மீன லக்னம் 10-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்களைக் காணலாம்.

11-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 11-ஆம் பாவத்தைக்கொண்டு தனலாபம், நட்பு, மூத்த உடன்பிறப்புகள் போன்றவற்றை அறியலாம்.

மீன லக்னத்திற்கு லாபாதிபதி சனி கேந்திர- திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமைந்து, லக்னாதிபதியும், தனகாரகன் குருவும் பலமாக அமைந்தால், தாராள தனவரவு, பொருளாதாரரீதியான மேன்மைகள் உண்டாகும். சனி தனக்கு நட்பு கிரகங்களான புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுவிழக்காமல் அமைந் தால், பொருளாதாரரீதியான மேன்மைகள், எதிலும் லாபம் உண்டாகும். சனி நீசம் பெற்றோ, வக்ரம் பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ, பகை பெற்றோ, ராகு போன்ற பாவகிரகச் சேர்க்கை பெற்றோ இருந்தால், பணவரவில் தடை, இடையூறுகள் ஏற்படுவதோடு, செய்யும் தொழிலில் லாபங்களை அடையத் தடைகள் உண்டாகும்.

Advertisment

dd

11-ஆம் வீடு மூத்த உடன்பிறப்பு ஸ்தானமாகும். 11-ஆம் அதிபதி சனி அலிகிரகம் என்பதால், மூத்த உடன்பிறப்புக்கு தோஷத்தைக் கொடுக்கும். 11-ஆம் வீட்டில் சகோதரகாரகன் செவ்வாய் உச்சம் பெற்றிருந்தாலும், சனி- செவ்வாய், சூரியன், குரு போன்ற கிரகச் சேர்க்கை, பார்வை பெற்று அமைந்தாலும், செவ்வாய், சூரியன், குரு போன்ற கிரகங்கள் 11-ல் அமைந்தாலும் மூத்த ஆண் உடன்பிறப்பு உண்டாகும் வாய்ப்பு- அதன்மூலம் அனுகூலம் ஏற்படும். 11-ல் சுக்கிரன், சந்திரன் அமைந்தாலும், சனி- சுக்கிரன், சந்திரன் சேர்க்கை பெற்றாலும், சுக்கிரன், சந்திரன் வீடுகளில் அமைந்தாலும் மூத்த பெண் உடன்பிறப்பு உண்டாகும் வாய்ப்பு- அதன்மூலம் அனுகூலம் ஏற்படும்.

11-ல் ராகு அமைந்தோ, 11-ஆம் அதிபதி சனி, ராகு- கேது சேர்க்கை பெற்றோ, ராகு- கேது சாரம் பெற்றோ அமைந்தாலும், சனி பலவீனமாக இருந்தாலும் மூத்த உடன்பிறப்பு இருக்காது. சனி, குரு சேர்க்கை பெற்று பலமாக இருந்து, செவ்வாயும் பலமாக இருந்தால், மூத்த உடன்பிறப்புமூலமாக தொழில்ரீதியான லாபப் பலன்கள், பொருளாதார மேன்மைகள் உண்டாகும். 11-ஆம் வீட்டை குரு பார்வை செய்து, சனியும் பலமாக அமைந்தால், நண்பர்கள்மூலமாக சாதகப் பலன்கள் உண்டாகும்.

Advertisment

12-ஆம் பாவம்

ஜென்ம லக்னத்திற்கு 12-ஆம் வீட்டைக்கொண்டு விரயங்கள், கட்டில் சுகம், தூக்கம், மோட்சம் போன்றவற்றை அறியலாம்.

மீன லக்னத்திற்கு 12-ஆம் அதிபதி சனி, சுபர் சேர்க்கை பெற்று, சுபர் பார்வை யுடனிருந்து, 12-ல் பாவிகளின்றி இருந்தால், சுபச்செலவுகளாக இருக்கும். 12-ஆம் அதிபதி சனி, ராகு சேர்க்கை பெற்றுப் பலமிழந்திருந்தாலும், வக்ரம் பெற்றிருந்தாலும் வீண்விரயங்கள் ஏற்படுவது மட்டுமன்றி, மது, மங்கை போன்ற பழக்கவழக்கங் களால் வீண்செலவுகள் உண்டா கும். 12-ஆம் வீட்டையும், சனியையும் குரு பார்வை செய்தால், செலவுகள் சுபச்செலவுகளாகவும், பயனுள்ள செலவுகளாகவும் இருக்கும்.

சனி, சுபர் சேர்க்கை பெற்று, 12-ஆம் வீட்டை பாவிகள் பார்க்காமல் சுபர் பார்த்தால், நிம்மதியான உறக்கம், அதன்மூலம் ஆரோக்கியம் உண்டாகும். களத் திரகாரகன் சுக்கிரன் சாதகமாக- பலமிழக்காமலிருந்தால் கட்டில் சுகவாழ்வு சிறப்பாக இருக்கும்.

12-ஆம் வீட்டைக்கொண்டு இடது கண்ணைப் பற்றியும் அறியலாம். சனி, பாவிகள் சேர்க்கை பெற்று 12-ல் இருந்தாலும், 6-ல் பாவிகள் அமைந்து, பாவிகள் பார்வை செய்தாலும் இடது கண் பாதிக்கும். 12-ல் பாவகிரகங்கள் அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெற்றால், கண்களுக்கு சிகிச்சை எடுக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

12-ஆம் வீடு, வெளிநாட்டு யோகத்தை ஏற்படுத்தக்கூடிய ஸ்தானமாகும். 12-ஆம் அதிபதி சனி, 9-ஆம் அதிபதி செவ்வாய், 10-ஆம் அதிபதி குரு சேர்க்கை பெற்றாலும், செவ்வாய் அல்லது குருவுடன் பரிவர்த்தனை பெற்றாலும், 12-ல் சந்திரன், ராகு அமைந்து, அதன் தசை நடைபெற்றாலும் வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்பு அமையும்.

(முற்றும்)

செல்: 72001 63001