னித வாழ்க்கையில் உண்டாகும் முக்கியமான தருணங்களை இசையின் மூலமாக மேலும் கவனப்படுத்தி வருகிறோம்.  இந்தப் பூமிக்கு குழந்தைகள் வருவதிலிருந்து, அவர்கள் பெரியவர்களாகி, வாழ்க் கையை முடித்துக் கொண்டு காற்றோடு காற்றாகக் கரைவதுவரை மனித வாழ்க்கைக்குள் பாடல்கள் கலந்தே கிடக் கின்றன.  எத்தனையோ அதிசயங்கள் இந்த நிலப் பரப்பில் நம்மை வியக்க வைத்தாலும் "பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா" என்று மகாகவி பாரதியார் பெருமிதம் கொள்கிறார்.  

Advertisment

குயிலின் குரலோசையை இசைக்கு உதாரணமாகச் சொல்லும் வேளையில் கடலோசைகளை அதே இசைக்கட்டுக்குள் வைத்து மகிழ்ச்சி கொள்கிறோம்.  ஒவ்வோர் உயிரின் இதயத்துடிப்புக் குள்ளும் அழகிய இசை உண்டாகிவிடுகிறது.  கண்ணிமைத்தலிலும், சுவாசித்தலிலும் இசையின் கூறுகளை உணர முடிகிறது.  பச்சை இலைகளைத் தாலாட்டும் காற்று, இலையின் பாடல்களை நம் செவிகளில் கொண்டுவந்து சேர்க்கின்றன.  

Advertisment

இசைக்கு மயங்காத உயிர்களே பெரும்பாலும் இருக்கமுடியாது.  சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள், போராளிகள் அவ்வளவு ஏன் சர்வாதிகாரிகளும் இசையை விரும்புகின்றனர் என்பதை காலம் காட்டிக்கொண்டே இருக்கிறது.  கிராமப்புறங்களில் குழந்தைக்குத் தாலாட்டு பாடுவதன் வழியாகத் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்கின்றனர் தாய்மார்கள்.  விளையாடும் குழந்தைகள் விளையாட்டுப் பாடல்களின் மூலமாகச் சொற்களையும், எண்களையும் கற்றுக்கொள்கின்றனர்.  வேலை களைப்பு தெரியாமல் இருப்பதற்காகத் தொழில் பாடல்கள் பாடக்கூடிய வழக்கம் இன்று வரை தொடர்கிறது.  காதுகுத்து நிகழ்வில் தொடங்கி -சடங்கு செய்தல், கும்மி கொட்டுதல், நலங்குப் பாட்டு, காதல் பாட்டு, கடைசியாக ஒப்பாரி என்று பல உணர்வுகளையும் வெளிப்படுத்துவதற்குப் பாடல்களே சரியான தீர்வு. 

"ஆச வச்சன் உன்மேல
அரளி வெச்சேன் கொல்லையில
பாசம் வச்ச நாள் முதலா
பச்ச முகம் வாடுதனே"

Advertisment

என்ற பாடல் மூலம் ஒரு பெண் தன்னுடைய காதலைச் சொல்லி விடுகிறாள். நிகழ்வுகளை நீங்காத நினைவுகளாக மாற்றுவதில் பாடல்களுக்குத் தனி இடமுண்டு.  அதனுடைய தொடர்ச்சியாகத் திரைப்படத்திலும் பாடல்கள் இடம்பெறுவதைக் கேட்டு மகிழ்கிறோம். இன்றைய காலகட்டங்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிக்காத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவிற்குத் திரையிசைப் பாடல்கள் செல்வாக்குப் பெற்றுவிட்டன.  

ஆரம்ப காலங்களில் அதிகமான பாடல்கள் படங்களை ஆட்சிசெய்தன. காலப்போக்கில் தேவையான பாடல்கள் திரைக்கதைக்கு மேலும் அழகு சேர்த்துவந்தன.  சமீபகாலமாகத் துள்ளல் இசையும் - துள்ளல் பாடல்களும் மக்களின் மனதை, குறிப்பாக இளைஞர்களைப் பெரிதும் ஈர்த்து வருகின்றன.  

