முனைவர் முருகு பாலமுருகன்
23
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களின் 7-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, மற்ற பாவங்கள் பற்றிக் காண்போம்.
8-ஆம் பாவம்
8-ஆம் பாவத்தைக்கொண்டு ஆயுள், ஆரோக்கியம், எதிர்பாராத தனவரவுகள், திருமணத்தின்மூலம் உண்டாகக்கூடிய உறவுகள் போன்றவற்றை அறியலாம்.
சிம்ம லக்னாதிபதி சூரியனுக்கு 8-ஆம் வீட்டதிபதி குரு, நட்பு கிரகம் மட்டுமின்றி சுபகிரகமுமாகும். குரு, சுபகிரகச் சேர்க்கை யுடன் கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும் நீண்ட ஆயுள் உண்டாகும்.
குரு தனித்தில்லாமல், கிரகச்சேர்க்கை யுடன் அமைவது உத்தமம். 8-ஆம் வீட்டில் கிரகங்கள் ஏதும் அமையப் பெறாமலிருப்ப தும், பாவகிரகங்கள் 8-ஆம் வீட்டைப் பார்வை செய்யாமலிருப்பதும் நல்லது. 8-ல் சூரியன் அமையப் பெற்றாலும், குரு- சூரியன் சேர்க்கை பெற்று வலுவிழந்தாலும், உஷ்ண நோய், ரத்தக்கொதிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். 8-ல் சந்திரன் அமையப்பெற்று பாவகிரகச் சேர்க்கை பெற்றால், நீர்த்தொடர்புள்ள உடல்நிலை பாதிப்பு, செவ்வாய் அமையப்பெற்றால் ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்பு, வெட்டுக்காயம், நெருப்பால் கண்டம் உண்டாகும்.
8-ல் புதன் அமையப்பெற்றால்- புதனுக்கு நீச வீடு என்பதால் ஞாபகசக்திக் குறைவு, நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு, முதுகுவலி, உடல் பலவீனம் உண்டாகும். 8-ஆம் வீட்டில் ராகு- கேது அமையப்பெற்றால், அலர்ஜி பாதிப்புகள், கண்டுபிடிக்கமுடியாத உடல்நிலை பாதிப்பு உண்டாகும்.
8-ல் சனி அமையப்பெற்றால் நீண்ட ஆயுள் இருக்கும். சனி, ராகு அல்லது செவ்வாய் தொடர்போடிருந்தால், விபத்துகளை எதிர்கொள்ளும் நிலை, எலும்பு சம்பந்தப்பட்ட பாதிப்பு உண்டாகும். சுக்கிரன்- சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்று 8-ல் அமையப்பெற்றால், சர்க்கரை வியாதி, கண்களில் பாதிப்பு, ரகசிய நோய்கள் ஏற்படும்.
சுக்கிரனுக்கு 8-ஆம் வீடு உச்ச வீடு என்பதால், சுபகிரகச் சேர்க்கை பெற்று பாவகிரக சம்பந்தமில்லாமல் இருந்தாலும், குரு பலமாக அமையப்பெற்று சுபகிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும் எதிர்பாராத தனயோகம், மற்றவர்கள் சம்பாதிப்பதை அனுபவிக்கும் அமைப்புண்டாகும்.
8-ஆம் வீடு குருவின் ஆட்சி வீடு என்பதால், வாழ்க்கைத்துணையின் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.
9-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 9-ஆம் பாவத்தைக் கொண்டு பாக்கியம், செல்வம், செல்வாக்கு, தந்தை, தந்தைவழி உறவுகள், வெளியூர்ப் பயணங்கள் போன்றவற்றைத் தெளிவாக அறியலாம்.
சிம்ம லக்னத்திற்கு 9-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலும், திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றா லும், தந்தையால் ஏற்றம் ஏற்படும். செவ்வாய்- குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகச் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப்பெற்றாலும், லக்னாதிபதி சூரியனின் சேர்க்கை பெற்றாலும் சிறப்பான வசதிவாய்ப்பு, செல்வம், செல்வாக் கினை உண்டாக்கும்.
