சந்திரனுக்கோ கேந்திர- திரிகோணங்களில் அமைந்தால் சகோதரவழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

Advertisment

செவ்வாய் நீசம் பெற்றோ, வக்ரம் பெற்றோ, பகை பெற்றோ, அஸ்தங்கம் அடைந்தோ, சனி, ராகு, புதன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றோ அமைந்தால் சகோதரர்கள் இல்லை.

3-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்தால் இளைய சகோதர தோஷமாகும்.

மேஷம், விருச்சிகத்தில் சனி, ராகு அமைந்தால் உடன்பிறந்தவர்களால் அனுகூலமற்ற பலன் உண்டாகும்.

Advertisment

3-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் அமைந் தாலும், செவ்வாய்- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், சந்திரன், சுக்கிரன் வீட்டில் செவ்வாய் அமைந் தாலும் சகோதரி யோகம் உண்டாகும்.

3-ஆம் வீடு சகோதர ஸ்தானம் மட்டுமின்றி முயற்சி ஸ்தானமு மாகும். 3-ல் செவ்வாய், ராகு, சூரியன் போன்ற பாவ கிரகங்கள் அமைந்து சுபர் பார்வை பெற்றிருந்தால், முயற்சியில் வெற்றி, அனுகூலங்கள், எதிலும் தனித்து விளங்கக்கூடிய அமைப் புண்டாகும். 3-ஆம் வீட்டை குரு பார்த்தால், எதிலும் தைரியத்துடன் செயல்படும் அமைப்பு உண்டாகும்.

3-ல் சனி, ராகு அமைந்து, புதன் பலமிழந்திருந்தால் காதுகளில் பாதிப்புண்டாகும்.

4-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக் கொண்டு சுகவாழ்வு, வீடு, வாகன யோகம், பூமி, மனை யோகம், தாய், கல்வி, பெண் களுக்குக் கற்பு போன்றவற்றைத் தெளிவாக அறிலாம்.

கும்ப லக்னத்திற்கு சுக்கிரன் 4-ஆம் அதிபதி பாதகாதிபதி என்பதால்- திரிகோண ஸ்தானத்தில் சுபகிரகச் சேர்க்கை பெற்று அமைந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகும். சுக்கிரன், லக்னாதிபதி சனி சேர்க்கை பெறுவதும், புதன் சேர்க்கை பெறுவதும், சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு சேர்க்கை பெறுவதும் அற்புதமான அமைப் பாகும். சுக்கிரன்- குரு, புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றால் சுகபோக வாழ்க்கை, சொகுசு வாழ்க்கை உண்டாகும்.

சுக்கிரன் நீசம் பெறுவதும், வக்ரம் பெறுவதும், சூரியனுக்கு மிக அருகில் அமைந்து அஸ்தங்கம் பெறுவதும், பாவிகள் சேர்க்கை பெறுவதும் சுகவாழ்வை பாதிக்கும். சுக்கிரன் திரிகோண ஸ்தானங்களில் அமைந் தால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சுக்கிரன் 4-ஆம் அதிபதி என்பதால், பலமாக அமைந்து பாவிகள் சேர்க்கை பெறாமலிருந் தாலும், 4-ல் பாவிகள் இல்லா மலிருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

சுக்கிரன், சனி, புதன் சேர்க்கை பலமாக அமைந்தாலும், சுக்கிரன்- புதன் பரிவர்த்தனை பெற்றாலும், சுக்கிரன்- குரு பரிவர்த்தனை பெற் றாலும் மாளிகைபோன்ற வீடு அமையும். 4-ஆம் வீட்டை சுக்கிரன் பார்த்தால், கண்டிப்பாக சொந்த வீட்டு யோகம் உண்டாகும். சுக்கிரன் பலம்பெற்று 4-ஆம் வீட்டை சுபர் பார்த்தாலும், சந்தி ரனுக்கு 4-ஆம் அதிபதி பலம் பெற்றாலும் வாகன யோகம் உண்டாகும்.

