ரு பெரியவர் நாடியில் பலனறிய வந்திருந்தார். அவரின் தோற்றம் என்னைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. நெற்றியிலும், உடல் அங்கங்களிலும் விபூதிப்பட்டை, கழுத்தில் தங்க முகப்புடன் ருத்திராட்சமாலை, பஞ்சகச்சம், சட்டை அணியாமல் மேலே துண்டு அவரைப் பார்த்தவுடன் தீவிர சிவபக்தர் என்று நினைத்தேன். கடவுளை நம்புகின்ற இவர் அகத்தியரை ஏன் தேடி வந்தார்?  என்று யோசித்து அவரை அமரவைத்து "என்ன காரியமாக நாடியில் பலனறிய வந்துள்ளீர்கள்'' என்றேன்.

திதி, தர்ப்பணம் செய்யும் ஒரு பிரசித்தமான ஊரில் வசித்து இந்த தொழிலைச் செய்து வருகிறேன். எனக்கு ஒரு மகள் மட்டும் உண்டு ஆண் குழந்தை கிடையாது. 

Advertisment

அவளுக்கு 34 வயதாகின்றது. திருமணம் தடையாகிக் கொண்டே வருகின்றது. அவள் ஜாதகத்திலுள்ள கிரக தோஷங்களுக்கு உயிர் பரிகார, சாந்திகள் அனைத்தையும் செய்துவிட்டேன். அவள் திருமணத் தடை விலக சில சிவன் கோவில்களில் சிவன் பார்வதிக்கு திருக்கல்யாணம் செய்தேன். ஆனால் எந்தப் பரிகார செயலாலும் திருமணத் தடைவிலகவில்லை.

மாப்பிள்ளைகள் நிறைய பேர் பார்த்தும், ஒன்றும் கூடிவரவில்லை. திருமணம் கூடி வருவதுபோல் வந்து இறுதியில் தடையாகி விடுகின்றது. 

எனக்கோ வயதாகிக்கொண்டே போகின்றது. என் ஆயுள் முடிவதற்குள் மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா? மகள் திருமணத் தடைக்கு காரணம் என்ன? தடைவிலகி அவளுக்கு திருமணம் நடைபெற என்ன செய்யவேண்டும்? கணவனாக வரப்போகின்றவனின் விபரம் அறிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்தேன் என்றார்.

Advertisment

ஜீவ நாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி பலன் கூறினார்.

இவன் மற்றவர்களின் கிரக தோஷங்கள் நீங்க பரிகாரங்களைச் செய்து நிறைய பணம் சம்பாதித்து வருகின்றான். ஆனால் இவன் மகளுக்குத் திருமணத் தடை விலக என்னை நாடி வந்துள்ளான். இவன் செய்யும் பரிகார முறையில் இவனுக்கே பலன் கிடைக்கவில்லை. இவன் மகளின் திருமணத்தடைக்கு காரணத்தையும், மகளுக்கு வரப்போகின்றவன் விபரத்தையும் கூறுகின்றேன் அறிந்து கொள்ளட்டும்.

இவன் தகப்பனுக்கு இவனும், ஒரு மகளும் உண்டு. தகப்பன் காலத்தில் பூர்வீக சொத்துகள் என்று கொஞ்சம் நிலங்களும், இரண்டு வீடுகளும் இருந்தது. இவன் தந்தை தன் மகளை, தனது சகோதரியின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தான். இவனுக்குத் தனது மனைவியின் தம்பி மகளைத் திருமணம் செய்து வைத்தான். தனது சொத்துகளை மகன், மகள் இருவருக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டு இறந்து போனான்.

தந்தை இறந்தபின் தன் சகோதரிக்கு உரிய பங்கு சொத்தையும் இவன் பறித்துக் கொண்டான். சொத்துகளை இழந்த சகோதரி தனது உறவுகள் ஊர்ப்பெரியவர்கள்மூலம் பஞ்சாயத்து பேசியும், இவன் சொத்துகளை தரமறுத்துவிட்டான். சகோதரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாள். வழக்கு இன்னும் நடந்து வருகின்றது. உறவு அறுந்தது முறையாக கிடைக்க வேண்டிய சொத்துகளை இழந்த அவள் வாரி இறைத்த மண் மலையாக உயர்ந்தது. விட்ட வாக்கு, சாபம் மகளின் வாழ்வை தடுத்து கெடுத்து வருகின்றது. இவன் மகளுக்கு திருமணம் நடந்து வாழ்க்கை அமைய சகோதரிவிட்ட சாபம் நிவர்த்தியாக வேண்டும்.

