"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து'
என்பது வள்ளுவர் வாக்கு.
இதைச் சொல்லும் குறளே இரண்டடிதான்.
ஆனால் குறளின் ஆழமும் விரிவும் எத்தனை பெரியவை என தமிழர்க்குச் சொல்லவேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் ஆலம் விதை எத்தனை சிறிதென்றும், ஆலமரம் எத்தனை பெரிதென்றும் தெரியும். விளக்க வேண்டியதில்லை.
இன்னும் ஒரு உதாரணம் சொல்லப்போனால், அரைமணி நேர தொலைக்காட்சித் தொடர்கள் கடத்தாத உணர்வை, இடைவேளையில் வரும் ஒரு நிமிடத்துக்கும் குறைவான விளம்பரங்கள் கடத்திவிடுவதை எத்தனையோ முறை பார்த்திருப்போம். தன்னம்பிக்கை, சமத்துவம், பெண்ணியம் என ஏகப்பட்ட விஷயங்களை சுருக்கென மனதில் தைக்க உணர்த்திவிட்டு, கூடவே தாங்கள் முன்னிறுத்தும் பொருளையும் நம்மை வாங்கத் தூண்டுபவை விளம்பரங்கள்.
அதேபோல இரண்டு மணி நேர திரைப்படங்கள் தங்கள் குறிக்கோளில் சாதிக்கத் தவறும் விஷயங்களை, சில நிமிட குறும்படங்கள் சாதித்துவிடுவதை பல சமயங்களில் ஆச்சரியத்துடன் பார்த்திருப்போம்.
அத்தகையதொரு குறும்படத்தைப் பற்றிய கட்டுரைதான் இது.
ராஜி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள "பிளாக்ஃபாரஸ்ட்' குறும்படத்தைப் எழுதி இயக்கியிருக்கிறார் ராம்பிரசாந்த். ஜி.
இந்தியாவையே ஏப்ரல்- மே மாதங்களில் பித்துப் பிடித்ததாக மாற்றும் வல்லமைமிக்கதாக மாறியிருக்கிறது டி-20 கிரிக்கெட் ஆட்டம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதன் கேப்டன் டோனி களமிறங்கும்போது, ரசிகர்கள் எழுப்பும் கூச்சலையெல்லாம் கணக்கிட்டு எத்தனை டெசிபல் சத்தமெழுந்தது என கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பெருமிதமாகக் குறிப்பிடுவதெல்லாம் ஆட்டத்தில் நடக்கும். இதே சென்னை அணி, சூதாட்டத்துக்கு இடம்தந்ததாகக் கூறி இரண்டு வருடங்கள் ஆட்டத்திலிருந்தே ஒதுக்கிவைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்தது.
ஒதுக்கிவைக்கப்பட்டதால் என்ன நடந்தது? புதிதாக இரண்டு அணிகள் உருவாக்கப்பட்டு, அந்த அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய வர்கள் போய் சேர்ந்துகொண்டு ஆடிவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமீதான நடவடிக்கை முடிவுக்கு வந்ததும் பழைய அணிக்கே திரும்பியது மட்டுமே நடந்தது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/07/blf1-2026-01-07-16-04-34.jpg)
சரி, இதெல்லாம் எதற்கு என்கிறீர் களா? இந்த ஐ.பி.எல். போட்டியால் என்ன நன்மை நடந்தது?
அணிகளில் இடம்பிடித்த வீரர்கள், அணிக்குச் சொந்தக்காரர்கள் கோடீஸ் வரரானார்கள். இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது. 2024-ல் மட்டும் ஐ.பி.எல். போட்டிகள் மூலம் மட்டும் 5,761 கோடி வருமானம் ஈட்டப்பட்டது. ஆனால், பி.சி.சி.ஐ. ஒரு லாபநோக்கமற்ற அமைப்பு எனக் கூறி ஐ.பி.எல். போட்டிகளுக்கு இதுவரை வருமான வரியே கட்டவில்லை.