poet1

ஒரு காலத்தில் பாடல்களுக்கு மெட்டமைத்த சூழல் இருந்தது. பிறகு மெட்டுக்குப் பாடல் எழுதவும் கவிஞர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். சந்தத்துக்குப் பாடலா அல்லது சொந்தத்துக்குப் பாடலா என்ற பேச்சு வழக்கு மெட்டுக்குப் பாடல் எழுதியதையும், பாடலுக்கு மெட்டமைத்ததையும் உணர்த்துகிறது. பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலை இன்று இல்லை என்று சிலர் கவலை தெரிவிக்கின்றனர்.  ஆடம்பரமிக்க இசை, பாட்டு வரிகள்மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்துவதாகச் சிலர் குறைப்பட்டுக் கொள்கின்றனர். இருந்தாலும் அற்புதமான கவிவரிகளால் பாடலாசிரியர்கள் தன்னை நிரூபிக்கத் தவறியதில்லை. ஒரு காலத்தில் திரைத்துறை என்ற கலையுலகத்தில் ஆண்கள் மட்டுமே கோலோட்சிக் கொண்டிருந்தனர். 

அந்தச் சூழலில் இயக்குநராக, பாடகராக, பாடலாசிரியராகத் தன்னை வளர்த்துக்கொண்டவர் டி.பி. ராஜலட்சுமி. பெண் பாடலாசிரியர்களின் வருகையை அவரிலிருந்தே தொடங்கவேண்டும் என்று உணர்த்துகிறது வரலாறு.

ஒரு குடும்பத்தில் பெண்களின் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தும் இந்தச் சமுதாயம், மற்ற இடங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று குரல் கொடுக்கத் தயங்குகிறது.  இந்தக் காலகட்டத்தில் திரை உலகத்தில் பல சவால்களைத் தாண்டி, ஒரு பெண் சாதனை செய்ததன் வழியாக இன்றைய தலைமுறையும் அவரை நினைத்துப் பார்க்க வழிசெய்திருக்கிறார்.  ’தென்னிந்திய சினிமா ராணி‘ என்று போற்றப்பட்ட டி.பி.ராஜலட்சுமி - நாடகம், திரைப்படம், இலக்கியம் என்று பல துறைகளிலும் கொடிகட்டிப் பறந்தவர்.  

பெண் கல்வி, பெண் விடுதலை என்று சிந்திக்காத காலத்தில், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இவர் சாதனை படைத்திருப்பது இன்றைய நூற்றாண்டிலும் வியக்கவைக்கிறது.  தமிழ் நாடக உலகின் தந்தை என்று அழைக்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியின் பாடலைக் கேட்டு மகிழ்ந்து வாழ்த்தினார். நடிகை என்பதைத் தாண்டி தேசபக்திப் பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர உணர்வை ஊட்டினார். கதை, வசனம், தயாரிப்பு என்று பல அவதாரங்களை எடுத்தவர் இவர்.

இசுலாம் சமூகத்தைச் சேர்ந்த ரோஷனாரா பேகம் "குங்குமப் பொட்டின் மங்கலம்" என்ற பாடல் மூலம் திரையிசைக்குள் வேர்விட்டவர்.  முறைப்படி இசை கற்ற இவர் எழுத்து திறமையும் கைவரப்பெற்றவர். 

"குங்குமப்பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்"

என்ற பல்லவியை இவர் எழுதியவுடன் படக்குழுவினருக்கு மகிழ்ச்சி  ஏற்பட்டது.  ஏனெனில் ’குடியிருந்த கோவில்‘ என்ற படத்திற்கு ஆரம்பத்தில் சங்கமம் என்று பெயர்வைப்பதாக நினைத்திருந்தனர். 

அந்தச் சொல் இந்தப் பாடலில் இடம்பெற்றவுடன் எல்லோரும் உணர்வு பொங்க மகிழ்ச்சி கொண்டனர். அன்றைய நாளில் இந்தப் பாடல் மிகவும் பிரபலமானது. 

அப்போது காதலர்கள் மனத்தில் ரீங்காரமிடும் பாடலாக இந்தப் பாடலே அமைந்தது. தமிழ்நாட்டின் இரண்டு முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இந்தப் பாடலுக்கு நடனமாடி நடித்தது பெரிய வரவேற்பைப் பெற்றது.  ஆனாலும் அதற்குப் பிறகு இவர் வேறு எந்தப் பாடலையும் எழுதவில்லை.  "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடலால் கணியன் பூங்குன்றனார் நூற்றாண்டுகள் கடந்தும் வாழ்வதைப் போல, குங்குமப் பொட்டின் மங்கலம் வழியாக இன்றும் இவர் வாழ்ந்து வருகிறார்.

