முனைவர் முருகு பாலமுருகன்
54
மீன லக்னம் 3-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்களைக் காணலாம்.
4-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக்கொண்டு வீடு, வாகனம், தாய், கல்வி, சுகவாழ்வு பற்றி அறியலாம்.
மீன லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி புதனும், வீடு, வாகனக்காரகன் சுக்கிரனும் பலம்பெறு வது சிறப்பான பலனைத் தரும். புதன் 4, 7-க்கு அதிபதியாகி, மீன லக்னம் உபய லக்னம் என்பதால்- புதன் பாதகாதிபதியாக விளங்குவதால், ஆட்சி, உச்சம் பெற்றால், சிறப்பான பலனைத் தருவதில்லை. கேந்திர ஸ்தானாதிபதி சுபராக இருந்து கேந்திரத்தில் பலம்பெற்றால்- வலிமையான கேந்திராதிபதி தோஷத்தை ஏற்படுத்துவதால்- புதன் மீன லக்னத்திற்கு 4, 7-ல் ஆட்சிபெறுவதைவிட திரிகோண ஸ்தானமான 5, 9-ல் அமைந்தால், அசையா சொத்து யோகத்தை எளிதில் அடையலாம். புதன் திரிகோண ஸ்தானங் களில் பலம்பெற்று, சுக்கிரன் கேந்திர- திரிகோணங்களில் அமைந்தாலும் வீடு, வாகன யோகமுண்டாகும். புதன்- சுக்கிரன், சனி போன்ற நட்பு கிரகச்சேர்க்கை பெற்று, குரு, சந்திரன் போன்ற சுபகிரகச்சேர்க்கை வலிமையுடன் பெற்று அமைந்தாலும், சுபர் பார்வை பெற்றாலும் வீடு, வாகன யோக முண்டாகும். 4-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமைவது, சந்திரனுக்கு 4-ஆம் அதிபதி பலம்பெறுவதன்மூலம் அசையா சொத்து யோகமுண்டாகும்.
செவ்வாய் பூமிகாரகன். மீன லக்னத்திற்கு மிகச்சிறந்த யோகக்காரகனான செவ்வாய், 4-ஆம் அதிபதி புதன் சேர்க்கை பெற்றாலும், சுபகிரகச்சேர்க்கை பெற்று ஆட்சி, உச்சம் பெற்றோ, கேந்திர- திரிகோணங்களிலோ அமைந்தாலும் பூமி யோகம், மனை யோகம் உண்டாகும்.
சுக்கிரன் வாகனத்திற்குக் காரகன் என்பதால்- கேந்திர- திரிகோணங்களில் வலிமையாக அமைந்தால் வாகன யோகம், நவீன அசையும் சொத்துகள் உண்டாகும். சனி- புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று வலிமையாக அமைந்தால், அமைகிற அசையா சொத்துகள் பழமையானதாக- அதாவது பழைய வீட்டை வாங்கும் அமைப்பு, கட்டிய வீட்டை வாங்கி அனுபவிக்கும் வாய்ப்பு, பழைய வாகனங்களை வாங்கி உபயோகிக்கும் அமைப்புண்டாகும்.
4-ஆம் அதிபதி புதன், சுக்கிரன் பலமிழந்து, 4-ல் பாவகிரகங்கள் அமைந்தால், சொந்த வீடு யோகம் அமைய இடையூறுகள் உண்டாகும். மீன லக்னத்திற்கு சூரியன் 6-ஆம் அதிபதி என்பதால், 4-ல் சூரியன் அமைந்தாலும், புதன், சூரியன் சேர்க்கை பெற்றிருந்தாலும் அசையா சொத்துவகையில் வம்பு, வழக்குகள் உண்டாகும். புதன்- சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெற்று, சூரியனும் வலிமையாக இருந்தால், பூர்வீகவழியில் அசையா சொத்து யோகமுண்டாகும். புதன், சுக்கிரன் இணைந்து வலிமையாக அமைந்து, குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்றால், மனைவி மற்றும் பெண்கள்வழியில் அசையா சொத்து யோகம் கிட்டும்.
