மேஷ லக்னத்தில் பிறந்தவர் களின் 1, 2-ஆம் பாவங்கள் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். மற்ற பாவங்கள் குறித்து இங்கு காணலாம்.

3-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

Advertisment

ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீட்டின் மூலம் சுய முயற்சி, இளைய சகோதர அமைப்பு, வீரம், விவேகம், வீரியத் தன்மை பற்றி அறிய முடியும்.

இளைய சகோதர பாவமாக விளங்கும் 3-ஆம் வீட்டில் சகோதரக் காரகன் செவ்வாய்- ஆண் கிரகங்களான சூரியன், குரு சேர்க்கைப் பெற்று பாவ கிரகப் பார்வையின்றி 3-ல் இருந்தாலும், 3-ல் உள்ள செவ்வாயை சூரியன், குரு பார்வை செய்தாலும் இளைய சகோதர அமைப்பும், அவர்களால் அனுகூலமும் உண்டாகும்.

12

Advertisment

மூன்றாம் வீட்டதிபதி புதன், சந்திரன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்றாலும், 3-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் இருந்தாலும் இளைய சகோதரி யோகம் உண்டாகும்.

புதன், சுக்கிரன் இணைந்து 3-ல் இருந்தாலும், செவ்வாயுடன் இணைந் திருந்தாலும், செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று சிம்மம், மிதுனம், தனுசு இவற்றில் அமையப்பெற்றாலும் உடன்பிறப்புகளுடன் இணைந்து தொழில் செய்யும் அமைப்பு, சகோதரர்களால் பொருளாதார மேன்மைகளை அடையும் வாய்ப்பு உண்டாகும்.

3-ஆம் வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், 3-ஆம் வீட்டு அதிபதியுடன்- அதாவது புதனுடன் சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், சகோதரக் காரகன் செவ்வாய் வக்ரம் பெற்றாலும் இளைய சகோதரம் இல்லாத நிலை உண்டாகும். செவ் வாய்- சனி, கேது சேர்க்கைப் பெற்றாலும், சனி பார்வை செவ்வாய்க்கு இருந்தாலும் உடன்பிறப்புகளை இழக்க நேரிடும்.

Advertisment

செவ்வாய் பாவகிரகச் சேர்க்கையின்றி பகை, நீசம் பெறாமல் இருந்தால் உடன்பிறப்புகள் உதவியால் ஜாதகரும், உடன்பிறப்புகளும் சமுதாயத்தில் வலுவான நிலையை அடைவார்கள்.

செவ்வாய் அல்லது புதன், சனி, ராகு சேர்க்கைப் பெற் றால் சகோதரர்களுடன் பகைமை, தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாகும். புதன், செவ்வாய் பாவ கிரகச் சேர்க்கைப் பெற்று 6-ஆம் வீட்டில் அமையப் பெற்றால் உடன்பிறப்பு வகையில் வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும்.

முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சூரியன், சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்று சுபகிரகப் பார்வையுடன் இருந்தால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சொந்த முயற்சியால் முன்னுக்கு வரும் வாய்ப்பு, எதிலும் தனித்து விளங்கும் அமைப்பு உண்டாகும்.

ஆண்கள் ஜாதகத்தில் 3-ஆம் அதிபதி புதன், சூரியன், குரு பலமாக இருந்தால் வீரியத் தன்மை சிறப்பாக இருக்கும். புதன் வக்ரம் பெற்று சூரியன், குருவும் பலமிழந்திருந்தால் ஆண்மைக் குறைபாடு ஏற்படும்.

3-ஆம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் இருந்தால் கலை, இசை, நடனம், நாட்டியம் போன்றவற்றால் அனு கூலங்கள் உண்டாகும்.

4-ஆம் பாவம் (மேஷ லக்னம்)

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக்கொண்டு தாய், வீடு, வாகனம், கல்வி யோகத்தைப்பற்றி தெள்ளத்தெளிவாகக் கூறலாம்.

தாய்க்காரகன் சந்திரனே மேஷ லக்னத் திற்கு 4-ஆம் வீட்டதிபதி என்பதால் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கைப் பெற்றாலும் தாய்க்கு நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம் உண்டாகும். சந்திரன் தனக்கு நட்பு கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு சேர்க்கைப் பெற்றாலும், சாரம் பெற்றாலும் தாய்க்கு நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும்.

சந்திரன் 6, 8, 12-ல் இருந்தாலும், சனி, ராகு, கேது சேர்க்கைப் பெறுவதும், சந்திரனின் வீடான கடக ராசியில் சனி அல்லது ராகு அமைவதும் அவ்வளவு சிறப்பு என்று கூறமுடியாது. இதனால் தாய்க்குக் கண்டம் உண்டாகும்.

