யூட்டாவில் நினைவுச்சின்ன பள்ளத்தாக்கைக் கண்ட பிறகு மாலை சுமார் 6:30 மணியளவில் அங்கிருந்து ஃபிளாக் ஸ்டாஃப் (Flagstaff) நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். ஒரு சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே நேர வேறுபாட்டின் காரணமாக கடிகாரம் மீண்டும் அன்றைய மாலை 5.30 மணியைக் காட்டியது எங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒரு மணி நேரம் பரிசாகக் கிடைத்தது போலத் தோன்றியது. முக்கிய சாலையில் மேற்கொண்ட எங்களது பயணத்தின் வழியில், அப்பகுதியின் மாநிலப் பூங்காவை காண நேர்ந்தது. இருட்டுகின்ற நேரமாகையால் பூட்டி வைத்திருந்தார்கள். வெளிப் புறத்தில் பார்வையாளர்களுக்காகவென இருந்த திறந்தவெளியில் நின்றவாறு எதிரே இருந்த மலைச் சரிவைக் கண்டோம். அறிவிப்புப் பலகையில் அது ஒரு தலைகீழான மலை என்று எழுதப்பட்டிருந்தது.
மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவான மென்மையான மணற்கற்களாலான பீடபூமியில் உறைபனியும் வெப்பநிலை மாற்றமும் இங்குள்ள பாறைகளை சுருங்கச் செய்தும் விரியச் செய்தும் மாற்றங்களுக்கு உட்படுத்தியிருக்கிறது. இங்கு பாய்கின்ற நீரால் உருவான பள்ளத்தாக்குகளில் வளர்ந்திருக்கின்ற தாவரங்களை நாங்கள் தரைப்பகுதியிலிருந்து கீழாகக் கண்டு கொண்டிருந்தோம். மிகவும் ஆழமான மற்றும் குறுகலான பள்ளத்தாக்கில் சூரிய ஒளி குறைவாக ஊடுருவுகிறது. எனவே பெய்கின்ற மழை குறைவாக ஆவியாகி குளிர்ச்சியானப் பகுதி கீழாகவும் வெப்பமான பகுதி அகண்டவாறு மேற்புறத்திலும் இருப்பதால் இதனை தலைகீழ் மலை என்கிறார்கள். ஆட்களே இல்லாத இடத்தில் நரி போன்ற சிறு பிராணிகள் கூட்டமாக நகர்ந்து சென்றன. அவ்விடத்தைப் பற்றி வேறேதும் அறிய இயலாததால் பிறகு அங்கிருந்து கிளம்பி விட்டோம்.
ஃப்ளாக் ஸ்டாஃபைக் (Flagstaff) கடந்து அரிசோனாவின் டெம்பி நகரை அடைய இன்னும் 100 கிலோமீட்டர்கள் தொலைவு இருந்தபட்சத்தில் இரவு சுமார் 7.30 மணி அளவில் நாங்கள் செல்லும் வாகனத்தின் மேற்புறக் கூரையின் வழியே வானத்து நட்சத்திரக் கூட்டங்களை மிக நெருக்கமாகக் காண நேர்ந்தது. மாசற்ற இருண்ட வானில் சாதாரண கண்களுக்குத் தெரிகின்ற பால்வெளியின் ஒரு பகுதி அது என்பதை உணர்ந்தவர்களாக விரைவில் வண்டியை நிறுத்திவிட்டு, அதன் பின்புறத்தில் சிவப்பு விளக்கை பாதுகாப்புக்காக ஒளிரச் செய்து விட்டு கீழே இறங்கினோம்.
