முனைவர் முருகு பாலமுருகன்
45
மகர லக்னம் 4-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.
5-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவத்தைக்கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர்கல்வி யோகம் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.
மகர லக்னத்தில் பிறந்தவர் களுக்கு, 5-ஆம் அதிபதி சுக்கிரன் தனக்கு நட்பு கிரகமான சனி, புதன் சேர்க்கை பெற்றிருந்தாலும்; சுபகிரக மான குரு பார்வை பெற்று பலமுடன் காணப்பட்டாலும் பூர்வீக சொத்துவகையில் அனுகூலங்கள் ஏற்படும். சுக்கிரன்- செவ்வாய், புதன் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் பலமாகக் காணப்பட்டால் பூர்வீகவழியில் அசையா சொத்துச் சேர்க்கை, பூமியோகம், மனையோகம் உண்டாகும்.
5-ஆம் வீட்டில் சூரியன், சனி, ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும்; சுக்கிரன் பலமிழந்து 5-ஆம் வீட்டைப் பாவிகள் பார்வை செய்தாலும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற பலனைத் தரும்.
மகர லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி சுக்கிரன் என்பதால், முதலில் பெண் குழந்தை பிறக்கும் யோகம் வலுவாக இருக்கும். சுக்கிரன் ஆட்சிபெற்றிருந்தாலும்; சந்திரன் சேர்க்கை பெற்றிருந்தாலும் பெண் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும். குரு பலம்பெற்றிருந்து, சுக்கிரன், சந்திரன் பலம்பெற்றால் பெண் குழந்தைதான் பிறக்கும்.
புத்திரகாரகன் என வர்ணிக்கப்படக்கூடிய குரு பலம் பெற்று, ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும்; குருவும் சுக்கிரனும் ஆண் கிரகங்களின் வீடான மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் போன்றவற்றில் அமையப் பெற்றாலும் ஆண் குழந்தை பிறக்கும் யோகம் உண்டாகும்.
5-ல் ஆண்- பெண் கிரகங்கள் இணைந்து அமையப் பெற்றால் ஆண், பெண் குழந்தை யோகம் உண்டாகும். 5-ஆம் வீட்டில் சனி, புதன், ராகு, கேது போன்ற அலி கிரகங்கள் அமையப்பெற்றால் கடுமையான புத்திர தோஷம் உண்டாகும்.
குரு, சுக்கிரன் இருவரும் பலமிழந்திருந்தாலும்; வக்ரம் பெற்றாலும்; ராகு- கேது சாரம் பெற்றாலும்;
பாவிகளுக்கிடையே அமையப்பெற்றாலும் புத்திர பாக்கியத் தடை உண்டாகும். (புத்திர தோஷம் உண்டாகும்). புத்திர காரகன் குரு வீடான தனுசு, மீனத்தில் பாவிகள் இருப்பதும் நல்லதல்ல.
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் இடம் எப்படி பலமாக இருக்கவேண்டுமோ, அப்படி சந்திரனுக்கு 5-ஆம் வீடும் பலம்பெறுவது நல்லது. சந்திரனுக்கு 5-ஆம் வீட்டில் பாவிகள் அமைவது புத்திர தோஷமாகும். 5-ஆம் வீட்டில் சுபகிரகங்கள் அமைவதும்; குரு- சுக்கிரன் இருவரும் கேந்திர, திரிகோணங்களில் சுபகிரகச் சேர்க்கை பெற்று வலுவாக அமைவதும் புத்திர வழியில் எல்லாவகையிலும் ஏற்றங்களை உண்டாக்கும். பெண்கள் ஜாதகம் என்றால்- குழந்தை பாக்கியத்திற்கு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதுபோல 9-ஆம் வீட்டையும் பார்க்கவேண்டும்.
5-ஆம் அதிபதி சுக்கிரன், புதன், குரு போன்ற கிரகச் சேர்க்கைப் பெற்று வலுவாக அமைந்தால் நல்ல அறிவாற்றல், உயர்கல்விரீதியாக சாதனை செய்யும் அமைப் புண்டாகும்.
6-ஆம் பாவம்
லக்னத்திற்கு 6-ஆம் பாவத்தைக்கொண்டு எதிர்ப்பு, நோய், கடன் பற்றித் தெளிவாக அறியலாம்.
