கன்னி லக்னத்தில் பிறந்தவர்களில் 3-ஆம் பாவம்வரை சென்ற இதழில் பார்த்தோம். இனி, 4-ஆம் பாவம் பற்றிக் காண்போம்.
4-ஆம் பாவம்
கன்னி லக்னத்திற்கு 4-ஆம் பாவத்தைக்கொண்டு சுகவாழ்வு, வீடுயோகம், பூமி, மனை யோகம், தாய், கல்வி போன்றவற்றை அறியலாம்.
கன்னி லக்னத்திற்கு 4-ஆம் அதிபதி குரு. இது ஒரு முழு சுபகிரகம். குரு சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றால் சுகபோக வாழ்க்கை உண்டாகும். குரு பாவகிரகச் சேர்க்கை மற்றும் பார்வை இன்றியிருந்து, 4-ல் பாவிகள் இல்லாமலிருந்தால் சுகபோக வாழ்க்கை உண்டாகும். குரு, சுக்கிரன் வலுப் பெற்றால் சுக வாழ்வு மேம்படும்.
4-ஆம் அதிபதி குரு சுபர்வீட்டில் கேந்திர, திரிகோணங்களில் வலுவாக அமையப்பெற்று, வீடு, வாகனக்காரகன் சுக்கிரனும் பலம்பெற்றால் சொந்த வீடு, வாகன யோகம் உண்டாகும். சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்று, குருவும் பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகும். சுக்கிரன்- குரு பரிவர்த்தனை பெற்றால் நவீனமான வீடு யோகம் உண்டாகும். 4-ஆம் வீட்டை சுக்கிரன், குரு பார்வை செய்தால் சொந்த வீடு யோகம் உறுதியாக உண்டாகும். குரு, சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் அமையப்பெற்றாலும் சிறப்பான வாகன யோகம் உண்டாகும்.
4-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப் பெற்றாலும், குரு- சுக்கிரன் பாவகிரகச் சேர்க்கை பெற்றாலும் சொத்துகள் அமைய இடையூறுகள், இருப்பதை அனுபவிக்கத் தடைகள் உண்டாகும். குரு, சுக்கிரன் பழைய பொருட்களுக்குக் காரகனான சனி சேர்க்கை அல்லது பார்வை பெற்றால், கட்டிய வீட்டை வாங்கி புதுப் பித்துக் கொள்ளும் அமைப்பு, பழைய வாகனங்களை உபயோகிக்கும் நிலை உண்டாகும்.
குரு வலுப்பெற்று, பூமிகாரகன் செவ்வாயும் வலுப் பெற்றிருந்தாலும், 4-ஆம் வீட்டை செவ்வாய் பார்வை செய்தாலும் பூமி, மனை யோகம் உண்டாகும். குரு, சுக்கிரன், செவ்வாய் வலுப்பெற்றிருந்தால் மனைவி மூலம் வீடு, வாகன யோகம் உண்டாகும். குரு, சுக்கி ரனுடன் சூரியன் சேர்ந்தால் பூர்வீகத்தாலும், சந்திரன், புதன் இணைந்தால் பெண்கள்வகையிலும், செவ்வாய், சனி இணைந்தால் சொந்த முயற் சியாலும் வீடு, மனை, பூமி யோகம் உண்டாகும். குரு வலுவிழந்து 4-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் அமையப்பெற்றாலும், சுக்கிரன் நீசம் பெற்றாலும் சொந்த வீடு யோகம் இருக்காது.
4-ஆம் வீடு தாய் ஸ்தானமாகும். 4-ஆம் அதிபதி குருவும், தாய்க்காரகன் சந்திரனும் கேந்திர, திரிகோணங் களில் அமையப்பெற்று சுபகிரகச் சேர்க்கை மற்றும் பார்வை பெற்றிருந்தால் தாய்க்கு நீண்ட ஆயுள் உண்டாகும். குரு நீசம் பெற்றோ, பாவகிரகச் சேர்க்கை பெற்றோ இருந்தாலும், கன்னி லக்னத்திற்கு 4-ஆம் வீடான தனுசிலும், தாய்க்காரகன் சந்திரனின் வீடான கடகத்திலும் சனி, ராகு போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், தேய்பிறைச் சந்திரனாகி பாவகிரக வீட்டில் அமையப்பெற்றாலும் தாய்க்கு பாதிப்பு உண்டாகும். சந்திரன், சனி, ராகு, கேது போன்ற பாவிகள் சேர்க்கை அல்லது சாரம் பெற்றாலும் தாய்க்கு ஆரோக்கிய பாதிப்பு, சோதனைகள் உண்டாகும். 4-ஆம் அதிபதி வலுப்பெற்று சந்திரன் பலமாக இருந்தால் தாய்மூலம் அனுகூலமும், தாய்க்கு நீண்ட ஆயுளும் உண்டாகும்.
4-ஆம் வீடு கல்வி ஸ்தானமாகும். 4-ஆம் வீட்டதிபதி சுபகிரகச் சேர்க்கை பெற்று கேந்திர, கோணங்களில் அமையப் பெற்றால் கல்வியில் சிறப்பான பலன் உண்டாகும். கல்விக்காரகன் புதன் லக்னாதிபதி என்பதால், புதன் வலுவுடன் அமைந்து, 4-ஆம் அதிபதி குரு வலுப் பெற்றால் நல்ல அறிவாற்றலும், எதிர்காலத்தில் சிறந்த ஆலோசகராக விளங்குவதற்கான ஆற்றலும் உண்டாகும்.
குரு- சூரியன், செவ்வாய் சேர்க்கை பெற்று வலுப் பெற்றால் நிர்வாகம் சார்ந்த கல்வி உண்டாகும். குரு, புதன் சேர்க்கை பெற்றிருந்தால் கணக்கு, கம்ப்யூட்டர், வங்கியியல் தொடர்புடைய கல்வி, குரு, சந்திரன், ராகு போன்ற கிரகச் சேர்க்கை பெற்றால் மருந்து, ரசாயனம் தொடர்புடைய கல்வி, குரு சந்திரனுடன், செவ்வாய் சேர்க்கை பெற்றால் மருத்துவத்துறையில் அறுவைச் சிகிச்சை கல்வி கற்கும் வாய்ப்பு அமையும். 4-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவிகள் அமையப்பெற்று, குரு வலு விழந்து காணப்பட்டால் கல்வியில் இடையூறுகள் உண்டாகும். 4-ஆம் வீட்டை சனி, செவ்வாய் பார்வை செய்தாலும், குரு, புதன் வக்ரம் பெற்றாலும் கற்ற கல்விக்கு சம்பந்தமில்லாத துறையில் ஜீவிக்கும் அமைப்புண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001