சென்னையிலுள்ள, எனது ஜோதிட நிலையத்திற்கு ஒரு தம்பதியினர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து "என்ன காரியமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்'' என்றேன்.
"தாங்கள் இருவரும், அரசாங்கத்தில் உயர்ந்த பதவியில் இருப்பதாகக் கூறி தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். எங்களுக்கு 33 வயதில் ஒரு மகளும், 30 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். இருவரும் மருத்துவராக பணி செய்துவருகி றார்கள். இவர்கள் இருவருக்கும் எங்கள் இனத்திலேயே மருத்துவராக பணிபுரியும் மாப்பிள்ளை, பெண் தேடி வருகிறோம். ஆனால் இது வரை எங்கள் விருப்பம்போல் அமையவில்லை.
எனது அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணிபுரியும் ஒருவர் தங்களைப் பற்றிக் கூறி ஜீவநாடியில் பலன் கேட்டால் சரியான பலன் தெரிந்துகொள்ளலாம் என்று கூறி "பாலஜோதிடம்' புத்தகத்தில் நீங்கள் எழுதிய ஜோதிடக் கட்டுரைகளைக் கொடுத்தார். படித்துப் பார்த்து அதன்பிறகுதான் நாடியில் பலன் அறிய தங்களை நாடிவந்தோம். என் குழந்தைகளின் திருமணம் எங்கள் விருப்பம்போல் நடைபெற அகத்தியர்தான் வழி கூறவேண்டும்'' என்றார்.
இவன் குழந்தைகள் இருவருக்கும் அவர்கள் படிப்பு, தொழில், அந்தஸ்து இவற்றைக் கருத்தில்கொண்டு தன் இனத்திலேயே மாப்பிள்ளை, பெண் தேடிவருகின்றான். இதுவரை இவர்கள் விருப்பம்போல் அமையவில்லை என்று கூறுகின்றான்.
அகத்தியனை தேடிவரும் முன் ஜோதிடர்கள், வேதம் படித்தவர்கள் சிலரிடம் வழிகேட்டுச் சென்றான். அவர்கள் இவன் விரும்பியபடி குழந்தைகளின் திருமணம் நடைபெற ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதாகக் கூறி, சில பரிகார பூஜை, யாகங்கள் செய்தால் தோஷம் நிவர்த்தியாகி இவர்கள் விரும்புவதுபோல் மாப்பிள்ளை, பெண் அமைந்து திருமணம் நடக்கும் என்று கூறியதைக் கேட்டு ஒரு குறிப்பிட்ட கோவிலில் ஏராளமான பணம் செலவழித்து பொருட்களை நெருப்பில் போட்டு அழித்து பரிகாரங் களைச் செய்தான். ஆனால் ஜோதிடர்கள், வேத பண்டிதர் கள் கூறிய காலக் கெடுவிற்குள் திருமணம் நடக்கவில்லை. அதனால் இப்போது அகத்தியணை நாடி வந்துள்ளான்.
இவன் குழந்தைகளுக்கு எந்த தோஷமும் இல்லை. ஜோதிடர்கள் கூறியது போன்று தோஷங்களால் திருமணத்தடையும் இல்லை.
மாப்பிள்ளை, பெண் எப்படி அமைய வேண்டும் என்று பெற்றவர்கள் ஆசைப்படுவது தவறு இல்லை. ஆனால் இவர்கள் விரும்புவது போல் அமையவேண்டும் அல்லவா? இவன் விருப்பப்படி அமையவில்லை என்பதற்காக அவர்களுக்குப் பருவ வயதில் நடக்கவேண்டிய சுப காரியத்தை நடத்தாமல் காலத்தைக் கடத்தி வருகின்றான்.
இவன் படித்த படிப்பு, பொருள் சம்பாதித்து பிழைக்க வழி செய்ததே தவிர ஞானம், அறிவு வளர உதவவில்லை. கடவுளையும், கிரகங்களையும், வேத சாஸ்திரங்களையும் நம்பினானே தவிர ஒரு ஆத்மாவின் கர்மவினைகளை நம்பவில்லை. ஒரு மனிதனின் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளால், கிரகங்களால் தீர்மானித்து நடத்தப்படுவது இல்லை. அவரவரின் பூர்வ ஜென்ம பாவ- சாப- புண்ணியக் கணக்கின்படி தீர்மானித்து செயல் படுகின்றது என்பதை புரிந்துகொள்ளட்டும்.