6-ஆம் வீடு உபஜய ஸ்தானம் என்பதால், பாவகிரகங்கள் அமைவது அனுகூலமான அமைப்பாகும். 6-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்து, சுபர் பார்வை பெற்றால் எதிரிகளை வெல்லக்கூடிய அமைப்பு ஏற்படும். லக்னாதிபதி சனிக்கு சூரியன், செவ்வாய் பகை கிரகம் என்பதால், 6-ல் சூரியன், செவ்வாய் அமைந்தால் பிரச்சினைகளை சந்தித்தாலும் எதிரிகளை வெல்லும் அமைப் புண்டாகும். சுபர் பார்வை 6-ஆம் வீட்டிற்கு இருந்தால் எதிரிகள் தொல்லையின்றி நிம்மதி யான வாழ்க்கை உண்டாகும்.
6-ஆம் அதிபதி புதன் ஆட்சி, உச்சம் பெற்றோ; சனி, சுக்கிரன் போன்ற நட்பு கிரகச் சேர்க்கை பெற்றோ; சுபகிரகமான குரு சேர்க்கையோ, பார்வையோ பெற்றிருந்தால் சிறப்பான உடலமைப்பு, நல்ல ஆரோக்கியம், எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.
6-ஆம் அதிபதி புதன் என்பதால், பொதுவாக மாமன்வழியில் எதிர்ப்புகள் இருக்கும். 6-ஆம் அதிபதி பலமிழந்து கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால் அக்கிரகத்தின் இயல்பிற்கேற்ப எதிர்ப்புகள் உண்டாகும்.
6-ஆம் வீட்டில் பாவிகள் அமைவதும்; 6-ஆம் அதிபதி பாவகிரகச் சேர்க்கை பெற்று பலமிழந்து 6, 8, 12-ல் அமைவதும் ஆரோக்கிய பாதிப்புகளை உண்டாக்கும். 6-ஆம் அதிபதி புதன் என்பதால் நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். புதன்- சூரியன் சேர்க்கை பெற்றிருந்தால் உஷ்ண நோய், கண்களில் பாதிப்பு, இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள்; புதன்- சந்திரன் சேர்க்கை பெற்று பலமிழந்தால் நீர்த்தொடர்புள்ள பாதிப்புகள், காசநோய்; 6-ல் செவ்வாய் பலமிழந்தால் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள், வெட்டுக்காயம், சிறுநீரகக் கோளாறு, உஷ்ண நோய்கள்; குரு பலமிழந்தால் வயிற்றுக் கோளாறு, வாயுத் தொல்லை, குடலிறக் கக் கோளாறு; சுக்கிரன் பலமிழந்தால் சர்க்கரை வியாதி, மர்ம ஸ்தானங் களில் நோய்; சனி 6-ல் பலமிழந்தாலும், புதன் சேர்க்கை பெற்றாலும் பித்தம், வாதம், எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள்; ராகு 6-ல் பலமிழந் தால் ரணம், ரத்தம், குஷ்டம், தோல் சம்பந்தப் பட்ட பாதிப்புகள், விஷத்தால் கண்டம்; 6-ல் கேது அமைந்தால் சித்தப் பிரமை, வலிப்பு நோய், ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.
6-ஆம் அதிபதி புதன், சனி, சுக்கிரன், குரு போன்ற கிரகச்சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் பலமாக அமைந்தால் கடன்களில்லாத அமைப்பு; அப்படியே கடன்கள் ஏற்பட்டாலும் கடன்களை அடைக் கக்கூடிய வலிமை ஏற்படும். 6-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்றாலும்; 6-ஆம் வீட்டைப் பாவிகள் பார்த்தாலும் தீராக் கடன் ஏற்படும். 6-ல் அமையும் கிரகங்கள் பலமிழந்திருந்தாலும்; 6-ஆம் அதிபதி சேர்க்கை பெறும் கிரகம் பலமிழந்திருந்தாலும் அக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில் தீராக் கடன் உண்டாகும்.
