ஆதி சக்தியான அன்னை பராசக்தி பல திருவடிவங்கள் கொண்டு பல கோடிக்கணக் கான கோவில்களில் குடிகொண்டிருக்கிறார். நம்மை காத்தருளும் அம்மன்களுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொரு ஊர்களிலும் உருவானதற்கு பல்வேறு கதைகள் சம்பவங்கள் ஏராளம், ஏராளம்.
அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ஏழை குடும்பம். அந்த குடும்பத்தின் தலைவர் இறந்து போகிறார். அவருக்கு மனைவி ஒரு மகன். தந்தை இறந்ததால் தாயாரின் பராமரிப்பில் வளர்க்கப்பட்ட, அந்த சிறுவன் தாய் கஷ்டப்படுவதை எண்ணி யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு கிளம்பி, தமிழகத்திற்குள் வந்துவிட்டான். வந்தாரை வாழவைக்கும் நம் தமிழகம் அந்த சிறுவனையும் காப்பாற்றியது.
இவன் வேற்று ஜாதியைச் சேர்ந்தவன். அவனுக்கு வேதம் பற்றி படிக்க ஆவல். ஆனால் வேதம் சொல்லிக்கொடுக்கும் குரு இவனுக்கு எப்படி சொல்லிக்கொடுப்பார். ஊர்பேர் தெரியாது. ஆதரவற்றவன். அதனால் வேதம் படிக்கும் சிறுவர்களுக்கு சற்று தூரத்தில் அமர்ந்துகொண்டு சிறுவர்களுக்கு அவர்களின் குரு சொல்லிக் கொடுக்கும் வேத மந்திரங்களை, இவன் கேட்டு தனக்குத்தானே அதை மனப்பாடம் செய்துவந்தான்.
யாசகம் எடுப்பதற்காக அருகிலுள்ள வேறு ஒரு ஊருக்கு சென்றான். அங்கே ஆச்சாரமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அந்தணர் வீட்டின் முன்பு அந்த இளைஞன் யாசகம் கேட்டு வாசலில் நின்றான். அவனுடைய தோற்றத்தையும் முகப்பொலிவையும் கண்டு அந்த இளைஞனை தன் அருகில் அழைத்து அவனுடைய பூர்வீகம் குறித்து விசாரித்தார் அந்தணர்.
அப்போது அவன் தான் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார். தாய்க்கு பாரமாக இருக்கக்கூடாது என்று நான் ஊரைவிட்டு கிளம்பி வந்துவிட்டேன். கிராமங்களில் யாசகம் எடுத்து சாப்பிட்டுவிட்டு ஆற்றங்கரையோரமுள்ள பாழடைந்த மண்டபத்தின் அருகில் வேத பாடசாலை நடக்கிறது. அதை தூரத்தில் இருந்தே பார்த்து கற்றுக்கொண்டேன் என்று கூறி, வேத ஆகம நியமங்கள் குறித்து விலாவாரியாக அந்த இளைஞன் அந்தணரிடம் எடுத்துக் கூறினான். அவனது பேச்சு, அழகு, அறிவு புத்திக்கூர்மை, வேதம் கற்ற நுணுக்கம் ஆகியவற்றைக் கண்டு அந்தணருக்கு இளைஞன்மீது நம்பிக்கை ஏற்பட்டது.
இவனே தன் மகளுக்கு சிறந்த கணவன் என்று முடிவெடுத்த அந்தணர் வீட்டில் இருந்த மகளை அழைத்து, இளைஞனுக்கு விதவிதமாக சமைத்து விருந்து அளிக்க வேண்டும் என்று கூறினார். அவரது மகளும் தந்தை சொன்னபடி சமையல் செய்து இளைஞனை அமரவைத்து தந்தையும் மகளும் விருந்து பரிமாறினார்கள்.
அப்போது, அந்த இளைஞனிடம் அந்தணர் எனது மகளை உமக்குத் திருமணம் செய்துவைக்க விரும்புகிறேன். உமக்கு சம்மதமா என்று கேட்க மனசுக்குள் தான் வேற்று ஜாதியை சேர்ந்தவன். அதிலும் அசைவம் சாப்பிடும் குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை மறைத்து நல்ல அழகான குணமுள்ள பெண் மனைவியாக கிடைக்கிறாள்.
நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கக் கொடுத்து வைக்க வேண்டுமே என்று தனது பூர்வீகத்தை மறைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அந்தணர் தன் மகளுக்கும் அந்த இளைஞனுக்கும் திருமணம் செய்துவைத்தார்.
அவனது வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக போய்க் கொண்டிருந்தது. இருந்தும் என்றாவது ஒருநாள் தனது தாயார் தம்மை தேடிக்கொண்டு வந்துவிடுவாளோ என்று அவனது, உள்மனதில் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. தினசரி அந்தணரோடு கோவில்களுக்கு சென்று பூஜைகள், யாகங்கள் என செய்துவந்தான். இருந்தும், அவ்வப்போது ஊருக்கு வரும் வழியில் நின்று பார்ப்பதுண்டு. ஒருநாள் அவனது எண்ணம் உண்மையாகிவிட்டது. அவனது தாய் தூரத்தில் அந்த ஊரை நோக்கி வந்துகொண்டிருந்தாள். தாயைப் பார்த்த சந்தோஷம் ஒரு பக்கம். தான் வேற்று சமூகத்தை சேர்ந்தவன் என்பது தனது மாமனார், மனைவிக்கு தெரிந்துவிட்டால் மிகப்பெரும் விபரீதமாகி விடுமே என்ற கவலை ஏற்பட்டது. ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு தாயை எதிர்கொண்டு சந்தித்தான். அப்போது தனக்கு திருமணமான தகவல்கள் மற்றும் அந்த குடும்பத்தின் தந்தையும் மகளும் அந்தண குலத்தவர்கள். அதனால் உன்னை அவர்கள் வீட்டுக்குள் அழைத்துச் செல்ல அச்சமாக உள்ளது. எனவே நான் சொல்வதை நீ உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறிய அந்தத் தாயின் மகன், என்னோடு நீ இருக்கும்வரை நம்முடைய கலாச்சாரத்தை பற்றி, குலத்தைப் பற்றி, பிறப்பு பற்றி யாரிடமும் எதுவும் கூறக்கூடாது. உணவு முறைகளையும் மாற்றிக்கொள்ள வேண்டும். நம்மைப் பற்றிய எந்த விஷயமும் வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அங்கே சைவ சாப்பாடு. அசைவம் கேட்கக் கூடாது. இவற்றையெல்லாம் காப்பாற்றவேண்டுமானால் நீ என்னோடு இருக்கும்வரை வீட்டில் நீ ஊமையாக நடிக்கவேண்டும். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி தன் மாமனார் வீட்டுக்குத் தாயை அழைத்துச் சென்றான் இளைஞன்.
அந்தப் பெண்ணின் தோற்றத்தைப் பார்த்து அந்தணருக்கு ஒருவித சந்தேகம் ஏற்பட்டது. அப்போது இளைஞன் எங்கள் தாய் கிராமத்து வாழ்க்கை முறையில் வாழ்ந்தவள். அவரது நடை உடை பாவனைகளில் மாற்றம் தெரியும் என்று கூறி சமாளித்தான். அந்தணரும் அதை ஒப்புக்கொண்டு மகளை அழைத்து உனது மாமியாருக்கு நல்ல சமையல் செய்து வடை, பாயசத்துடன் விருந்துக்கு ஏற்பாடு செய் என்று கூறினார். அவரது மகளும் மாமியாரை கண்ட சந்தோஷத்தில் விதவிதமான காய்கறிகளைக் கொண்டும் வடை, பாயசம் என அமர்க்களமாக பரபரப்பாக சமைத்துக்கொண்டிருந்தார். இவர் சமையலறையில் இருந்தபோது தாயும், மகனும் வேறு ஒரு அறையில் ரகசியமாக பேசிக்கொண்டிருந்தனர். சமையல் முடிந்து மருமகள் மாமியாருக்கு தலைவாழை இலை போட்டு பதார்த்தங்களையும் உணவு வகைகளையும் பரிவோடு பறிமாறியபடி அடுப்படிக்கும் சாப்பிடும் இடத்திற்கும் நடந்துகொண்டிருந் தாள். அப்போது