சென்னை, ஆயிரம்விளக்கு பகுதியில் 1845-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆம் தேதி கந்தசாமி மற்றும் தனலட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் அயோத்திதாசர்.  இவர் தனது இயற்பெயரான "காத்தவராயன்' என்பதை தனது குரு "கவிராஜ வீ. அயோத்திதாசப் பண்டிதர்' மீது கொண்ட பற்றின் காரணமாக "அயோத்திதாசர்' என மாற்றிக்கொண்டார். தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர் மற்றும் சித்த மருத்துவர் ஆவார். அயோத்திதாசன் தங்கள் குடும்ப மருத்துவர் என திரு.வி.க தன் நாட்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment

ஒடுக்கப்பட்ட சமூகத்தின் முன்னணி தமிழ்ச் சிந்தனையாளர்களில் ஒருவரான அயோத்திதாசரின் கல்வி, சமூக ஏற்றத்தாழ்வு குறித்த பார்வைகள் குறித்து தமிழறிஞரான ஞான அலாய்சியஸின் முதல் தொகுப்புக்கு அன்பு பொன்னோவியம் எழுதிய சிறப்புரையிலிருந்து சிறு பகுதி கீழே தரப்பட்டுள்ளது!

Advertisment

கல்வி பெறுவது என்பது அவரவர் வசதியும் வாய்ப்புகளையும் அடிப்படையாகக் கொண்டதாகும். பொருள் வசதியின்றி படிக்கும் வாய்ப்புமின்றி, ஒருவேளை வசதியிருந்து வாய்ப்பும் கூடி வரப்பெற்றால் படிக்காதபடி தடைப்படுத்தும் இன, சாதிக் குறுக்கீடுகள் கடுமையாக இருக்குமாயின் எந்தத் தாழ்ந்தவரும் கல்வியால் வளமும் வாழ்வும் பெறமுடியாது. இத்தகைய தடங்கல்கள் கிராமங்கள்தோறும் இருந்தன என்பது வரலாறு காட்டும் உண்மையாகும். தமிழக முடிமன்னர் காலத்திலிருந்து இவ்வழக்கம் ஆங்கிலேய அரசுவரை நீடித்தது. எனினும் அயோத்திதாசர் போன்ற ஆதிதிராவிட முன்னோடிகளால் மெல்ல மெல்லக் கல்விக் கூடங்கள் தோற்றுவிக்கப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களிடையே கல்வி பரவ ஆரம்பித்தது. இதிலும் எத்தனை சங்கடங்கள் என்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.

"1897-ஆண்டில் மகாஜன சபைக்கு பூர்வீக திராவிடர்களால் ஒரு பிரதிநிதியை அனுப்பி கலாசாலை, பூமிகளின் விஷயமாக கேட்டபோது சாதியைக் குறிக்காமல் பூர்வ திராவிடர் என்றே குறிப்பிட்டு இருந்தார்கள். இந்த எளிய குலத்து சிறுவர்க்குக் கருணைதங்கிய ராஜாங்கத்தார் ஆரம்ப வகுப்பு வரையில் இலவச கல்வி கற்பிக்கும்படி ஆரம்பித்தபோது பெயர் வைத்தவர்கள் சாதிபேதமற்ற எளிய பிள்ளைகளின் இலவச கலாசாலை என வகுத்திருப்பார்களானால் பேருபகாரமாக விளங்கி இருக்கும். அங்ஙனமின்றி இக்கூட்டத்தாருக்கு எதிரிகளாகவும், சத்துருக்களாகவும் விளங்குவோர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டுகொண்டு "பஞ்சமர் கலாசாலை' என்று வகுத்துவிட்டார்கள்.'' (தமிழன் - 3.3.1909)

Advertisment

என்று கல்வி கற்கும் புனிதமான இடத்தையும் ஒரு சாதிப் பெயரிலேயே இயங்குமாறு செய்த வெறித்தனத்தை வேதனையோடு குறிப்பிடுகிறார். சிறுவயதிலேயே வேற்றுமையைப் புகுத்தி உயர்வு தாழ்வைக் கற்க வைத்து சாதிப் பாகுபாட்டைத் தொடர்ந்து கடைபிடிப்பதை ஒரு மார்க்கமாக ஆக்கிவிட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் பள்ளிக்கூடங்கள் நடத்துபவர்களும் கண்காணிப்பவர்களும் சாதி - சமய பேதமற்றவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் எண்ணுகிறார்.

