சென்ற இதழ்வரை தனுசு லக்னம் 3-ஆம் பாவம்வரை பார்த்தோம். இனி, மற்ற பாவங்களைக் காணலாம்.
4-ஆம் பாவம்
லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக்கொண்டு சுகவாழ்வு, வீடு, வாகனம், பூமி, மனை, தாய், கல்வி போன்றவை பற்றி அறியலாம்.
தனுசு லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி குரு சுபகிரகச் சேர்க்கை பெற்று, கேந்திர, திரிகோணங்களில் ஆட்சி, உச்சம் பெற்றாலும், தனக்கு நட்பு கிரகமான செவ்வாய், சூரியன், சந்திரன் சேர்க்கை பெற்றாலும் சுகபோக வாழ்க்கை உண்டாகும். குரு, சுக்கிரன் சேர்க்கை பெற்றால் சுகவாழ்வு மேம்படும். குரு நீசம்பெறுவது, பகை பெறுவது, வக்ரம் பெறுவது, பாவிகளுக்கிடையே அமைவது, பாவிகள் சேர்க்கை பெறுவது சுகவாழ்வை பாதிக்கும்.
குரு தனித்திருந்தால் சிறப்பில்லை என்பதால், கிரகச் சேர்க்கையுடன் அமைவது மிகச்சிறப்பாகும்.
குரு தனக்கு நட்பு கிரகமான சூரியன், செவ் வாய் சேர்க்கை பெற்று, கேந்திர, திரிகோணங்களில் பலம்பெற்றால், சொந்த வீடு யோகம் உண்டாகும். சுக்கிரன் வீடு, வாகனங் களுக்குக் காரகன் என்ப தால்- குரு, சுக்கிரன் பலம் பெற்றால் சொந்த வீடு யோகம், வாகன யோகம், சுகபோக வாழ்க்கை உண்டாகும். குரு, சுக்கிரன் பரிவர்த்தனை பெற்றிருந் தால் மாளிகை போன்ற வீடு, வசதியான வாழ்க்கை அமையும். 4-ஆம் வீட்டை குரு, சுக்கிரன் பார்த்தால், கண்டிப்பாக சொந்த வீடு உண்டாகும். குரு, சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்று, சந்தி ரனுக்கு 4-ஆம் அதிபதி பலம்பெற்றால், வாகன யோகம் உறுதியாக ஏற்படும். பூமிகாரகன் செவ்வாய் என்பதால்- குரு, செவ்வாய் பலம்பெற்றால், பூமி யோகம், மனை யோகம் உண்டாகும். குரு, சுக்கிரன் பலம்பெற்று, உடன் சனி இருந்தால், பழைய வீடு, பழைய வாகனங்களை வாங்கி அனுபவிக்கக்கூடிய அமைப்புண்டாகும்.
குரு பலம்பெற்று, உடன் செவ்வாய், சூரியன் பலம்பெற்றால், பூர்வீ கவழியில் சொத்துச் சேர்க்கை, தந்தையால் அசையா சொத்து யோகம் உண்டாகும். குரு நீசம் பெற்றோ, பகை பெற்றோ, வக்ரம் பெற்றோ இருந்தாலும், 4-ல் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் இருந்தாலும் சொந்த வீடு யோகம் இருக்காது. குரு- சுக்கிரன், ராகு- கேதுவால் பாதிக்கப்பட்டால், தாமதமாக வீடு, வாகன யோகம் உண்டாகும். குரு- சந்திரன், புதன் சேர்க்கை பெற்று பலம்பெற்றால், பெண்கள் மற்றும் மனைவிமூலமாக சொந்த வீடு யோகம், பூமி யோகம் உண்டாகும். 4-ஆம் வீட்டில் எத்தனை கிரகங்கள் சுபத்தன்மையுடன் இருக்கின்றவோ, அத்தனை வீடு யோகம் அமையும். 4-ஆம் வீட்டுடன் தொடர்புடைய கிரகங்களின் தசாபுக்தி நடை பெறும் காலங்களில் சொந்த வீடு யோகம், அசையா சொத்துச் சேர்க்கையுண்டாகும்.
