சென்ற இதழ் தொடர்ச்சி...
துலாம்
காலபுருஷ ஏழாமி டம். இந்த லக்னத் திற்கு குரு பகவான் மூன்று மற்றும் ஆறாமதி பதி. களத்திரம் வீட்டின் அருகிலேயே இருக்கும். சுய விருப்ப விவாகமாகவும் இருக்கும். ஆறாமதிபதி குரு ஏழில் இருப்பதால் வேலைக்குச் செல்லுமிடத்தில் நட்பு ஏற்பட்டும் திருமணம் நடக்கலாம். குடும்பத்தில் பற்று குறையும். திருமணத்திற்குப் பிறகு களத்திரமே எதிரியாக மாறும் வாய்ப்புண்டு. சிலருக்கு குழந்தை பாக்கியக் குறைவாலும் பிரிவினை ஏற்படும். தம்பதிகளுக்குள் சந்தேகம் அதிகமாக இருக்கும். ஒருவருக்கொருவர் மற்றவரின் செல்ஃபோனை நோட்டமிட்டு ஆதாரம் தேடிப் பிரிவார்கள். இவர் களில் சிலருக்கு வீட்டுப் பெரியவர்கள் வரன் பார்த்துத் திருமணத்தை முன்நின்று நடத்துவதில் ஆர்வம் காட்டுவதில்லை. மூன்று, ஆறாமதிபதி ஏழில் இருப்பதால் திருமணத் தடையை சந்திக்கும் துலா லக்னத்தினர் மேட்ரி மோனி, திருமணத் தகவல் மையத்தின்மூலம் வரன் பார்த்தால் எளிதில் திருமணம் முடியும்.
பரிகாரம்
ஏழில் குரு இருக்கும் துலா லக்னத்தினர் பதிவுத் திருமணம் செய்துகொண்டால் திருமண வாழ்க்கை பாதிக்காது.
விருச்சிகம்
இந்த லக்னத்தினருக்கு குரு இரண்டு மற்றும் ஐந்தாம் அதிபதி. இரண்டு, ஐந்து, ஏழாம் பாவகங்களின் சம்பந்தம் இருப்பதால் சுயவிருப்ப திருமணம் நடக்கும். வெகுசிலருக்கு நெருங்கிய உறவுகளிலும் வாழ்க்கைத் துணை அமையும். விருச்சிக லக்னத்திற்கு ஏழில் நிற்கும் குரு, சந்திரன் (ரோகிணி) சாரத்தில் நின்றால் மட்டுமே பாதிப்பைத் தரும். மற்றபடி வாழ்க்கை சிறப் பாகவே இருக்கும். திருமணத்திற்குப்பிறகு நல்ல முன்னேற்றம் உண்டு.
பரிகாரம்
மேலும் சுபப் பலனை அதிகரிக்க செவ்வாய்க்கிழமை மாலை 7.00-8.00 மணிவரையிலான குரு ஓரையில் வள்ளி, தெய்வானையுடன்கூடிய முருகனுக்கு மஞ்சள்நிற மலர்கள் அணிவித்து வழிபட, திருமண வாழ்க்கை தித்திக்கும்.
தனுசு
உபய லக்னம். குரு லக்னாதிபதி மற்றும் நான்காம் அதிபதி. ஏழில் நிற்கும் குருவால் கேந்திராதிபத்திய தோஷமுண்டு. உபய லக்னம் என்பதால் பாதக, மாரக பாதிப்பும் உண்டு. குரு தசை, புத்திக் காலங்களில் மட்டும் பாதிப்பு உண்டாகும். வாழ்வில் குரு தசை வராமல் இருந்தால் திருமணத்திற்குப்பிறகு வீடு, வாகன யோகமுண்டு. களத்திரம் அந்தஸ்து மற்றும் வசதி வாய்ப்பு நிறைந்த இடத்தில் அமையும். களத்திரம்மூலம் பொருள் வரவுண்டு. ஏழாமதிபதி புதனுக்கு குரு பகை கிரகம். குருவுக்கு புதன் சமகிரகம். ஏழில் குருவுடன் புதன் இணைந்தால் எளிதில் திருமணம் நடப்பதில்லை. நடந்தாலும் பாதகம், மாரகம் இரட்டிபாகிறது. ஏழில் குரு இருக்கும் தனுசு லக்னப் பெண்களுக்கு 27 வயதிற்குமேலும், ஆணுக்கு 31 வயதிற்குமேலும் திருமணம் செய்வது நல்லது.