குழந்தைகளின் பூர்வஜென்ம கர்மவினைப்படி அந்த கர்மவினையால் நிர்ணயிக்கப்பட்ட விதிப்படி மகளுக்கு கணவனாக வரப் போகின்றவனைப் பற்றியும் கூறுகின்றேன்.
இவன் ஆசைப்படியும், மகளின் திருமண விதிப்படியும், மருத்துவ தொழில் செய்பவனே கணவனாக அமைவான். ஆனால் மாப்பிள்ளை இவன் சாதி, இனத்தைச் சேர்ந்தவன் அல்ல. வேறு சாதியைச் சேர்ந்தவன். இவன் செய்யும் கடவுள் வழிபாடும், பரிகாரமும், பூஜையும் விதியை மாற்றமுடியாது என்பதை அனுபவத்தில் தெரிந்துகொள்ளட்டும்.
இவன் மகனுக்கு இவன் விரும்பியபடி மருத்துவ தொழில் செய்பவள் இவன் சாதியைச் சேர்ந்தவளே மனைவியாக வருவாள். மகன் திருமணம் முதலில் நடந்து முடிந்தபின்தான் மகளின் திருமணம் நடக்கும். தம்பிக்கு முதலில் திருமணம், அதன் பிறகுதான் அக்காளுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதே அவளின் திருமண விதிக்கணக்கு என்பதை அறிந்து கொள்ளட்டும்.
அகத்தியர் என் மகளுக்கு மாற்று சாதியைச் சேர்ந்தவன்தான் கணவனாக அமைவான் என்று கூறுகின்றார். என் சாதியைச் சேர்ந்தவனே மாப்பிள்ளையாக அமைய ஏதாவது பரிகார, வழிபாடு முறைகள் கூறினால் செய்துவிடுகின்றேன் என்றார்.
அகத்தியன் யான் ஆன்மிகவாதியும் அல்ல, கடவுளைச் சொல்லி காசு வாங்கி பிழைப்பு நடத்துபவனும் அல்ல. ஒரு ஆத்மாவின் விதியை ஆண்டவனாலும் மாற்றமுடியாது என்பதை புரிந்துகொள்ளட்டும். இதனை அறியாமல் பலரின் தவறான வழி காட்டுதலால் ஏராளமான கன்னியரும், காளையரும் பருவத்தே பயிர் செய்யாமல் முற்றிய நாற்றாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
அகத்தியன் கூறியதை ஏற்றுக்கொள் ளாமல் சிலகாலம் காத்திருந்து இவன் சாதியிலேயே மருத்துவ தொழில் செய்பவனைத் தேடி மகளுக்குத் திருமணம் செய்துவைத்தால், திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே கணவன் இறப்பான் அல்லது விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்துவிடுவார்கள். அதன்பிறகு இவள் வேறு சாதியை சேர்ந்தவனை மணமுடித்து வாழ்வாள் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
ஓலையைப் படித்து முடித்துவிட்டு அவரைப் பார்த்து, உங்கள் பிள்ளைகளின் திருமணம் அகத்தியர் கூறியபடியா அல்லது உங்கள் விருப்பப்படியா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.
இந்த பூமியில் கடவுளே அவதாரம் எடுத்து மனிதனாக பிறந்தாலும் கர்ம வினையில் இருந்து தப்பமுடியாது. அனுபவித்துதான் தீரவேண்டும். எந்தவிதமான பரிகாரம், பூஜைகளாலும் தப்ப முடியாது; தடுக்கமுடியாது. ஊழ்வினை அறிந்து பிறப்பின் விதியறிந்து மதியால் தடுத்து வாழவேண்டும் என்பதை நானும் தெரிந்துகொண்டேன்.
செல்: 99441 13267