ஜீவநாடியில் பலனறிய ஒரு இளம் பெண் தன் தாயுடன் வந்திருந்தாள். அவர்களை அமரவைத்தேன். என் முன்னே அமர்ந்த அந்தப் பெண், நான் எதுவும் கேட்காமலேயே பலன்கேட்க வந்த காரணத்தைக் கூறினார்.
"ஐயா, என் கணவர் ஒரு ஒப கம்பெனியில் வேலை செய்கின்றார். மாதா மாதம் சம்பளப் பணத்தை அப்படியே என்னிடம் கொடுத்துவிடுவார். ஒரு குடும்பத் தலைவராக இருந்து குடும்பப் பொறுப்புகள் எதனையும் செய்ய மாட்டார். எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை உண்டு. ஒரு நல்ல தகப்பனாக இருந்து குழந்தைக்கும் எதுவும் செய்வ தில்லை.
குடும்பம் சம்பந்தமான வேலைகள், வெளிவேலைகள் அனைத்தையும் நான்தான் செய்யவேண்டும். இந்த நிலைமாறி அவர் குடும்பத்தையும் குழந்தையையும் கவனிப்பாரா, பொறுப்புள்ள வராக மாற்ற வழிகேட்டு வந்தேன்'' என்றாள்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவள் கணவன் திருமணம் செய்த நாள்முதல் இன்றுவரை இவளுக்கு ஆசையாக ஒரு முழம் பூ, ஒரு சேலை, குழந்தைக்கு உடை, திண் பண்டம் என எதையும் வாங்கிக் கொடுக்கவில்லை. ஆசையாக எங்கும் வெளியில் கூட்டிச் சென்றதில்லை. வீட்டுவேலை, வெளிவேலை, உறவி னர் வீட்டு விசேஷங்கள் என அனைத்தையும் இவளேதான் செய்கின்றாள்.
ஏன்? தாம்பத்திய உறவுகூட தடையாகத்தான் உள்ளது.
கணவன் தன்மீது அன்பாக இருந்து, தான் விரும்பியதையெல்லாம் செய்யவேண்டும், குழந்தையிடம் பாசம் காட்டி கொஞ்சவேண்டும், நல்ல கணவனாக, நல்ல தந்தையாக இருக்க வேண்டும் என்பது இவள் ஆசை. தன்மீதும், குழந்தைமீதும் அன்பு இல்லையென்று கூறி, கணவனிடம் அடிக்கடி சண்டைபோட்டு கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிடுகின்றாள். இப்போதுகூட கடந்த மூன்று மாதங்களாக கணவனைப் பிரிந்து தன் தாய்வீட்டில்தான் இருக்கின்றாள். கணவன் தான் விரும்பியபடி இருக்கவேண்டும் என்று சிலர் பேச்சைக்கேட்டு வசியம், மருந்து போன்ற செயல்களைச் செய்தாள். ஆனால் எந்த பலனுமில்லை. இப்போது அகத்தியரைத் தேடிவந்துள்ளாள்.
மகளே, உன் கணவன் இதுபோன்று இருப்பதற்கு காரணத்தைக் கூறுகின்றேன் அறிந்துகொள்.
முற்பிறவியில் பொதிகைமலை அடிவாரத்தி லுள்ள ஒரு ஊரில் பிறந்திருந்தாள். உறவிலேயே ஒருவனைத் திருமணம் செய்து வைத்தார்கள். முற்பிறவி கணவன், தனது தாய்- தந்தை, சகோதரர்கள், உறவினர்கள்மீது பாசம் காட்டி அவர்கள் விரும்பியதையெல்லாம் செய்து அவர்களை மகிழ்ச்சியாக செய்தான். மனைவியாகிய இவளைக் கணவனும், அவன் குடும்பத்தாரும் மதிக்கவில்லை, மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. போன பிறவியிலும் கணவனின் அன்பு கிடைக்காமல், ஆசைப்பட்டப்படி அவனுடன் வாழமுடியாமல், தன் ஒரே குழந்தையுடன், தாய் வீட்டிற்குச் சென்று, இறுதிக்காலம்வரை அங்கேயே வாழ்ந்து, இறந்து போனாள்.
