முதல் வெளிறிய நட்சத்திரம் பள்ளத்தாக்கை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. மேலே...
அளவற்ற உயரத்திற்கு ஆல்ப்ஸ் மலை இருந்தது. வெண்ணிற பனி மேலே... சுற்றிலும் நிழல்... பள்ளத்தாக்கின் ஆழத்தில் இருட்டு...
மான்களை வேட்டையாடும் மனிதனின் ஆடைகளை அணிந்திருந்த துணிச்சல் நிறைந்த ஒரு மனிதன் பாதையைக் கடந்து சென்றான். அவனுடைய முகம் சூரியனும் காற்றும் பட்டு பிரகாசமாக இருந்தது. அவனுடைய கண் முழுமையாக திறந்தும் தெளிவாகவும் இருந்தது.
அவனுடைய கால் வைப்பு சுறுசுறுப்பாகவும் உறுதியாகவும் இருந்தது. ஒரு பவேரியன் வேட்டைப் பாடலின் சில வரிகளை அவன் பாடிக்கொண்டிருந்தான்.
மலையிலிருந்த பூச்செடியிலிருந்து பறித்த ஒரு வெண்ணிற மலரை அவன் தன் கையில் வைத்திருந்தான். திடீரென அவன் நின்றான்.
பாடல் உடைந்து அவனின் உதடுகளிலிருந்து கீழே விழுந்தது. சுவிஸ் விவசாயிகளின் ஆடைகளை அணிந்திருந்த ஒரு இளம்பெண் அவன் நடந்து சென்ற பாதையின் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்தாள்.
அவளின் கையில் முழுமையாக நீர் நிறைந் திருந்த ஒரு சிறிய குடம் இருந்தது.
அவளுடைய கூந்தல் வெளிறிய பொன் நிறத்தில் இருந்தது. அது அடர்த்தியாக அவளின் அழகான இடைக்குக் கீழே தொங்கிக்கொண்டிருந்தது.
அவளின் கண்கள் மாலை ஒளியில் ஒளிர்ந்தன.
அவளின் உதடுகள் இலேசாகப் பிரிந்து, பிரகாசிக்கும் வெண்ணிற பற்களை வெளிக்காட்டின.
ஒரு பொதுவான உணர்வால் தூண்டப் பட்டதைப்போல, அந்த வேட்டைக்காரனும் அந்த இளம்பெண்ணும் நின்றார்கள். ஒருவரையொருவர் கண்களால் அவர்கள் பார்த்துக்கொண்டார்கள்.
அந்த மனிதன் முன்னோக்கி வந்து, இறகுகளாலான தன் தொப்பியைக் கழற்றி, தலையைக்குனிந்து சில ஜெர்மானிய வார்த்தைகளைக் கூறினான்.
அந்த இளம்பெண் நிறுத்தி நிதானமாகவும் தாழ்ந்த குரலிலும் பதில் கூறினாள்.
மரங்களுக்கு மத்தியில் மறைந்திருந்த ஒரு காட்டேஜின் கதவு திறந்தது.
தெளிவின்றி பல குரல்கள் கேட்டன. இளம்பெண்ணின் கன்னங்கள் சிவந்தன. அவள் போக முற்பட்டாள். ஆனால், செல்லும்போது, அவள் தன் கண்களைத் திருப்பி அந்த வேட்டைக்கார மனிதனையே பார்த்தாள். அவளுக்குப் பின்னால் ஒரு எட்டை எடுத்து வைத்த அவன், அவளைத்தடுத்து நிறுத்துவதைப்போல தன் கையை நீட்டினான். அவள் தன் மார்புப் பகுதி யிலிருந்து ஒரு கொத்து நீல நிற மலர்களை எடுத்து அவனை நோக்கி எறிந்தாள். அவை கீழே விழ, அவன் அவற்றை எடுத்தான். சற்று மெதுவாக ஓடி, தான் வைத்திருந்த மலரை அவளின் கையில் கொடுத்தான். அவள் அதை தன் மார்புப் பகுதியில் சொருகிக்கொண்டாள். பிறகு... மலையில் வீசும் காற்றைப் போல அவள், குரல்கள் வந்து கொண்டிருந்த காட்டேஜுக்குள் ஓடினாள்.
வேட்டைக்காரன் சிறிது நேரம் நின்றான். பிறகு தன் வழியில்... மேல் நோக்கிச் செல்லும் மலைப் பாதையில் அவன் நடந்தான். அதற்குப்பிறகு அவன் பாடவில்லை. நடந்து செல்லும்போது, அவன் அடிக்கடி மலர்களை தன் உதடுகளை நோக்கிக்கொண்டு சென்றான்.
