லட்சுமி நாராயணன், மதுரை.

இவர் மருத்துவ செலவுகள் அதிகமாவதாகவும், ஜோதிடராக இருந்ததும், பணவரவு மிக குறைவு என்றும், ஊர் மாறலாமா என்றும் கேட்டுள்ளார்.

Advertisment

27-8-1964-ல் பிறந்தவர். கடக லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். இவருடைய 2-ஆமிடத்தில், 2-ஆம் அதிபதி சூரியன் ஆட்சி. எனினும் கூடவே விரயாதிபதி புதனும் உள்ளார். எனவே எவ்வளவு பணம் வந்தாலும், அனைத்தும் செலவழிந்துவிடும். உங்கள் ஜோதிட தொழிலில், ஒரே இடத்தில் அமர்ந்து பலன் சொல்லி, பணம் சம்பாதிப்பது என்பது சரிப் படாது. ஜோதிட வகுப்புக்களை, அதையும் பல இடங்களில் அலைந்து சொல்லிக் கொடுங்கள். இந்த விதம் சரியாக இருக்கும். மீன ராசிக்கு ஏழரைச்சனி. சற்று இடைஞ்சல் தரும். நடப்பு ராகு தசையில் சனி புக்தி. இந்த தசா புக்தி எல்லாருக்கும் சற்று சிரமம் தரும்தான். 2027 ஏப்ரல்வரை. அதுவரை கூடியமட்டும் நிறைய அலைய வேண்டும். இல்லாவிடில் ரொம்ப செலவாகிவிடும். அடுத்து வரும் ராகு தசை- புதன் புக்தி உங்களை வீடு, ஊர் மாற்றும். அருகில் உள்ள துர்க்கையை குங்குமம் கொண்டு வணங்கவும். 

பால விநாயகம், 

தன்னுடைய வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

7-09-1992-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், தனுசு ராசி, பூராட நட்சத்திரம். ராசியில் ராகு. 7-ல் கேது. நாக தோஷ ஜாதகம். மேலும் ராசிக்கு 7-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷமும் உள்ளது. இவர் பிறந்த இடத்தைவிட்டு, வேறிடம் சென்று வேலை பார்த்தால் நன்றாக இருக்கும். நடப்பு ராகு தசை. இதில் புதன் புக்தி 2027 ஜூன் வரை. இதில் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றமும், திருமணமும் நடந்துவிடும். அதற்குள் முடித்துவிட வேண்டும். தற்போதைய ராகு தசைக்கு, துர்க்கையை வணங்கவேண்டும். வருடத்துக்கு ஒருமுறை, சூரியனார் கோவில் சென்று வழிபடுவது நல்லது. நீங்கள் வயதான பாட்டிகளுக்கு முடிந்த உணவு வாங்கிக் கொடுங்கள். 

பா. ராமலட்சுமி, திருநெல்வேலி. 

அரசு வேலை, திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

25-09-1989-ல் பிறந்தவர். மகர லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசையில் சனி புக்தி. இதில் அரசு வேலை கிடைத்துவிடும். மேலும் செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பதால் விருப்பத் திருமணம் நடக்கும். உங்கள் 6-ஆம் அதிபதி ராசியில் உச்சமும். அம்சத்தில் நீசமும் அடைவதால், அரசு வேலை கிடைத்தால், அதில் பத்திரமாக, வில்லங்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நாக தோஷமும் உள்ளது. நரசிம்மர் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபடவும்.

Advertisment

அருணாசலம், திருவண்ணாமலை.

சொந்த வீடு, பொருளாதாரம், உடல்நிலை, ஆயுள் பற்றி கேட்டுள்ளார்.

6-04-1959-ல் பிறந்தவர். மகர லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். உங்களுக்கு சொந்த வீட்டு அதிபதி செவ்வாய் 6-ஆம் வீட்டில் சனி பார்வையில் உள்ளார். எனவே நீங்கள் சொந்த வீடு வாங்கினாலும், அது கடனில் கரைந்துவிடும். எனினும் 2026 ஜனவரிக்குமேல், உங்கள் வாரிசுமூலம் வீடு கிடைக்கும்.சனி, உங்கள் 2-ஆம் வீட்டை பார்ப்பதால், பண வரவு சுருக்கமாகத்தான் இருக்கும்.உங்களுக்கு எப்போதும் காலில் நரம்பு பிடித்துக்கொள்ளும். சித்த வைத்தியம் எடுத்துக்கொள்ளவும்.குரு, 8-ஆம் அதிபதியை பார்ப்பதால், நல்ல ஆயுள் பலம் உண்டு.உங்களுக்கு ஏழரைச்சனியும் நடப்பதால் சனீஸ்வர வழிபாடு செய்யவும். உங்கள் ஊரிலுள்ள பெருமாள், தாயாரை விளக்கேற்றி  வணங்கவும். நடப்பு சுக்கிர தசை- சனி புக்தி 2026 ஜனவரிவரை உள்ளது.

