ரு கவிஞன் சில கவிதைகளை எழுதுகிறான்; 

ஒரு சிறந்த கவிஞன் நல்ல சில கவிதைகளை எழுதுகிறான்; ஒரு மகாகவி பல கவிஞர்களையே உருவாக்குகிறான்’ என்கிற சொற்றொடருக்குச் சான்றாக விளங்கிய கவிப்பேராளுமை கவிக்கோ அப்துல் ரகுமான்.

Advertisment

போதனைகளும் புலம்பல்களும் இருண்மை களுமாய் தத்தளித்துக்கொண்டிருந்த தமிழ்க் கவிதைவெளியில் ஒரு தோணியாய் வந்து, தமிழ்க் கவிதைக்குச் செறிவும் சிறப்பும் சேர்த்த பல கவிதை நூல்களைப் படைத்த பெருமை அப்துல் ரகுமானுக் குரியது. தெளிவின்மையால் தயங்கிநின்ற பல்லாயிரம் இளைய கவிஞர்களை இறுகச் சேர்த்தணைத்துக் கொண்டு, அவர்களது கரங்களில் கவிதைகளைக் கொடுத்த இலக்கிய இதயம் படைத்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். 

Advertisment

ஆழமும் செறிவுமான கவிதைகளைப் படைத்ததோடு, தனக்கென ஒரு தனித்துவமான மொழி நடையுடன் கவிதைகளை எழுதிய கவிக்கோ, பிற நாட்டுக் கவிதை வடிவங்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடியாவார். உருது மொழியில் எழுதப்பட்ட புகழ்பெற்ற காதல் கவிதையான கஜல் வடிவத்தையும், ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட மூவரி வடிவிலான ஹைக்கூ கவிதையையும், தமிழில் பலரும் அறியும் வண்ணமாகக் தொடர் கட்டுரைகளை எழுதிப் பரவலாக்கியதோடு, 1972-ஆம் ஆண்டிலேயே நேரடியாகத் தமிழில் ஹைக்கூ கவிதைகளை எழுதிய சிறப்பும் கவிக்கோவுக்கு உண்டு. மேலும், சூஃபி, நஜ்ம், கவ்வாலி உள்ளிட்ட பல புதிய வடிவங்களையும் தமிழுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

  ‘உன் முகவரி 
  தேடி அலைந்தேன்
  கிடைத்துவிட்டது
  இப்போது 
  என் முகவரி

   தேடி அலைகிறேன்…’ என தனது ‘கஜல்’ கவிதையின் மூலமாகக் காதல் மனங்களையும் -

   ‘நகரும் நதியில்

   நகராமல் உறங்குகிறது   நிலா நிழல்’ என்றெழுதி ஹைக்கூ சுவைஞர் மனங்களையும் ஒருசேர, தன் கவி வரிகளால் கொள்ளையடித்தவர் கவிக்கோ.

Advertisment

    தமிழ்க் கவியரங்க மேடைகளில் சிலேடைச் சிரிப்புகளும், எதுகை மோனைகளும் மட்டுமே கவிதையென அலங்காரம் செய்துகொண்டு பவனி வந்த சூழலில், தமிழ்க்கவியரங்க மேடைகளைச் சிந்தனைக் களமாகவும், தமிழ்க்கவிதைக்கான வாசகப் பரப்பை விரிவாக்கும் தளமாகவும் மாற்றியதில் கவிக்கோ முதன்மையானவர். முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில், கவிஞர்கள் அப்துல் ரகுமான், வாலி, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, வைரமுத்து ஆகியோர் பங்கேற்று வாசித்த கவியரங்கக் கவிதைகளை இன்றைக்கு கேட்டாலும் அதன் கவித்துவ வீச்சும், சிந்தனைத் தெறிப்பும் நம்மை வியக்கவைப்பதாக இருக்கிறது.