புதன் பலமாக அமைந்து, தாய்க்காரகன் சந்திரன் கேந்திர- திரிகோணங்களில் பலம்பெற்று அமைந்தால், தாய்க்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும். புதன், சந்திரனுக்கு 4-ஆம் அதிபதி பலமாக அமைந்தால் தாய்க்கு நற்பலன் உண்டாகும். 4-ஆம் வீட்டில் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் அமைவதும், சந்திரனின் வீடான கடகத்தில் சனி, ராகு போன்ற பாவிகள் அமைவதும் தாய்க்கு நல்லதல்ல. தாய்க்குக் கண்டம், தாய்வழியில் நிம்மதியில்லாத அமைப்பு உண்டாகும். மிதுனம், கடகத்தில் பாவிகள் அமைந்தால், தாய்வழி உறவினர் வகையில் பகையுண்டாகும். புதன், சந்திரன் பலமிழந்து 6, 8, 12-ல் அமைந்தாலும், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும் தாய்க்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும். ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் வீட்டைக் கொண்டு கல்வி யோகத்தை அறியலாம். கல்விக்காரகன் புதனே மீன லக்னத்திற்கு 4-ஆம் அதிபதியாக விளங்குவதால்- புதன் பலமாக ஆட்சி, உச்சம் பெற்று, குரு போன்ற சுபகிரகப் பார்வையுடன் இருந் தால், கல்வியில் சாதனைகள் செய்யக்கூடிய அதிர்ஷடம் உண்டாகும். 4-ஆம் அதிபதி புதன் என்பதால், கணக்கு, கம்ப்யூட்டர், ஆடிட்டிங் போன்ற துறைகளில் கல்வி கற்கக்கூடிய ஆர்வம் உண்டாகும். புதன்- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்றாலும், 4-ல் சூரியன், செவ்வாய் இருந்தாலும் பொறியியல் தொடர்புடைய கல்வி உண்டாகும். 4-ல் சந்திரன், ராகு- கேது அமைந்தாலும், புதன்- சந்திரன், ராகு- கேது சேர்க்கை பெற் றாலும் மருத்துவத்தொடர்புடைய கல்வி உண்டாகும். 4-ல் குரு அமைந்தாலும், புதன், குரு சேர்க்கை பெற்றாலும் கல்வியில் சிறந்து விளங்கி ஆசிரியர், பேராசிரியர் என கல்வித்துறையில் பிரகாசிக்கமுடியும். புதன்- குரு, செவ்வாய் சேர்க்கைபெற்றால், நிர்வாகத்தொடர்புடைய கல்வி கற்கக்கூடிய யோகம் உண்டாகும். புதன்- சனி சேர்க்கை பெற்றால், தொழில்நுட்பக்கல்வி கற்கநேரிடும்.
புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்றால், நல்ல அறிவாற்றலும், எதையும் விவாதம் செய்யக் கூடிய வல்லமையும், கலைத்தொடர்புடைய கல்வியும் உண்டாகும்.
4-ஆம் அதிபதி புதன், பாவிகள் சேர்க்கை பெற்று வலுவிழந்தாலும், வக்ரம் பெற்றாலும், 4-ல் பாவிகள் அமைந்தாலும் கல்வியில் தடை, இடையூறுகள், எதையும் அரைகுறையாகக் கற்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 4-ஆம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்வை செய்தால், கல்வியில் இடையூறுகள், கற்ற கல்வியை முழுமையாகப் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உண்டாகும். 4-ஆம் வீட்டை குரு போன்ற சுபர் பார்வை செய்வதும், புதனுக்கு குரு பார்வையிருப்பதும் தடையின்றி கல்வியில் மேன்மையடையும் யோகத்தை உண்டாக்கும். புதன், சூரியன் சேர்க்கை பெற்று புதாதித்திய யோகம் உண்டானால், கல்வியில் சாதனைகள் செய்யக் கூடிய ஆற்றல் ஏற்படும். 2, 4, 5 ஆகிய பாவங் களில் பாவகிரகங்கள் இல்லாமல், 4-ஆம் அதிபதி புதனும், 5-ஆம் அதிபதி சந்திரனும் பலமாக அமைந்து, சுபர் பார்வையுடன் இருந்தால், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு என உயர்கல்வி பயிலும் யோகமிருக்கும்.
