துலா லக்னத்தில் பிறந்தவர் களில் 6-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
7-ஆம் பாவம்
களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டைக்கொண்டு ஒருவரின் மண வாழ்க்கை, கூட்டுத்தொழில் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.
துலா லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலும், திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், நட்பு வீட்டில் அமையப் பெற்றாலும், அழகான பெண் மனைவி யாக வரும் யோகம்; பெண் என்றால் அழகான ஆண் கணவராக வரும் யோகம் உண்டாகும். செவ்வாய்- குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றாலும், களத்திர காரகனும் லக்னாதிபதியுமான சுக்கிரன் பலமாக அமையப் பெற்றாலும், சிறப்பான மணவாழ்க்கை, வாழ்க்கைத் துணைமூலம் செல்வம், செல்வாக்கு, பொருளாதார மேன்மை உண்டாகும்.
7-ஆம் அதிபதி செவ்வாய்- சனி, ராகு- கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால் மணவாழ்வில் சோத னைகள் உண்டாகும். செவ்வாய் கடகத்தில் அமையப் பெற்று, பலமான நீசபங்கராஜ யோகமில்லை என்றால் குடும்ப வாழ்வில் சோதனைகள் உண்டாகும். 7-ஆம் வீட்டில் சனி அமையப்பெற்றாலும், துலா லக்னத்திற்கு பாதகாதிபதியான சூரியன் 7-ல் அமையப்பெற்றாலும் மணவாழ்வில் சோதனைகள் உண்டாகும்.
களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் மற்றும் சனி- சூரியன், ராகு- கேது போன்ற கிரகச்சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றாலும், சுக்கிரனுக்கு 7-ல் இரு பாவிகள் அமையப்பெற்றாலும் இருதாரங்கள் அமையும் அமைப்புண்டாகும். செவ்வாய்- சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று, சுபர் பார்வையின்றி பலமிழந்து நின்றால், வாழ்வில் தடம்மாறும் சூழ்நிலை உண்டாகும்.
களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய்க்கு 7-ஆம் அதிபதி பலமாக அமையப்பெற்று சுபர் பார்வையுடன் இருந் தாலும், சந்திரன், புதன் வீட்டில் இருந்தாலும் களத் திரவழியில் மேன்மையும், லாபங்களும் உண்டாகும். 7-ஆம் வீட்டில் பாவிகள் இல்லாமல் சூரியன், சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் உச்சம் பெற்று, சந்திரன் கேந் திரத்தில் இருந்தால் களத்திரவழியில் தாராள தனவரவு உண்டாகும்.
7-ஆம் வீட்டில் பாவிகள் இருந்தாலும், 7-ஆம் வீட்டை பாவிகள் பார்த்தாலும் களத்திரவழியில் பொருளாதார இழப்புகள் உண்டாகும். 7-ஆம் வீட்டில் இரு பாவிகள் அமையப்பெற்று சுபருடன் இருந்தாலும் இரண்டு தாரம் உண்டாகும். செவ்வாய் வக்ரம் பெறுவதும், 7-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமையப்பெறுவதும், 7-ஆம் அதிபதி பாவிகளுக்கிடையே அமைவதும் சிறப்பல்ல.
7-ஆம் அதிபதி செவ்வாய் கேந்திர, திரிகோணங் களில் அமையப்பெற்று, 10-ஆம் அதிபதி சந்திரன் சேர்க்கை பெற்றால் கூட்டுத்தொழில்மூலம் அனுகூலம் ஏற்படும்.
8-ஆம் பாவம்
துலா லக்னத்திற்கு அதிபதியான சுக்கிரனே 8-ஆம் அதிபதியும் ஆகும். ஜென்ம லக்னத்திற்கும், 8-ஆம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற் றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும். சுக்கிரன் நட்பு கிரகமான சனி, புதன் சேர்க்கை பெற்றாலும், குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்றாலும் ஆயுள், ஆரோக்கியத்தில் எந்தவிதக் குறைபாடும் இருக்காது.