எஸ். தாமரைக் கண்ணன், அருப்புக்கோட்டை. 

தொழில் மேன்மை, கடன் தீரும் காலம் பற்றி கேட்டுள்ளார்.

27-03-1967-ல் பிறந்தவர். கடக லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். உங்கள் ஜாதகத்தில் குரு உச்சமாகி, வக்ரமாகியதால், அவர் நீசம் ஆகிவிட்டார் எனலாம். இது ஒருவகையில் நல்லது. ஒருவகையில் கெடுதல். 6-ஆம் அதிபதி எனும்போது, அவர் கெடுவதால் கடன் தொல்லை குறையும். ஆனால் அவர் அதிர்ஷ்ட அதிபதியாக இருந்து, நீசமாவது அவ்வளவு விசேஷ மில்லை. மேலும் தனாதிபதியும், சனியும் சேர்க்கை, பண ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்தும். நடப்பு புதன் தசை. இது இருக்கும் அமைப்பு. சிலசமயம் எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், சிலசமயம் கொஞ்சம் சரிவையும் தந்துவிடும். எனவே பணவரவு வரும்போது, கடனை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்துவிடுவீர்கள். உங்கள் தொழிலில் இஸ்லாமிய பெருமக்களின் சம்பந்தம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும், நன்றாக இருக்கும். நடப்பு புதன் தசை, புதன் புக்தி 2027 ஜனவரி வரை. ரொம்ப எதிர்பார்க்க வேண்டுமாம். பின்வரும் காலம் நன்றாக அமையும். பள்ளிக்கொண்ட பெருமாளை, நெய் விளக்கேற்றி வணங்கவும். 

சுந்தர பாண்டியன், பேராவூரணி.

தன் தம்பி பூபாலன் திருமணம் பற்றி கேட்டுள்ளார்.

பூபாலன்: 03-03-1991-ல் பிறந்தவர். மீன லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம். இவரின் லக்னாதிபதிக்கும், 7-ஆம் அதிபதிக்கும் சம்பந்தமில்லை. 7-ஆம் அதிபதி விரயத்தில் உள்ளார். எனவே திருமணம் ஏற்படாகி, நின்றுபோன பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடக்கும். நடப்பு குரு தசை, புதன் புக்தி. இதில் 2026 மே மாதத்திற்குள் திருமணம் நடந்துவிடும்.அருகிலுள்ள சிவனையும், விநாயகரையும் வணங்கவும். சிவன் கோவில் நந்தவனம் செழிப்பாக உதவுங்கள்.

Advertisment

கிருஷ்ணமூர்த்தி, போளூர்.

தன் திருமணத்திற்கு ஐந்து வருடமாக பெண் பார்த்தும் அமையவில்லை என்று கூறுகிறார்.

13-03-1993-ல் பிறந்தவர். கன்னி லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். ராசியில் ராகு- 7-ல் கேது. நாகதோஷம். ராசிக்கு 8-ல் செவ்வாய்- பகை வீட்டில் இருப்பதால், செவ்வாய் தோஷம். சனி 7-ஆமிடத்தைப் பார்த்து, திருமணத்தை நடத்த தடை போடுகிறார். எல்லாவற்றையும் விடுங்கள். இவரது 3-ஆம் வீட்டில் நீச சந்திரனும், ராகுவும் சேர்க்கை. இதனை நுணுக்கமாகும் பார்க்கும் ஜோதிடர்கள் இவரது ஜாதகத்தை தள்ளிவைத்து விடுவார்கள் எனில் இவருக்கு திருமணம் ஆகாதா- குழந்தைகள் பிறக்காதா என்றால் கண்டிப்பாக ஆகும். நடக்கும். எனில் எவ்விதம் இவருடைய தாய்வழி சொந்தத்தில், இவருடைய விருப்பப்படி, வாழ்வில் சோதனையை எதிர்கொண்ட பெண்ணுடன், திருமணம் நடக்கும். நடப்பு கேது தசையில் சனி புக்தி. இது 2026 நவம்பர்வரை உள்ளது. அதற்குள் திருமணம் நடந்துவிடும். குலதெய்வத்திற்கு பிரார்த்தனை செய்துகொள்ளவும். காஞ்சி மகாபெரியவர், சீரடி சாய்பாபா இராகவேந்திரர் போன்ற சித்தர்களை வாழ்நாள் முழுவதும் வணங்கவும். சித்தர்களின் அணுக்கிரகம் இவருக்குத் தேவை.