பரிகாரம்
ஏழிலுள்ள குருவால் திருமணத்தடையை சந்திப்பவர்கள் பெருமாள் கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து, வீட்டிற்கு வராமல் நேரே பெண் பார்க்கச் செல்வது நல்லது. அல்லது பெண் பார்க்கும் நாளில் பள்ளிக்கூடத்தில் படித்த ஆசிரியரிடம் ஆசிபெற்றுச் செல்லவேண்டும். சுவாமிமலை முருகனை வழிபட பாதிப்பு குறையும்.
மகரம்
மகரத்திற்கு குரு மூன்று மற்றும் பன்னிரண்டாம் அதிபதி என்பதால், ஏழாமிடமான கடகத்தில் உச்சம்பெறும் ஏழாமிட குரு சிறப்பான திருமண வாழ்க்கையைத் தருவதில்லை. இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால் பலருக்கு திருமணமும் நடைபெறுவதில்லை. குரு உச்சமாக இருக்கும் காலகட்டத்தில் பிறந்த பல மகர லக்னத்திற்கு திருமணமென் பது பகல் கனவாகவே இருப்பது வருத்தத்தைத் தருகிறது. திருமணம் நடந்த பலர் திருமண வாழ்க்கையைப் பற்றி சொல்லும் நிகழ்வுகள் துயரமானதாகவே இருக்கிறது. தம்பதிகள் தொழில் அல்லது உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரிந்திருந்து, ஒருவரையொருவர் சந்திக்காதவரை தொந்தரவிருக்காது.
பரிகாரம்
குலதெய்வ வழிபாடு மிக அவசியம்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு குரு தன, லாபாதிபதி. தன, லாபாதிபதி குரு ஏழில் நிற்பதால் திருமணத்திற்குப்பிறகு யோகமுண்டு. இரண்டாமிடம் குடும்ப ஸ்தானம். பதினொன் றாமிடம் இரண்டாம் திருமணத்தைப் பற்றிக் கூறுமிடம். அதனால் இரண்டு திருமணம் நடக்குமென்று சிலர் பலன் கூறுவதுண்டு. நடைமுறையில் பன்னிரண்டு லக்னங்களில், எழில் நின்ற குருவால் பாதிப்படையாத ஒரே லக்னம் கும்பம் மட்டுமே.
பரிகாரம்
சிவவழிபாடு மேலும் நற்பலன்களைப் பெற்றுத்தரும்.
மீனம்
மீனத்திற்கு குரு லக்னாதிபதி மற்றும் பத்தாமதிபதி. கேந்திராதிபத்திய தோஷ பாதிப்புண்டு. உபய லக்னம் என்பதால் பாதகமும், மாரகமும் கலந்து ஏழாமிடத்தை வ-மையிழக்கச் செய்யும். பாதக ஸ்தானமான ஏழில் நிற்கும் குரு ஒட்டுமொத்த வம்பு, வழக்கின் குத்தகைதாரர். குரு, சூரியன் சாரத்தில் நின்றால் திருமணம், விவகாரத்துவரை செல்லும். சந்திரன் சாரத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும். செவ்வாய் சாரத்தில் நின்றால் புத்திர தோஷம் உண்டாகும். இதுபோன்ற காரணங்களால் சிலருக்குத் திருமணம் காலதாமதமாகும். பொதுவாக நூற்றுக்கு எண்பது சதவிகித உபய லக்னத் தினரின் கூட்டுத்தொழில் அல்லது வெளியுலக வாழ்க்கை சிறப்பாக அமைந்தால் திருமண வாழ்க்கை கசப்பாகவே இருக்கிறது. திருமண வாழ்க்கையில் மனநிறைவாக வாழ்பவர்களின் திறமைகள் வெளியுலகைச் சென்றடைவதில்லை.