    கவியரங்கமொன்றில் ‘தொலைந்து போனவர்கள்...’ எனும் தலைப்பில் கவிக்கோ வாசித்த கவிதையொன்று;

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் - வான் 
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை - இங்கு 
முடிதல் என்பது எதற்குமில்லை 
மணந்தேன் என்பாய் சடங்குகளும் - வெறும் 
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் - உடல் 
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல 
கற்றேன் என்பாய் 
கற்றாயா? - வெறும் 
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? - வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்ல
அளித்தேன் என்பாய் உண்மையிலே - நீ 
அளித்த தெதுவும் உனதல்ல
உடை அணிந்தேன் எனச்சொல்லுகிறாய் - வெறும்
உடலுக் கணிவது உடையல்ல 
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் - ஒரு 
வினாவாய் நீயே நிற்கின்றாய் 
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் - உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய் 
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் - பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார் 
ஆட்டத்தில் உன்னை இழந்துவிட்டாய் - உன் 
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் - உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடனாய்
'நான்' என்பாய் அது நீயில்லை - வெறும் 
நாடக வசனம் பேசுகிறாய் 
'ஏன்'? என்பாய் இது கேள்வியில்லை - அந்த 
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?’

   கவிதைகளைக் கேட்கும் காதுகளோரம் வெறுமனே உரசிப் போகாமல், மனித மனங்களுக்குள்ளிறங்கி இரசவாதம் நிகழ்த்தும் கவிதை களையே கவியரங்க மேடைகள்தோறும் வழங்கிவந்தார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

தான் பங்கேற்ற இலக்கியக் கூட்டங்களி லும், வெகுசன இதழ்களில் எழுதிய இலக்கியத் தரமிக்க கட்டுரைகளிலும் கஜல், ஹைக்கூ ஆகிய வடிவங்களின் சிறப்புகளையும், அவை தமிழில் எழுதப்பட வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தினார். தமிழ்ப் பேராசிரியராகக் கல்லூரிக்குள் மாணவர்களிடம் தமிழார்வத்தையும், கவிதை எழுதும் தூண்டுதலையும் ஏற்படுத்தியதைப் போலவே, கல்லூரிக்கு வெளியேயும் இன்னும் பன்மடங்கு வீச்சோடு அதனைச் செயலாக்கியவர் கவிக்கோ. 

ஏதேன் தோட்டம்’ எனும் இலக்கிய அமைப்பினை வாணியம்பாடியில் உருவாக்கி, மாணவர்களுக்கு கவிதை எழுதப் பயிற்சியளித்தார். அவ்வாறே ஹைக்கூ கவிதைகள் பற்றிய வகுப்புகளையும் எடுத்தார். சில உடனடி தலைப்புகளைக் கொடுத்து, அதற்கு கவிதை எழுதுமாறு பணித்தார். இப்படியான முன்னெடுப்புகள் அன்றைய மாணவர்கள் பலரையும் தமிழ்க் கவிதைக்குள் அழைத்துவர பெரும் தூண்டுகோலாக அமைந்தன. மேலும், வந்தவாசியிலும், சென்னையிலும் நடைபெற்ற ‘ஹைக்கூ கவிதைத் திருவிழாக்களில் பங்கேற்று, புதிதாக ஹைக்கூ எழுதும் இளைய ஹைக்கூ கவிஞர்களுக்கு ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கினார். தமிழ்க் கவிதைகளில் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றை பற்றி தொடர்ந்து எழுதியும் பேசியும் கவனப் படுத்தியதில் கவிக்கோவுக்கு நிகராக அவரேயிருந்து பங்காற்றினார்.

கவிக்கோ எவரையும் உடனே பாராட்டி விடமாட்டார் என்று சொல்வதில் உண்மை இருந்தாலும், நல்ல கவிதைகளைக் கேட்ட கணத்தில் அதனை எழுதியவர்கள் யாராக இருந்தாலும், ‘சபாஷ்’, ‘அடடா’, அற்புதம்…’ என்று மேடையிலேயே வாய் விட்டுப் பாராட்டும் மனமும் கவிக்கோ வசமிருந்த தனிப்பெருங்குணமாகும்.