ஒரு பெண்ணின் காதல் உணர்வை ஆண் பாடலாசிரியர்கள் எழுதுவதற்கும் பெண் பாடலாசிரியர்கள் எழுதுவதற்கும் இருக்கும் வேற்றுமையை உணர்த்தக்கூடிய பாடலாக, கவிஞர் தாமரையின் பாடல் அமைந்தது.

"வசீகரா என் நெஞ்சினிக்க…
உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்கா…
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்"

என்ற வரிகள் காதல் பாடலின் பரிணாம வளர்ச்சியைக் காட்டுகின்றன. பெண் பாடலாசிரியர்களைப் புறக்கணிக்கும் காலத்தில் திரையுலகின் சிம்மானத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமையை இவரின் பாடல்கள் பெற்றுவிட்டன. அடுத்து வரும் பெண் பாடலாசிரியருக்குத் தாராளமாக வாய்ப்பின் கதவுகளைத் திறந்துவிட்ட பெருமைக்குரியவர்.  'என்னை அறிந்தால்' படத்தில் "இதயத்தில் ஏதோ ஒன்று" என்று தொடங்கும் பாடலின் அற்புதமான வரிகள் நம்மை மயங்க வைக்கும்.

"அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்
ஆயிரம் ஆண்டாகப் பழகிய தோற்றம்
ஒரு வெள்ளிக் கொலுசு போல இந்த மனசு சிணுங்கும் கீழ
அணியாத வைரம் போல புது நாணம் மினுங்கும் மேல"

என்ற வரிகள் அமரத்துவம் பெற்றவை. தனித்தமிழில் பாடல் எழுதுவதுடன், இரட்டை அர்த்தம் தரும் வரிகளை எழுத மாட்டேன் என்ற கொள்கையுடன் பாடல்கள் எழுதி வரும் தாமரையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  பல பாடல்களில் ஒரு வார்த்தையைக்கூட தவிர்க்க முடியாத அளவிற்கு அழுத்தமான பாடல்களுக்குச் சொந்தக்காரர்.  "சுற்றும் விழிச் சுடரே", "கண்ணான கண்ணே" என்று அவரின் பாடல் வரிகளை நினைத்தாலே ரசிகர்களின் உள்ளம் சிறகடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தலித் பெண்ணியம் என்ற சிந்தனையுடன் செயல்படுபவர் கவிஞர் குட்டி ரேவதி.  ’சிறகு‘ படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானவர்.

"ஆயிரம் சூரியன் சுட்டாலும்
கருணையின் வர்ணம் கரைந்தாலும்
வலியால் உள் உயிர் தேய்ந்தாலும்
உன் காதல் அழியாதே....
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
நெஞ்சே எழு
காதல் என்றும் அழிவதில்லை''

என்ற வரிகளால் திரையு லகை ஆளத் தொடங்கியவர். சமூகச் செயற்பாட்டாளராக இருக்கும் இவர் முற்போக்குக் கருத்துக்களைத் தன் படைப்பின் மூலம் பரவச் செய்பவர். நெஞ்சே எழு இந்தப் பாடலின் மூலம் மிகப் பெரிய மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார் கவிஞர். காதலை சொல்லும் தன்னெழுச்சிப் பாடலாக அமைந்திருப்பது மேலும் கவனம் பெறுகிறது.   

அதேபோல, மெட்ராஸ் படத்தின் பாடலின் மூலம் ரசிகர்களைத் தன் வசப்படுத்தியவர் கவிஞர் கு. உமாதேவி.  "நான் நீ நாம் வாழவே உறவே" என்ற பாடலை இளைய தலைமுறை கொண்டாடித் தீர்த்தனர். அந்த வரிகளுக்குச் சொந்தக்காரரான இவர் திரையிசைக்குள் அழுத்தமான கவிதை வரிகளை வாரித் தந்தவர்.  பாடலுக்குள் புதிய சொல்லாட்சியைப் பயன்படுத்துவதற்குத் தமிழ் இலக்கியப் படிப்பு பேருதவியாக இருக்கிறது என்று மனதார ஒப்புக்கொள்கிறார். இவருக்கு எப்போதுமே புதிய சொல்லாடல்களை, உவமைகளைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் உண்டு.  