"பெரிய சாதிகளென்று பெயர் வைத்துக்கொண்டிருப்போர்கள் சிறிய சாதிகளென்று அழைக்கப்படுவோர் வாசஞ் செய்யும் கிராமங்களிலுள்ள பள்ளிக்கூடத்து சிறுவர்களை அவர்கள் வசிக்கும் சாலைகளுக்கே நேரில் போய் பார்வையிடவும், பரிட்சை செய்யவுமில்லாமல் தூர விலகி சில தோப்புகளிலும், தங்களுக்கு வசதியான இடங்களிலும், உட்கார்ந்துகொண்டு பிள்ளைகளை தருவித்து தூர நிறுத்திக் கொண்டு தாங்களும் பரிட்சை செய்துவிட்டோம் தாங்களும் பார்வையிட்டோமென்று (ரிப்போர்டுகள்) எழுதிவிடும்படியான சில சாதியார் இருக்கின்றார்கள்.

அவ்வகை சாதியோரை இச்சூப்பர்வைசர் வேலைகளுக்கு நியமிப்பதனால் இராஜாங்கத்தோரின் நல்லெண்ணம் முற்றும் பாழடைந்து போவதுடன் இராஜாங்கத்தின் பணமும் வீண்விரயமாகும். ஆதலின் சாதி பேதமற்றவர்களும், சமய பேதமற்றவர்களும், தன்னவர் அன்னியரென்னும் பட்சமற்றவர்களும், மனிதர்களை மனிதர்களாக யெண்ணுகிறவர்களும் பேராசையற்றவர்களுமாகிய பெரியோர்களையே பார்த்து சூப்பர்வைசர் உத்தியோகங்களில் நியமிப்பதனால்... 

ராஜாங்கத்தோர் கருத்தையும் ஈடேற்றுவார்கள்' (தமிழன்-27-1-1909).

என்று எடுத்துக்காட்டுவதன் மூலம் சாதிப் பாகுபாட்டால் உயர்த்தப்பட்ட வர்கள் தாழ்த்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் அச்சுறுத்தலாம், படிக்க இயலாதவாறு செய்யலாம் என்பதற்கு இந்த நிகழ்ச்சியைச் சான்றாகக் காட்டுகிறார். 

மற்றும் கல்வி என்பது வெறும் வாழ்க்கைக்கும் வசதிக்கும் என்று இல்லாமல் ஒவ்வொருவரும் நல்ல ஒழுக்கத்தைப் பெறவும் பிறரையும் சிறந்த ஒழுக்கத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்யவும் நூற்கல்வி பயன்பட வேண்டும் என்றும் கருதுகிறார். இத்தகைய படிப்பு சிறுவயது முதற்கொண்டே அமைய வேண்டும் என்றும் விரும்புகிறார்.

"...திராவிடமொழியில்... அந்த பூமியில் வாழும் குடிகளின் செயல்களையும், சிறப்புகளையும் நெறிகளையும் தெள்ளென விளக்கி அநேக நூற்களை வரைந்து வைத்திருக்கிறார்கள். அத்தகைய நூற்களை தற்கால சிறுவர்களுக்குக் கற்பித்து வருவதாயின் வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் இவைகள் பெறுவதுடன் குரு விசுவாசம், ராஜவிசுவாசம் நிலைத்து தாங்கள் சீரடைவதுடன் பிறரையும் சீர் பெறச் செய்வார்கள்.

இத்தகைய நூற்களை சிறுவர்கள் கையில் எடுக்கவே கூடாமற் செய்துவிட்டபடியால் சிறுவர்கள் ஆங்கில மொழியை வெகுவாகக் கற்றிருப்பினும் தாய்மொழியின் செயலும் பயனும் குறைந்து போயிற்று. அத்தகைய நூல்களை கலாசாலையில் கற்பித்தால் தற்கால நூதனமாக ஏற்படுத்திக் கொண்ட சாதி வித்தியாசங்களையும் மதக்கடை வியாபாரங்களும் இராஜாங்கத்தோடு விளங்கிவிடுவதுடன் சிறுவர்களும் விவேக விருத்தி பெற்று சாதித் தலைவர்களையும் சமயத் தலைவர்களையும் மதியாமற் போய்விடுவார்கள் என்ற கருத்தினால் சாதித்தலைவர்களும் சமயத்தலைவர்களும் பூர்வ திராவிட நூற்களை கலாசாலையில் பரவ விடாமல் செய்துவிட்டனர்' (தமிழன் -6.3.1912)