செவ்வாய்- குரு போன்ற சுபகிரகப் பார்வை பெற்றால் தந்தைக்கு ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். செவ்வாய் வலுப் பெறுவது மட்டுமின்றி, தந்தை காரகன் சூரியனும் கேந்திர திரிகோண ஸ்தானங்களில் சுபகிரகச் சேர்க்கையுடன் அமையப்பெற்றால், தந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டாகும். செவ்வாய்- சுக்கிரன் சேர்க்கை பெற்று வலுவுடன் அமையப்பெற் றால், தந்தையால் தனச்சேர்க்கை ஏற்படும். செவ்வாய்- சூரியன் இருவரும் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றால், தந்தைக்கு கண்டமும், ஆயுள், ஆரோக்கிய ரீதியாக பாதிப்பும் உண்டாகும். சூரியன்- சனி, ராகு சேர்க்கை பெறுவதும், செவ்வாய்- சனி ராகு சேர்க்கை பெறுவதும், சிம்மத்தில் சனி, ராகு அமையப் பெறுவதும், தந்தையிடம் கருத்துவேறுபாட்டினை உண்டாக்கிவிடும். செவ்வாய்- சூரியன் திரிகோண ஸ்தானங் களில் அமையப்பெற்றால் சிறப்பான பலன்கள் உண்டாகும். சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் பாதகாதிபதி என்பதால், திரிகோண ஸ்தானங்களில் அமைவது, மறைந்து காணப்படுவது போன் றவைதான் அதிகப்படியான யோகத்தைத் தரும்.
செவ்வாய்- சுக்கிரன் இணைந்து செவ்வாய்க்கு நீச வீடான கடகத்தில் அமையப் பெற்றாலோ, கன்னியில் அமையப் பெற் றாலோ, தந்தைவழியில் கடுமையான நஷ்டங்கள் உண்டாகும். "கன்னியில் செவ்வாய் அமையப்பெற்றால் கடலும் வற்றும்' என்ற பழமொழிக்கேற்ப, சிம்ம லக்னக் காரர்களுக்கு 2-ல் செவ்வாய் அமையப் பெற்றால், எவ்வளவு செல்வங்கள் இருந் தாலும் அவையாவும் செலவாகிவிடும்.
சூரியன், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை அமையப்பெற்று, செவ்வாயும் பலமிழந்திருந்தால், இளமையிலேயே தந்தையை இழக்கநேரிடும். செவ்வாய்- சூரியனுடன் சனி இணைந்திருப்பதும், இருவரும் சமசப்தம ஸ்தானத்திலிருந்து பார்ப்பதும் சிறப்பானதல்ல. செவ்வாய்- சந்திரன் சேர்க்கை பெற்றாலும், பரிவர்த் தனைப் பெற்றாலும், வெளியூர்ப் பயணங் களால் அனுகூலங்கள் இருக்கும். 9-ல் ராகு அமையப்பெற்றால் தந்தைக்கு அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், ராகுவுடன் சந்திரன், செவ்வாய் இணைந்தால், கடல்கடந்து அன்னிய நாடு செல்லும் யோகம் கிட்டும்.
10-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவத்தைக் கொண்டு தொழில், உத்தியோகத்தைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
சிம்ம லக்னத்திற்கு ஜீவனாதிபதி சுக்கிரன். சுக்கிரன் சுகக்காரகன் என்பதால், கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் அமையப்பெற்று, தனக்கு நட்பு கிரகங்களான சனி, புதன் போன்றவர்களின் சேர்க்கையுடன், சுபர் பார்வையும் பெற்றிருந்தால், நல்ல, நிலையான ஜீவனம்செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு, அதன்மூலம் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும்.
அதிலும், இப்படி சேர்க்கை பெற்று பலம்பெற்ற புதன், சனி, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தசாபுக்திக் காலங்களில் சிறப் பான வருமானமும், கூட்டுத்தொழில், சொந்தத் தொழில்செய்து சம்பாதித்து, மிகப்பெரிய அளவில் செல்வந்தராகக்கூடிய சிறப்பான அமைப்பும் உண்டாகும்.
சிம்ம லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் கலைக்காரகன் என்பதாலும், சுக்கிரனே 3-ஆம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதாலும், கலை, இசை சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். சுக்கிரன் பலமாக அமைந்து சுபர் பார்வையுடன் இருந்தால், ஆடை, ஆபரணங்கள், பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களைக் கொண்ட தொழிலில் சம்பாதிக்கமுடியும். சுக்கிரன், தன லாபாதிபதியான புதனின் சேர்க்கை பெற்றிருந்தால், மற்றவர்களை வழிநடத்தும் திறன், அறிவாற்றல், பேச்சாற்றல், எழுத்தாற்றல், கதை, கவிதை எழுதக்கூடிய கற்பனைத்திறன், சினிமாத்துறைகளிலுள்ள உட்பிரிவுகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு அமையும்.