என் சகோதரி எனக்கு விட்ட சாபம் நிவர்த்தியாக நான் எந்த கோவி-ல் சென்று என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் எவ்வளவு பணம் செலவானாலும் அகத்தியர் கூறுவதை தவறாமல் செய்து விடுகின்றேன் என்றார்.

இதுவரை இவன் பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் செய்தும் பலன் கிடைக்கவில்லை, கடவுள், கிரகம், பூஜை, யாகம், மந்திர பரிகாரங்களால் பலன் கிடைக்காது. ஒரு பிறவியில் ஒருவருக்கு நடைமுறையில் செய்த பாவங்களை நடைமுறை செயல்மூலம் தான் பாவ- சாப நிவர்த்தி செய்து தீர்க்கவேண்டும்.

இவன் சகோதரிக்கு செய்த பாவமும் அதனால் அவள்விட்ட சாபமும் நிவர்த்தியாகவும், மகளுக்கு கணவன் யார்? என்று கூறுகின்றேன். நான் கூறுவதுபோல் செய்தால் பாவ- சாபம் நிவர்த்தியாகும், மகள் திருமணமும் நடக்கும்.

இவன் சகோதரிக்கு ஒரு மகன் இருக்கின்றான். 

அவனுக்கு இவன் மகளைத் திருமணம் செய்து வைக்கச்சொல், இவனுக்கு மருமகனாக வரப்போகின்றவன் சகோதரி மகன்- மகளுக்கு அத்தை மகன். சகோதரியின் சொத்தும் அவள் மகனுக்கு கிடைக்கப் போகின்றது. இதுதான் விதியின் மறைமுக ரகசிய விளையாட்டு. சகோதரியின் மகனைத் தவிர வேறு மாப்பிள்ளை இந்தப் பிறவியில் மகளுக்கு 
கிடையாது.

சகோதரியிடம் பல வருடங்களாக உறவு இல்லை. 

மேலும் சொத்து சம்பந்தமான வழக்கும் உள்ளது. அகத்தியர் கூறுவது போன்று நடைபெறச் சாத்தியமில்லை. அவள் வீட்டில் மாப்பிள்ளை கேட்டு எப்படி செல்வது? என்றார்.

இவர்கள் இருவருக்கும் சிவனின் பெயரைக் கொண்ட உறவுக்காரன் ஒருவன் இருக்கின்றான். சகோதரியிடம் சென்று அவனை சம்பந்தம் பேசச் சொல். தங்கையும் அவன் மகனும் சம்மதிப்பார்கள். திருமணம் சிறப்பாக நடைபெறும். பிரிந்த உறவும் படை நீங்கி ஒன்று சேரும். இணைந்த தம்பதியருக்கு குறைவற்ற வாழ்க்கை அமையும் அகத்தியரின் ஆசிகள் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

ஒரு மனிதன் முற்பிறவியிலோ அல்லது இப்பிறவியிலோ ஒருவருக்கு என்ன பாவம் செய்தோம்? எந்த வகையில் யாருக்குச் செய்தோம்? அந்த பாவத்தால் இப்பிறவியில் என்ன விதமான சிரமங்களை தடைகளை அனுபவிக்கின்றோம் என்பதை அறிந்து அதற்கு சரியான நிவர்த்தி முறைகளைச் செய்தால் தான் பாவ- சாபம் நிவர்த்தியாகித் தடை, சிரமம் நீங்கும். செய்த பாவம் என்னவென்று தெரியாமல் வெறுமனே பரிகாரங்கள் செய்தால் தடைவிலகாது என்பதை நானும் அறிந்துகொண்டேன்.

செல்: 99441 13267