5-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவத்தைக் கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர்கல்வி யோகம் போன்றவற்றை அறியலாம்.
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு, புத்திர ஸ்தானமான 5-ஆம் வீட்டின் அதிபதி சந்திரன் கேந்திர- திரிகோண ஸ்தானங் களில் அமைந்து, லக்னாதிபதியும் புத்திர காரகனுமான குரு பலமாக அமைந்தால், புத்திரவழியில் மகிழ்ச்சியான பலன்கள் உண்டாகும்.
குரு வலுப்பெற்று, ஆண் கிரகங்களான சூரியன், செவ்வாய் 5-ஆம் வீட்டில் வலுவாக அமைந்தாலும், 5-ஆம் அதிபதியுடன் இணைந்திருந்தாலும் ஆண் குழந்தை யோகம் உண்டாகும். 5-ஆம் அதிபதி சந்திரன் பெண் கிரகம் என்பதால், பெண் குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டு. சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்று 5-ல் பலமாக இருந்தாலும், சுக்கிரன், சந்திரன் கேந்திர- திரிகோண ஸ்தானங்களில் வலுவாக இருந்தாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். சந்திரன், சுக்கிரன் பலமாக இருந்து, சூரியன், செவ்வாய், குரு போன்ற ஆண் கிரகங்களும் பலமாக இருந்தால், சத்புத்திர (ஒரு ஆண், ஒரு பெண்) பாக்கியம் உண்டாகும்.
5-ஆம் வீட்டில் சனி, புதன், ராகு- கேது அமைவது, 5-ஆம் பாவத்திற்கு இருபுறமும் பாவிகள் இருப்பது, சந்திரனுக்கு 5-ஆம் வீட்டில் பாவிகள் அமைவது போன்றவை புத்திர தோஷமாகும். குரு வீடான தனுசு, மீனத்தில் சனி, ராகு அமைந்தால், புத்திரவழியில் அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். தனுசு, மீனத்தில் பாவகிரகங்கள் அமைவதும், குரு வக்ரம் பெறுவதும், பாவிகள் சேர்க்கை பெறுவதும், பாவிகளுக்கிடையே அமைவதும் புத்திர தோஷமாகும்.
5-ஆம் வீட்டைக்கொண்டு பூர்வீகவழியில் ஏற்படக்கூடிய பலன்களை அறியலாம். 5-ல் பாவிகள் அமையாமல், 5-ஆம் அதிபதி சந்திரன், செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் பலமாக அமைந்தால், பூர்வீகவழியில் அனுகூலப்பலன்களை அடையலாம். 5-ஆம் அதிபதி சந்திரனாக இருப்பதால், சந்திரன்- குரு, கேது சேர்க்கை பெற்று 5-ல் பலமாக இருந்தால், பல்வேறு பொதுநலப் பணிகளில் ஈடுபடுதல், ஆன்மிகம், தெய்வீகக் காரியங்களில் ஈடுபடும் யோகம், பலருக்கு உதவி செய்யக்கூடிய பண்புண்டாகும்.
5-ஆம் பாவத்தைக்கொண்டு உயர்கல்வி கற்கக்கூடிய யோகத்தையும் அறியலாம். 5-ஆம் அதிபதி சந்திரன் பலம் பெற்று, 5-ல் பாவிகள் இல்லாமலிருந்தால், உயர்கல்வி ரீதியான சாதனைகள் செய்யக்கூடிய பலன் உண்டாகும்.
6-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் வீட்டைக் கொண்டு ருணம், ரோகம், பகை, வம்பு, வழக்கு போன்றவற்றை அறியலாம்.