அந்த இளைஞனின் தாய் மகனிடம், இது என்னப்பா சாப்பாடு ஒரு கருவாடு, மீன், மாமிசம் இல்லாத, இந்த சாப்பாட்டை யார் சாப்பிடுவார்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தாள். அதை காதில் வாங்கியபடி வந்துவிட்டாள் மருமகள். இவர்கள் என்ன அசைவ சாப்பாடு பற்றி பேசிக்கொள்கிறார்கள். அப்படியானால் இவர்கள் அசைவம் சாப்பிடும் வேற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் போலும். மேலும் தாய் ஊமை என்று கணவர் கூறினார். இந்த அம்மாள் பேசுகிறார். இதில் ஏதோ சதி நடந்திருக்கிறது என்று தெரிந்து கொண்டாள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/28/amman1-2026-02-28-17-58-02.jpg)
அந்தணரின் பெண் கணவனைப் பார்த்து கூச்சல் போட்டாள். நீ வேற்று சமூகத்தைச் சேர்ந்தவன். என்னையும் என் அப்பாவையும் பொய் சொல்லி ஏமாற்றி என்னை திருமணம் செய்துகொண்டாய் என்று கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு தலைவிரி கோலமாக ஒரு மூலையில் அமர்ந்து கொண்டார். அந்த நேரம் அவரது தந்தை வீட்டுக்குள் நுழைந்தார். தனது மகள் இருந்த கோலத்தைப் பார்த்து ஏன்? என்ன? நடந்தது என்று கேட்டபடி மாப்பிள்ளைக்கும் சம்பந்திக்கும். அவரே உணவை பரிமாறினார்.
பிறகு மகளிடம் பொறுமையாக ஏன் வீட்டுக்கு வந்த மாமியாரை அவமதிக்கிறாய் என்று கேட்டார். அப்போது அந்தப் பெண் உன் மாப்பிள்ளைக்கு ஒரு சோதனை வைக்கிறேன். அதில் அவர் வெற்றிபெற வேண்டும் என்று கூறியவள்,
"இந்த வீடு நிறையும்படி பொருட்களை கொண்டு நிரப்பவேண்டும் அதை செய்து காட்டச் சொல் என்று கேட்டாள்'' அப்படியே செய்ய சொல்கிறேன் என்று கூறிய அவளது தந்தை, மருமகனை பார்க்க அவனும், இந்த வீட்டை நிரப்பிக் காட்டுகிறேன் என்று கூறியபடி, தாயுடன் வெளியே சென்றான். அவனிடமிருந்த பணம் தாய் சேமித்திருந்த பணம் அனைத்தையும் ஒன்றுசேர்த்து நகரத்திற்குச் சென்று கடைகளில், கம்பு, சோளம், அரிசி, கேழ்வரகு போன்ற தானியங்களை மூட்டை மூட்டையாக கொண்டுவந்து வீட்டுக்குள் கொட்டி நிரப்பினான். வீடு முழுவதும் தானியங்களால் நிறைந்து விட்டது. மனைவியைப் பெருமிதத்தோடு பார்த்தான் கணவன். அவளுக்கு வந்தது பெரும் கோபம். இதுவல்ல நான் கேட்டது என்று கத்திக்கொண்டே தானியங்களை வாரி இறைத்தாள். இதனால் தந்தைக்கு அவளது செயல் அவனது கணவன்மீது ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அந்த இளைஞன் அப்போது மனைவியைப் பார்த்து, நான் வேறு என்ன செய்து வீட்டை நிரப்பமுடியும் என்று கேட்க, சமையலறைக்கு சென்றவள், அங்கிருந்த நெருப்பை எடுத்துவந்து அவன் தலையில் கொட்டினாள், மூடனே ஒரு வீட்டை நிரப்புவது பொருட்கள் அல்ல;
ஜோதி வடிவமான ஒளி தீபம்தான். ஒளிதான் வீடு நிறைந்த பொருள். நீ ஒரு பொய்யன். உன்னால் எப்படி அதை செய்ய முடியும். நீ என்னையும், என் தந்தையையும் ஏமாற்றி என்னை மணம் செய்துகொண்டாய் என்று, கோபமும் ஆத்திரமும் அதிகரிக்க அவள் தனக்குதானே தீ வைத்து எரித்துக்கொண்டு இறந்து போனாள்.
