சுமார் 36 வயதுடைய ஒருவர் தன் தாயுடன் நாடியில் பலன் கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து என்ன, "காரியமாகப் பலனறிய வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, எனக்கு 33 வயதில் தாமதமாகத்தான் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து, ஆறு மாதகாலம் மனைவியும், நானும் சேர்ந்து வாழ்ந்தோம். அதன்பிறகு என் தாய்க்கும், என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி என்னைவிட்டு பிரிந்து, இப்போது அவள் தன் பிறந்த வீட்டிற்குச் சென்று அவள் பெற்றோருடன் வசித்துவருகின்றாள்.
மனைவிமீது அதிகமாகப் பாசம் வைத்துள்ளேன். அவள் வீட்டிற்குச் சென்று, சேர்ந்து வாழலாம் என்று பலமுறை அழைத்தேன்.
ஆனால் அவள் வர மறுத்துவிட்டாள். அவள் பெற்றோர் என்னுடன் சென்று சேர்ந்துவாழ கூறியும், அதனை அவள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவள் வர மறுத்ததும் அல்லாமல், தனக்கு விவாகரத்து தந்துவிடும்படி கேட்கின்றாள்.
மனைவி என்னுடன் சேர்ந்து வாழ்வாளா? பிடிவாதத்துடன் இருக்கும் அவள் என்னை விட்டு பிரிந்து விடுவாளா? இதற்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ளவே அகத்தி யரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவனைவிட்டு மனைவி பிரிந்ததற்கு இவன் காரணம் இல்லை. இவன் தாயின் தவறான இரண்டு செயல்கள்தான் காரணம். ஜோதிடன் ஒருவன், இவன் தாயாரிடம் சில நட்சத்திரங்களைக் குறித்து கொடுத்து இந்த நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணை உங்கள் மகனுக்கு திருமணம் செய்துவைத்தால் குடும்ப வாழ்க்கை கணவன்- மனைவி ஒற்றுமை, புத்திர பாக்கியம் என செல்வாக்கான வாழ்க்கை அமையும் என்று கூறிவிட்டான். அதனால் இவன் தாயார், ஜோதிடன் கூறிய நட்சத்திரங்களில் பிறந்த பெண்களைத் தேடித்தேடி அலைந்து இறுதியில் இந்தப் பெண்ணை திருமணம் செய்துவைத்தாள். நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்தது முதல் தவறு.
இவன் மனைவியை பிரிவதற்கு முக்கியமான மற்றொரு காரணம் உண்டு. அது இவன் தாய் பிறந்த வம்சத்தில் உண்டான பெண் சாபம்தான். இந்த தாயின் வம்ச முன்னோர்கள் காலத்தில் இந்த குடும்பத்திற்கு மணம்புரிந்து வாழவந்த பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து கணவனுடன் சேர்ந்து வாழவிடாமலும், அவளை மதிக்காமலும், அவள்மீது குற்றம், குறைகூறி அவள் நிம்மதியைக் கெடுத்ததால் அந்தப் பெண், அந்த வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனாள். அவள் இறக்கும் போது, இனி இந்த வீட்டில் பிறக்கும் பெண்கள், மணம்புரிந்து கணவன் வீடு சென்றாள், அங்கு கணவன் குடும்பத்தாருடனும், கணவனுடனும் சேர்ந்து வாழக்கூடாது. அதேபோல், இந்த வீட்டிற்கு மணம்புரிந்து வாழவரும் மருமகள்கள், இந்த குடும்பத்தில் மாமனார்- மாமியாருடன் சேர்ந்து வாழக்கூடாது என்று சாபமிட்டு இறந்து போனாள்.
கணவன் வீட்டாரால் பாதிக்கப்பட்டு இறந்த பெண் விட்ட சாபம் இப்போதும் தொடர்ந்து பாதிப்பை தந்துவருகின்றது. இவன் தாய் திருமணம் முடிந்தபின்பு மாமனார்- மாமியாருடன் சேர்ந்து வாழவில்லை. இவளும், கணவனும் வேலை நிமித்தமாக வெளியூர் சென்று தனிக்குடித்தமாகத்தான் வாழ்ந்தார்கள்.
அகத்தியன் கூறுவது உண்மையா என்று அவரையே கேள்.