டி. ஸ்ரீ சூரன், அருப்புக்கோட்டை.

அரசு வேலை கிடைக்க பரிகாரம் கேட்டுள்ளார்.

20-05-2002-ல் பிறந்தவர். ரிஷப லக்னம், சிம்ம ராசி, மக நட்சத்திரம். இவருக்கு லக்னத்தில் சூரியனுடன், ராகுவும், சனியும் சேர்க்கை. இந்த இரு பாபர்களும், சேர்ந்து சூரியனை வேலை செய்யவிட மாட்டார்கள். அதனால் இவருக்கு அரசு வேலை கிடைப்பது சந்தேகம்தான். நடப்பு சூரிய தசையில் ராகு புக்தி 2026 ஆகஸ்ட்வரை. அதற்குள் வெளியூர், வெளிநாட்டு தனியார் பணி கிடைக்கும். இவர் யாரிடமாவது, அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாற வாய்ப்புள்ளது.ஞாயிறுதோறும், சிவனுக்கு நெய் விளக்கேற்றி வணங்கவும். 

 கார்த்திக், கோவை:

சோதனைகளே வாழ்க்கையாக உள்ளது. பரிகாரம் உண்டா?

30-5-1976-ல் பிறந்தவர். விருச்சிக லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னாதிபதி செவ்வாய் நீசம். கூடவே சனி. இந்த சனியும், செவ்வாயும் ஒரே நட்சத்திரக் காலில், கிரக யுத்தம் பெற்று அமர்ந்துள்ளனர். அதிர்ஷ்ட அதிபதி 8-ல் மறைவு. தனாதிபதி, 6-ல் உட்கார்ந்து உள்ளார். வியாபாரம், தொழிலுக்குரிய கிரகத்தின் சாரநாதர் 8-ல் மறைவு. இந்த ஜாதகர் பிறந்தத்தில் இருந்து நடந்த தசைகள் அனைத்தும் மோசமான நிலையில் இருந்தது. நீங்கள் நன்றாக இருக்கிறேன் என்று சொன்னால்தான் நம்பமுடியாது. சரி, நடப்பு சனி தசையில் செவ்வாய் புக்தி. இதில் 2026 ஜூன்வரை- ஒப்பந்த வேலை கிடைத்து வெளியிடம் சென்றுவிடுவீர்கள். பின் வரும் ராகு புக்தி, உங்களை வெளியூர், வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லும். கூடியமட்டும் பிறந்த ஊரில் இருக்கவேண்டாம். வீர பத்திரரை வணங்கவும். செவ்வாய்க்கிழமைதோறும், விரதமிருந்து முருகரை வணங்கவும். 


விஜயலட்சுமி, கடலூர். 

திருமணம் எப்போது நடக்கும்? பி.இ. சிவில் படித்துள்ளேன். வேலை அரசு துறையா- தனியார் துறையா என்று கேட்டுள்ளார்.

27-09-1996-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். ராசியில் கேது 7-ல் ராகு. நாக தோஷம் உள்ளது. நடப்பு ஏழரைச்சனி. கேது தசையில் ராகு புக்தி 2026 ஏப்ரல் வரை. இதில் எந்த முக்கிய முடிவும் எடுக்கவேண்டாம். பின்வரும் குரு புக்தி வேலை, திருமணம் அனைத்தையும் கொடுக்கும். அரசு வேலைக்கு அனேகமாக வாய்ப்பில்லை. உங்கள் ஊர் அம்மனுக்கும், குலதெய்வத்திற்கும் அம்மன் தாலி, புடவை, மாலை வாங்கி காணிக்கை செய்து, பின் திருமண ஏற்பாட்டை செய்யவும். ஒரு முறை இராமேஸ்வரம் சென்று பித்ரு தோஷ பூஜை செய்யவும்.