சனி- சுக்கிரன் பரிவர்த் தனை பெற்றாலும், சனி- சுக்கிரன் சேர்க்கை ஏற்பட் டாலும் பழைய வாகனங் களை வாங்கி அனுபவிக்கும் யோகம், பழைய வீட்டை வாங்கி உபயோகிக்கும் அமைப்புண்டாகும். சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், சுக்கிரன்- செவ்வாய் பரிவர்த்தனை பெற்றாலும், செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று 4-ஆம் வீட்டைப் பார்வை செய்தாலும் பூமி யோகம், மனை யோகம் உண்டாகும். சுக்கிரன் வலுவாக அமைந்து, சூரியன், புதன் சேர்க்கை பெற்றால் பூர்வீக சொத்து, தந்தைவழியில் அசையா சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

சுக்கிரன் பலமிழந்து, 4-ல் சர்ப்ப கிரகங்கள் அமைந்தாலோ, 4-ல் பாவிகள் பார்வை ஏற்பட்டிருந் தாலோ வீடு, வாகன யோகம் உண்டாகாது. சுக்கிரன்- சூரியன், சந்திரன் சேர்க்கை பலம்பெற்றால் பெண்கள் மற்றும் மனைவிமூலமாக அசையா சொத்துகள் உண்டாகும். 4-ல் எத்தனை கிரகங்கள் அமைகின் றதோ அத்தனை வீட்டு யோகம் உண்டாகும். 4-ஆம் வீட்டுடன் தொடர்புடைய கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் சொந்த வீடு யோகம், அசையா சொத்துச் சேர்க்கை உண்டாகும்.

4-ஆம் வீடு தாய் ஸ்தானமாகும். 4-ஆம் அதிபதி சுக்கிரனும், தாய்க்காரகன் சந்திரனும் கேந்திர- திரிகோணங்களில் அமைந்து சுபர் சேர்க்கை மற்றும் சுபர் பார்வை பெற்றிருந்தால் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். 4-ஆம் அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றோ, பாவகிரகச் சேர்க்கை பெற்றோ இருந்தாலும்; சந்திரன் பலமிழந்தாலும் தாய்க்கு கண்டம் உண்டாகும்.

4-ஆம் வீடான ரிஷபத்திலோ, சந்திரனின் வீடான கடகத்திலோ செவ்வாய், ராகு- கேது போன்ற பாவகிரகங்கள் அமைந்தால் தாய்க்கு பாதிப்பு, தாய்வழி உறவினர்களிடம் பகை உண்டாகும். சந்திரன் சர்ப்ப கிரகச் சேர்க்கை பெறுவதும், 4-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமைவதும், சுக்கிரன் பாவிகளுக்கிடையே அமைவதும் தாய்க்கு அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

4-ஆம் வீடு கல்வி ஸ்தானமாகும். 4-ஆம் அதிபதி சுக்கிரனும், கல்விக்காரகன் புதனும் கேந்திர- திரிகோணங்களில் பலம்பெற்றிருந் தால் சிறப்பான கல்வி யோகம் உண்டாகும். சுக்கிரன், புதன் பலம்பெறுவதன்மூலம் கல்வி யில் பல்வேறுவகையில் ஏற்றங்கள் ஏற்படும்.

4-ஆம் அதிபதி சுக்கிரன் என்பதால், கலை, இசை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும். சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றால் இசைத்துறையில் ஈடுபாடும், 4-ல் சூரியன், செவ்வாய் அமைந்தால் நிர்வாகம், பொறியியல் தொடர்புடைய கல்வி கற்கும் அமைப்பும், சுக்கிரன்- குரு சேர்க்கை பலம் பெற்றால் எதிர்காலத்தில் சிறந்த ஆலோசக ராக விளங்கும் அமைப்பும், சுக்கிரன்- புதன் சேர்க்கை பெற்றால் கணக்கு, கம்ப்யூட்டர், வங்கித் துறை, பங்குச் சந்தை தொடர்புடைய கல்வி கற்கக்கூடிய அமைப்பும், சுக்கிரன்- சந்திரன், ராகு சேர்க்கை பலம்பெற்றால் மருந்து, ரசாயனம் தொடர்புடைய கல்வியைக் கற்கும் அமைப்பும், சுக்கிரன்- சந்திரன், செவ்வாய் சேர்க்கை பலம்பெற்றிருந்தால் அறுவை சிகிச்சை தொடர்புடைய கல்வி கற்கக்கூடிய வாய்ப்பும், 4-ல் சனி அமைந்து, செவ்வாயுடன் இருந்தால் தொழில்நுட்பக் கல்வி கற்கும் யோகமும் உண்டாகும்.