4-ஆம் அதிபதி குருவும், தாய்க்காரகன் சந்திரனும் கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்று, சுபகிரகச் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்தால், தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். குரு நீசம் பெற்றோ, பாவகிரகச் சேர்க்கை பெற்றோ இருந்தாலும், தனுசு லக்னத்திற்கு 4-ஆம் வீடான மீனத் திலோ, தாய்க்காரகன் சந்திரனின் வீடான கடகத்திலோ சனி, ராகு போன்ற பாவகிர கங்கள் அமையப்பெற்றாலும் தாய்க்கு பாதிப்பு, தாய்வழி உறவினர்களிடம் பகைமை உண்டாகும். சந்திரன் பலமிழப்பதும், கேது சேர்க்கை பெறுவதும் நல்லதல்ல.
4-ஆம் அதிபதி குருவும் புதனும் ஆட்சி, உச்சம் பெற்றாலும், கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றாலும், கல்வியில் சிறப்பான பலன் உண்டாகும். 4-ஆம் அதிபதி குரு பலம் பெறுவதன்மூலம், எதிர்காலத்தில் சிறந்த ஆலோசகராக விளங்குவதற்கு வழிவகுக்கக்கூடிய கல்வி அமையும். குரு- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று வலுப்பெற்றால் நிர்வாகம், பொறியியல் தொடர்புடைய கல்வி; குரு புதன் சேர்க்கை பெற்றிருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர், வங்கித்துறை, பங்குச்சந்தை தொடர்புடைய கல்வி; குரு- சந்திரன், ராகு போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால் மருந்து, ரசாயனம் தொடர்புடைய கல்வி; குரு- சந்திரன், செவ்வாய் சேர்க்கை பெற்று பலம் பெற்றால் மருத்துவத்துறையில் அறுவைச்சி கிச்சை தொடர்புடைய கல்வி; குரு- சூரியன், புதன் சேர்க்கை பெற்றால் மூன்று மொழி களைக் கற்கக்கூடிய வல்லமை; குரு- சுக்கிரன் சேர்க்கை பெற்றிருந்தாலும், 4-ல் சுக்கிரன் இருந்தாலும் கலை, இசை போன்ற கல்வி யைக் கற்கும் யோகம் உண்டாகும்.
குரு பலமிழந்திருந்தாலோ, வக்ரம் பெற்றாலோ, 4-ல் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்றாலோ கல்வியில் இடை யூறுகள் உண்டாகும். 4-ஆம் வீட்டையோ, 4-ஆம் அதிபதி குருவையோ சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் பார்வை செய்தால் கல்வியில் தடை, கற்ற கல்விக்கு சம்பந் தமில்லாத துறையில் எதிர்காலத்தில் பணிபுரி யக்கூடிய அமைப்புண்டாகும்.
5-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 5-ஆம் பாவத் தைக்கொண்டு புத்திர பாக்கியம், பூர்வீகம், உயர்கல்வி போன்றவை பற்றித் தெளிவாக அறியலாம்.
தனுசு லக்னத்திற்கு 5-ஆம் அதிபதி செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்றாலும், உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11-ல் அமையப்பெற்று சுபர் பார்வை பெற்றாலும், புத்திரவழியில் அனுகூலம் உண்டாகும். புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய், ஆண் கிரகங்கள் என வர்ணிக் கப்படக்கூடிய சூரியன்- குரு சேர்க்கை பெற்றாலும், சூரியன்- குரு சாரம் பெற்றாலும், சூரியன் மேஷம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஸ்தானங்களில் சுபர் பார்வையுடன் அமையப்பெற்றாலும் ஆண் வாரிசு உண்டாகும்.
