இப்ப "பட்டிமன்ற சூப்பர் ஸ்டார்' யாருன்னு கேட்டா கு.ஞானசம்பந்தன் என்று சின்னக்குழந்தையும் கூட சொல்லும். உலகம் முழுக்க உள்ள தமிழர்கள், சின்னக் குழந்தைகள்முதல் வயதானவர்கள்வரை தனது திறமையான, சுவையான நகைச்சுவை தமிழ் பேச்சால் ரசிகர், ரசிகைகள் ஆக்கி இருப்பவர்.‘ ‘G.Gnanasambandan’’ என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி பல நுணுக்கமான திருக்கோவில்கள், மலைக் கோவில்கள் பற்றிப் பேசி வரும் தமிழ் அறிஞர், பட்டிமன்ற நடுவர்,
பல அறிவுசார்ந்த நூல்கள் எழுதி வெளியிட்டு வரும் எழுத்தாளர், மதுரை நகைச்சுவை மன்றத் தலைவர், தமிழகத்தில் நாகர்கோவில்முதல் சென்னைவரை 15 மாவட்ட நகைச்சுவை மன்றங்கள் அமைத்த பெருமை பெற்றவர். பலர் எம்.ஃபில், பி.எச்.டி பட்டம் பெற ஆய்வுசெய்ய வழிகாட்டி வாழ்த்து பெற்றுவருபவர்.
மதுரை தியாகராசர் கல்லூரியில் தகைசால் பேராசிரியராக 29 ஆண்டுகள் பணியாற்றிய பெருமைபெற்றவர். 2003-ஆம் ஆண்டில் அமெரிக்கத் தமிழ் சங்கங்கள் வழங்கிய "உவகை புலவர்' பட்டம் பெற்று உள்ளங்களை கொள்ளை கொண்டவர். முன்னாள் தமிழக முதல்வர்கள் கரங்களால் முதன்மையான கலைமாமணி விருது, மகாகவி பாரதியார் விருது, தமிழ் இயக்கத்தின் சிற்றரசு போன்ற பட்டங்கள் பெற்று கௌரவிக்கப்பட்ட தமிழ் மாமணி.
தமிழகத்தின் அனைத்து தொலைக்காட்சிகள், வானொலி நிலையங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றி அறிவூட்டிய சிந்தனையாளர்.
தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், அந்தமான் தமிழ்சங்கங்களில் சிறப்புரை ஆற்றிய இந்த தமிழ்ப் பெருமகனார் நியூயார்க், சிங்கப்பூர், மலேசியா, குவைத், ஜெட்டா, வாசிங்டன், கலிபோர்னியா, சிகாகோ, அட்லாண்டா, மடகாஸ்கர், ஜப்பான், இலங்கை, அமெரிக்கா, அபுதாபி போன்ற வெளிநாடுகள் சென்றும் சிறப்புரை ஆற்றி பாராட்டுப் பெற்ற தமிழர் என்ற சிகரம் தொட்டவர்.
இப்படி பல்வேறு சிறப்பாற்றல்கள்மிக்க, தமிழ் ஆசான் கு. ஞானசம்பந்தன் அவர்களை அவரது மதுரை இல்லத்தில் சந்தித்து அவரது பக்தி ஈடுபாடுகள், செயல்பாடுகள், பரவசமான பக்தி அனுபவங்கள் பற்றிய கேள்விகளை அடுக்கினோம். கு. ஞானசம்பந்தன் அவர்களிடம் குடிகொண்டு இருக்கும் பக்தி ஞானம் அவரது ஒவ்வொரு பதில்களிலும் பளிச்சிட்டது.
●அனைத்து தெய்வங்களும் அருளிய அற்புதத் தமிழ் பேச்சாற்றலால் தமிழர்கள் நெஞ்சங்களில் நிலையாக இடம்பெற்று விட்ட நீங்கள் "ஞானசம்பந்தன்' ஆன சம்பவத்தை கூறுங்களேன்?