புறப்பகுதியிலிருந்த ஒளிக்கு ஏற்றவாறு கண்கள் தகவமைக்கும் வரை சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் விண்மீன்களை உற்று நோக்கினோம். இந்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய செல்வந்தன் இயற்கைப் பேரழகு படைத்த இப்பரந்தவெளிதான். கடற்கரை மணற்துகள்களைப் போல நெருக்கமாகப் பரவியிருந்த விண்மீன்கள் கற்றைகளாகவும் காட்சியளித்தன. அவை யாவும் அண்டப் பெருவெளியின் அழகின் உச்சத்தை தொட்டுக் கொண்டிருந்தன. அடிவானில் ஒளிக்கதிர்களை பிரதிபலித்துக் கொண்டிருந்த முக்கால் நிலவும், முழு நிலவை மஸ்லின் துணியால் கால் பகுதியை போர்த்தினால் எவ்வளவு மறைபடுமோ அவ்வளவு மட்டுமே தனது ஒளியை உள்ளடக்கியவாறு, பால்நிலா தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. குளிர் நிலவின் வெளிச்சம், அதன் கறைகளைக் கூட குறைவாகக் காட்டும்படி ஒளி வீசி, அதன் அருகேயிருந்த நட்சத்திரங்களையும் தனக்குள் கரைத்துக் கொண்டது.
இரவு முழுவதும் உறங்காமல் தன் வீட்டுச் சாளரம் வழியே வானத்து நட்சத்திரங்களை உற்று நோக்கி, அதன் நகர்வுகளை ஓவியமாக்கிய வான்காவின் தூரிகைகளை இன்று புகைப்படக் கருவிகள் தனக்குள் வைத்திருக்கின்றன. அவற்றை அதற்குரிய தாங்கியில் நிலையாக வைத்துவிட்டு இரவு நேரத்தில் காத்திருந்தால் விண்மீன் கூட்டங் களின் நகர்வுகளை அவை பதிய வைத்து வரிகளாக வரைந்து கொடுத்துவிடுகின்றன. அப்படியான முயற்சியையும் மேற்கொண்டு படங்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இல்லம் நோக்கி விரைந்து நகர்ந்தோம்.
இங்குள்ள பாலைவனப் பகுதிகளில் இயற்கை ஆர்வலர்களுக்காக சிறப்பாக தேர்ந்தெடுத்து அனுமதிக்கின்ற இடங்களில், இரவு நேரத்தில் கூடாரங்கள் அமைத்து தங்கிக் கொள்ளலாம்.
ஆர் வி என்று அழைக்கப்படுகின்ற (recreation vehicle) வாகனங்களில் தங்களுக்கு அடிப்படையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொண்டு பயணிக்கிறார்கள். அந்த வாகனத்திலேயே சமைத்துக் கொள்வதும் உறங்கிக் கொள்வதும் உடைமாற்றிக் கொள்வதுமென இல்லம் போலவே பயன்படுத்துகிறார்கள். முன்னதாக திட்டமிட்டபடி மாலைச் சூரியன் மங்கும் நேரத்தில் வந்தடைந்தார்கள் என்றால் இரவு முழுவதும் விடிய விடிய நட்சத்திரங்களைக் கண்டு ரசித்து இயற்கையோடு ஒன்றாக வாழ்கிறார்கள். சிறிது நேர உறக்கத்தையும் பாதுகாப்பாகவே உணர்கிறார்கள்.
அரசாங்கம் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டிருக்கும் அப்படியான இடங்களில் தங்குவதற்கு, முன் அனுமதி பெற அதற்காக சிறு தொகையைக் கொடுத்து முன் பதிவு செய்து கொள்கிறார்கள்.
நகர வாழ்க்கையிலிருந்தும் அழுத்தமான பணிகளிலிருந்தும் விடுபடுவதற்கு சிறந்ததொரு மாற்றாக இதனைக் கருதுகிறார்கள். இதுவரை நாங்கள் சென்று பார்த்த ஒவ்வொரு இடத்திலும் இப்படியானதொரு பகுதியை அவர்கள் ஒதுக்கியிருந்தார்கள். பாலைவனப் பகுதியான அரிசோனாவில் உயரமான கட்டிடங்கள் எதுவுமில்லை என்பதாலும் கட்டிடங்களே இல்லாத பகுதிகளும் பரந்து விரிந்து நிறைய விரவியிருப்பதாலும் உதயசூரியன் இங்கு மிகுதியான அழகில் தனது கதிர்களை விரிக்கிறான்.