சந்திரன் குரு, சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர, திரிகோணத்தில் அமையப்பெற்றாலும் மற்ற வர்கள் பார்த்து வியக்குமளவிற்கு ஆடம்பரமான வண்டி, வாகன யோகம் உண்டாகும். சந்திரன் வலுப்பெற்று சனி சேர்க்கைபெற்றால் பழைய வண்டிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.

சுக்கிரன், சந்திரன் வலுப்பெற்று பாவிகள் பார்வை பெற்றிருந்தால் சிலகாலம் சொந்த வண்டியைப் பயன்படுத்தும் வாய்ப்பும், சிலகாலம் மற்றவர்களின் வண்டியை உபயோ கிக்கும் நிலையும் உண்டாகும்.

சுக்கிரனுடன் சுபகிரகம் இருந்தாலும், பாவிகள் பார்வை இல்லாமல் இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் 4-ஆம் அதிபதியுடன் சேர்க்கை பெற்றிருந்தால் வாகனங் களில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

4-ஆம் அதிபதி சந்திரன் கேந்திர, திரிகோண ஸ்தானத்தில் இருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்று குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்றாலும் அழகான, ஆடம்பரமிக்க வீடு யோகம் உண்டாகும்.

சந்திரனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தால் ஆலயம் அமைக்கும் பணி, தர்ம சத்திரங்கள் கட்டும் வாய்ப்பு, சந்திரன் வலுவாக இருந்தால் கலைநயம் மிகுந்த வீட்டைக் கட்டும் அமைப்பு, புதன் சேர்க்கை பெற்றிருந்தால் பழங்காலத்து வீட்டை சித்திர வேலைப்பாட்டுடன் புதுப் பிக்கும் அமைப்பு உண்டாகும்.

சந்திரனுடன் சூரியன், செவ்வாய் இணைந்து சுபர் பார்வையுடன் இருந் தால் பூமி, மனை யோகம் அமையும்.

அரசுவழியில் கிடைக்கும் வீடு, மனை யுடன் வாழும் யோகம் உண்டாகும்.

பாவிகள் பார்வை, சந்திரன், சூரியன், செவ்வாய் சேர்க்கை இருந்தாலும், சந்திரன்- ராகு, கேது சேர்க்கைப் பெற்றாலும் பாழடைந்த பழைய வீடுகளில் வாழும் சூழ்நிலை அமையும். சந்திரன்- ராகு, கேது சேர்க்கை பெற்று சனி பார்வை பெற்றால் சொந்த வீடு யோகம் அமைவதில்லை.

4-ல் பாவிகள் இருந்தாலும், பார்வை செய்தாலும் சொந்த வீடு இருந்தும் மற்றவர்கள் வீட்டில் வாழும் சூழ்நிலை உண்டாகும். புதன் 4-ல் இருந்தால் சொத்துகள்மூலமாக கடன்கள், தேவையற்ற வம்பு வழக்குகளை சந்திக்க நேரிடும்.

சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர, திரிகோணத்தில் சுபகிரகச் சேர்க்கையுடன் பாவிகள் பார்வை பெறாமல் அமைந்து, கல்விக் காரகன் புதனும் பலமாக அமையப்பெற்றால் நல்ல புத்திசாலித்தனமும், பல்வேறு வித்தை களைக் கற்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும்.

சந்திரனுக்கு சூரியன், செவ்வாயின் தொடர்பு இருந்தால் நல்ல நிர்வாகத்திறனுடன் அரசு, அரசு சார்ந்த துறைகளில் உயர்பதவிகளை வகிக்கும் ஆற்றல் தரும் கல்வியைக் கற்கும் வாய்ப்பு அமையும். சந்திரனுடன் குரு சேர்க்கை பெற்றால் நல்ல அறிவாற்றலுடன் மற்றவர்களை வழிநடத் தக்கூடிய கல்வி கற்கும் வாய்ப்பு அமையும்.

சந்திரனுடன் புதன் இணைந்திருந்தால் தமிழ் மொழியில் வல்லமை, கணக்கு, கம்ப் யூட்டர் சம்பந்தப்பட்ட கல்வியும், செவ்வாய் சந்திரனுடன் இணைந்திருந்தால் நிர்வாகத்திறமை, தெலுங்கு மொழிக் கல்வியும், சுக்கிரனுடன் இணைந்திருந்தால் கட்டடத்துறை சம்பந்த மான கல்வியும், கலை, சினிமா, ஜோதிடம் போன்றவற்றில் ஈடுபாடும் கொடுக்கும்.

சந்திரனுடன் சனி இணைந்திருந்தால் கப்பல் துறையில் பணிபுரிவதற்கான கல்வி, உணவு வகை சம்பந்தப்பட்ட கல்வி, சந்திரனுடன் ராகு சேர்ந்தால் ரசாயனம் தொடர்புள்ள கல்வி, கேது இருந்தால் மருத்துவத் தொடர்புடைய கல்வி கற்கும் வாய்ப்பு அமையும்.

செல்: 72001 63001