எனது சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள சோழ வந்தான். அப்பா குருநாதன் தமிழ் ஆசிரியர். அம்மா விசாலாட்சி இல்லத்தரசி. என்கூட பிறந்தவங்க மூன்று அக்கா, ஒரு தங்கை. நான் ஒரே ஒரு ஆண் பிள்ளை. அதாவது மகன். பாசக்கார குடும்பம். ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அன்பு. பாசம். நேசம் கொண்டு நல்லதோர் குடும்பம், பல்கலைக்கழகம் என்று இன்றும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
அவரவர்களுக்கு தனித்தனியே குடும்பம் குழந்தைகள், பேரன்- பேத்திகள் என்று ஆனபிறகும் எங்கள் சகோதர பாசம் சமுத்திர அலையாக நீடித்துவருகிறது.
என் தந்தை திருப்புகழ் கழகம், திருமுறை கழகம் என்று நடத்தி தமிழ் வளர்ச்சிக்கு அயராமல் பாடுபட்டுவந்த தமிழ் அறிஞர்.
எனக்கு அப்போது வயது நான்குதான்! அந்த சமயம் நடந்த ஒரு விழாவிற்கு ஆறுமுக நாவலர் எனும் நாகர்கோவிலை சேர்ந்த மடாதிபதி சைவ சொற்பொழிவிற்காக வந்திருந்தார். ஊர்வலம் நடத்தி விழா துவங்கும்முன்பு கடவுள் வாழ்த்துப்பாட வேண்டிய ஓதுவார் தனிப்பட்ட அவசர பணிக்காக வராமல் ஒதுங்கிவிட்டார். பெரும் கூட்டமும் தலைமை தாங்கிய மடாதிபதியும் ம்... சீக்கிரம் தமிழ் ஆசான் யாரையாவது கடவுள் வாழ்த்து பாடச் சொல்லுங்கள் என்று வற்புறுத்த பரபரப்பான சூழலில் வேறுவழி யின்றி என் தந்தை சட்டென்று என்னை கடவுள் வாழ்த்துப்பாட கட்டளை இட்டுவிட்டார்.
எங்கள் வீட்டில் என் சகோதரிகளுக்கு ஓதுவார் வந்து தேவாரம் பாட சொல்லிக் கொடுப்பார். நான் அதை ஆர்வத்துடன் கேட்டு மனப்பாடம் செய்துவிட்டதால் கம்பீரமாக மேடையில் ஏறி அங்கு வந்திருந்த அனைவரும் வியக்கும்படி மைக்கை பிடித்து திருஞான சம்பந்தர் பாடிய முதல் தேவார பாடலான "தோளுடைய செவியன்' பாடலை வரி பிசகாமல் கணீர் என்று இனிமையாக பாடி கடவுள் வாழ்த்தை நிறைவு செய்ததும் அந்த பெரும் கூட்டம் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து கைதட்டிப் பாராட்ட அதைப் பார்த்து அசந்துபோன ஆறுமுக நாவலர் என் தந்தையிடம் என் பெயர் என்ன என்று கேட்க அவர் "அங்குசாமி' என்றதும் இல்லை.. இல்லை தெய்வ அருளை பரிபூரணமாக பெற்று தேவார பாடலை தேனிசையாக பாடிய உங்கள் மகன் இனி "ஞானசம்பந்தன்' என்று அழைக்கப்படுவார் என்று பெயர் சூட்ட என் தந்தை, தாய், சகோதரிகள் உட்பட அந்தக் கூட்டமும் ஊரும் இனி நான் "ஞானசம்பந்தன்' என்று ஏற்றுக்கொள்ள நானும் ஆறுமுக நாவலர் சூட்டிய பெயரை தமிழ் கடவுளான ஆறுமுகப் பெருமானே நேரில்வந்து சூட்டியதாக அகம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டேன். சிவன் கோவிலில் நடைபெற்ற தமிழ் விழாவில் அங்குசாமியாகிய நான் ஞானசம்பந்தன் ஆனேன். எனவே சிவபெருமான் அருளால் எனக்கு பெயர் மாற்றப்பட்ட தெய்வீக சம்பவம் நடந்ததாக எல்லாரும் மனம் மகிழ்ந்து வாழ்த்தினார்கள். ஒரே பாடலில் உச்சம் தொட்டுவிட்டதாக புகழ்ந்தார்கள். நானும் ஞானசம்பந்தன் என்ற தமிழ் ஞானம் பெற்று, புதுப்பெயருடன் புத்துணர்ச்சி பெற்று செயல்படத் துவங்கி சிவன்- சக்தி அருளால் இன்று பல கோவில்களுக்கு நேரடியாக சென்று வீடியோ எடுத்து எனது ‘ஏ.ஏய்ஹய்ஹள்ஹம்க்ஷஹய்க்ஹய்’ எனும் யூட்யூப் சேனலில் பல திருக்கோவில்கள், மலைக் கோவில்களின் சிறப்புகள், மகத்தான சக்திகள் பற்றி விவரித்து கூறிவருகிறேன். இதனால் எனது யூட்யூப் சேனலுக்கு லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் கிடைத்து வருவதை பெருமையாக கருதுகிறேன்.''