மெல்ல மெல்ல மேலெழுந்து கதிர்கள் மேலும் பரவி அடிவானில் முழுமையாக ஒளிரும் வரை விண்ணில் ஏற்படுகின்ற நிறமாற்றங்கள், சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சளென வகை வகைகளாக காட்சிக் கொடுத்து, உச்சி வேளையில் ஊதா நிறத்தை தன்மீது சீராகப் பரப்பிக் கொண்டு, பால் போன்று தூய்மையான நிலையில் வானம் இருக்கிறது. இவற்றின் பின்புலத்தில் காட்சியாகத் தெரிகின்ற பஞ்சு போன்ற மேகங்களும் அப்பழுக்கற்று தூய வெண்மையைக் கொண்டிருக்கின்றன. பாலைவனத்தில் மழைப் பொழிவு குறைவு என்பதால் கரு மேகங்கள் குறிப்பிட்ட மாதங்களில் எப்பொழுதாவதுதான் தோன்றுகின்றன.
இப்படியான அழகைக் கொண்ட அரிசோனா மாகாணம், உலகம் முழுவதும் உதிக்கின்ற சூரியனை தனது இடத்தில் உதிக்கும் பொழுது தனித்தன்மையுடன் கொண்டாடுகிறது. இதனை இங்கு வாழ்ந்த பூர்வீகக் குடிகளும் கொண்டாடினார்கள் என்பதற்கு அடையாளமாக அவர்கள் வாழ்ந்திருந்த இடங்களில் இன்றுமுள்ள பாறைகளில் சூரியனின் வடிவங்களை செதுக்கியிருக்கிறார்கள் என்பதைக் கொண்டு அறிய முடிகிறது. இம்மாகாணத்தின் கொடியிலும் சூரியனே இடம் பெற்றிருக்கிறது. மக்கள் நெருக்கடியற்ற இப்பரந்த வெளியில் எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி தன் கதிர்களை பரவலாக விரித்து பகலவன் இப்பகுதி முழுவதையும் அழகாக்குகிறான்.
மனிதர்களின் ஆளுமை குறைவாக இருக்கின்ற இந்த மாகாணத்தில் இயற்கை ஓங்கி ஒலிக்கிறது. வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியிலுள்ள நியூயார்க், நியூஜெர்சி போன்ற நகரங்கள் அதிக அளவு மின்சாரத்தை பயன்படுத்தும்படி மனித இயக்கம் முழுவதும் ஆட்கொள்ளப்பட்டு மின்வெட்டு நடக்கின்ற நாட்களில் இயக்கமே நின்று விடுகின்ற நிலையில், அவர்கள் இருளைப் பற்றி சிந்திக்க வாய்ப்பு குறைவு. அதே நேரத்தில், அதற்கு இடப்புறமாக மேற்குப் பகுதியிலுள்ள பாலைவன மாகாணங்களான கலிஃபோர்னியாவின் ஒரு பகுதி, யூட்டா, நியூ மெக்சிகோ, அரிசோனா போன்றவை இருளின்போது இருக்கின்ற புவியின் வாழ்க்கையை மிகவும் மதிக்கிறார்கள். இயன்றவரை அதனைப் பாதுகாத்து ரசிக்கவும் செய்கிறார்கள். காற்றின் மாசு இப்பகுதியில் குறைவாகவே இருக்கிறது. மின் விளக்குகளின் ஒளி உமிழ்வை மட்டுப்படுத்தி இருளைப் போற்றுகிறார்கள்.
பாலைவனப் பகுதியில் இரவிலேயே உயிரினங்கள் அதிகமாக வெளியே நடமாடுவதாக இப்பகுதியில் உள்ள செய்திகள் குறிப்பிடுகின்றன. பகலில் அதிக வெப்பநிலையில் அவை இடுக்குகளிலும் பொந்துகளிலும் தங்கி இருக்கின்றன. பகல் நேர வெளிச்சத்தில் அவ்வளவு எளிதாக எந்த உயிரினங்களையும் காண இயலவில்லை. இதுவரை சென்ற இடங்களில் காண நேர்ந்தவையாக காக்கைகளைப் போன்ற ரேவன் பறவைகள், ஒரு சில சிட்டுக்குருவிகள், சாலையோரங்களில் மிகவும் அரிதாக மேய்ந்து கொண்டிருந்த ஒரு சில மாடுகள், சில எண்ணிக்கையிலான ஆடுகள், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நரிக் கூட்டங்கள், சில வினாடிகளில் ஓடி மறைந்த ஒன்றிரண்டு முயல்கள் ஆகியவற்றை மட்டுமே இயற்கையாக மண்ணில் பிறந்த உயிரிகளாகக் காண நேர்ந்தது.
