கன்னி லக்னத்தில் பிறந்தவர்களில் 4-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
5-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவத்தைக்கொண்டு பூர்வீக பலம், உயர்கல்வி, அறிவாற்றல், புத்திர பாக்கியம் போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம்.
கன்னி லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி சனி நட்புகிரகமான சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்று, குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்று, சுப ஸ்தானத்தில் அமையப்பெற்றால் பூர்வீகவழியில் அனுகூலங்கள், பூர்வீகத்தால் செல்வம், செல்வாக்கை அடையும் அமைப்புண்டாகும். சனி, ராகு சேர்க்கை பெற்றோ, பலவீனமாகவோ, வக்ரம் பெற்றோ, பாவகிரகப் பார்வை பெற்றோ இருந்தால், பூர்வீகத்தால் பெரிய அனுகூலங்கள் ஏற்படாது. சனி பலவீனமாக இருந்து, சூரியனும் பாவகிரகச் சேர்க்கை பெற்றிருந்தால் உற்றார்- உறவினர்களிடம் சுமுகமான உறவிருக்காது.
சனி புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று, குரு பார்வையுடன் வலுப்பெற்றாலும், சனி ஆட்சி, உச்சம் பெற்றாலும் சிறந்த அறிவாற்றல், உயர்கல்வி யோகம் உண்டாகும். சனி வலுவிழந்திருந்தால் உயர்கல்வி, பட்டக்கல்வி பயில்வதற்கு இடையூறுகள் ஏற்படும்.
கன்னி லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி சனி ஒரு அலி கிரகமாகும். 5-ஆம் வீடான மகர ராசி புத்திரகாரகன் குருவுக்கு நீச வீடு என்பதால், புத்திர பாக்கியம் ஏற்பட சில இடையூறுகள் உண்டாகும். 5-ஆம் அதிபதி சனி, புத்திரகாரகன் குரு வலுவாக அமைந்து, உடன் ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய் சேர்க்கையோ பார்வையோ பெற்று, சுபர்வீட்டில் வலுவாக அமையப்பெற்றாலும், 5-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் அமையப்பெற்று சுபர் பார்வையுடன் இருந்தாலும் சிறப்பான ஆண் குழந்தை யோகம் உண்டாகும்.
சனி பெண் கிரகங்களான சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்று, ரிஷபம், கடகம், துலாத்தில் அமையப்பெற்றாலும், 5-ல் சுக்கிரன், சந்திரன் போன்ற பெண் கிரகங் கள் இருந்து, சனியும் வலுவாகக் காணப் பட்டாலும், சனி, சந்திரன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணத்தில் இருந்தாலும், சனியை சுக்கிரன் பார்த் தாலும், சந்திர கேந்திரத்தில் சுக்கிரன் இருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும்.
சனி பலவீனமாக மேஷம், சிம்மத்தில் அமையப்பெற்றாலும், குரு, சனி வக்ரம் பெற்றாலும், சுபர் பார்வையின்றி அமையப் பெற்றாலும், சனி, ராகு சேர்க்கை பெற் றாலும், 5-ல் ராகு இருந்தாலும், குரு பகவானின் வீடான தனுசு, மீனத்தில் பாவகிரகங்கள் வலுவாக அமையப் பெற்றாலும் புத்திர தோஷம் உண்டாகும்.
சனி தனக்கு பகைகிரகமான செவ்வாய், சூரியன் சேர்க்கை பெறுவதும், சாயாகிரக மான ராகு, கேது சேர்க்கை பெறுவதும் புத்திர தோஷமாகும். சனிக்கு இருபுறமும் சூரியன், செவ்வாய், ராகு- கேது போன்ற கிரகங்கள் இருந்து, சுபர் பார்வையின்றி இருந்தால் புத்திர தோஷம்.