    தமிழில் கவிதைக்கான தரமான இதழ்கள் வர வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்திய அப்துல் ரகுமான், ‘கவிக்கோ’ எனும் கவிதை இதழினைச் சில காலம் வெளிக்கொண்டு வந்தார். 2000-த்தில் நக்கீரன் குழும இதழாகத் தொடங்கப்பட்ட ‘இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழின் ஆலோசகராகப் பல்லாண்டுகள் பொறுப்பினை ஏற்றதோடு, பல சிறப்புமிக்க கவிதைகளை அதில் தொடர்ந்து எழுதிவந்தார். ‘இனிய உதயம்’ இதழில் கவிக்கோ எழுதிய கவிதைகளெல்லாம் தனியே ஆய்வுசெய்யத்தக்க சிறப்புக்குரிய அடர்த்தியான சொல் வளமிக்க கவிதை களாக விளங்கின.

    1937-ஆம் ஆண்டில் வைகை பாய்ந்தோடிய மதுரையில் பிறந்து, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி, 1991-இல் விருப்ப ஓய்வுபெற்று, முழுநேரப் படைப் பாளராகத் தனது தமிழ்ப்பணியைச் செம்மையுற ஆற்றிவந்த கவிக்கோ, தனது 80-ஆவது அகவையில் இம்மண்ணுலக வாழ்விலிருந்து விடைபெற்று, எட்டாண்டுகள் கடந்தோடிவிட்டன. கடந்த நவம்பர் 9 கவிக்கோவின் 89-ஆவது பிறந்த நாள்.

kaviko1

    தான் வாழ்ந்த சமூகத்திற்கு ஒரு கவிஞன் எத்தகைய பங்களிப்பினை வழங்கியுள்ளான் என்பதை அவன் இறப்பிற்குப் பிறகுதான் அச்சமூகம் அறிந்துகொள்ளும் என்பார்கள். அதற்கேற்ப கவிக்கோ அப்துல் ரகுமான் வாழும் காலத்திலேயே வழங்கி வந்த ‘கவிக்கோ விருது’, அவரது மறைவுக்குப் பிறகும் வேலூர் கவிக்கோ அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டில் கவிஞர் இஷாக், தனது ‘தமிழ் அலை’ பதிப்பகத்தின் வாயிலாக கவிஞர் இன்குலாப், அறிவுமதி, பழநிபாரதி ஆகியோர் கவிக்கோ குறித்து எழுதியவற்றை ‘தீராத கவித்துவத்தின் சுடர்’ எனும் நூலாகவும், என்.லிங்குசாமி, பாவலர் அறிவுமதி, இயக்குநர் பழநிபாரதி, யுகபாரதி ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘பித்தன்களின் ஆலாபனை’ எனும் நூலாகவும் வெளியிட்டார். 

கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின் தொகுப்பில் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதைகள் ‘கவிதையில் இடம்பெறாத சொல்’, ‘இரவுக் கிண்ணத்தில் நிலவின் மது’ எனும் இரு நூல்களாகவும், கவிக்கோவின் அழகான கையெழுத்திலேயே ‘இரக்கமற்ற வெயில்’ எனும் நூலாகவும் நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. கவிக்கோவின் நான்காமாண்டு நினைவு தினத்தையொட்டி 2018, 2019, 2020 ஆகிய மூன்றாண்டுகளில் வெளியான சிறந்த ஹைக்கூ கவிதை நூலுக்கு ‘கவிக்கோ ஹைக்கூ விருதுகளை 2021-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற ‘தமிழ் ஹைக்கூ: முதலாம் உலக மாநாட்டில்’ தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் கவிஞர் கவி விஜய் யோடு இணைந்து வழங்கியது. அதே ஆண்டில் கவிக்கோவின் 85-ஆவது பிறந்த நாளையொட்டி ‘இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழும், ‘தமிழினி கவிதைக்களம்’ அமைப்பின் கௌரவத் தலைவரும் கவிஞருமான தங்கம் மூர்த்தியும் இணைந்து உலகு தழுவிய ஹைக்கூ கவிதைப் போட்டியை நடத்தி பரிசுகளை வழங்கினர்.

