"சிவாய நம என்று சொல்பவர்க்கு அபாயம் ஒரு நாளும் வராது என்று சொன்ன ஔவையின் வாக்கிற்கு இணங்க நம் நல்வாழ்விற்கு வழி காட்டும் இறைவனின் சன்னதி காஞ்சி மாவட்ட எல்லைக்குள் யாருக்கும் தெரியாமல் உள்ளது. இம்மாவட்டத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா செல்வோர் அவசியம் காண வேண்டிய சிவ புண்ணிய பூமி இது.
திருநீர்மலை ரங்கநாதப் பெருமாளுக்கு முற்காலத்தில் பழங்கள் விளைவிக்க தோட்டம் அமைத்த இடமாதலால் பழந்தண்டலம் என பக்தர்களால் அழைக்கப்படும் இங்கே சிவபெருமான் "ஐஸ்வர்யங்கள் தரும் ஐராவதீஸ்வரர்' என்ற திருநாமத்தில் கோவில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
இந்திரனின் படைக்கலன்களில் ஒன்றான "ஐராவதம்' என்ற யானை பூஜை செய்து வரம் பெற்றதால் "ஐராவத ஈஸ்வரர்' என்று போற்றப்படுகிறார். ஒரு வீட்டில் எண் வகை மங்கலப் பொருட்களில் ஒன்றான சுகம் என்ற யானை இங்குள்ள நந்தவனத்தில் மேய்ந்துள்ளதால் ஒரே இடத்தில் தெய்வ விருட்சங்கள், மலர்கள் வளர்க்கப்படு கின்றன.
இறைவனே யானை வடிவாக...
முற்காலத்தில் தொண்டை மண்டலப் பகுதியான இங்கு இரண்டாம் குலோத்துங்க மன்னன் ஆட்சி செய்து வந்த காலத்தில் ஒரு புலவர் செய்யுள் ஒன்றைப் பாட முற்படாதபோது அவரைக் கோவில் மகா மண்டபத்தினுள் அடைத்து, ஆயிரம் கரும்புக் கட்டுகளை வைத்து ஓர் இரவுக்குள் அனைத்தையும் தின்றுவிட வேண்டும். இதுவே உமக்கு கிட்ட அரசகட்டளை. தண்டனையும் இதுதான் என்றபோது புலவர் கருவறையில் வீற்றுள்ள கருணாமூர்த்தியான இறைவனை வேண்டி தண்ணீருடன் நின்றபோது, அன்று இரவே, ஐராவத யானை வடிவமெடுத்து அத்தனை கரும்புக்கட்டுகளையும் ஒரு நாழிகையில் தின்று தீர்த்ததோடு இன்னும் கரும்புக்கட்டுகள் இருக்கிறதா...? என்று கேட்ட பொழுது. பொழுது புலரும் வேளையில் அரசனுக்கே இந்த சம்பவம் கனவில் தெரியச் செய்திட அவனும் ஓடோடிவந்து அடிகளை, புலவரை விடுதலை செய்து நிற்க... அங்கே இறைவன் அருவுருவாய் தோன்றி புலவனைதுன்பமடைய செய்து, பின் அவனை ஆனந்தம் கொள்ளச் செய்ததால், எம்மோடு உறையும்உமாதேவி ஆனந்தவல்லி என்ற திருநாமத்துடன் விளங்கட்டும் என்று கூறி அமைதி நிலையில் அந்தர்யாமி ஆனார். இந்த ஆலயத்தில் அருள் தரும் ஐராவதீஸ்வரர் சாந்நித்யம் சக்தி பற்றி ஓலைச்சுவடியில் கிடைத்த பாடலைக் கண்ணுற்றால் தலத்தின் சிறப்பு அனைவருக்கும் தெரிய வரும்.பழங்காலத்திருந்தே இந்த சிவாலயத்தை தரிசிப்போருக்கு சுபபலன்கள் கிடைத்து வந்ததை சித்தர் ஒருவர் அனுபவமாக எழுதி வைத்திருக்கிறார்.