அந்த தாய், அகத்தியர் கூறுவது உண்மைதான். என் வம்ச முன்னோர்கள் காலத்தில் ஒரு பெண் வீட்டிலேயே துர் மரணம் அடைந்ததாக பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அதேபோன்று, எனது திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே, என் கணவருக்கு, அலுவலகத்தில் மாற்றம் ஏற்பட்டு வேறு ஊர் சென்று வசித்தோம். மாமனார்- மாமியார் வீட்டில் இன்றுவரை என் வீடு என்று உரிமையுடன் வசிக்கவில்லை என்றாள் அந்த தாய்.
என் வம்சத்தில் பாதிக்கப்பட்ட பெண்விட்ட சாபம்தான் என் மகன், அவன் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என்று அகத்தியர் கூறுகின்றார். ஆனால் என் வம்சத்தாரின் வாரிசுகள், மற்றவர்கள் தங்கள் மனைவியுடன் ஒற்றுமையாக- சந்தோஷமாக வாழ்கின்றார்களே எங்களுக்கு மட்டும்தான் இந்த சாப -பாதிப்பா என்றாள்.
தாயே நீ நன்றாக யோசித்து பார், உன் வம்ச உறவுகளில், சிலர் திருமணம் முடிந்தவுடன் வேலை நிமித்தமாக வெளியூரில், இன்னும் சிலர் தனது தாய்- தந்தையுடன் வசிக்காமல் அதே ஊரில் தனிக் குடித்தனமாக வேறு வீட்டில் வசித்துக்கொண்டும் இருப்பார்கள். உன்னைப்போல், உன் வம்சத்தில் பிறந்த பெண்கள் திருமணம் முடிந்து, மாமனார்- மாமியாருடன் சேர்ந்துவாழாமல் தொழில், வியாபாரம், வேலை என ஏதாவது ஒரு காரணத்தில் வேறு வீட்டில் வசிப்பார்கள். சிந்தித்துப் பார் சாபத்தின் செயல்புரியும்.
வம்ச பெண்விட்ட சாபம் பாதிப்பு நீங்கி, என் மகன், அவன் மனைவியுடன் சேர்ந்துவாழ அகத்தியர்தான் வழி கூறி அருள் செய்யவேண்டும் என்றார்.
இந்த மகன் சாப பாதிப்பைத் தடுத்து, மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்றால், தாயைவிட்டு பிரிந்து கணவன்- மனைவி இருவரும் தனி வீடு பார்த்து, தனித்து வசிக்க வேண்டும். மாமியார்- மருமகள் சேர்ந்து வாழக்கூடாது. அல்லது இவன் மனைவி வீட்டில் சென்று, வீட்டிற்க்கு மாப்பிள்ளையாக அவள் வீட்டில் அவளுடன் சேர்ந்து வாழவேண்டும். இதுதான் சாபத்தை தடுத்து நல்ல வாழ்க்கை அமைய வழி என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
ஐயா, "இவன் எனக்கு மகன்தான். என்னைவிட்டு பிரிந்து சென்றால்தான், இவன் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்று அகத்தியர் கூறுகின்றாரே, வயதான காலத்தில் எனக்கு துணை யாருமில்லையே'' என்றார்.
அம்மா, உன் மகன் வாழ்க்கை நன்றாக அமைய வழி கேட்டாய். காரணத்தையும், காரியத்தையும் கூறி, பிரச்சினை தீர வழியும் கூறி விட்டார். இனி அகத்தியர் கூறியதை ஏற்றுக்கொண்டு செயல் படுவதும், செய்யாமல் இருப்பது உங்கள் விருப்பம். ஆனால் உன் மகனையும், மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்து, நீ வாழ வைத்தாள் உன் மருமகள் உன்மீது பாசமாக இருந்து உன்னை நன்கு கவனித்து கொள்வாள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.
பெற்றவர்கள், தங்கள் குழந்தைகளின் திருமண சமயத்தில், வெறுமனே பத்து பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்க்காமல், இருவரின் வம்சத்திலும் முன்னோர்கள் வாழ்வில் பாதிக்கப்பட்டவர்களால் விடப்பட்ட, புத்திர சாபம், களத்திர தோஷம், சகோதர சாபம் ஏதாவது உள்ளதா? திருமணத்திற்குப்பின் இந்த சாபங்களால் பாதிப்பு உண்டா குமா? கணவன்- மனைவி கருத்து வேறுபாடு, புத்திர தடை, கடன், நோய், பாதிப்பு உண்டாகுமா என்பதையெல்லாம் ஆராய்ந்து அதை தடுக்கும் வழிமுறைகளை அறிந்து திருமணம் செய்துவைத்தால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்பதை நானும் அறிந்து கொண்டேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/31/agathiyar-2025-10-31-15-02-38.jpg)