இவையல்லாமல் வளர்ப்புப் பிராணிகளாக வகை வகையான நாய் இனங்களை ஒவ்வொருவரும் வைத்திருக்கிறார்கள். பூங்காக்களில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட குளங்களில் வெண்ணிற வாத்துகளையும் கருமை கலந்த பச்சை நிற வாத்துகளையும் கண்களுக்கு அழகாக இருக்கின்ற அவற்றை மனமகிழ்ச்சிக்காக வளர்க்கிறார்கள். ஓசை எழுப்புகின்றபடி எந்த உயிரினங்களையும் அதிக எண்ணிக்கையில் காண இயலவில்லை. மனிதர்களின் நெருக்கடி யும் அங்கில்லை. வாகனங்களும் ஒலியை எழுப்புவதில்லை. அதன் ஒலிப்பான்கள் ஒலித்ததை அங்கிருந்தவரை கேட்க நேரவேயில்லை. காற்றின் ஓசை கூட எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. எனவே நீண்ட நேர நிசப்தம் நிரம்பி வழிகிறது. மழை பெய்தால் கூட காற்றின் ஈரப்பதம் 40 சதவீதத்தை தாண்டுவதில்லை.
ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிகின்ற புட்டிகளில் அடைக்கப் பட்ட உணவுப் பொருள் கள் ஏராளமாக விற்கப் படுகின்றன. பயன்படுத்திய பிறகு அவற்றை இவர்கள் முறையாக அப்புறப்படுத்தி விடுகிறார்கள். சாலையில் எறிந்து விட்டுச் செல்கின்ற குப்பைகள் எங்குமே இல்லை. எதிரெதிரே பார்ப்பவர்கள் புன்னகைப்பதை தவறாமல் செய்கி றார்கள். புதியவர்கள் உரையாடுவதை ஒருபோதும் காண இயலவில்லை. அவரவர் வேலைகளை அவரவர் செய்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வழி தெரியாமலோ அல்லது வேறு ஏதேனும் விவரங்களைக் கேட்டாலோ மிகவும் ஆர்வமுடனும் அக்கறையுடனும் நமக்கு பதிலளிக்கிறார்கள். நாம் அறிந்து கொண்டோம் என்பதை உறுதி செய்த பிறகே அவ்விடம் விட்டு நகர்கிறார்கள்.
இவற்றையெல்லாம் அரிசோனாவின் டெம்பியிலுள்ள எங்களது இல்லத்திற்கு இரவில் வந்து சேரும் வரை மனம் அசை போட்டுக் கொண்டிருந்தது. நடுவில் ஒரு மெக்சிகன் உணவு விடுதியில் சிவப்பு மிளகாயில் சமைத்த காரசாரமான இறைச்சியும் பீன்ஸும் கலந்த உணவினை ஒருவருக்கு 30 டாலர் வீதம் கொடுத்து வாங்கி உண்டோம். அத்துடன் வெண்ணெய், சாக்லேட், வேர்கடலை போன்றவையும் கலந்திருந்தன. பரிட்டோ - சிப்போட்லே ஆகிய உணவுகளை 20 டாலர் மதிப்பில் பெற முடிந்தது.
அமெரிக்கர்களின் கட்டிடங்கள் பழுப்போ வெள்ளையோவென கண்களுக்கு எரிக்காத நிறங்களில் இருந்தனவென்றால், மெக்சிகனது கட்டிடங்களும் உணவு விடுதிகளும் அனைத்து விதமான அடர்த்தியான நிறங்களையும் கலப்படமாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் வரைந்திருந்த ஓவியங்கள் கண்களை எரித்தன .நாங்கள் பயணித்த பாதையில் கண்ட ஒரு மலை மட்டும் தலைகீழாக இல்லை. நாம் அறிந்த பல நிகழ்வுகள் இங்கு நமக்கு தலைகீழாக இருக்கின்றன என்று எண்ணியவாறு இல்லம் புகுந்தோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/07/hill-2026-03-07-16-52-43.jpg)