கவிஞரும் இயக்குநருமான என்.லிங்குசாமி, 2022-ஆம் ஆண்டுமுதல் கடந்த நான்கு ஆண்டு களாக ‘கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதைப்போட்டி’யை வெகுசிறப்பாக நடத்தி வருகிறார். கவிஞரும் இயக்குநருமான பிருந்தா சாரதி, கவிக்கோ: கவிஞர்களின் கவிஞர்’ எனும் ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார். கடந்த மே மாதத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற ’தமிழ் வார விழாவின் நிறைவுநாளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிக்கோ அப்துல் ரகுமானின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, கவிஞரது குடும்பத்தினரிடம் பரிவுத்தொகையாக ரூ.10 இலட்சத்தை வழங்கினார்.

   திருச்சியிலுள்ள புனித வளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத்லிதின் முன்னெடுப்பில் கடந்த 2020 அன்று  ‘காவிரிக் கவித்தமிழ் முற்றம்’ எனும் அமைப்புத் தொடங்கப்பட்டது. மாதாந்திர இலக்கிய நிகழ்வு களை மட்டுமே நடத்தும் ஓர் அமைப்பாக சுருங்கிவிடாமல் தமிழ்க் கவிதைக்கான ஆய்வுக்களமாக ‘காவிரி முற்றம்’ நூலகத்தை அமைத்தல், கவிதைக் கான ஆய்விதழாக ‘கவி முற்றம்’ இதழினை வெளிக்கொண்டு வருதல், சிறந்த தமிழ் நூல்களைப் பதிப்பித்து தமிழ் முற்றம்’ வெளியீடாகக் கொண்டுவருதல், மின்வெளிக்காட்சியாக (யூ-டியூப்) ‘முற்றம்’ எனும் ஒளிபரப்பின் வாயிலாகத் தமிழ் இலக்கியச் சிறப்பினைப் பரவலாகக் கொண்டுசெல்லுதல் எனும் ஐம்பெரும் கனவுகளுடன் இந்த அமைப்பு செயலாற்றிவருகிறது. இப்பெருமுயற்சிக்கு பேராசிரியர் ஜா.சலேத் செயலாளராகப் பொறுப்பேற்றதோடு, அவரது இணையர் -.மெர்சி ரோஸ்லின் டயானா செயல் இயக்குநராகவும் இணைந்துநின்று பங்களித்து வருகிறார்.

இந்தக் ‘காவிரிக் கவித்தமிழ் முற்றம்’ அமைப்பின் மூலமாகக் கடந்த 2025 ஜனவரி அன்று மிக முக்கியமானதொரு செயல்திட்டம் தீட்டப்பட்டது. ‘கவிக்கோ: ஞானத்தால் நிறைந்த வானம்’ எனும் தலைப்பில் இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் கவிக்கோ அப்துல் ரகுமான் எனும் ஆளுமையை, அவரது படைப்புகள், உரைகள் உள்ளிட்ட பன்முகத் திறமைகளைக் கொண்டு சேர்க்கும் வகையில் 25 தொடர் நிகழ்வுகளை நடத்தும் முயற்சியானது ஒருங்கிணைக்கப்பட்டது. அதன் முதல் நிகழ்வாக, கடந்த ஜனவரி 26 அன்று ‘இளையோர் கவியரங்கம்’ திருச்சியிலுள்ள தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்றது. கவிஞர் கதிரவன் (எ) அ.காதர் பாட்ஷா தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கவியரங்கம் சிறப்பாக நடந்தேறியது.

பிப்ரவரி 27 அன்று ‘இளையோர் உரையரங்கம்’ எழுத்தாளர் கேத்தரீன் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த உரையரங்கில் திருச்சியிலுள்ள பல கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். மார்ச் மாதத்தில் ‘தேடலரங்கம்’, ஏப்ரலில் ‘நூலரங்கம்’, மே மாதத்தில் ‘பித்தன் அரங்கம்’, ஜூன் மாதத்தில் ‘வாசிப்பரங்கம்’ ஜூலை மாதத்தில் ‘பாராட்டரங்கம்’ என்பதாகத் தொடர்ந்த நிகழ்வில் ஆகஸ்ட் 9 அன்று ‘கருத்தரங்கமாக’ நடைபெற்றது. கவிஞர் மு.கீதா தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ‘ஆலாபனை செய்த பித்தன்’ எனும் தலைப்பில் எஸ்.ஆர்.எம். அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் பா.ஜெய்கணேஷ் நிறைவானதொரு உரையினை ஆற்றினார்.