===
அந்த திருமணம் மிகவும் பிரம்மாண்ட திருமணங்களில் ஒன்றாக இருந்தது.
உயர்தரத்தில் இருக்கும் மனிதர்கள் அழைப்பிதழுக்காக கெஞ்சினார்கள்.
தேர்வு செய்யப்பட்டிருந்த மணமகன் பாரம்பரிய பெருமையைக் கொண்ட வான் விங்க்லர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்தவன். சமூகத்தில் பெரிதாக மதிக்கப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில், அந்த கவுரவத்தை அவன் நிலை நிறுத்தவேண்டும். மணமகள் குறை கூறமுடியாத அளவிற்கு அழகு படைத்தவளாக இருந்தாள். ஐந்து மில்லியன் டாலர்களுக்குச் சொந்தக்காரி அவள். வர்த்தகம் நடப்பதற்கு இணையாக அந்தத் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அங்கு காதல் என்ற பேச்சுக்கு இடமே இல்லை. அவன் மரியாதை தெரிந்தவனாக இருந்தான். பணிவுடன் மற்றவர்கள் பேசுவதைக் கேட்டான். அவளிடம் அளவற்ற தகுதிகள் இருந்தன. அவர்கள் முதன்முதலாக ஒரு நவநாகரீகமான கோடைக் கால ரிஸார்ட்டில்தான் சந்தித்தார்கள். வான் விங்க்லர்ஸ் குடும்பமும் வான்ஸஸ் குடும்பத்தின் பணமும் இணைவதாக இருந்தன.
திருமணம் சரியான உச்சிப் பகலில்...
காலநிலை வெப்பம் நிறைந்ததாக இருந்தாலும், பெல்ஹாம் வான் விங்க்லர் தன் அறைகளின் ஒன்றில் பழமையான முறையில் அமைக்கப்பட்ட அடுப்பில் நெருப்பு மூட்டப்பட, அங்கு இருந்தான். எழுதும் மேஜையின் ஓரத்தில் அமர்ந்திருந்த அவன் சதுர வடிவத்தில் இருந்த கடிதங்களை...
அவற்றில் சில ரிப்பன்களால் கட்டப்பட்டிருந்தன... நெருப்பில் போட்டான். அவை நெருப்புக் கொழுந்துகளாக எழுந்தபோது, அதைப் பார்த்து மெல்ல வினோதமாக சிரித்தான். அவற்றிற்கு மத்தியில் இங்குமங்குமாக ஒரு வாடிய மலரும், ஒரு வாசனைத் திரவியம் கமழும் கை உறையும் ரிப்பன் கட்டப்பட்ட ஒரு கூந்தல் கொத்தும் இருந்தன.
நெருப்புக் கொழுந்துகளுக்கான இறுதி தியாகம்... ஒரு காய்ந்த, நசுங்கிய நீல நிற மலர்களின் குவியல்...
வான் விங்க்லர் நிம்மதி அடைந்தான். புன்னகை அவனுடைய முகத்திலிருந்து இல்லாமல் போயிருந்தது.
அவன் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் அந்த மாலை வேளையில் நடைபெற்ற காட்சியை மீண்டும் நினைத்துப் பார்த்தான். ஒரு கோடை கால சுற்றுலாவின்போது அவன் மூன்று அல்லது நான்கு நண்பர்களுடன் சந்தோஷமாகவும் எதைப் பற்றிய கவலையும் இல்லாமலும், மான் வேட்டைக்குச் செல்பவர்கள் அணியக்கூடிய அழகான ஆடைகளை அணிந்து கொண்டும் சுற்றிக் கொண்டிருந்ததை.... மலைப் பாதையில் நடந்து செல்லும்போது, ஒரு அழகான விவசாயி இளம்பெண்ணைத் தான் பார்த்ததையும் அவளின் கண்கள் தனக்கு பலம் அளித்ததையும் ஒரு நிமிடம் நின்று தனக்கு அவள் ஒரு கொத்து மலர்களை அளித்ததையும் அவன் நினைத்துப் பார்த்தான். அவன் வான் விங்க்லராக இல்லாமலிருந்தால், பெயருக்கேற்ற கடமை இல்லாமலிருந்தால், அவளைத் தேடிப்பிடித்து, அவளையே திருமணம் செய்துகொண்டிருப்பான். அந்த மாலை வேளைக்குப் பிறகு, அவளின் உருவம் அவனின் கண்களிலிருந்தும் அவனின் இதயத்திலிருந்தும் எந்தச் சமயத்திலும் நீங்கவே இல்லை. ஆனால், சமூகமும் குடும்பத்தின் பெயரும் அவனைப் பிடிக்குள் வைத்திருக்கின்றன. இன்று... உச்சிப் பகல் பொழுதில்... அவன் பல கோடிகளுக்கு அதிபதியான இரும்பு வர்த்தகரின் மகளான மிஸ். வான்ஸைத் திருமணம் செய்துகொள்ள இருக்கிறான்.