● பரிபூரண கடவுள் அருளோடு நீங்கள் பயணித்த பக்தி அனுபவங்களை கூறுங்களேன்?
"என் தந்தை என் பெயரை "குருநாதன் ஞானசம்பந்தன். ஜி. ஞானசம்பந்தன் என்று பெயரை பதிவுசெய்து ஊக்கம் தந்தார். வைகைகரை சோழவந்தானில் நிலம் இருந்தது. வீடு இருந்தது. தந்தையார் ஓய்வு பெற்றபிறகு மதுரைவந்து குடியேறினோம். அப்போது ப்ளஸ் டூ கிடையாது. மதுரை தியாக ராசர் கல்லூரியில் பியூசி படிக்க சேர்ந்தேன். சயின்ஸ் குரூப் எடுத்தேன். அப்போது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டாலும் எல்லா பாடங்களின் பரீட்சையும் எழுதவேண்டும். இப்போது பெயில் ஆகும் பாடப்பிரிவு மட்டும் எழுதினால் போதும். எந்தக் கேள்விக்கு தவறாக எழுதி பெயில் ஆனோமோ அதை மட்டும் எழுதினால் போதும் என்று எதிர்காலத்தில் வந்தாலும் வரலாம் (சிரிப்பு).
நான் ஒவ்வொரு பேப்பராக எழுதி பெயிலாகி மீண்டும் முழுக்க எழுதி நான்கு வருடங்கள் அதில் கழிந்ததுதான் கொடுமையான சோதனைக் காலம். ஆனால் என் அப்பா கோபப்படாமல் என்னைத் திட்டாமல் நாலு வருடம் நான் போராடி தேர்ச்சி பெறும்வரை என்னைப் படிக்க வைத்ததை மறக்க முடியாது. ஒவ்வொரு வருடமும் நான் பாஸ் ஆக என் அப்பா, அம்மா, சகோதரிகள், எல்லாரும் ஒன்றுசேர பல்வேறு பிரார்த்தனைகள் செய்து, விரதமிருந்து தெய்வங்கள் மனமிறங்கி அருள்புரிந்ததால் நான்காவது வருடம் ஒருவழியாக நான் பியூசி பாஸ் செய்தேன்.
பியூசி தேர்ச்சிபெற நான் போராடிய காலத்தில் விவசாயம் பார்த்தேன். ஐந்து ரூபாய் சம்பளத்தில் வேலையும் பார்த்தேன். நான் தேர்வு எழுதிய நேரம் என் அம்மா திடீர் என்று இறந்துபோக நான் அவரது இறுதி சடங்குகளை முறைப்படி செய்துவிட்டு மொட்டை அடித்துக்கொண்டு அம்மாவை நினைத்து அழுதபடியே தேர்வு எழுதினேன். தெய்வ சக்தியால் தேர்ச்சியும் பெற்றேன். என் அம்மா மரணம் அடைந்து தெய்வமாகி என்னைத் தேர்வில் வெற்றிபெற வைத்தார் என்றுதான் சொல்வேன். பிறகு பி.ஏ., எம்.ஏ., தமிழ் படித்து தந்தைவழி யில் தமிழ் பேராசிரியர் ஆனேன்.
"சோழவந்தானூர் அரசஞ்சன்முகனாரின் தமிழ்ப்பணி' என்று பட்ட ஆய்வுசெய்து "முனைவர்' பட்டம் பெற்றேன்.