4-ஆம் வீட்டில் சனி, ராகு அமைந்து, சுக்கிரன் பலமிழந்திருந்தால் கல்வியில் இடையூறு உண்டாகும். 4-ஆம் வீட்டையும் சுக்கிரனையும் சனி, செவ்வாய் பார்த்தால் கற்ற கல்வியை முழுமையாகப்பயன்படுத்த முடியாத நிலை உண்டாகும்.

mm

5-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவத்தைக்கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர்கல்வி போன்றவை பற்றித் தெளிவாகக் கூறலாம்.

கும்ப லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி புதன் அலிகிரகம் என்பதால், இயற்கையாகவே சிறிது புத்திர தோஷம் உண்டாகும். புதன் ஆட்சி, உச்சம் பெற்று, புத்திரகாரகன் குருவும் வலுப்பெற்றிருந்தால் சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் வீட்டில் குரு, சூரியன், செவ்வாய் அமைந்தாலும், 5-ஆம் அதிபதி புதன், குரு, சூரியன், செவ்வாய் போன்ற கிரகச் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், குரு, செவ்வாய், சூரியன் வீட்டில் இருந்தாலும் ஆண் குழந்தை யோகம் உண்டாகும். சுக்கிரன், சந்திரன் 5-ல் அமைந்தாலும், புதன்- சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றாலும், சுக்கிரன், சந்திரன் வீட்டில் இருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும்.

5-ல் ஆண்- பெண் கிரகங்கள் இணைந் திருந்தால் ஆண் குழந்தை யோகமும், பெண் குழந்தை யோகமும் உண்டாகும். 5-ஆம் அதிபதி புதன், சனி, ராகு- கேது சேர்க்கை பெற்றாலும், 5-ல் மேற்கூறிய கிரகங்கள் இருந்தாலும் புத்திர தோஷம் உண்டாகும். புத்திரகாரகன் குரு பலமிழந்து சனி, ராகு- கேது சேர்க்கை பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகும். புத்திர காரகன் குரு வீடான தனுசு, மீனத்தில் பாவகிரகங்கள் இருந்தாலும் புத்திர தோஷம், புத்திரவழியில் மனக் கவலை உண்டாகும். சந்திரனுக்கு 5-ஆம் அதிபதி பாவிகள் சேர்க்கை பெறுவது, 5-ல் பாவிகள் இருப்பது, 5-ஆம் வீட்டையும் குருவையும் பாவிகள் பார்வை செய்வது புத்திர தோஷமாகும்.

5-ஆம் பாவத்தைக்கொண்டு பூர்வபுண்ணி யத்தை அறியலாம். புதன் ஆட்சி, உச்சம் பெற்றால், பூர்வீகவழியில் தாராள தனச் சேர்க்கை, பூர்வீக சொத்தால் அனுகூலங்கள் உண்டாகும். புதன், சூரியன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமைந்தால் பூர்வீகவழியில் அனுகூலங்கள் அதிகரிக்கும். புதன் பலமிழந்திருந்தாலும், 5-ல் சர்ப்ப கிரகங்கள் அமைந்திருந்தாலும் பூர்வீகவழியில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

5-ஆம் அதிபதி புதன் கல்விக்காரகன் என்ப தால் உயர்கல்வி யோகம் பலமாக இருக்கும்.

5-ல் பாவிகளில்லாமல் புதன் கேந்திர, திரிகோணங்களில் பலம்பெற்றிருந்தால் உயர் கல்விரீதியான சாதனைகள் செய்யக்கூடிய அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

6-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் பாவத்தைக் கொண்டு ஒருவருக்குள்ள எதிர்ப்பு, கடன், நோய் பற்றித் தெளிவாகக் கூறமுடியும்.

6-ஆம் வீடு உபஜெய ஸ்தானம் என்பதால், கும்ப லக்னத்திற்கு 6-ல் சூரியன், சனி, ராகு போன்ற அசுப கிரகங்கள் அமைந்து, 6-ஆம் அதிபதி சந்திரன் கேந்திர- திரிகோணங்களில் அமைந்து, 6-ஆம் வீட்டை சுபர் பார்த்தால் எதிர்ப்பில்லாத வாழ்க்கை, எதிரிகளை எளிதில் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். 6-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால், எதிரிகளின் செயல்களெல்லாம் சாதகமாக இருக்கும். 6-ஆம் வீட்டை அசுப கிரகங்களான சனி, செவ்வாய் பார்த்தால் பல்வேறு எதிர்ப்புகள் உண்டாகும்.

