தமிழ் சினிமா பாடலாசிரியர் ஒருவருக்காக நிறைந்த அரங்குடன், மாலை 05 மணிக்கு ஆரம்பித்து இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 06 மணி நேரம் ஒரு பிரம்மாண்ட நிகழ்வு நடந்துமுடிந்திருக்கிறது.
பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இறப்பிற்கு பிறகு அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார ரீதியில் உதவுவதற்காகவும், பிள்ளைகளின் மேற்படிப் பிற்காகவும் திரைத்துறை நண்பர்கள் நீண்ட நாட்களாக ஒரு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுக்கொண்டே இருந்தார்கள். கிட்டத்தட்ட 09 ஆண்டுகளுக்குப் பிறகு நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, அந்நிகழ்வு ஆனந்த யாழை என்ற தலைப்பில் நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 19 அன்று நடந்தது.
தமிழ்த்திரையுலகின் இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், ஜெயம் ராஜா, ராம், ஆகியோர் முன்னின்று நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.
இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதய குமார், லிங்குசாமி, வசந்தபாலன் தயாரிப்பாளர் கள் தேனப்பன், கலைப்புலி தாணு, சிவா, சுரேஷ் காமாட்சி, தனஞ்ஜெயன் ஆகியோரும், இசையமைப் பாளர்கள் தேவா, யுவன்ஷங்கர் ராஜா, விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீகாந்த் தேவா, பாடகர்கள் ஹரிசரண், நிவாஸ் கே. பிரசன்னா, உத்தாரா உன்னி கிருஷ்ணன், சைந்தவி, சித்தார்த் ஆகியோரும், எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா, கவிஞர் முருகன் மந்திரம், பாடலாசிரியர் வேல்முருகன் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக சிவக்குமார், சத்யராஜ், நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் சார்பில் நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அன்பளிப்பாக அளித்தனர்.
ஆஈபஈ என்ற ஈவன்ட்ஸ் நிறுவனம் இந்த ஒட்டு மொத்த நிகழ்வினையும் நடத்தியது. சிவக்குமார், சூர்யா- கார்த்தி அறக்கட்டளை சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கினார். கல்வியாளர் ஐசரி கணேசன், நா.முத்துக்குமாரின் குழந்தைகள் தங்களது கல்வி நிறுவனத்தில் பயில விரும்பினால் அவர்களுக்கான அனைத்துச் செலவினையும் தாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
நிகழ்வில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்களுக்கும் நா.முத்துக்குமாருக்குமான உறவை, எழுத்தை சிலாகித்துப் பேசினார்கள். அவை பார்வை யாளர்களை நெகிழ்ச்சிக் கடலில் மூழ்கவைத்தது.
நிகழ்வு ஆரம்பித்ததும் மேடையில் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், அழைக்கப்பட்டார்கள். அதில் அஜயன் பாலா பேசுகையில் “என் தம்பி நா.முத்துக்குமார் சென்னையில் எனது அறையில்தான் தங்கியிருந்தான். பாடல் எழுதுவதற்காக லயோலா கல்லூரியில் உள்ள தேவாலயத்தின் அருகே ஒரு மரம் இருக்கும்.
அதன் நிழலில் உட்கார்ந்துதான் எழுதுவான். சில சமயம் அவன் எழுதிய பாடல்களை எனக்கு வாசித்துக் காண்பிப்பான், அவன் இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்து வருவான் என்று தெரியாத காலத்தில் அவனது எழுத்துக்க ளெல்லாம் எனக்கு சாதாரணமாகவே தெரிந்தது. அப்படியாக ஒரு நாளில் ஒரு பாடல் வரியினை எழுதியிருக்கிறேன் வாசித்துப் பாருங்கண்ணா என்று கொடுத்தான் “தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்” என்று முதல் வரியினை எழுதியிருந்தான். இது என்ன சாதாரணமாகத்தானே இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால், அந்த பாடல் காதல் கொண்டேன் திரைப்படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வெற்றிப்பாடலாக மாறியது, நா.முத்துக்குமாருக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தது” என்று தொடங்கி அறைத்தோழன் மிகப்பெரிய பாடலாசிரியராக மாறியதைப் பகிர்ந்துகொண்டார்.
இசையமைப்பாளர் தேவா பேசும்போது, “என்னிடம் நா.முத்துக்குமார் முதன்முதலில் வாய்ப்பு தேடி வந்தபோது, பார்ப்பதற்கு மிகவும் சிறு வயது பையன் போல இருக்கப்பா, தாடி வச்சுக்க அப்பத்தான் பார்ப்பதற்கு பெரிய ஆள் போல தெரிவ என்றேன், என் பேச்சைக் கேட்டு அதற்கு பிறகு எப்போதுமே தாடியுடனே இருப்பார், நா.முத்துக்குமார் தாடி வைத்ததற்கு நான்தான் காரணம்” என்று சொன்னார்.