காதல் என்ற உணர்வு இளமைக்கு மட்டும் சொந்தமானதல்ல.  முதுமையிலும் தொடரும் அந்தக் காதல் நிறைய ஆழமுடையதாக இருக்கும். முதுமைக் காதலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பு கபா- படத்தில் கிடைத்தது என்று தன் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் கவிஞர் அந்தப் பாடலை எழுதுவதற்கு முன்பாக முதுமை காதலை அழகாக விளக்கும் பாரதிதாசனின் குடும்ப விளக்கை நினைத்துக் கொண்டதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

"மாய நதி இன்று
மார்பில் வழியுதே
தூய நரையிலும்
காதல் மலருதே
யானை பலம் இங்கே
சேரும் உறவிலே
போன வழியிலே
வாழ்க்கை திரும்புதே“

என்ற வரிகள் நெஞ்சை உருக வைக்கும்.  மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தாத படைப்பை எப்போதுமே கொண்டாடமுடியாது.  ஆனால் இவரின் பாடல்கள் மனித மனங்களை இளைப்பாற வைக்கும் ஆலமர நிழலைப் போன்று அமைந்துவிடுகின்றன.  

ஈரநிலம் என்ற படம் மூலமாகப் பாடலாசிரியராக அறிமுகமானவர் தேன்மொழி தாஸ்.  அந்தப் படத்தின் வசனகர்த்தாவும் இவர்தான் என்பது கூடுதல் செய்தி.  

"தீக்குருவியாய் தேன்கனியினை
தீக்கைகளில் தீஞ்சுவையென
தீப் பொழுதினில்
தீண்டுகிறாய் தந்திரனே
பூ மந்திர
தீ தூண்டுகிறாய்
தீயினை தீ நதியினில்
தேடுகிறாய் தந்திராஆ"

என்ற பாடலில் இருக்கும் சொல் விளையாட்டைக் கேட்டுச் சொக்கிப் போகாதவர்களே இருக்கமுடியாது.  செவிலியர் பட்டப் படிப்பு முடித்திருந்தாலும் இலக்கியத்தின்மீது தீராத காதல் கொண்டவராக இருக்கிறார். இயற்கையை ரசிப்பதுடன், அதில் நுழைந்து பல கேள்விகளையும் முன்வைக்கிறார். 

இவரது கவிதைகளில் படிமங்கள் மற்றும் குறியீடுகள் பரவிக்கிடப்பதை நம்மால் உணர முடிகிறது. இவரது பாடல்களில் ’சரவணா‘ படத்தில் இடம்பெற்றிருக்கும் "காதல் வந்தும் சொல்லாமல்" என்ற பாடல் முக்கியமானது.  

இந்தப் பாடல் வரிகளில் வெளியில் சொல்லாத காதலும், அதன் பிரிவும் என்று காதலின் வலிகளையும் பாடல் வழியாகக் காட்சிப்படுத்தியிருப்பார். எளிமையான வரிகளில் கனமான காதலையும், அதன் வலிகளையும் கடத்துவது இவரின் தனித்தன்மை.     

"இதயத்திலே ஒரு வலி
இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்
நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்"
காதலில் ஏற்படும் பிரிவு எப்படிப்பட்டது என்பதைச் சொற்களில் வடித்துக் காட்டும் முயற்சியில் வெற்றிபெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.  

ஆண்களின் உலகமாக இருந்த திரைத்துறையைத் தனித் திறமையால் வசப்படுத்திக் கொண்ட மகளிரின் வரிசை தற்போது நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது. அந்தப் பட்டியலில் நடிகை ரோகிணி, கவிஞர் பார்வதி, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், இயக்குநர் தமயந்தி, கவிஞர் உமா சுப்ரமணியன் போன்றோருக்கு தனித்த இடமுண்டு.  இன்னுமின்னும் புதிது புதிதாகப் பாடல் எழுதும் வாய்ப்பை எதிர்பார்த்து மகளிர் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை!  சங்க இலக்கியங்களில் இருக்கும் பெண்பாற் புலவர்களைச் சுட்டிக்காட்டி, பெண்கள் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பதுடன் கலையுலகில் அவர்களுக்கான அங்கீகாரம் இருப்பதைப் பதிவு செய்கிறோமோ அதுபோல பிந்தைய தலைமுறையினருக்கு இந்தப் பாடலாசிரியர்களின் படைப்புகள் உத்வேகத்தையும் எழுச்சியையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.