சுக்கிரன் பலமிழந்தாலோ பாவிகள் சேர்க்கை பெற்றாலோ ரகசிய நோய்கள் உண்டாகும். சுக்கிரன், சூரியன் சேர்க்கை பெற்று, 6, 8-ல் சூரியன் அமையப்பெற்றால் உஷ்ணம் சம்பந் தப்பட்ட பாதிப்புகள், இதயக் கோளாறு, கண்களில் பாதிப்பு உண்டாகும். 8-ஆம் வீட்டில் செவ்வாய் அமையப்பெற்றால் ரத்த சம்பந்தப் பட்ட பாதிப்புகள் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, சர்க்கரை நோய், வெட்டுக் காயம், ரகசிய நோய்கள் உண்டாகும்.
புதன் பலமிழந்து சுக்கிரன் சேர்க்கை பெற்று 6, 8, 12-ல் அமையப்பெற்றால் நரம்புத் தளர்ச்சி சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். 8-ஆம் வீட்டில் சந்திரன் அமையப்பெற்றாலும், சுக்கிரன் மற்றும் சந்திரன் சேர்க்கைப் பெற் றாலும், சந்திரன் பலவீனம் பெற்றிருந்தாலும் நீர்த்தொடர்புள்ள உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 8-ஆம் வீட்டில் ராகு அமையப் பெற்றாலும், சுக்கிரன் மற்றும் ராகு சேர்க்கை பெற்று, பாவிகள் பார்வையுடன் இருந்தாலும் விபத்தால் கண்டம், சில தவறான பழக்கவழக் கங்கள் உண்டாகும்.
8-ஆம் வீட்டில் சனி அமையப்பெற்றால் நீண்ட ஆயுள் உண்டாகும்.
9-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் வீட்டைக் கொண்டு தந்தை, செல்வம், செல்வாக்கு, வசதி, வாய்ப்பு, வெளிநாட்டுப் பயணம் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.
துலா லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்றோ, குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றோ இருந்தால் தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும். துலா லக்னத் திற்கு சூரியன் பாதகாதிபதி என்பதால், குரு, சந்திரன், சுக்கிரன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்று, சுபர் வீட்டில் அமையப்பெற்றாலே தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும்.
மிதுனத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெறுவதும், புதன், சனி, ராகு செவ் வாய் சேர்க்கை பெறுவதும், சனி, செவ்வாய் வீட்டில் புதன் அமையப்பெறுவதும் தந்தைக்கு நல்லதல்ல. சிம்மத்தில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும், சூரியன் மற்றும் சனி வீட்டில் அமையப்பெற்றாலும், சனி- ராகு சேர்க்கை அல்லது சாரம்பெற்றாலும் தந்தையிடம் கருத்துவேறுபாடுகள் உண்டாகும். சூரியன், புதன் பாவிகள் சேர்க்கை பெறுவதும், பாவிகளுக்கிடையே அமையப்பெறுவதும் சாதகமான அமைப்பல்ல.
சூரியன், புதன், சுக்கிரன் இணைந்தோ தனித்தோ சுபர் வீட்டில் அமையப்பெற்று, சுபர் பார்வையுடன் இருந்தால் தந்தைவழியில் அசையா சொத்து யோகம், செல்வம், செல் வாக்கு உண்டாகும். சூரியன், புதன், குரு போன் றோர் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றாலும், சுபர் வீட்டில் அமையப்பெற்றாலும் தந்தைவழியில் அசையா சொத்து யோகம் கிட்டும்.
9-ஆம் வீட்டில் புதன் பலம்பெற்று, உடன் குரு அமையப்பெற்றாலும், குரு பார்வை பெற்றாலும் செல்வம், செல்வாக்கு அமைவதுடன் பல்வேறு சமூகநலப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள நேரிடும்.
9-ஆம் வீட்டில் சந்திரன், குரு அமையப் பெற்று பாவிகள் பார்வை மற்றும் சேர்க்கையில்லாமல் இருந்தால் பொதுப் பணி, சமூகநலப் பணிகள், தெய்வீகக் காரியங் களில் ஈடுபாடு உண்டாகும். புதன் ஆட்சி, உச்சம் பெற்று சந்திரன், சனி போன்ற கிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும், 9-ல் சனி, ராகு அமைந்திருந்தாலும் கடல்கடந்து அயல்நாடு செல்லக்கூடிய அற்புத அமைப்புண்டாகும்.
9-ஆம் வீடு பாக்கிய ஸ்தானமாகும். 9-ஆம் அதிபதி புதன், சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று, நட்பு ஸ்தானங்களில் அமையப்பெற்றால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் தேடிவரும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001