சூரியன், குரு, செவ்வாய் பலமிழந்து, 5-ஆம் வீட்டில் சந்திரன், சுக்கிரன் பலம் பெற்றாலும், செவ்வாய்- சந்திரன், சுக்கிரன் சேர்க்கை பெற்றாலும், சந்திரன், சுக்கிரன் வீடுகளில் அமையப்பெற்றாலும் பெண் குழந்தை யோகம் உண்டாகும். செவ்வாய் சனி- ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற் றாலும், நீசம் பெற்றாலும், வக்ரம் பெற்றாலும் புத்திர தோஷமாகும். 5-ஆம் வீட்டில் சனி, ராகு- கேது போன்ற பாவிகள் அமையப்பெற்று, செவ்வாய், குரு பலமிழந் தால் புத்திர பாக்கியம் ஏற்படத் தடையுண்டாகும்.
5-ஆம் அதிபதி செவ்வாய் பலம்பெறுவது மட்டுமின்றி, சந்திரனுக்கு 5-ஆம் அதிபதியும் பலம்பெறுவது மிகவும் நல்லது. குரு, செவ் வாய் பாவிகளுக்கிடையே அமையப்பெற் றாலும், 5-ஆம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமையப்பெற்றாலும், புத்திர காரகன் குருவின் வீடான தனுசு, மீனத்தில் பாவிகள் அமையப்பெற்றாலும் புத்திர வழியில் மனக்கவலை தரும் சம்பவங்கள் உண்டாகும்.
தனுசு லக்னத்திற்கு 1, 5, 9-க்கு அதிப திகளான குரு, செவ்வாய், சூரியன் பலம் பெற்று, பாவிகள் பார்வையின்றி, 5-ல் பாவிகள் இல்லாமலிருந்தால் பூர்வீகவழியில் அனுகூல மான பலன்கள் உண்டாகும். சூரியன், செவ்வாய் பலம்பெற்று, குரு பார்த்தால் தந்தை வழியில் அசையா சொத்துகள் சேர்க்கை, தந்தைவழி உறவினர்கள்மூலமாக அனுகூலங் கள் உண்டாகும். 5-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்று, செவ்வாய் பலமிழந்தால் பூர்வீகத்தால் அனுகூல மில்லாத பலன் உண்டாகும்.
திரிகோண ஸ்தானங்கள்தான் பொது வாழ்விற்கு வழிவகுக்கக்கூடிய ஸ்தானங் களாகும். தனுசு லக்னத்திற்கு குரு லக்னா திபதி என்பதால், குரு, செவ்வாய், சூரியன் பலம்பெற்று, சுபர் சேர்க்கையுடன் அமையப் பெற்று, உடன் சந்திரனும் பலம்பெற்று, அக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் பல்வேறு பொதுக்காரியங்கள் செய்யும் வாய்ப்பு, ஆலயப் பணி, சமூகநலப் பணிகளில் ஈடுபடக்கூடிய அற்புத அமைப்புண்டாகும். செவ்வாய்- குரு சேர்க்கை பெற்று ஆட்சி, உச்சம் பெற்றால் உயர்கல்விரீதியாக பல்வேறு சாதனைகள் செய்யநேரிடும். 5-ல் பாவிகள் அமைந்தாலும், செவ்வாய் பலமிழந்தாலும் உயர்கல்வி பயில தடைகள் ஏற்படும்.
6-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 6-ஆம் வீட்டைக்கொண்டு நோய், வெற்றி, எதிர்ப் புகள், கடன்களைப் பற்றித் தெளிவாக அறியலாம்.
தனுசு லக்னத்திற்கு 6-ஆம் வீட்டதிபதி சுக்கிரன் ஆட்சி, உச்சம், சுபர் சேர்க்கை பெற்றால், வலிமையான வாழ்க்கை உண்டாகும். சனி கடன்களுக்குக் கார கனாகும். சனி, சுக்கிரன் பலம்பெற்று அமையப்பெற்றால், நல்ல வசதிவாய்ப்பு, கடன் ஏற்பட்டாலும் அதனை சமாளிக் கக்கூடிய வலிமையுண்டாகும்.
