அருள்மொழி ராஜராஜன், சென்னை. ([email protected])
நிரந்தர வருமானம் எப்போது வரும். எப்படிப்பட்ட தொழில் அமைத்துக்கொள்ளலாம் என்று கேட்டுள்ளார்.
15-12-1969-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவருடைய தொழில் ஸ்தானாதிபதியும், விரயாதிபதியும், ஒரே ராசியில், ஒரே, நட்சத்திரக் காலில் உள்ளனர். இதேபோல் பணவரவுக்குரிய ஸ்தானாதிபதி விரயத்தில் உள்ளார். எனவே பணம் வந்தவுடன் கையைவிட்டு ஓடிவிடுகிறது. நடப்பு புதன் தசையில் சனி புக்தி 2026 அக்டோபர் வரையில் உள்ளது. சனி நீசபங்கமாக உள்ளார். அதனால் எல்லா செயல்களும் தடையாகி, பின்தான் சரியாகும். இவருடைய ஜாதகப்படி, அன்றன்று பொருட்கள் வாங்கி, அன்றே விற்கும்படி இருக்கவேண்டும். அது அனேகமாக உணவு சம்பந்தம் கொண்டதாக இருந்தால் நல்லது. உங்கள் ஜாதக அமைப்புப்படி, திருச்செந்தூர் முருகனை வணங்குவது நல்லது.
சுப்பிரமணியன், சென்னை. ([email protected])
வாழ்வில் முன்னேற்றம் இல்லை. கற்ற கல்விக்கு ஏற்ற தொழில் அமையவில்லை என இவ்விதம் நிறைய கேள்விகள் கேட்டுள்ளார்.
7-5-1983-ல் பிறந்தவர். கன்னி லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். இவர் சனி தசையில் ரொம்ப கஷ்டப்பட்டதாக எழுதியுள்ளார். இவருக்கு சனி உச்சமாக உள்ளார். எனவே சனி தசை மிக நல்ல பலன் தரும் என்றும் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் சனி வாங்கிய சாரநாதர் செவ்வாய் 8-ல் மறைவு. 8-ல் செவ்வாயுடன், உச்ச சூரியனும் உள்ளார். இப்போது பாருங்கள். உச்ச சூரியனும், உச்ச சனியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். "உச்சனை உச்சன் பார்த்தால், பிச்சை எடுப்பார்' என்பது ஜோதிடவிதி. எனவே சனி தசையில் இவர் ஏறக்குறைய ஒரு பிச்சைக்காரன்போல் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார். தற்போது நடக்கும் புதன் தசை சுக்கிர புக்தி சுமாரான பலன் தரும். இவருடைய ஜாதகத்தில் புதன்- சுக்கிரன் பரிவர்த்தனை. சுக்கிரன் ராகுவுடன் உள்ளார். எனவே உங்கள் வேலையில் வெளிநாட்டு சம்பந்தம் அல்லது இஸ்லாமிய பெருமக்கள் இணைவு இவை இருப்பதாக பார்த்துக்கொள்ளவும்.உங்களின் அனைத்து துன்பங்களும் பூர்வ ஜென்ம கர்மத்தால் உண்டாகிறது. போன ஜென்மத்தில் உங்கள் இளைய சகோதரனை, வீட்டைவிட்டு, அடித்து துரத்தியிருப்பதாக ஜாதக அமைப்பு கூறுகிறது.எனவே, இப்போது செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருங்கள். முருகனுக்கு விரதமிருந்து, விளக்கேற்றி வணங்கவும். வேலை செய்து பிழைக்கும் டீன் ஏஜ் பையன்களின் வாழ்க்கை மேம்பட உதவிசெய்தும், அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்தும் உதவினால், மெது மெதுவாக உங்கள் வாழ்வு வெளிச்சம் பெறும். இந்த பரிகாரம், உங்கள் கல்விக்கேற்ற வேலை வாங்கித்தரும். முயற்சி செய்யுங்கள்.
சர்மா சாரா, திருநெல்வேலி. ([email protected])
அரசு வேலை, மாநில, மத்திய வங்கி வேலை எப்போது கிடைக்கும்?