அந்தப் பெண் கோபத்தில் வாரி இறைத்த கம்பு, சோளம், மல்லி, நெல் போன்ற தானியங்கள் மனிதர்கள் உடலில் அம்மையாக தோன்றுவதற்கு, இதுவே காரணம் என்று விளக்குகிறது இந்த அம்மன் கதை!
வேறு ஒரு கதைப்படி ஜமதக் முனிவரின் மனைவி ரேணுகா தேவி பதிவிரதத் தன்மை யோடு வாழ்ந்துவந்தார். இவர் தினசரி கணவர் பூஜை செய்ய ஆற்றுக்குச் சென்று குளித்து விட்டு வெறும் கைகளால் தண்ணீர் சுழல் போல சுற்றும்போது தானே ஒரு குடம் உருவாகி, அதில் நீர் நிறைந்துவிடும், அதை எடுத்துச் சென்று கணவருக்கு கொடுக்க அவர், அந்த தண்ணீரைக்கொண்டு, இறைவனுக்கு பூஜை செய்துவந்தார். ஒருநாள் ரேணுகாதேவி கணவர் பூஜை செய்யவேண்டி ஆற்றுக்குச் சென்றவர். பூஜை செய்ய ஆற்றுத் தண்ணீரை கைகளால் சுழற்றும்போது ஆகாயத்திலிருந்து ஒரு அழகான ஆண் உருவம் தண்ணீரின் பிம்பத்தில் தெரிந்து அதைப் பார்த்த ரேணுகாதேவி "இவ்வளவு எழிலுடைய ஆண்களும் இருக்கிறார்களா'' என்று மனதிற்குள் நினைத்தார். இப்படி எண்ணியதன் காரணமாக அவரது கற்புக்கு களங்கம் நேர்ந்தது. தண்ணீரில் அவரால் குடத்தை உருவாக்க முடியவில்லை. இந்த சம்பவம் முனிவருக்கு தெரியவந்தது.
மிகுந்த கோபம் அடைந்த ஜமதக் முனிவர், தனது மகன் பரசுராமனை அழைத்து மனதால் கற்பிழந்த உன் தாயைக் காட்டுக்கு அழைத்துச் சென்று அவரது தலையை துண்டித்துவிட்டு வா என்று கட்டளையிட்டார். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றபடி தாயின் தலையை துண்டிக்க மகன் புறப்பட்டார். அப்போது அவர் தன் தந்தையிடம் "தங்கள் ஆணைப்படி நான் நடந்துகொள்கிறேன். நான் திரும்பி வந்தவுடன் நான் கேட்கும் வரத்தை நீங்கள் தட்டாமல் தரவேண்டும்' என்று நிபந்தனை விதித்தார். முனிவரும் அதற்கு சம்மதித்தார். பரசுராமர் தாயைக் காட்டுக்கு அழைத்துச்சென்று அவரது தலையை துண்டித்துவிட்டார். தாயின் தலையுடன் வீட்டுக்கு வந்த பரசுராமர் தனது தந்தையான ஜமதக் முனிவரிடம் "தாங்கள் எனக்கு அளித்த கட்டளைப்படி தாயின் தலையை துண்டித்துவிட்டேன். இதோ அவர்தலை. இப்போது நான் கேட்ட வரத்தை தாங்கள் தர வேண்டும். அந்த வரம் வேறு ஒன்றும் இல்லை. எனது தாய் மீண்டும் உயிருடன் வரவேண்டும்' என்று கேட்டார். முனிவரும் ஒப்புக்கொண்டபடி பரசுராமரிடம், உன் தாயின் தலையை வெட்டப்பட்ட உடலுடன் ஒன்றுசேர். அப்போது அவர் மீண்டும் உயிர் பிழைத்து வருவார் என்று கூறினார்.