முற்பிறவியிலும், கணவனைப் பிரிந்து வாழ்ந்தபோது, பொதிகை மலையிலுள்ள அகத்தியர் அருவிக்கு அருகில் நான் வாசியோகம் செய்து வாழும் பீடத்திற்கு மனம் வருத்தும்போதெல்லாம் வந்து அருவியில் குளித்து அடுத்த பிறவியிலாவது என்னை மனைவியாக மதித்து குடும்பப் பொறுப்பைத் தந்து, குடும்பத் தலைவியாக ஏற்று, வாழவைக்கும் கணவன் அமைய வரம்வேண்டி என்னை வணங்குவாள்.
இந்த மகளின் வேண்டுதலை ஏற்று இவளின் முற்பிறவியில் யார் கணவனாக இருந்தானோ, அவனையே இந்த பிறவியிலும் கணவனாக அமைய அருள் செய்தேன். சென்ற பிறவி கணவனையே இந்தப் பிறவியிலும் கணவனாக அடைந்தாள். இவள் கணவன், முற்பிறவியில் இவளுக்குச் செய் யாததையெல்லாம் செய்து மரியாதை தந்து நிவர்த்தி செய்கின்றான்.
இப்பிறவியில் உன் கணவன் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம், உன் கையில் கொடுத்துவிடுவான். அவன் சந்நியாசிபோல குடும்பப் பொறுப்பற்றவனாகதான் இருப்பான். கடமைக்காக வீட்டிற்கு வருவான். அவனையும் நீதான் கவனித்துக் காப்பாற்றவேண்டும். உன் வீட்டில் குடும்பத் தலைவனும் நீதான், குடும்பத் தலைவியும் நீதான் என்பதைப் புரிந்துகொள்.
கணவன் சம்பாதிக்கும் பணத்தில் உன் குடும்பத் தேவைகள், குழந்தைகளின் எதிர்கால நல்வாழ்க்கைக்குத் தேவையானவை என அனைத்தையும் இவள்தான் செய்து கொள்ளவேண்டும். கணவன் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அதனை குறையாக நினைத்து வருந்தாதே. நீ எதைச் செய்தாலும் ஏன்? செய்தாய் என்று இவளைக் கேட்கமாட்டான். இவள் சொல்வதை மட்டும் கேட்டு செய்வான். தன் விருப்பம்போல் எதையும் செய்யமாட்டான். வீட்டில் எல்லாம் இவள் விருப்பப்படிதான் நடக்கும். தாம்பத்திய உறவு, சுகத்தைக்கூட அவன் உணர்வுகளைத் தூண்டி, இவள்தான் சுகம் அடைந்துகொள்ள வேண்டும். கணவனாக விரும்பி இவளை நெருங்கமாட்டான்.
மகளே கணவன் வருமானத்தில் பஞ்சபூதங்களால்கூட அழிக்க முடியாத பூமியில் அழியாத, நிலையான சொத்துகளான தங்கம், வெள்ளி, வைரம், பூமி, நிலம் என அனைத்தையும், பணத்தை சேமித்து அடைந்து, செல்வச்சிறப்புடன், மகிழ்ச்சியுடன், அமைதியுடன், மற்றவர்கள் பெருமையாகப் பேசும் வாழ்க்கையை நீதான் அமைத்துக்கொள்ள வேண்டும்.
முற்பிறவியில் நீ கேட்ட வரத்தை, நீ விரும்பியபடியே அகத்தியன் நான் தந்தேன். இப்போது உன் தவறான எண்ணத்தால் நான் கொடுத்த நல்வாழ்வை நீயே தடைபடுத்திக் கொள்கின்றாய். மகளே சித்தர்கள், ரிஷிகள் தரும் வரத்தையும், சாபத்தையும், எந்த சக்தியாலும் மாற்றி அமைக்கமுடியாது. உன் இப்பிறவி குடும்ப வாழ்க்கை விதியறிந்து உன்னையே நீயறிந்து உன் மனப் போக்கினை மாற்றி நல்வாழ்வை அமைத்துக்கொள்.
உன் வாழ்க்கை உன் கையில். நீ உடனே உன் கணவனிடம் சென்று குடும்பத் தலைமையேற்று, குடும்பத் தலைவியாக நல்ல மனைவியாக, தாயாக, மகிழ்ச்சியாக வாழ்ந்துகொள். மகளே அகத்தியன் அருளும் ஆசியும், பாதுகாப்பும், வழிகாட்டுதலும் என்றும் உனக்கு உண்டு என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
மனதில் குழப்பம், கவலையுடன் வந்த பெண் அகத்தியரை வணங்கிவிட்டு தன்னையறிந்துகொண்ட நிலையில் என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.
செல்: 99441 13267