14-9-1996-ல் பிறந்தவர். தனுசு லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். உங்கள் 6-ஆம் வீட்டை சனி பார்ப்பதால், வேலை கிடைக்க சற்று தாமதமாகும். நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி. இது 2026 மே வரை உள்ளது. அதற்குள் ஒரு வேலை கிடைத்துவிடும். அது அனேகமாக அரசு சார்புடைய, தனியார் வேலையாக வேறு இடத்தில் அமையும். கிடைத்த வேலையை சட்டென்று விட்டுவிடக்கூடாது. அடுத்த வேலை கிடைப்பது ரொம்ப கஷ்டமாகிவிடும். வள்ளி- தெய்வானையுடன்கூடிய முருகரை வணங்கினால், வேலை நல்லவிதமாக தொடரும்.
மல்லிகா அன்பழகன், சாலிகிராமம், சென்னை. ([email protected])
தனது மகள் யாழினியின் வேலை மற்றும் கேட்டை நட்சத்திரம், ஜாதக அமைப்பால் திருமணம் சிக்கல் ஆகுமா என்றும் கேட்டுள்ளார்.
இவர் பெண்ணின் ஜாதகக் கட்டம் மட்டும் அனுப்பியுள்ளார். பிறந்த தேதி, தசா இருப்பு என எதுவும் அனுப்பவில்லை. மீன லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் ராகு. 8-ல் கேது. நாகதோஷம் உள்ளது. மேலும் லக்னத்துக்கு 8-ல் செவ்வாய், ராசிக்கு 12-ல் செவ்வாய். எனவே ராசி, லக்னம் இரண்டிற்கும் செவ்வாய் தோஷம் உள்ளது.இந்தப் பெண்ணின் வேலை பற்றி கேட்டுள்ளார். இவரின் 6-ஆம் அதிபதி சூரியன் நீசம் மற்றும் 8-ல் மறைவு. எனவே அரசு பணி கிடைக்க வாய்ப்பில்லை. கிடைக்கும் தனியார் வேலையை கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். 5, 7-ஆம் அதிபதிகள் இணைவு. எனவே விருப்பத் திருமணம் நடக்கும்.பெண்களுக்கு கேட்டை நட்சத்திரம் இருந்தால், மூத்த மைத்துனக்கு ஆகாது என்பது ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இவளின் இஷ்ட திருமணத்திற்கு இதனை பார்க்க வேண்டுமா என யோசனையாக உள்ளது.
அமுதா, சென்னை.([email protected])
தன் கணவருக்கும், இவருக்கும் சதா சண்டை என்றும், கடன் பிரச்சினை எப்போதும் தீரும் என்றும் கேட்டுள்ளார்.
29-11-1986-ல் பிறந்தவர். மிதுன லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். நடப்பு சனி தசையில் ராகு புக்தி. இது அனைத்து ஜாதகருக்கும் எல்லையில்லா துன்பம் தரும். இது 2026 பிப்ரவரி வரை உள்ளது. எனவே சற்று பொறுமையாக இருந்துகொள்ளவும். 2026 ஜனவரியில் உங்கள் தந்தைவழி சொத்து ஒன்று உங்களுக்கு கிடைக்கும். அதைவைத்து கடனை அடைத்துவிடுவீர்கள்.சனி தசை, ராகு புக்தி முடியும்வரை சனிக்கிழமைதோறும், பைரவருக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.
கணேசன், சென்னை. ([email protected])
என் ஜாதக அமைப்பு ஓட்டல் தொழிலுக்கு சரிப்படுமா?
19-3-1961-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். ஒருவருக்கு ஓட்டல் தொழில் தொடங்க, செவ்வாயும், 11-ஆம் அதிபதியும் நன்றாக இருக்கவேண்டும். செவ்வாய் 8-ஆம் அதிபதியாகி, 10-லும், 11-ஆம் அதிபதி சந்திரன் 8-லுமாக உள்ளனர். ஆக, உணவு விடுதி தொழில் உங்களுக்கு சரிப்படாது. நடப்பு குரு தசையில் சனி புக்தி. உங்கள் பூர்வீக இடத்தில், நிலம் வாங்கி விற்க, ஒரு பங்குதாரருடன் சேர்ந்து வேலை செய்வீர்கள்.வியாழக்கிழமைதோறும். சிவனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், இந்த குரு தசை நல்ல பலன்கள் தரும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/14/lakshmi-2025-11-14-16-17-21.jpg)