இதைக்கேட்ட பரசுராமன் சந்தோஷ பரபரப்பில் ஓடினார். அதே நேரம் வேற்று சமூகத்தைச் சேர்ந்த ஒரு கணவன் தன் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக தன் மனைவியின் தலையை வெட்டிவிட்டான். தலையில்லாமல் கிடந்த பெண்ணின் உடல் கிடந்த இடத்திற்குச் சென்ற பரசுராமர் தனது தாயின் தலையை, அந்தப் பெண்ணின் உடலோடு ஒட்டிவிட்டார் வெட்டப்பட்டது, தாயின் உடல்தான் என்பதை உற்று நோக்காமல் வேறு பெண் உடலுடன் தன் தாய் தலையை பொருத்தியதால் தாய் உயிர் பெற்று எழுந்தார். அங்கே தலை மட்டும் தாயுடையது; உடல் வேறு பெண்ணுடையது. ஏன் இப்படி நடந்தது என்று தாயாரை பார்த்து கேட்க, அவர் கூறினார். மகனே விதியை யாராலும் வெல்ல முடியாது. இந்த உடல் என்னை போன்ற பதிவிரதையின் உடல்தான். அவளது கணவன் தவறாக மனைவிமீது சந்தேகப்பட்டு தலையை துண்டித்துவிட்டான். இனிமேல் மாற்ற முடியாது. எனவே இனிமேல் மனைவியை வெறுத்து ஒதுக்கும் ஆண்களை ஒதுக்குவேன். அவர்கள் படும் துன்பத்தை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து என்னை வணங்கும்போது அவர் களை விட்டுவிலகுவேன். மேலும் ஆண்- பெண், இருவரும் ஒன்று கூடும்போது ஏற்படும் வாடையை வெறுப்பேன். எனவே என்னை வணங்குபவர்கள்ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக என்னை வைத்து வணங்க வேண்டும். அங்கே நான் அம்மனாக இருந்து அவர்களுக்கு அனைத்து நன்மை களையும் செய்வேன் என்று கூறினார். அவர்தான் பல்வேறு பெயர்களில் அம்மனாக கோவில் கொண்டுள்ள ஆதிசக்தியின் சொரூபம்.
அம்மன் கோவில்களுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. அன்னை பராசக்தி பல திருவடிவம் கொண்டிருந்தாலும், அவர் பல்வேறு வடிவங்களில் உருவாகியுள்ளார். பல ஊர்களில் புற்று மண்ணால் உருவான அம்மன் சன்னதிகள் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு அம்மன் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அகரம் கிராமத்தில் ஆண்டிச்சி அம்மன் என்ற பெயரில் பக்தர்களை பாதுகாத்துவருகிறார்.
தற்போது இவ்வாலயத்தில் புற்றுதான் மூலவர். அவருக்குமுன்பு அம்மனை சிலை வடிவிலும் பிரதிஷ்டை செய்துள்ளனர். மேலும் இந்த புற்று வடிவான ஆண்டிச்சி அம்மன் நாகப்பாம்பு வடிவில் கோவிலுக்குள் அடிக்கடி வந்து செல்கிறார். உண்மையான பக்தி வழிபாட்டில் உள்ளவர்களின் கண்களுக்கு அவர் காட்சிதருகிறார் என்கிறார்.
இக்கோவில் பரம்பரை பூசாரி குமரவேல், மேலும் இந்த ஆண்டிச்சி அம்மனுக்கு ஏவல் தெய்வமாக கொங்கு நாட்டு கருப்பையா தன் குதிரை வாகனங்களோடு கம்பீரமாக அம்மனின் கட்டளையை செயல்படுத்தி வருகிறார்.
அகரம் ஆண்டிச்சி அம்மனை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குலதெய்வமாக வந்து வழிபட்டு செல்கிறார்கள். இவ் வாலயத்து அம்மனை வணங்கினால் கேட்டது கிடைக்கும். நினைத்தது நிறைவேறும். இந்த அம்மனுக்கு ஆடி மாதம் மிகச் சிறப்பான முறையில் திருவிழா நடைபெறுகிறது.
அமைவிடம்: அரியலூர் செந்துறை நெடுஞ்சாலையில் செந்துறையில் இருந்து மூன்று கிலோமீட்டர். அரியலூரில் இருந்து 17 கிலோமீட்டர் ஆண்டிச்சி அம்மன் அருள் பாலித்து கொண்டிருக்கிறார். அனைவரும் வருக அம்மனின் அருள் பெறுக. அம்மனின் ஆலயம் மிகவும் சிதிலமடைந்தி ருந்தது. ஊர் மக்களும் குலதெய்வ வழிபாடு செய்யும் குடும்பத்தினரும் ஒன்றிணைந்து மிகப் பிரம்மாண்டமான அளவில் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவில் அம்மனின் ஆலயத்தை புனரமைப்பு செய்துள்ளனர். விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 97861 11809
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/28/amman-2026-02-28-17-57-51.jpg)