லக்னாதிபதி குருவுக்கு, பகை கிரகமான சுக்கிரன் லக்னாதிபதியைவிட அதிக பலம்பெறுவது சிறப்பல்ல. எதிர்ப் புகளுக்குரிய 6-ஆம் பாவத்தில் பாவ கிரகங்கள் பலம்பெற்று, சுபர் பார்வை பெற்றால், எதிரிகளைப் பந்தாடக்கூடிய வலிமையுண்டாகும். 6-ஆம் வீட்டை சனி, செவ்வாய் போன்ற பாவிகள் பார்த்தாலும், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்று, 6-ஆம் வீடு பலமிழந்திருந்தாலும் எதிர்ப்புகள், எதிரிகளின் தொல்லையால் மனஅமைதி யற்ற நிலையுண்டாகும். சுக்கிரன் பலமிழந் தாலும் எதிரிகளால் பிரச்சினைகளை எதிர் கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.
சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றாலும், 6-ஆம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும், நோய், உடல்நிலை பாதிப்புகள் உண்டாகும். 6-ஆம் அதிபதி சுக்கிரன் என்பதால், பெண்கள்வழியில் அதிக எதிர்ப்புகளை எதிர்கொள்ளக்கூடிய அமைப்பு ஏற்படும். சுக்கிரன் பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால், ரகசிய நோய்கள், கண்களில் பாதிப்பு, சர்க்கரை வியாதி உண்டாகும். 6-ஆம் வீட்டில் சூரியன் பாவிகள் சேர்க்கை பெற்று அமையப் பெற்றால், உஷ்ண நோய், தோல்களில் பாதிப்பு, இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.
சுக்கிரன்- சந்திரன் சேர்க்கை பெற்று, சந்திரன் பலமிழந்திருந்தால் நீர் தொடர் புடைய பாதிப்புகள், சீதளம், வாத நோய் உண்டாகும். 6-ஆம் வீட்டில் செவ்வாய் பாவியுடன் அமையப்பெற்று பலமிழந்தால், வெட்டுக்காயம், ரத்தம் சம்பந்தப்பட்ட உடல்நிலை பாதிப்புகள், விபத்தால் பாதிப்புகள் உண்டாகும். செவ்வாய், சுக்கிரன் இணைந்து பாவகிரகச் சேர்க்கை பெற்றால், ரகசிய நோய்கள் மட்டுமின்றி, அறுவைசிகிச்சை போன்றவற்றை எதிர் கொள்ள நேரிடும். 6-ல் புதன் பாவிகள் சேர்க்கை பெற்றால், நரம்புத் தளர்ச்சி, காச நோய், ஞாபக சக்தி குறையும் அமைப் புண்டாகும்.
6-ல் குரு பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற்றால், வயிற்றுக்கோளாறு, பணப் பிரச்சினையால் மன உளைச்சல், சாபத்தால் உடல் பாதிப்பு உண்டாகும். சனி 6-ல் பலமி ழந்தால் வாதம், பித்தம், எலும்பு சம்பந்தப் பட்ட பாதிப்புகள், உடல் பலவீனம் உண்டாகும். ராகு 6-ல் பலமிழந்தால் அஜீரணக் கோளாறு, விஷத்தால் கண்டம், ஜுரம் போன்ற அனுகூலமற்ற பலன் உண்டாகும். 6-ல் கேது பலமிழந்து பாவிகள் சேர்க்கை பெற் றால் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய், விஷத்தால் கண்டம் உண்டாகும். சுக்கிரன் பலமாக அமையப்பெற்று, 6-ஆம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தால் நோயற்ற வாழ்க்கை, நீண்ட ஆயுள், நிம்மதி யான சூழ்நிலை உண்டாகும்.