மாறாக, ஐ.பி.எல். போட்டியைப் பார்வையிடும் ரசிகர்களுக்கு டிக்கெட் ரூ 800 முதல் 50,000 வரை விற்கப்படுகிறது. இதற்கு ஜி.எஸ்.டி. வேறு கட்ட வேண்டும். டிக்கெட் கிடைக்காதவர்கள் கள்ளச் சந்தை யில் டிக்கெட்டை வாங்கிப் பார்க்கவேண்டும். அந்தக் கள்ளச் சந்தை டிக்கெட் அதன் அசல் விலையிலிருந்து ஐந்து முதல் பத்து மடங்கு விலைபோகும்.
"பிளாக்ஃபாரஸ்ட்' குறும்படம் சென்று தொடும் இடம் அந்தக் கள்ளச்சந்தை டிக்கெட்டும் ரசிகர்களின் பரிதாப நிலையும்தான். சென்னையை ஒரு கான்கிரீட் காடாக வர்ணிக்கும் இயக்குநர், அதில் வேட்டையாடப்படும் ரசிகர்களின் பாடுகளை நம் கண்முன் உயிர்ப்புடன் கொண்டுவருகிறார்.
படத்தை நம்பகமாக காட்சிப்படுத்த, சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நிகழும்போது, சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் சுற்றுப்பகுதிகளையும் உட்பகுதிகளையும் அதன் ரசிகர்கள் திரளோடும், மக்களின் பாதுகாப்புக்காக நிற்கும் காவல்துறையினரோடும் படம்பிடித்து சேமித்துக்கொண்டு, அதே பகுதியில் ஏழெட்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டு கள்ளச்சந்தைக் குழுவினரின் செயல்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
தி லென்ஸ், தி போல்ட், தி வுல்ஃப் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பெயர் சூட்டுவதாகட்டும், அவர்கள் பலியாடுகளை அணுகி வேட்டையாடி வசூல் செய்வதிலாகாட்டும் வெகுநேர்த்தியாக திரைக்கதை எழுதி, அதை சரியாக இயக்கவும் செய்திருக்கிறார்.
வெறுமனே டிக்கெட்டுகளை வாங்கி ப்ளாக்கில் விற்பது மட்டுமில்லாமல், அசல் டிக்கெட்டுகளைப் போலவே போலி டிக்கெட்டுகளையும் தயார்செய்து விற்று ரசிகர்களின் கழுத்தறுக்கும் நுட்பத்தையும் தொட்டுச்சென்றிருக்கிறது குறும்படம். ஏமாறுவதற்கான கும்பல் இருக்கும்வரை இங்கு ஏமாற்றவும் ஆட்களிருக்கும் எனச் சொல்லும் இயக்குநர், அந்த ஏமாற்றுக்காரர்கள் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பவர்கள் மட்டுமில்லை ஐ.பி.எல். ஆட்டத்தைத் தொடங்கி நடத்துபவர்களும்தான் என்கிறார்.
குறும்படத்தின் தொடக்கத்திலேயே இந்த ஆட்டத்தை சர்க்கஸ் என வர்ணித்திருக்கிறார் இயக்குநர். "இல்லை, நான் ஸ்டேடியம் பக்கமே வருவதில்லை. கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்குவதில்லை. என் பர்ஸ் பத்திரமாகத்தான் இருக்கிறது' என சிலர் சொல்லலாம். ஆனால், வருடம்தோறும் டி-20 பார்க்கும் பழக்கம் மாறாதவர் எனில், ஐ.பி.எல். அடிக்சனுக்கு ஆளானவகையில் இந்த கான்கிரீட் காட்டில் நீங்களும் வேட்டையாடப்படும் ஒரு பலி விலங்குதான்.
டி-20 விளையாட்டில் பிளாக் டிக்கெட், போலி டிக்கெட்டுக் கான கள்ளச்சந்தை குறித்த கண்திறப்புக் குறும்படமாக தன் குறிக்கோளில் வென்றிருக்கிறது பிளாக் ஃபாரஸ்ட்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/blf-2026-01-07-16-04-23.jpg)