10-ல் புதன் பலம்பெற்றிருந்தால், பத்திரிகைத்துறை, புத்தகப் பதிப்பு, சொந்த மாகத் தொழில்செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சுக்கிரன், புதன்- குருவுடன் சேர்க்கை பெற்றிருந்தால், ஆசிரியர் பணி, மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பணி, தனது அறிவாற்றலால் முன்னேறும் வாய்ப்பு, பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.
லக்னாதிபதி சூரியன் 10-ஆம் வீட்டில் பலம்பெற்று, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந் தால், நல்ல நிர்வாகத்திறமை, கௌரவமான பதவிகள் தேடிவரக்கூடிய வாய்ப்பு, உயர்பதவி களை வகிக்கும் யோகம் உண்டாகும்.
செவ்வாய் பலமாக அமைந்திருந்தால் நல்ல நிர்வாகியாகப் பணிபுரிந்து, எந்தத் துறையில் செயல்பட்டாலும் அதில் மற்றவர்களை வழிநடத்துவதில் வல்லவராக விளங்கமுடியும்.
சுக்கிரன், சூரியன்- செவ்வாய் சேர்க்கை பெற்றால், அரசு, அரசு சார்ந்த துறைகளில் நல்ல வேலை அமையும். 10-ல் சூரியன், குரு சேர்க்கை, பார்வையுடனிருந்தால், நல்ல வேலை அமைந்து, அதன்மூலம் சம்பாதித்து வாழ்வில் முன்னேற்றமடைய முடியும்.
சுக்கிரன்- சனி சேர்க்கை பெற்றிருந்தால், கூட்டுத்தொழிலில் சம்பாதிக்கும் அமைப்பு, வாகனங்கள் மற்றும் டிராவல்ஸ் மூலம் சம்பாதிக்கும் அமைப்புண்டாகும். நல்ல வேலையாட்களும் கிடைக்கப்பெற்று, அவர்களாலும் முன்னேற்றமான பலன்கள் அமையும். சுக்கிரன்- சந்திரன் சேர்க்கை பெற்று, 9, 12-ல் ராகு அமையப்பெற்றால், வெளியூர், வெளிநாடு சம்பந்தமுடைய தொழில்கள்மூலம் முன்னேற்றம் உண்டாகும். சந்திரன் 10-ல் உச்சம்பெற்று அமைந் திருந்தால், கடல்சார்ந்த பணிகளில் பணி புரியும் அமைப்பு, நீர் சம்பந்தப்பட்ட தொழில், உணவு வகைகள் சம்பந்தப்பட்ட தொழில், உணவகம் நடத்தும் வாய்ப்புண்டாகும்.
சுக்கிரன்- செவ்வாயுடன் இணைந்து பலமாக அமையப்பெற்றிருந்தால், மனை, பூமி, கட்டடத்துறை, ரியல் எஸ்டேட் தொடர்புடைய தொழில்களில் பணிபுரிய நேரிடும். சந்திரன்- கேது சேர்க்கை பெற்றால், மருந்து, ரசாயனத் தொடர்புடைய தொழிலில் யோகம் உண்டாகும். சுக்கிரன், கேந்திர, திரிகோண ஸ்தானங்களில் பலமாக அமையப்பெற்று, சனி, புதனுடன் இணைந்திருந்தால், சொந்தத் தொழில்மூலம் சம்பாதிக்கும் யோகம் அமையும்.
சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் இருந்தாலோ, சிம்ம லக்னத்திற்கு பாதக ஸ்தானமான 9-ஆம் வீட்டில் இருந்தாலோ, உத்தியோகம் செய்யக்கூடிய வாய்ப்பே அமையும். சுக்கிரன் பலமிழந்து, சனி, ராகு சேர்க்கை பெற்று பகை வீடுகளில் அமைந்தால், நிலையான ஜீவனமில்லாமல் அடிமைத்தொழில் செய்யக்கூடிய அமைப்பு, சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001