பரிகாரம்
ஜோதிடம் பார்க்க வருபவர்களில் பலர், குரு முழு சுபகிரகம் என்பதால் ஏழில் நிற்கும் குரு மங்களப் பலன் தருவார் என்று வாக்குவாதம் செய்கிறார் கள். கடந்த இருபது வருடங்களாக கலாச்சார சீர்கேடு மிகுதியாகி வருவதால், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாடு பெரிதும் மறைந்துவிட்டது. நவகிரகங்கள் எல்லா காலங்களிலும் தங்கள் கடமையை மிகச் சரியாகத்தான் செய்துவருகின்றன. மனிதர்களின் முற்போக்கு சிந்தனையும், சகிப்புத்தன்மை குறைவும், கிடைத்த வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திற்கு விடுதலை கொடுத்துவிட்டது. மனிதர்கள் பொறுமை, சகிப்புத்தன்மையைக் கடைப்பிடித்து வாழ்ந்த காலத்தில் நவகிரகங்கள் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டு மனிதர்கள் வாழ உதவின. பண்பாட்டுக் குறைவும் சுயநலம் மிகுந்த பக்தியும் நவகிரகங்களின் நல்லாசியைப் பெற்றுத்தராது. ஒருவரின் உணர்வுகளை மற்றவர் மதித்து, விட்டுக்கொடுத்து வாழும் மனப்பக்குவம் இருந்தால், ஏழாமிடத்தில் எட்டு கிரகம் இருந்தால்கூட ஒருவனுக்கு ஒருத்திய வாழமுடியும். முழுமையான சுப கிரகமான குரு உடைபட்ட நட்சத்திரம் கொண்டது. முதல் மூன்று நட்சத்திர பாதங்கள் ஒரு ராசியிலும், நான்காம் பாதம் அடுத்த ராசியிலும் இருப்பதால் திருமணத்திற்குப் பின்பே பிரச்சினை ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் குரு, செவ்வாயுடன் சேர்வதோ அல்லது செவ்வாயைப் பார்ப்பதோ சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் குரு சுக்கிரனைப் பார்ப்பதோ அல்லது குரு சுக்கிரனுடன் சேர்வதோ சிறப்பு. அல்லது தம்பதிகளின் ஜாதகத்தில் ஏழாமதிபதியுடன் சேர்வதோ அல்லது ஏழாமதிபதியைப் பார்ப்பதோ சிறப்பு.
மேற்கண்ட எந்த நிலையும் இல்லாத போது திருமண வாழ்க்கை கடமைக்காக வாழ்வதுபோல் இருக்கும்.
திருமணத்திற்குப்பின் குழந்தையில்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு முக்கிய காரணமாகிறது. குழந்தை நல்ல நிலையில் உருவாகக் காரணமாக குரு இருப்பதால், குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது குழந்தையை வளர்க்கமுடியாமை போன்ற காரணங்களால் பிரிவினை ஏற்படு கிறது. நம்பிக்கை, நாணயத்திற்குக் காரக கிரகம் குருவாகும். ஒருவருக்கு மற்றவர்மேல் நம்பிக்கை, நாணயக் குறைவால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் குரு காரணமாகிறது. கருக்கலைப்பு மற்றும் நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கும் இதுபோன்ற வினைப் பதிவு இருக்கும்.
பரிகாரம்
* குரு காயத்ரி மந்திரம் ஜெபிக்கவேண்டும்.
* குரு ஸ்தலமான ஆலங்குடி சென்று குரு வழிபாடு செய்யவேண்டும்.
* யானைக்கு கரும்பை உணவாகத் தரவேண்டும்.
* வியாழக்கிழமைகளில் சித்தர்களின் ஜீவசமாதி வழிபாடு செய்யவேண்டும்.
* வியாழக்கிழமைகளில் கொண்டைக் கடலை சாப்பிடவேண்டும்.
* குருமார்கள் மற்றும் வயதில் பெரியவர் களுக்கு வஸ்திரம் சமர்ப்பித்து ஆசிபெறுதல் நலம்.