என்று இவர் கூறும் திராவிட நூல்கள் நீதி நூல்களேயாகும். இவை திருக்குறள், நாலடியார் போன்றவை என்று கூறலாம். இவைகளே ஒழுக்க நூல்கள் என்றால் பொருந்தும். இவற்றிலிருந்தே வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் போன்றவைகளைப் பெற முடியும் என்று அவர் கருதி தம் பத்திரிகையில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். வாழ்க்கை நெறிநூலான திருக்குறள் போன்றவை இவர் குடும்பத்தாரிடமிருந்ததும் இவருடைய பாட்டனாரால் எல்லீஸ் என்ற ஆங்கிலேயரிடம் கொடுக்கப்பட்டது என்பதும் நினைவுபடுத்திக் கொள்ளத்தக்கதாகும்.

பழந்தமிழர் நூல்களை அழிப்பதற்கென்றே ஒரு விழாவை ஏற்படுத்தி ஓலைச் சுவடிகளை ஆற்று நீரில் விட்டு அழிக்கச் செய்த சூழ்ச்சியைத் தமிழர்கள் காலங்கடந்து உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. பல தமிழ் இலக்கியங்கள் அழிய தமிழர்களே காரணமாக இருந்தது வருந்தத்தக்கது. இருப்பினும் சில தப்பி இருக்கின்றன. அவைகளில் சில ஆதிதிராவிடர் பாதுகாப்பில் பிழைத்திருந்தன.

மனிதாபிமானமே இல்லாத மேல் சாதியினர் எந்தச் சாயலிலும் சீர்திருத்தத்தை விரும்பமாட்டார்கள் என்று அவர் எண்ணினார். அந்த நான்கு உயர்த்தப்பட்ட இனத்தினரும் தாழ்த்தப்பட்டு ஐந்தாவதாக உள்ள இனத்தினரைச் சமமாக நடத்தமாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு ஒரு செய்தியையும் ஆதாரமாகக் கூறினார்.

"இந்தியா என்னும் பத்திரிகையில் ஒருவர் தங்களுக்காக கல்விச்சாலை ஏற்படுத்த வேண்டும் என்றும் இதில் பஞ்சமர்களுக்கென்று வேறு தனிப்பட்ட பள்ளிக்கூடம் ஏற்படுத்த வேண்டும் என்றும் எழுதியிருக்கிறார்... - இப்படிப்பட்டவர் சுயராட்சியம் பெற்றுக்கொண்டால்... (தமிழன் -17.6.1908)

"சாதியை ஒழித்து சமமாக நடத்துவார்களா?' என்று கேட்டு "தீண்டக்கூடாது என்ற இடுக்கண் செய்த வகுப்பினனே தற்காலம் ஏழைபிள்ளைகளின் பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்ந்து உண்ணவும் அருந்தவும் செய்கிறார்கள்' (தமிழன் - 16.9.1908) என்பதையும் எடுத்துக்கூறுகிறார்.

தேசத்தைச் சீர்திருத்த வேண்டும், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுவோரை அயோத்திதாசர் நம்பத் தயாராக இல்லை என்று தெரிகிறது. "சாமிக்கதை சொல்லும்போதே சூத்திரன் கேட்கப் படாது என்று விரட்டும் பாவிகள் சாப்பாடு போடும்போது யாருக்கு இட்டு யாரை விலக்குவார்கள் என்பது தெரியாதோ' (தமிழன் -3.6.1908) என்று சொல்கிறார். நாலாம் வருணத்தாரான சூத்திரர்களுக்கே இந்த நிலையென்றால், சூத்திரர்களுக்கும் கீழே உள்ளவர்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி தொக்கி நிற்பதை இக்கருத்தில் காணலாம்.

பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் உழைத்துச் சாப்பிடுகிறவன் எந்தவிதத்தில் தாழ்ந்தவன் என்று அயோத்திதாசர் சற்றுக் கடுமையாக கேட்பது நியாயமானதேயாகும்.