6-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் வீட்டைக் கொண்டு ருண, ரோகம், வெற்றி, எதிர்ப்பு, கடன்களைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
கன்னி லக்னத்திற்கு 6-ஆம் வீட்டதிபதி சனி, கடன் என்ற சொல்லுக்கே காரணகர்த்தா வாகும். சனி ஆட்சி, உச்சம் பெற்றோ, வலுப்பெற்றோ அமையப்பெற்றால் நல்ல வசதிவாய்ப்பும், கடன் ஏற்பட்டாலும் அதனை அடைக்கும் வல்லமையும், சேமிக்கும் திறனும் உண்டாகும்.
சனி சுபர்சேர்க்கை மற்றும் பார்வையுடன் ஆட்சி, உச்சம் பெற்றால், எதிர்ப்பில்லாத வாழ்க்கை உண்டாகும். 6-ல் பாவ கிரகங்கள் பலமுடன் அமையப்பெற்று, சுபர் பார்வை யுடன் இருந்தால் எதிரிகளைப் பந்தாடும் வலிமை உண்டாகும். 6-ஆம் வீட்டை பாவகிரகங்கள் பார்வை செய்தாலும், 6-ஆம் அதிபதி சனி தனக்கு பகைகிரகங்களான சூரியன், செவ்வாய், ராகு சேர்க்கை பெற்று சுபர் பார்வையின்றி இருந்தாலும், தேவை யில்லாத எதிர்ப்புகள், எதிரிகளின் தொல்லையால் மன அமைதியற்ற நிலை உண்டாகும்.
சனி, ராகு சேர்க்கை பெற்று, சூரியன், சந்திரன், செவ்வாய் வீடான மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகத்தில் அமையப் பெற்று, செவ்வாய் சேர்க்கை மற்றும் பார்வை உண்டானாலும், சூரியன் பலமிழந்திருந்தாலும் வீண்பிரச்சினைகளால் வம்பு, வழக்குகளை எதிர்கொள்ளும் நிலை, கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்படும்.
6-ஆம் அதிபதியும், ஆயுள், ஆரோக்கிய காரகனுமான சனி வலுவாக இருந்து சுபகிரகங் களின் பார்வை பெற்றால், நல்ல திடகாத் திரமான உடலமைப்பு, சிறப்பான ஆரோக் கியம் இருக்கும். சனி, சூரியன் சேர்க்கை பெற்று, உடன் பாவகிரகங்கள் அமையப்பெற்றால் கால்களில் பாதிப்பு, அங்கக்குறைவு, இதயக் கோளாறு, உஷ்ண நோய்கள் உண்டாகும். சனி, சந்திரன் சேர்க்கை பெற்று பலவீனமாக இருந்தால் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்பு, கண்களில் பாதிப்பு, மனநிலை பாதிப் புண்டாகும். சனி, செவ்வாய் சேர்க்கை அனுகூல மற்றிருந்தால் விபத்துகளை எதிர்கொள்ளும் நிலை, ரணகாயம், வெட்டுக்காயம், நெருப்பால் கண்டம் ஆகியவை உண்டாகும்.
சனி, சுக்கிரன் சேர்க்கை பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தால் கண்களில் நோய், ரகசிய உடல் உபாதைகள் உண்டாகும். சனி குரு சேர்க்கை பெற்று பலவீனமாக இருந்தால் வயிறு பாதிப்பு, குடல் தொடர்பான பாதிப்புகள் உண்டாகும். சனி புதன் போன்ற கிரகச்சேர்க்கை பெற்று பலமிழந்தால் நரம்பியல் பாதிப்புகள் உண்டாகும். சனி, ராகு- கேது சேர்க்கை பெற்று வலுவிழந்தால் விஷத்தால் கண்டம், உண்ணும் உணவே விஷமாகும் நிலை உண்டாகும். வலுவிழந்த சனியால் கட்டி, பித்த வாயு பாதிப்புகள் உண்டாகும். சனி, செவ்வாய் சேர்க்கை பெறுவதும், சனி, செவ்வாய்க்கு சமசப்தம ஸ்தானத்தில் அமைவதும், உடன் ராகு இருப் பதும் விபத்துகளை எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தும்.