7-ஆம் பாவம்
ஏழாம் வீட்டைக்கொண்டு ஒருவருடைய மணவாழ்க்கை, கூட்டுத்தொழில் போன்றவற்றைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன் கேந்திர, திரிகோணங்களில் அமைந்து, குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்றால் மணவாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்கும். சுக்கிரனும் பலத்துடன் அமைந்து சுபர் பார்வை பெற்றால் மணவாழ்க்கை சிறப் பாக இருக்கும். 7-ஆம் அதிபதி சந்திரன் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன் போன்ற கிரகச் சேர்க்கை பெறு வதும்; தனக்கு நட்பு கிரகமான சூரியன்- செவ்வாய், குரு போன்றவர்களின் வீடுகளில் கிரகச் சேர்க்கையின்றி அமைவதும் அற்புத மான அமைப்பாகும்.
சந்திரன் ரிஷபத்தில் உச்சம் பெற்றால் ஏற்றம், உயர்வைத் தரும். மகர லக்னத்தைப் பொருத்தவரை சந்திரன் விருச்சிகத்தில் அமைந்து நீசம் பெற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்காது. பலமான நீசபங்க ராஜயோகம் இல்லையென்றால், அவர்களது வாழ்க்கை சிறிதுகூட சாதகமில்லாமல் அமைந்துவிடும். 7-ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லாமலிருந்து, சந்திரன், சுக்கிரன் கிரகச் சேர்க்கையின்றி பலமாக இருந்தால் மகிழ்ச்சி யான மணவாழ்க்கை உண்டாகும்.
கிரகங்கள் அமைகிற நட்சத்திரங்கள் மிகவும் முக்கியம். சந்திரன், சுக்கிரன் இருவரும் ராகு- கேது நட்சத்திரங்களில் அமையாமலிருப்பது நல்லது. சந்திரன், சுக்கிரன் பலம் பெற்றால் அழகான மனைவி, மனைவிமூலம் பொருளா தார ரீதியான அனுகூலங்கள் உண்டாகும். நவகிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியோர் கடுமையான பாவிகள். 7-ஆம் வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவிகள் அமைவதும்; சந்திரன், சுக்கிரன் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெறுவதும் கடுமையான களத்திர தோஷமாகும்.
சந்திரன்- சுக்கிரன் பாவகிரகச் சேர்க்கை பெற்று, குரு பார்வை செய்தால் மணவாழ்வில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய கெடுதிகள் விலகி அனுகூலப் பலன் உண்டாகும். சந்திரன், சுக்கிரன் நீசமானா லும்; பாவிகளுக்கிடையே அமைந்தாலும்; சூரியனுக்கு மிக அருகில் சுக்கிரன் அமைந்து அஸ்தங்கம், வக்ரம் பெற்றாலும் களத்திர தோஷம் உண்டாகி மணவாழ்க்கை அமைவதே கேள்விக்குறியாகிவிடும்.
7-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்து, அதன் தசை திருமணவயதில் நடைபெற்றால் திருமண வாழ்வில் பிரச்சினை உண்டாகும்.
சனி 7-ஆம் வீட்டில் அமைந்தாலும்; 7-ஆம் அதிபதியைப் பார்த்தாலும் திருமணம் தாமதமாக நடைபெறும். மகர லக்னத்திற்கு சனி லக்னாதிபதி என்பதால், அதிகக் கெடுதலை ஏற்படுத்தமாட்டார். சந்திரன் பாவிகள் சேர்க்கை பெற்று 7-ல் இருப்பது நல்லதல்ல. மகர லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி சந்திரன் என்பதால், சந்திரன் ஒன்றுக்கும் மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெற்றால்- சுபர் பார்வைன்றி இருந்தால் மணமானவரை மணக்கக்கூடிய அமைப்போ, மண வாழ்க்கைரீதியாக பாதிக்கப் பட்ட ஒருவரை மணக்கக்கூடிய அவநிலையோ உண்டாகும். சந்திரன்- குரு, சுக்கிரன், புதன் சேர்க்கை பெற்றால் இளமையில் திருமணம் நடக்கும். சந்திரன்- சனி, செவ்வாய், ராகு- கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால் திருமணம் தாமதமாக நடைபெறும்.
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7-ஆம் அதிபதி சந்திரன்- 5, 10-க்கு அதிபதி யான சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 10-ஆம் வீட்டிலிருந்து குரு, புதன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்றாலும் கூட்டுத் தொழில்மூலம் அனுகூலங்கள் உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001