ஜீவநாடியில் பலனறிய சுமார் 65 வயதுடைய ஒருவர், தன் 30 வயதுடைய மகனுடன் வந்திருந்தார். அவர்களை அமரவைத்து "என்ன காரியமாகப் பலன் தெரிந்துகொள்ள வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, என் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன, அதில் இவன்தான் மூத்த மகன். மகன்கள் இருவருக்கும் திருமணம் செய்துவைத்தேன். இருவருக்கும் குழந்தைகள் பிறந்தனர். இப்போது இவன் வாழ்க்கையில் கணவன்- மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டு , இவன் மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். இவனும், மனைவியும் பிரிவு நீங்கி ஒற்றுமையாக வாழ வழிகேட்டு வந்துள்ளோம்'' என்றார்.
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.
இவன் தன் மகன் வாழ்க்கை, நிம்மதியாக இருக்க வழி கேட்கின்றான். இவன் தந்தை செய்த பாவம் இவனுக்கு தெரியுமா? கூறுகின்றேன். அறிந்து கொள்ளச்சொல். இவனுடைய தந்தை, ஒரு பெண்ணை மணந்து அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து, ஒரு வருட காலத்தில், வேறொரு பெண்ணிடம் பழகி அவளை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துகொண்டான். இதனால் இவனது தந்தையின் முதல் மனைவி தன் ஒரு வயது குழந்தையை அழைத்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்க்கு சென்றுவிட்டாள். இவன் தந்தையின் இரண்டாம் தாரத்து மகன்தான். இவனது தந்தை தனது முதல் மனைவியையும், குழந்தையையும் தன்னுடன் சேர்ந்துவாழ அழைத்தபோது முதல் மனைவி இவனுடன் சேர்ந்துவாழ சம்மதிக்க வில்லை. தன் குழந்தையுடன் தாய் வீட்டிலேயே வாழ்ந்து தன் மகனையும் வளர்த்து ஆளாக்கி மாண்டு போனாள்.
இவன் தந்தை தன் குடும்பத்திற்கு வாழவந்த மனைவிக்கு செய்த பாவம், வம்சத்தில் தொடர ஆரம்பித்து செயல்படத் தொடங்கியது. இவன் தந்தை மட்டுமல்ல; இவனும் தன் திருமணத்திற்குமுன்பு ஒரு பெண்ணிடம் பழக்கம்கொண்டு அவளையே திருமணம் செய்துகொள்வதாக சத்தியமும் செய்து அவளிடம் சுகம் அனுபவித்தான். ஆனால் அந்தப் பெண்ணை மணம் புரிந்தானா? செய்த சத்தியத்தை காப்பாற்றினானா? இவனுக்கு இப்போது மனைவியாக இருப்பவள், இவனை விட வசதி படைத்த பணக்கார வீட்டுப் பெண். சொத்து, பணம், வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தன்னை விரும்பியவளை தான் விரும்பி பழகிய பெண்ணை, இவனை நம்பி தன்னை இழந்த அந்தப் பெண்ணை ஒதுக்கிவிட்டு, இப்போதுள்ள மனைவியை மணந்தான்.
இவன் உறவால் இவன் தந்தை குழந்தையை, கருவை, தன் கர்ப்பத்தில் சுமந்துகொண்டு, கர்ப்பிணியான அவள், இவன் ஏமாற்றியது தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னையே மாய்த்துக் கொண்டாள். இவன் தன்னை நம்பிய பெண்ணையும், தன்னால் உருவாக்கப்பட்ட தன் சிசுவையும் கொன்றவன். இவன் தந்தை மணம்புரிந்த மனைவிக்கும், பெற்ற குழந்தைக்கும் பாவத்தை செய்தான். இவனோ, விரும்பி பழகிய பெண்ணையும், இவனால் உருவான குழந்தையையும் கொன்றான். இவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் விட்ட சாபம் வம்சத்தில் வலிவடைந்தது.
இவன் தந்தை மனைவிக்கு செய்த துரோகம், களத்திர தோஷமாகிய து. பெற்ற பிள்ளைக்கு ஒரு தந்தை செய்யவேண்டிய கடமையை செய்யாததால் புத்திர தோஷ பாதிப்பு உருவானது. இவன் ஒரு பெண்ணை ஏமாற்றி பழகி அவள் மரணம் அடைய காரணம் ஆனதால் அந்தப் பெண் விட்ட சாபமும் தன்னால் அவனுக்கு உருவான குழந்தையை கொன்றதால் உண்டான புத்திர சாபமும், வம்சத்தில் பாதிப்பை தந்து இப்போது அனுபவிக்க செய்கின்றது.