   செப்டம்பர் 18, 19 ஆகிய இரு நாள்கள் ‘படைப்பிலக்கியப் பயிலரங்கமாகத்’ தூய வளனார் கல்லூரியில் நடைபெற்றது. இதனைக் காவிரிக் கவித்தமிழ் முற்றத்தோடு இணைந்து தூய வளனார் கல்லூரியின் தமிழாய்வுத்துறை, வேர்கள் அறக்கட்டளை, வாழ்வு வெளியீடுகள், அங்குசம் இதழ் ஆகியன மிகச் சிறப்பாக நடத்தின. அக்டோபர் மாத நிகழ்வாகக் கடந்த 27-ஆம் தேதியன்று ‘பகிர்வரங்கம்’ திருச்சி பட்டர்வொர்த் சாலையிலுள்ள புராதனப் பூங்காவில் நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் வி.ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கவிஞர் திருவைக்குமரன் உரையாற்றினார். நவம்பர் மாதத்தின் சிறப்பு நிகழ்வாக ‘கவிக்கோ குழந்தைகளுக்குமானவர்’ எனும் தலைப்பில் ‘குழந்தைகள் அரங்கமும்’, அந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியின் பதினோராம் வகுப்பு மாணவியும் பேச்சாளருமான மா.பா.நெகாசினிக்கு ‘சிறார் விருது 2025’ எனும் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முதலாண்டின் நிறைவாகவும் 12-ஆவது மாதமான டிசம்பர் மாதத்தின் நிகழ்வாகவும் ஆய்விதழ் அரங்கம்’ இம்மாத இறுதியில் நிகழவிருக்கிறது. இந்நிகழ்வில் ‘கவி முற்றம்’ வெளியீட்டகத்தின் சிறப்பு வெளியீடாக, ‘கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளில் சமூக நோக்கு’ எனும் தலைப்பில் ஆய்வறிஞர்கள், பேராசிரியர்கள். கவிஞர்கள், சுவைஞர்கள் என பலரின் பார்வையில் கவிக்கோவின் கவிதைகள் குறித்த பன்முக நோக்கிலா கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, அவை நூலாக வெளியிடப்படவுள்ளது.

    காவிரிக் கவித்தமிழ் முற்றம் முன்னெடுத்து நடத்திவரும் இந்த ‘கவிக்கோ; ஞானத்தால் நிறைந்த வானம்’ நிகழ்வுகளானது வரும் 2027 ஜனவரி மாதம் வரையிலும் 25 நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. 25-ஆவது நிகழ்வானது 2027 ஜனவரியில் ‘கவிக்கோவும் தமிழர் திருநாளும்’ எனும் பெருவிழா திருச்சியில் நிகழவுள்ளது.

    இலக்கியச் செயல்பாடுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் முனைவர் ஜா.சலேத், ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் உரையாளராகவும் அறியப்பட்டவர். சமீபத்தில் ‘கவிக்கோவுடன் ஓர் உரையாடல்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கவிதையொன்றில் கவிக்கோவைப் பற்றி ஜா.சலேத் இப்படி எழுதிய வரிகளிவை;

    ‘குறில் எழுத்தை அம்பாக்கி
    நெடில் எழுத்தை வில்லாக்கி
    கவி தொடுத்தவர் கவிக்கோ
 
    உயிரெழுத்தையும்
    மெய்யெழுத்தையும்
    ஆய்த எழுத்தாக
    மாற்றிக்காட்டியவர் கவிக்கோ’

    உண்மைதான்; தன் எழுத்தால் சிந்தனையால் தமிழ்கூறும் நல்லுலகிற்கு என்றென்றும் வாழும் படைப்புகளைக் கையளித்துவிட்டு விடைபெற்றிருக் கும் கவிக்கோ, காவிரிப்படுகையில் இன்னும் வீரிய மாய் அழுத்தமாய் அறியப்பட ‘காவிரி கவித்தமிழ் முற்றம்’ முன்னெடுக்கும் இந்த 25 நிகழ்வுகளும் கூட, வெள்ளி வானவில்லாய் இலக்கிய வானில் என்றும் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும்.