மீன லக்னத்திற்கு 6-ஆம் அதிபதி சூரியன் என்பதால், உஷ்ணம் சம்பந்தப்பட்ட உடல் பாதிப்புகள் உண்டாகும். 6-ல் சூரியன், செவ்வாய் அமைந்தால், உஷ்ண நோய்கள், கண்களில் பாதிப்பு ஏற்படும். சூரியன், செவ்வாய் பலமிழந்திருந்தாலும், பாவிகள் பார்வை பெற்றாலும் இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். 6-ல் சந்திரன் இருந்தாலும், சூரியன் சேர்க்கை பெற்று மறைவு ஸ்தானங்களில் அமைந்தாலும் நீர்த் தொடர்புடைய உடல்பாதிப்புகள், குழப்பம், உணவே விஷமாகும் அமைப்புண்டாகும்.
6-ல் செவ்வாய் அமைந்தால், ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள்- அதிலும் சனி, ராகு சேர்க்கை பெற்றிருந்தால், விபத்துகளை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். 6-ல் புதன் அமைந்தாலும், சூரியனுக்கு மிக அருகில் அமைந்து பலவீனமாக இருந்தாலும் நரம்புத்தளர்ச்சி, ஞாபகக்குறைவு, கைகால்களில் வலி உண்டாகும். 6-ல் குரு அமைந்தாலும், சூரியன் சேர்க்கை பெற்று பலவீனமாக இருந்தாலும் குடலிறக்கம், வயிறு பாதிப்பு, வாயுத் தொல்லைகள், கருப்பை பிரச்சினை உண்டாகும்.
சுக்கிரன் 6-ல் அமைந்தாலும், சூரியனுக்கு மிக அருகில் சுக்கிரன் அமைந்து அஸ்தங்கம் அடைந்திருந்தாலும் ரகசிய நோய்கள், சர்க்கரை வியாதி, இல்லற வாழ்வில் பாதிப்புண்டாகும். 6-ஆம் வீட்டில் சனி அமைந்தாலும், சூரியன், சனி சேர்க்கை பெற்று பலவீனமாக இருந்தாலும் உடல் பலவீனம், வாதம், பித்தம், உடலில் குறைபாடுகள் இருக்கும். ராகு 6-ல் அமைந்தால் ரணம், ரத்தம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள், தோல் வியாதி உண்டாகும். கேது 6-ல் அமைந்தால், வாயு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். 6-ஆம் வீட்டையும், 6-ஆம் அதிபதி சூரியனையும் குரு பார்த்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் எளிதில் குணமாகிவிடும்.
6-ஆம் பாவத்தைக்கொண்டு ஒருவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளை அறியலாம். 6-ல் சூரியன் ஆட்சிபெற்று சஞ்சரித்தாலும், சுபர் பார்வையுடன் அமைந்தாலும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை இருக்கும். 6-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமைந்தால், தனிப்பட்டமுறையில் வரும் எந்தப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை இருக்கும். என்றாலும், சூரியன் வீட்டில் சனி, ராகு அமைவதால், தந்தையிடமும், தந்தைவழி உறவினர்களிடமும் பகை உண்டாகும்.
6-ஆம் வீட்டை சனி போன்ற பாவிகள் பார்வை செய்தால், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சுபர் பார்வையின்றி, 6-ல் சனி, ராகு அமைந்தாலும், சூரியன் பலவீனமாக இருந்தாலும், எதிர்ப்புகள், சட்டச்சிக்கல்கள், அரசாங்க தண்டனைக்கு ஆளாகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சூரியன் பாவகிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும், ராகுவுக்கு மிக அருகில் அமைந்தாலும் வம்பு, வழக்குகள், விரோதம் உண்டாகும். 6-ஆம் பாவம் கடன்களுக்குரிய ஸ்தானம் என்பதால்- சூரியன் பாவிகளால் சூழப்பட்டு பலவீனமாகக் காணப்பட்டால், நிறைய கடன்கள் வாங்கி அதை அடைக்கமுடியாத அளவுக்கு நெருக்கடிகள் உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001