6-ஆம் வீட்டில் அமைகிற கிரகங்கள், அதன் காரகத்துவரீதியாக எதிர்ப்புகளை உண்டாக்கும். சூரியன் 6-ல் பலமிழந்தால் தந்தைவழியிலும்; சந்திரன் என்றால் தாய்வ ழியிலும்; செவ்வாய் என்றால் உடன்பிறந்த வர்கள் வழியிலும்; புதன் என்றால் தொழில்ரீ தியாகவும்; சுக்கிரன் என்றால் பெண்கள் மற்றும் மனைவி வழியிலும்; குரு என்றால் புத்திரர் கள் வழியிலும்; சனி என்றால் வேலையாட் களாலும்; ராகு- கேது என்றால் வேற்று மதத்தினராலும் எதிர்ப்புகள் உண்டாகும்.
7-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 7-ஆம் வீட்டைக் கொண்டு மணவாழ்க்கை, கூட்டுத்தொழில் போன்றவை பற்றி அறியலாம்.
தனுசு லக்னத்திற்கு 7-ஆம் வீடு களத்திர ஸ்தானம் மட்டுமின்றி, உபய லக்னம் என்பதால் பாதக ஸ்தானமுமாகும். 7- ஆம் அதிபதி புதன் திரிகோண ஸ்தானமான 5, 9-ல் அமையப்பெற்றாலும், நட்பு கிரகச் சேர்க்கை பெற்றாலும், சுபர் பார்வை பெற்றாலும், 7-ல் பாவிகள் இல்லாமலிருந்தாலும் மணவாழ்வில் அனுகூலமிகுந்த பலன்கள் உண்டாகும். 7-ல் கிரகங்கள் இல்லாமலிருந்தாலும், புதன் தனித்திருந்தாலும், களத்திரகாரகன் சுக்கிரன் கிரகச்சேர்க்கையின்றி கேந்திர- திரிகோணங்களில் பலமாக அமையப் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும். சந்திரனுக்கு 7-லும் பாவகிரகங்கள் இல்லாமலிருப்பதும், 7-ஆம் அதிபதியும் பாவகிரகச் சேர்க்கையின்றி தனித்தமைவதும் சிறப்பான பலனைத் தரும்.
7-ஆம் வீட்டில் கிரகங்கள் இல்லா மலிருப்பது நல்லது. 7-ஆம் வீட்டில் ஒன்றுக்குமேற்பட்ட கிரகங்கள் இருந்தால் மணவாழ்வில் சோதனைகள் உண்டாகும். 7-ஆம் வீட்டில் செவ்வாய், சனி, ராகு போன்ற கிரகங்கள் அமைந்தாலும், சனி, கேது சேர்க்கை பெற்றிருந்தாலும், புதன், ராகு, சனி சேர்க்கை பெற்றாலும் அல்லது சுக்கிரன், சனி, ராகு சேர்க்கை பெற்றாலும் மணவாழ்வில் பிரச்சினைகள் உண்டாகும்.
புதன், சுக்கிரன் பாவகிரகச் சேர்க்கை யின்றி, சுபர் பார்வை பெற்று, 7-ஆம் வீட்டையும் சுபர் பார்த்தால், நல்ல அழகான மனைவி அமையும் யோகம், மனைவிமூலமாக சொத்துச் சேர்க்கை உண்டாகும். புதன், சுக்கிரன் ஆண்களுக்கும், புதன், செவ்வாய் பெண்களுக்கும், சனி, ராகு போன்ற பாவிகள் சேர்க்கை பெற்றாலும், நீசம், பகைபெற்று பாவிகளுக்கிடையே அமையப்பெற்றாலும் மணவாழ்க்கை நன்றாக இருக்காது.
7-ஆம் வீடு கூட்டுத்தொழில் ஸ்தானமாகும். உபய லக்னமான தனுசு லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி புதனே 10-ஆம் அதிபதியாக இருந்தாலும், 7-ஆம் வீடு பாதக ஸ்தானம் என்பதால், கூட்டுத்தொழில் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வெளிநபர் கூட்டைவிட, மனைவியுடன் (கணவருடன்) கூட்டுத்தொழில் செய்வது ஓரளவுக்கு அனுகூலப்பலனைக் கொடுக்கும். புதன் சிறப்பாக அமையப்பெற்றால் தான் குடும்பக்கூட்டும் அனுகூலமாக இருக்கும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001