"இந்த தேசத்தில் பிச்சை எடுப்பவன் பெரிய சாதி என்றும் உழுது உண்பவன் சின்ன சாதி என்றும் சோம்பேறி செய்து கொண்டு வருகிறார்கள்' (தமிழன் - 4.3.1908)

பணமுள்ளோர் பெரிய சாதி, பணமில்லாதவன் சின்ன சாதி, உழைப்பவர்கள் சின்ன சாதி, சோம்பேறிகள் பெரிய சாதி, மத சார்பாக இருப்பவர்கள் உயர்ந்த சாதியார்கள், என்று தங்கள் பிழைப்புக்கு ஏற்படுத்திக் கொண்ட கதையாவும் பொய் என்று கூறி யார் புறக் கணிக்கிறார்களோ அவர்கள் யாவரும் தாழ்ந்த சாதியார் என்று வருகின்றது' (தமிழன் - 25.121907). இது எந்த விதத்தில் நியாயம் எத்தகைய அறிவீனம் என்று அவர் மனக்கசப்புடன் கேட்பதும் கேட்கப்பட வேண்டிய கேள்விதான்!

"16.9.1908 அன்று கூடிய நகர சீர்திருத்த சங்கத்தாருள் மயிலாப்பூர் சுடலை விஷயமாக நடந்த ஆலோசனையில் ஸ்ரீ சேஷாச்சாரி மறுப்புக் கூறியிருக்கிறார். சுடலைக்கு போகும்போது வழியில் பறைச்சேரி இருக்கிறபடியால் அவ்வழியில் உயர்ந்த சாதியார் போக அஞ்சுவார்கள். இப்பிராமணர் என்போர் பறையர் என்போர் வாழும் இடங்களுக்குப் போவார்களானால் அடித்துத் துரத்திச் சாணச் சட்டியை உடைப்பது பழைய வழக்க மாயிருந்தது. அந்த பயத்தைக் கொண்டு உயர்ந்த சாதியார் பறைச் சேரியின் வழியாகப் போவதற்கு அஞ்சுகிறார்கள்' (தமிழன் -23.9.1908) என்று அயோத்திதாசர் குறிப்பிடுவதிலிருந்து இந்த இரண்டு வகுப்பினருக்குமிடையே நீண்ட காலமாகப் பகைமை இருந்து வருவதாகத் தெரிகிறது. இதே செய்தி புலவர் திரிசிபுரம் ஆ. பெருமாள் பிள்ளை அவர்கள் எழுதிய ஆதிதிராவிடர் வரலாறு என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது (அ. பெருமாள் பிள்ளை, ஆதிதிராவிடர் வரலாறு, 1922).

"1892-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை விக்டோரியா ஹாலில் மகாசபை கூடிற்று. தலைமை தாங்கிய பி. அரங்கைய நாயுடு அவர்கள் ஜில்லாக்களின் குறைகளைச் சொல்லிக்கொண்டே வந்து "பறையர் பிராபலம்' என்னும் வாக்கியத்தை அடித்துவிட்டு இவர்களை பற்றி வேண்டிய வரையில் சில துரைகள் எழுதியிருக்கிறார்கள். ஆதலின் இவர்களின் குறைகளை நாம் ஆலோசிப்பது யாது பயனுமில்லை என்று கூறினார். 