பெல்ஹாம் வான் விங்க்லர் நீலநிற மலர்களை நெருப்புக்குள் எறிந்து விட்டு, தன் அந்தரங்க உதவியாளரை அழைத்தான்.
===
மிஸ். அகஸ்டா வான்ஸ், எரிச்சல் உண்டாக்கக் கூடிய... வம்பு பேசக்கூடிய தோழிகளிடமிருந்தும் வெறி பிடித்ததைப் போல நடந்துகொள்ளும் உறவினர்கள் கூட்டத்திடமிருந்தும் சில நிமிடங்களுக்கு அமைதியான நிலையில் இருக்கலாம் என்பதற்காக தன் அறைக்குப் பறந்துவந்தாள்.
எரிப்பதற்கு அவளிடம் கடிதங்கள் இல்லை. புதைப்பதற்கு அவளிடம் கடந்த காலம் இல்லை.
அவளின் தாய் அளவற்ற சந்தோஷத்தில் இருந்தாள்....
நிகழ்ச்சியில் கோடீஸ்வர குடும்பங்கள் தங்களை முன் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியதற்காக...
பெல்ஹாம் வான் விங்க்லருடன் அவளுக்கான திருமணம் நடு உச்சி வேளையில் நடக்க இருக்கிறது.
மிஸ். வான்ஸ் திடீரென மதிப்புமிக்க ஒரு கனவில் மூழ்கினாள். ஒரு வருடத்திற்கு முன்னால் தன்னுடைய குடும்பத்துடன் ஐரோப்பாவிற்கு மேற்கொண்ட ஒரு சுற்றுலா பயணத்தை அவள் மீண்டும் நினைத்துப் பார்த்தாள். ஆல்ப்ஸ் மலையின் அடிவாரத்திலிருந்த ஒரு சுவிஸ் மலை ஏறும் மனிதருக்குச் சொந்தமான காட்டேஜில் ஒரு வார காலம் தாங்கள் செலவழித்த நாட்களை அவளின் மனம் நீண்ட நேரம் நினைத்துப் பார்த்தது. ஒருநாள் மாலையில் பொழுது சாயும் நேரத்தில் அவள் ஒரு குடத்துடன் அங்கிருந்த ஒரு ஊற்றில் நீர் எடுப்பதற்காக சாலையில் நடந்து சென்றாள்.
அந்த நாளன்று தங்களை விருந்தாளிகளாக அழைத்திருந்தவரின் மகளான பாபெட்டின் விவசாயிக்கான ஆடைகளை அணிந்து அவள் அழகு பார்த்தாள். அவளுடைய வெளிறிய நீளமான பொன் நிற தலைமுடிக்கும் நீல நிற கண்களுக்கும் அது மிகவும் பொருத்தமாக இருந்தது. அவள் திரும்பி வந்தபோது, ஒரு வேடன் எதிரில் சாலையில் வந்துகொண்டி ருந்தான். ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் மான்களை வேட்டையாடும் ஒரு வேடன்... அவன் பலசாலியாகவும் ஆற்றல் படைத்தவனாகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் சுதந்திரமான மனிதனாகவும் இருந்தான். அவள் தலையை உயர்த்தி அவனுடைய கண்களைப் பார்த்தாள். அவன் அவளுடைய கண்களைப் பார்த்துக் கொண்டிருந் தான். அவள் நடையைத் தொடர்ந்தாள்.
அப்போதும் அந்த காந்த சக்தி படைத்த கண்கள் தனக்குச் சொந்தமானவை என்பதைப்போல அவள் உணர்ந்தாள். காட்டேஜின் கதவு திறக்க, குரல்கள் அழைத்தன. அவள் புறப்பட்டாள். தன் உள்ளுணர்வின் கட்டளைப்படி தன் மார்புப் பகுதியிலிருந்து ஒரு கொத்து "ஜென்டியன்ஸ்' மலர்களைப் பறித்து அவனை நோக்கி அவள் எறிந்தாள். அவன் அவற்றைப் பிடித்துக்கொண்டு முன்னோக்கி வந்து அவளிடம் "எடெல்வெய்ஸ்' மலரைத் தந்தான்.