இயக்குநர் பாலாவோ, “தமிழ்நாட்டில் ஒரு பெரிய கட்சியில் அப்பாவிற்கும், மகனுக்குமிடையே அரசியல் பனிப்போர் நடக்கிறது. அப்போது அந்த அப்பா அரசியல் தலைவர் மகனைப் பற்றி குறிப்பிட்டு பேசும்போது நா.முத்துகுமார் பெயரையும் சொல்லி தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னே என்று அந்த பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசினார்” என்று அரசியல்வாதிகள் வரை இவரது பாடல் மனதைத் தொட்டிருப்பதை சுட்டிக்காட்டினார்.
தயாரிப்பாளர் தாணு, “பல்லேலக்கா பாடலில் இரட்டைக்கிளவியையும், அடுக்குத் தொடரையும் நா.முத்துகுமார் எழுதியிருந்ததை கேட்ட மூத்த கவிஞர் வாலி அந்த கவிஞனுக்கு ஒரு வாழ்த்து சொல்லுயா என்று என்னிடம் சொன்னார்” என்றார்சீமான் பேசும்போது, “தம்பி நா.முத்துக்குமாரை நான்தான் வீரநடை படத்தில் அறிமுகம் செய்தேன். அந்த படத்தில் முத்து முத்தா முல்லைப் பூவை பிடிச்சிருக்கு என்று ஆரம்பித்து அந்த நாயகி பிடித்ததையெல்லாம் சொல்வாள். அதெல்லாம் பிடிச்சிருக்கு என்று அந்த பாடல் முழுமை பெறும். தம்பி முத்து அருமையாக எழுதித் தந்திருந்தான். அவனது குடும்பத்தை, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
அதை நாங்கள் செய்வோம் என்றார்.
நடிகர் சிவகார்த்தி கேயன், “என் மனைவியை மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தபோது, நான் மருத்துவமனைக்குச் சென்று கொண்டி ருந்தேன்;
அப்போது ஆனந்தயாழ் பாடல் கேட்டேன். கேட்டுக்கொண்டிருக்கையிலே பெண் குழந்தை பிறந்திருக்கிறாள் என்ற செய்தி என்னை வந்துசேர்ந்தது. நா.முத்துக்குமார் இல்லாததால்தான் நானெல்லாம் பாடல் எழுதவேண்டிய சூழல் வந்திருக்கிறது” என்று நகைச்சுவையாகப் பேசியவர் பின்பு, “நான் எழுதிய பாடலுக்காக தயாரிப்பாளரிடம் காசு கேட்டுவாங்கினேன். அந்த பணத்தை அப்படியே நா.முத்துகுமார் குடும்பத்தினரிடம் கொடுத்தேன். நான் அவரை அதிகம் பார்த்துப் பேசி பழகியதில்லை. ஆனால் அவர்தான் நான் எழுத இன்ஸ்பிரேசன், எனவே அதற்கான காணிக்கையாக அந்த தொகையினைக் கொடுத்தேன். ரொம்ப பிடிச்சவங்களை சீக்கிரம் கடவுள் எடுத்துப்பாருபோல, அதான் முத்துவை எடுத்துக்கொண்டார். இப்போது சொர்க்கத்தில் உட் கார்ந்து அவருக்கு பிடிச்ச கண்ணதாசன், வாலிகூட தமிழ்க் கவிதைகள் குறித்து பேசிக் கொண்டிருப்பார்” என்று நெகிழ்ந்தார்.
முத்துக் குமாருடனான தனது பழக்கத்தைப் பேசிய இயக்குநர் ராம், “மொத்த தமிழ்த் திரையுலகம் முழுவதும் ஒன்றுசேர்ந்து இருக்கு. முத்து என் வாழ்வில் மட்டும் ஆனந்த யாழை மீட்டவில்லை. மொத்த திரையுலகிலும் ஆனந்த யாழை மீட்டியிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கிற ஒவ்வொரு வீட்டிலும் ஆனந்த யாழை மீட் டிக்கொண்டிருக்கிறார். முத்துக்குமார் எப்பவுமே பெரிய மலைதான். ஆனா தன்னை பனித்துளியாகக் காட்டிக்கொள்வார். ரொம்பவும் எளிமை. நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தது முத்து. எனக்கு பலரை அறிமுகப்படுத்தி வைத்தது முத்து” என்று குறிப்பிட்டுச் சொன்னார்.
கதைசொல்லி பவா செல்லத்துரை பேசும்போது, “நகுலன் கவிதை ஒன்று இருக்கிறது.
“இருப்பதற்காகத்தான் வருகிறோம்
இல்லாமல் போகிறோம்.”