7-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் பாவத்தைக் கொண்டு திருமணவாழ்க்கை, கூட்டுத்தொழில், நண்பர்கள் போன்றவற்றைத் தெளிவாகக் கூறமுடியும்.
கன்னி லக்னத்திற்கு களத்திர ஸ்தானமான 7-ஆம் வீடு குருவின்வீடான மீன ராசியாகும். உபய லக்னமான கன்னி லக்னத்திற்கு 7-ஆம் வீடு பாதக ஸ்தானமாகும். 7-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால், 7-ஆம் அதிபதி குரு திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும், 6, 8, 12-ல் மறைந்து காணப் பட்டாலும் மணவாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும். 7-ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமல், குரு மேற்கூறியவாறு அமையப் பெற்று சுபர்சேர்க்கையுடன் இருந்தால், நல்ல அழகிய வரன் அமைந்து சிறப்பான மணவாழ்க்கை உண்டாகும்.
குரு- செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகச்சேர்க்கை பெற்றிருந்தாலும் இளம்வயதில் திருமணம் நடக்கும். குரு சுபர் சேர்க்கையுடன் 7-ஆம் வீட்டையோ, சுக்கிரனையோ பார்வை செய்தால் இளம்வயதில் மணவாழ்க்கை உண்டாகும்.
7-ஆம் அதிபதி குரு தனக்கு நட்புகிரக மான சூரியன், சந்திரன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று, சுப ஸ்தானங்களில் அமையப் பெற்றால் சிறப்பான மணவாழ்க்கை, உறவில் திருமணம் நடைபெறும்.
சனி 7-ஆம் வீட்டையோ, குரு, சுக்கிர னையோ பார்வை செய்தால் திருமணம் தாமதமாகும். 7-ஆம் வீட்டில் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றால் அந்நியத்தில் திருமணம், மணவாழ்வில் மகிழ்ச்சிக்குறைவு உண்டாகும். 7-ஆம் வீட்டில் அமைந்த சனி, ராகுவின் தசை திருமணவயதில் நடைபெற்றால் மணவாழ்க் கையே கேள்விக் குறியாகிவிடும். 7-ஆம் வீட்டில் இரண்டுக்கும் மேற்பட்ட பாவிகள் இருப்பதும், குரு, சுக்கிரன் ஒருவருக் கொருவர் 6, 8-ல் இருப்பதும் மணவாழ்விற்கு நல்லதல்ல. குரு, சுக்கிரன் பலமாக இருந்து, சுபர் பார்வையுடன் பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வை இல்லாமலிருந்தால், நல்ல படித்த, பண்புள்ள பெண் மனைவியாகும் யோகமும், பெண்ணாக இருந்தால் பண்புள்ளவர் கணவராகும் வாய்ப்பும் உண்டாகும்.
குரு, சுக்கிரனுக்கு இருபுறமும் பாவிகள் அமைவதும், ஜென்ம லக்னத்திற்கு 6, 8-ல் பாவிகள் அமைவதும் மண வாழ்க்கைக்கு சிறப்பல்ல. பாவிகள் சூழ்ந்து காணப் பட்டால் வாழ்க்கைத்துணைக்கு தீராத நோய்கள் பல ஏற்படும்.
7-ஆம் அதிபதி குரு தேவகுரு. களத் திரக்காரகன் சுக்கிரன் அசுரகுரு. குரு, சுக்கிரன் இணைந்து பாவகிரகச் சேர்க் கையோ, பார்வையோ பெற்றால், தேவை யற்ற பெண்தொடர்புகள் ஏற்படுவது மட்டு மின்றி, மணவாழ்வில் பல்வேறு போராட்டங்களை சந்திக்கவேண்டி இருக்கும்.
கன்னி லக்னத்திற்கு 7-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத்தொழில் சாதகமாக அமைவதில்லை. கூடுமானவரை கூட்டுத்தொழில் செய்வதைத் தவிர்ப்பது உத்தமம். தனக்காரகன் குரு என்பதால் யாருக்காவது பணம் கொடுத்தால் அது எளிதில் திரும்பிவராது.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001