இவன் தந்தை வாழ்விலும், இவன் வாழ்விலும் நான் சொன்னது போல் நடந்துள்ளதா? பெண்களுக்கு கொடுமை செய்தார்களா என்று கேள்.
அகத்தியர் கூறியதைக் கேட்டீர்களா, அகத்தியர் கூறியது போன்ற நிகழ்வுகள், உங்கள் தந்தை வாழ்விலும், உங்கள் வாழ்விலும் நடந்துள்ளதா? கூறுங்கள் என்றேன்.
அவர் அமைதியாக தரையை பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார். அகத்தியர் கூறியது உண்மையா? இல்லையா என்று நீங்கள் கூறினால்தானே மேற்கொண்டு நான் ஓலையைப் படிக்கமுடியும் என்றேன். உண்மைதான் என்று மெதுவான குரலில் கூறினார்.
ஓலையை தொடர்ந்து படித்தேன். இவன் தந்தையும், இவனும் பெண்களுக்கு செய்த பாவ- வினை வம்சத்தில் வளர்ந்து இப்போது இவன் மகன் வாழ்வின் விதியாக செயல்படுகின்றது. பாட்டனும், தந்தையும் செய்த பாவம் மூத்த மகன் வாழ்வில் விதியாக, வேதனையைத் தந்துகொண்டு இருக்கின்றது.
இவன் மகனின் குழந்தை மனைவியின் கருவில் வளர ஆரம்பித்த உடனேயே இவனுக்கும், இவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு தோன்றத் தொடங்கிவிட்டது. வம்ச வினை, விதியாக கணவன்- மனைவி குழந்தையைப் பிரித்தது.
"ஐயா, எனது இரண்டு மகன்களும் இரட்டை குழந்தைகளாக ஒரே நேரத்தில்தான் பிறந்தார்கள். ஆனால் இளைய மகன், தன் மனைவி, குழந்தையுடன் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழ்கின்றான். இவனுக்கு மட்டும்தான் வம்ச பாவ- சாப பாதிப்பு உண்டா? இதற்கு காரணம் புரியவில்லை'' என்றார்.
ஒரே தாய்- தந்தைக்கு எத்தனை குழந்தைகள் பிறந்தாலும், இது போன்று இரண்டு குழந்தைகள் ஒரே நேரத்தில் பிறந்தாலும் முன் பிறவியில் அல்லது வம்ச முன்னோர்கள்கால வாழ்வில் உண்டான பாவ- சாபத்தை யார் அனுபவிக்கவேண்டும் என்ற வினைப் பலன் உள்ளதோ அவர்கள் விதியாக இப்பிறவியில் அனுபவித்து தீரவேண்டும்.
மகனின் பிரச்சினை தீர்ந்து மனைவி குழந்தையுடன், என் மகன் ஒற்றுமையாக, நிம்மதியாக வாழ ஏதாவது பரிகாரம் இருந்தால் கூறுங்கள். எந்த கோவிலானாலும் சென்று அதைச் செய்து விடுகின்றேன்.
பூஜை, யாகம், பரிகாரம், வழிபாடு போன்ற நம்பிக்கை சார்ந்த செயல்களாலோ, பணமோ ஒருவர் வினையை அதனால் உண்டான விதியை தீர்த்துவிட முடியாது. அதற்கேற்ற பாவ- சாப நிவர்த்தி களை நடைமுறை வாழ்வில் செயல்படுத்தி வாழவேண்டும் என்று கூறி வம்சத்தில் உண்டான பெண் சாபம் நிவர்த்தியாக சில வழி முறைகளைக் கூறிவிட்டு அகத்தியர் ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியபடியே இனி வாழ்வில் செயல்பட்டு வாழ்கின்றோம் என்று கூறி என்னிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.
மணம்புரிந்த மனைவி ஆனாலும், மனம் விரும்பி பழகிய பெண்ணிற்கும் செய்யும் துரோகம், பாவம், வம்ச வாரிசுகளின் வாழ்க்கையில் பாதிப்பைத் தந்து அனுபவிக்க செய்யும், பெண் சாபம் பெரும் வேதனையை வாழ்வில் தருமென்பதை நானும் அறிந்து கொண்டேன்.
செல்: 99441 13267