6-ஆம் அதிபதி சந்திரன் சுபகிரகச் சேர்க்கை பெற்று ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால், சிறப் பான உடலமைப்பு, நல்ல ஆரோக்கியம் உண்டாகும். 6-ஆம் அதிபதி சந்திரன் என்ப தால், தாய்வழி உறவினர்வகையில் எதிர்ப் புகள் உண்டாகும். 6-ல் அமையும் கிரகங் களின் இயல்புக்கேற்பவும், 6-ஆம் அதிபதி சந்திரன் பலமிழந்த கிரகச் சேர்க்கை பெற்றால் அக்கிரங்களின் இயல்புக்கேற்பவும் எதிர்ப் புகள் உண்டாகும். 6-ல் பாவகிரகங்கள் அமைவது, 6-ஆம் அதிபதி கிரகச் சேர்க்கை பெற்று, பலமிழந்து, பாவிகள் பார்வையுடன் அமைந்தால் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும்.

6-ஆம் அதிபதி சந்திரன் என்பதால், நீர்த்தொடர்புள்ள உடல்நிலை பாதிப்புகள், தண்ணீரால் கண்டம் உண்டாகும். 6-ல் சூரியன் அமைந்தாலும், சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்று பலமிழந்தாலும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள், கண்களில் பாதிப்பு, இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், பித்தம், தோல் பாதிப்பு ஆகியவை உண்டாகும். 6-ல் செவ்வாய் அமைந்தால் ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், விபத்து, வெட்டுக்காயங்கள் உண்டாகும். புதன் 6-ல் இருந்தாலும், சந்திரன் சேர்க்கை பெற்று பலமிழந்தாலும் காசநோய், ஞாபக சக்திக் குறைவு, நரம்புத் தளர்ச்சி, கைகால் வலிப்பு போன்ற நோய்கள் உண்டாகும். 6-ல் குரு அமைந்தாலும், சந்திரன் சேர்க்கை பெற்று குரு பலமிழந்தாலும் மஞ்சள் காமாலை, வயிற்றுக் கோளாறு, பெரியோர்களின் சாபத்தால் உடல்நிலை பாதிப்புண்டாகும்.

சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்று பலமிழந்தால், சர்க்கரை வியாதி, ரகசிய நோய்கள், கண்களில் பாதிப்புண்டாகும். 6-ல் சனி இருந்தாலும், சனி, சந்திரன் சேர்க்கை பெற்று பலமிழந்தாலும் வாதம், பித்தம், எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். சந்திரன், ராகு சேர்க்கை பெற்று பலமிழந்து காணப்பட்டால் ஒவ்வாமை, செரிமானக் கோளாறு, உணவு விஷமாகும் அமைப்புண்டாகும். சந்திரன், கேது சேர்க்கை பெற்று பலமிழந்தால், மனநிலை பாதிப்பு, ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், சித்தப் பிரம்மை உண்டாகும்.

6-ஆம் வீடு கடன்களைப் பற்றி அறியக் கூடிய ஸ்தானமாகும். 6-ஆம் அதிபதி சந்திரன் சுபர் சேர்க்கையுடன், கேந்திர- திரிகோணங் களில் அமைந்தாலும், சுபர் பார்வை பெற் றாலும், தனக்கு நட்பு கிரகமான சூரியன், செவ்வாய், குரு போன்ற கிரகச் சேர்க்கை பெற்று பலம்பெற்றிருந்தாலும் அதிக கடன்கள் இருக்காது. கடன்கள் ஏற்பட்டாலும் அடைக்கக் கூடிய அமைப்புண்டாகும். 6-ஆம் வீட்டில் பாவிகள் அமைந்தாலும், பாவிகள் பார்த்தாலும் தீராக்கடன் உண்டாகும். 6-ஆம் வீட்டில் 6-ஆம் அதிபதி, சேர்க்கை பெறும் கிரகங்கள் பலமிழந்து காணப்பட்டால், அக்கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் நோய், தீராக்கடன் உண்டாகும். 6-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்வது மிகச்சிறந்த அமைப்பாகும்.

(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)

செல்: 72001 63001