இந்தக் கவிதை நம் மூளையைப் பிறாண்டிக் கொண்டே இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு முத்துக்குமார் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்.
ஆனால் இன்றைக்கும் அவர் நம்மில் பலரின் நினைவுகளில் இருக்கிறார். ஒரு வாரத்துக்கு முன்னால், ஒரு மாதத்துக்கு முன்னால் இறந்துபோன பலர் மறக்கப்பட்டுவிடுகிறார்கள். தமிழ்நாட்டில் இளம் தலைமுறை நா.முத்துக்குமாரை நினைவில் வைத்திருப்பதை முக்கிய விஷயமாகப் பார்க்கிறேன். கவிதைகள், பாடல்கள் இரண்டு குதிரையிலும் பயணம் செய்தவர் முத்துக்குமார். அவரளவுக்கு தீவிரமான வாசித்துக்கொண்டிருந்த ஒரு பாடலாசிரியரைப் பார்த்ததில்லை. பாடல் எழுதும்போது, வார்த்தைகளுக்காக ஏங்கிநின்றதில்லை. வாசித்ததை வெளியே சொல்லிக்கொண்டதும் இல்லை. என்று புகழ்மாலை சூடிவிட்டு தன் இருக்கைக்குத் திரும்பினார்.
இயக்குநர் லிங்குசாமி, “முத்துக்குமார் ஒரு பறவை மாதிரி. ஓரிடத்தில் நிற்கமாட்டார். சிறகடிப்பு மாதிரி அவரிடம் ஒரு பரபரப்பு இருந்துகொண்டே இருக்கும். ஒரு கட்டத்துக்குப் பிறகெல்லாம் பாடல்கள் எழுதுறது இல்லை. சொல்வார். குறித்துக்கொள்ளவேண்டும். ஒரு கார் ட்ராவல் போய் ஆம்பூர் போறதுக்குள்ள ஒரு பாடலை எல்லாம் எழுதிமுடிச்சிருக்கார். மிகப்பெரிய கவிஞன். ஒரு பாடலாசிரியர், இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் இணக்கமாக இருக்கமுடியாது. அதிலும் முத்துக்குமார் விதிவிலக்காக இருந்தார். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வெகுமுன்பாகவே செய்தோம். நடக்கலை. இயக்குநர் ஏ.எல். விஜய் சரியாகச் செய்திருக்கிறார்” என்று தொடங்கி அவருடனான சிறப்பான கவிதை வரிகளைப் பற்றி சிலாகித்துப் பேசினார்.
இது ஒருபுறமென்றால், நிகழ்ச்சிக்கு பெருமளவில் வந்திருந்த இளைஞர்களை சுவாரசியப்படுத்துவதற்காக பாடகர்களைக் களமிறக்கினார்கள். முதலில் மேடையேறிய இசைக்கலைஞர் நிவாஸ் கே பிரசன்னா துள்ளலான பாடல்களைப் பாடி ஆட்டம் போட்டு உற்சாகமாக்கினார். பிறகு ஒருசில பாடல்கள் ஒலிக்க நடன கலைஞர்கள் நடனமாடி உற்சாகமூட்டினர். தொடர்ச்சியாக களமிறங்கிய இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, யுவன்ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் மேடையிலேயே இசையமைத்தும் பாடியும் ஆடியும் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் திளைக்கவைத்தனர்.
யுவன்ஷங்கர் ராஜா நிகழ்வு அரங்கில் நுழைந்த உடனேயே யுவன் யுவன் என்று ரசிகர்கள் உற்சாகம் பொங்க கத்திக்கொண்டே இருந்தனர். மேடையேறிப் பாடியபோது அரங்கம் இருளில் மூழ்க பார்வையாளர்கள் தங்களுடைய போன் டார்ச் லைட் ஆன்செய்து கைகளை உயர்த்தி காண்பித்தது இருளில் வெண்ணிலவு மின்சார உதவியோடு மிளிர்வதைப் போல அழகாக இருந்தது.
மற்றவர்கள் எப்படியோ, கலைஞர்களைப் பொறுத்தவரையில் மறைவு என்பது உடலை விட்டுதான். அவர்களது படைப்புகளின் வழியே எப்போதும் இங்கேயேதான் வாழ்ந்து கொண்டி ருப்பார்கள். தன்னுடைய வாசகர்கள், ரசிகர்கள் மூலமாக அவர்கள் சிரஞ்சீவித்தும் பெற்றுவிடுவார்கள். அப்படித்தான் நா.முத்துக்குமார் என்ற அமரக்கவிஞர் தன்னுடைய பாடல் வரிகளால் எப்போதும் நம்மோடு வாழ்ந்துகொண்டிருப்பார்.
-தாஸ்