வில்வ விருட்ச மகிமை
மதுரையம்பதியை ஆட்சி செய்து வந்த மன்னனுக்கு வெப்பு நோய் தீர்க்க திருநீற்றுப் பதிகம் பாடி நீறு பூசி குணமாக வைத்தார். திருஞான சம்பந்தப் பெருமான்,சிவபெருமானுக்குச் சாற்றப்படுகிற வில்வதனமும், கனிகளும் மனித உடலில் தோன்றுகிற புற்று சதாயையும் தீர்த்து விடுகிற ஆற்றல் உடையவை என்பது ஒரு சிலருக்குத் தெரியவரும். வேதங்கள் நான்கும் ஈசனை அலங்கரித்திருப்பது போல நான்கு திக்குகளிலும் நான்கு வகையான வில்வமரங்கள் பழங்களை உதிர்க்கின்றன. சோமவாரம் என்கிற திங்கட்கிழமை அன்று இத்தலம் சென்று வில்வதலங்களால் ஈசனைஅர்ச்சனை செய்து சிவபதிகம் ஓதி வில்வப்பழம் பிரசாதமாகப் பெற்று உண்டு வர உயிர் கேட்கும் கொடிய நோயிலிருந்து விடுபட்டு பூரண நலம் பெறலாம்.
நந்தவனத்தில் அமர்ந்த நாதன்தமிழ்த்திருநாட்டில் உள்ள சிவாலயங்கள் எல்லாவற்றிலும் பிரதோஷகாலத்தில் மட்டுமே பார்வதி தேவியோடு இடப வாகனத்தில் காட்சி தருவார். இத்தலத்தில் சிவபெருமான் தருமம் என்ற இடபத்தின்மேல் உமாதேவியாருடன் ஆனந்தமயமாகக் காட்சி தந்து ஒரு பேருண்மையை தன் பக்தர்களுக்கு உணர்த்துகிறார்.
உலகமாகிய நந்தவனம் போல் உள்ள தளத்தில் மனதை மயக்கும் மலர்களைக் காணும் போது மகிழ்ச்சி உண்டாகும். அதற்கு தர்மத்தின் வழி சென்று வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தால் துன்பங்கள் விலகி நமக்கு என்றும் மகிழ்ச்சியே என்று உபதேசம் செய்கிறார்.
வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிவ பெருமானை நந்தவனச் சுற்று என்ற முறையில் ஐந்துமுறை வலம் வந்து தீபமிட்டு வர தீராத நோய்களும் தீர்ந்து சுகவாழ்வு பெறலாம்.
திருமணப்பேறு கிடைக்க திங்கள், வெள்ளி அன்றும், நோய்கள் அகன்றிட திங்கள், அமாவாசையிலும் அமிர்த மிகுத்யுஞ்சயராகக் காட்சி தருகிற ஈசனை தரிசித்து மிருத்யுஞ்சய ஹோமம் செய்து அமிர்த நீர் ப்ரசாதமாகப் பெற்று மகிழலாம்.
ஆலய மூர்த்தங்களாக...
யானை முதுகு வகை (கஜப்பிருஷ்டம்) விமானக் கருவறையில் சிவலிங்கமாக இறைவன் ஐராவதீஸ்வரரும், "ஆமலகீ' எனும் நெல்லிக்கனி விமானக் கருவறையில் தென்முகம் நோக்கியபடி ஆனந்தவல்லி தேவியும் காட்சி தர, திருச்சுற்றில் செல்வ விநாயகர், நாகராஜர், காசிவிஸ்வநாதர் விசாலாட்சி, ஐயப்பன் சுப்பிரணியம், சண்டேசர், துர்க்காதேவி, நவநாயகர்கள், வில்வ மரத்தின்கீழ் ஆதிசங்கர பகவத் பாதர், சூரிய சந்திரர், காலபைரவர், நால்வர் பெருமக்கள், நந்தியம் பெருமானை, சிவமூர்த்தங்களக தரிசிக்கலாம்.
கார்த்திகை, சோமவாரம், பங்குனி உத்திரத் திருக்கல்யாண வைபவம், ஆடிக் கிருத்திகை முருகப்பெருமான் வீதி உலா மாத விசேடங்களாக நடத்தப்படு கின்றன. பிரதோஷ காலத்தில் கயிலாய வாத்ய ஓசையுடன் பிரதோஷ தேவர் புறப் பாடு திருச்சுற்றில் கண் கொள்ளாக் காட்சி.
கடன் தீரவும், தொழிலில் தடங்கல் நீங்கி செல்வச் சேர்க்கையுடன் தூயபாத லாபம் பெறவும் ஐஸ்வர்யம் தரும் ஐராவதசிவனைக் கண்டு வணங்கி ஆனந்தம் தரும் வல்லமை பெற்ற சக்தியையும் தரிசித்து வர உங்கள் ஜனன ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் இருந்தால் இன்றே புறப்பட்டு சென்று வருவீர்!
ஆலயம் செல்ல வழி: பல்லாவரத்தில் இருந்து திருநீர்மலை சாலையில் திருமுடி வாக்கத்திற்கு அடுத்ததாக பழந்தண்டலம் உள்ளது.