சபையின் செயலாளர் எம். வீரராகவாச்சாரிஅவர்கள் தலைவரை நோக்கி நீலகிரியிலிருந்து அக்குலத்தோருக்கு ஒரு பிரதிநிதி வந்திருக்கிறார் என்று கூறினார். உடனே நான் எழுந்து இக்குலத்தோரைப் பற்றி சில துரைமார்கள் உபகாரம் செய்கிறார்கள் என்று கூறி எல்லோரும் மவுனம் சாதிப்பது அழகன்று. உங்களாலேயே இக்குலத்தோர் தாழ்த்தப்பட்டு சீர்குலைந்து இருக்கின்றபடியால் நீங்களே இவர்களை சீர்திருத்தி சுகம்பெறச் செய்ய வேண்டும் என்றேன். அதற்கு தலைவர், இது உள்சீர்திருத்தச் சங்கமாதலின் இவர்களால் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். நான் இக்குலத்தாரிலுள்ள வைணவர்களையும், சைவர்களையும் அந்தந்த கோயில்களுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றேன். எல்லோரும் ஏகமயமாய் நின்று அப்படி கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூச்சலிட்டார்கள். அப்போது தஞ்சாவூர் பிரதிநிதி சிவராம சாஸ்திரி அவர்கள் உங்கள் குலத்தோர்க்கு மதுரை வீர சாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி கொடுத்திருக்கிறோம். சிவன் சாமியும், விஷ்ணு சாமியும் உங்கள் குலத்தோர்க்கு உரியதல்ல என்று ஆட்சேபித்தார். நான் அவரை நோக்கி ஐயா, அப்படியிருக்குமாயின் உங்கள் சாமி எங்களுக்கு வேண்டாம். இக்குலத்து சிறுவர்களுக்கு கிராமங்கள் தோறும் கல்விச் சாலைகளை வைத்து இலவசமாக கல்வி கற்கவைக்க வேண்டும் என்றேன். மேலும் கிராமவாசிகளுக்கு வெறுமனே உள்ள நிலங்களைக் கொடுக்க வேண்டும் என்று கூறினேன்' 

(தமிழன் - 21.10.1908) என்று அயோத்திதாசர் நிலைமையை விளக்குகிறார்.

இக்கூட்டம் சென்னை மகாஜன சபையாரால் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் "ஏரி மராமத்துக்கள், கிணறுகளின் விருத்திகள், ரோடுகளின் மராமத்துக்கள், மேலும் வெளி ஜில்லாக்களின் சீர்திருத்தங்களைப் பேசுவதுடன் பறையர்களுக்கான உபகாரங்களும் யோசிக்க' கூட்டப்பட்ட கூட்டத்தின் போக்கிலிருந்து என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பதை அயோத்திதாசர் விளக்கிவிட்டார்.

அவர் பிராமணர் பிராமணரல்லாதார் என்ற இரு சாராரையும் ஒப்பிட்டே பேசுகிறார். இரு வகுப்பினரும் தீண்டாமையை, சாதியை - தீவிரமாகக் கடைப்பிடிப்பவர்களே என்பதையும் அழுத்தமாகக் கூறுகிறார். பிராமணர் மேலாண்மையைப் பிராமணரல்லாதார் வெறுக்கிறார்கள், பிராமணர் பிராமணரல்லாதார் ஆதிக்கத்தைத் தாழ்த்தப்பட்ட தீண்டாதவர்கள் விரும்பவில்லை என்பதையும் அயோத்திதாசர் மிகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் எடுத்துக்கூறுகிறார்.

தண்டனையடைந்த குற்றவாளிகளுக்குத் தரும் தண்டனைகள் கூட மேல்சாதிக்கு ஒருவிதமாகவும் கீழ்சாதிக்கு வேறுவிதமாகவும் அளிக்கப்படுவதையும் கூறுகிறார்.

"உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்வோர்கள் தங்களுக்கு எதிரிகளாகவும், விரோதிகளாகவும் உள்ளோர்களை தாழ்ந்த சாதியென்று வகுத்து நிலைகுலையச் செய்துவந்தனர். 1876-ஆம் (183 ஆண்டுகளுக்கு முன்பு) வருஷத்தில் தாழ்ந்த சாதி என்போருக்கு தொழுக்கட்டை தண்டனையும் உயர்ந்த சாதியார் என்போர்க்கு சாதாரணக் காவல் தண்டனையும் உண்டாக்கிக் குடிகளை பலதேசங்களுக்கு சிதறி ஓடிப்போகும்படி செய்துவிட்டார்கள், விக்டோரியா ஆட்சியில்... தாழ்ந்த சாதி உயர்ந்த சாதி என்னும் வரம்பின்றி குரூரச் செய்கையுள்ளவனை தொழுக்கட்டையில் போடலாம் என்று மாற்றிவிட்டார்கள். பொறாமையினால் சிலரைத் தாழ்ந்த சாதி என்றும் சோம்பேறிகளாய் வயிறு வளர்ப்பதற்குப் பெரிய சாதிகள் என்றும் ஏற்படுத்திக்கொண்டார்களேயன்றி எதார்த்தத்தில் உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது.' (தமிழன் -15.4.1908)