1985-ஆம் ஆண்டில் நான் படித்த தியாகராசர் கல்லூரியிலேயே தமிழ்ப் பேராசிரியர் ஆக தகைசால் பேராசிரியராக 29 ஆண்டுகள் பணிபுரிந்து கற்பித்தல் அனுபவமும் பெற்றேன்.'
● நீங்கள் சிறந்த பேச்சாளராக பட்டிமன்ற நடுவராக ஆனது எப்படி?
"எங்க சோழவந்தான் திரௌபதி கோவிலில் என் அப்பா மார்கழி மாதம்தோறும் திருப்பாவை- திருவெம்பாவை விளக்க சொற்பொழிவு ஆற்றிவந்தார். அது மார்கழி மாதம். அப்போது என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால், என்னை திரௌபதி கோவிலுக்கு சென்று திருப்பாவை- திருவெம்பாவை சொற்பொழிவு ஆற்றச் சொன்னார். அப்போது நான் எம்.ஏ படித்துக் கொண்டிருந்தேன். அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து அங்கு ஓடிய வைகை ஆற்றில் குளித்துவிட்டு அப்பாவிடம் திருப்பாவை- திருவெம்பாவை பற்றி முழுமையாக கேட்டறிந்துகொண்டு அதிகாலை 4.00 மணிக்கே மார்கழி குளிரில் நடுங்கியபடியே சொற்பொழிவாற்றினேன். நெற்றி நிறைய விபூதி வைத்த ஆண்களும், பெரிய குங்குமம் இட்ட பெண்களும் வந்து என் சொற்பொழிவை கேட்டு "தம்பி பேச்சு அற்புதம்' என்று பாராட்டி சென்றனர். இதை என் துவக்ககால பேச்சிற்கு கிடைத்த வரவேற்பு, மரியாதையாக கருதி மகிழ்ந்தேன். என் தந்தையிடம் பலரும் வந்து அவரிடமும் என் சொற்பொழிவைப் பற்றி பாராட்ட "மகனே நீ ஜெயிச்சிட்ட.. உனக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது' என்று அப்போதே அகமகிழ பாராட்டிவிட்டார்.
இன்று என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் எனது இப்போதைய பலதரப்பட்ட ஆன்மிக, சமூக, செயல்பாடுகளை பார்த்து பூரித்துப் போய் இருப்பார். கல்லூரியில் படிக்கும்போதே எட்டிற்கும் மேற்பட்ட நாடகங்களை நானே எழுதி நானே இயக்கி நடித்தும் இருக்கிறேன். "பாதையோர பட்டதாரிகள்' நாடகம் அதில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
பாரதியார் நூற்றாண்டு விழாவில் "பாஞ்சா- சபதம்' நாடகத்தை வசன நடையாக மாற்றி நான் இயக்கி அதில் சகுனியாகவும் நடித்து பாராட்டு பெற்றேன். பிற்காலத்தில் அதை புத்தகமாகவும் எழுதி வெளியிட்டேன். ஐம்பது ஆண்டு காலமாக பேச்சுத் துறை, எழுத்துத் துறையில் இருந்து வருகிறேன்.
பிரபல பட்டிமன்ற நடுவர்களின் தலைமையில் பேச்சாளராகவும் பல மேடைகளில் பேசி அந்த அனுபவங்கள் என்னை பட்டிமன்ற நடுவராக்கியது. இந்தியா மற்றும் வெளிநாடுகள் சென்று வித்தியாசமான தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்தி, இப்போது பட்டிமன்ற நடுவர் பணியையும் பலரும் பாராட்டும் வகையில் செய்து வருகிறேன்.
"சன்யாசம் போனாலும் குடும்பத்தோடுதான் போவேன்.
என் மனைவி பின்னால் வருகிறார்... கமலிடம் நான்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "எப்படி.. எப்படி.. சன்யாசம் போனாலும் குடும்பத்தோட போவீங்களா?'
-ரசிக்க வைக்கும் பேராசிரியரின் பேட்டி வரும் இதழிலும் தொடர்கிறது!
பேட்டி: விஜயாகண்ணன்