அந்த மான்களை வேட்டையாடும் மனிதனின் உருவம் அந்த மாலை வேளையிலிருந்து அவளை விட்டு விலகவே இல்லை. நிச்சயமாக விதிதான் அவனை அவளுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருக்க வேண்டும். பல மனிதர்களில் அவனும் ஒருவனாகி விட்டான். ஆனால். வரதட்சணையாக ஐந்து மில்லியன் டாலர்களைத் தந்திருக்கும் மிஸ். அகஸ்டா வான்ஸ் ஆல்ப்ஸ் மலை பகுதியைச் சேர்ந்த ஒரு சாதாரண வேடனைப் பற்றிய சிந்தனையில் மூழ்கக்கூடிய தவறைச் செய்திருக்கக்கூடாது.
மிஸ். வான்ஸ் எழுந்து தன் ஆடைகள் இருக்கக்கூடிய பெட்டியிலிருந்த ஒரு தங்க லாக்கெட்டைத் திறந்தாள். அதிலிருந்து அவள் ஒரு காய்ந்த 'எடெல்வெய்ஸ்' மலரை எடுத்து, மெதுவாக அதை குப்பைக் கூடைக்குள் தன் விரல்களுக்கு மத்தியில் வைத்து போட்டாள். தொடர்ந்து அவள் தன் அந்தரங்க பணிப்பெண்ணைத் தொலைபேசியில் அழைத்தாள். திருமணத்திற்காக வெளியே தேவாலயத்தின் மணிகள் முழங்க ஆரம்பித்தன.
________________________________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 சிறந்த சிறுகதைகளை நான் மொழி பெயர்த்திருக்கிறேன்.
"ப்ராக்மாற்றி' என்ற கதையை எழுதியவர்... கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்ற நட்சத்திர மலையாள எழுத்தாளரான உண்ணிகிருஷ்ணன் புதூர். நடுத்தர வயதைத் தாண்டி விட்ட ஒரு மனிதரையும், அவரின் செல்லப் பிராணியான "ப்ராக்மாற்றி' என்ற உடல்நலம் பாதிக்கப்பட்ட பூனையையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
அந்த மனிதர் தான் வளர்க்கும் பூனையின்மீது எந்த அளவிற்கு பாசம் வைத்திருக்கிறார் என்பதை கதையை வாசிக்கும்போது நம்மால் உணர முடிகிறது.
கதையின் இறுதிப் பகுதி நம் நெஞ்சை கனக்கச் செய்யும். அந்த பூனைக்காக நம் இதயம் நெகிழும்.
"ஒரு தெரியாத காதல்' என்ற கதையை எழுதியவர்.... உலக புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஓ. ஹென்றி.
இது ஒரு கவித்துவத் தன்மை கொண்ட காதல் கதை. இந்த கதையில் ஒரு திரைப்படத்திற்குரிய கதைக்கரு இருப்பதை என்னால் அறிய முடிகிறது.
ஓ. ஹென்றியின் கதை என்றாலே, அதில் சிறிதும் எதிர்பாராத ஒரு திருப்பம் இருக்கும். அது இதிலும் இருக்கிறது.
ஒரு நல்ல சிறுகதையை எப்படி எழுதுவது என்பதை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
"கர்னல் வில்கியின் அருமையான வேட்டை' என்ற கதையை எழுதியவர்... இந்திய ஆங்கில எழுத்தாளரான ரஸ்கின் பாண்ட்.
இவர் தேசிய சாகித்ய அகாடெமி விருதைப் பெற்றவர்.
ஓய்வு பெற்ற ஒரு ராணுவ அதிகாரியையும், அவரின் செல்லப் பிராணியான ஃப்ளாஷ் என்ற நாயையும் மையமாக வைத்து எழுதப்பட்ட கதை.
கதையின் இறுதியில் நாம் காணும் திருப்பம் நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.
கதை முழுக்க "ரஸ்கின் பாண்ட் டச்' இருப்பதை நம்மால் உணர முடியும்.
மாறுபட்ட கதைக் கருக்களையும், கதைக் களங்களையும் கொண்டிருக்கும் இந்த 3 கதைகளும் உங்களை மூன்று வேறுபட்ட உலகங்களுக்குள் அழைத்துச் செல்லும்.
"இனிய உதயம்' மூலம் நான் மொழிபெயர்க்கும் சிறந்த இலக்கிய படைப்புகளை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதய நன்றி.
அன்புடன்,
சுரா
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/ss1-2025-12-13-12-40-36.jpg)