நாங்கள் மலைமீது ஏறிச்செல்லும் இடம் பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது.
இதை மணிமுத்தாறின் தலையணை என்று கூறுவார்கள். கோடை காலத்தில் இங்கு வந்துதான் மக்கள் பொழுது போக்குவார் களாம். உள்ளூர்காரங்களுக்குதான் இந்த இடம் மிகப் பரிச்சையமான இடம். ஒரு காலத்தில் குழந்தைகளோடும் குடும்பத்துடன் வருபவர்களுக்குத்தான் தற்போது வனத்துறை தடைபோட்டுவிட்டதே. ஆகவே, யாரும் இங்கே வருவது கிடையாது. ஆனால் ஆள்கள் வராத காரணத்தினால் ரம்மியமாக இருந்தது. இங்கு பிளாஸ்டிக் பொருட்களும், பாட்டில்களும் காணப்படவில்லை. அது ஒருவகையில் சந்தோஷம்தான்.
சமதளமாகத்தான் எங்கள் நடைபயணம் செல்கிறது. பெரிய பெரிய பாறைகள் தெரிகிறது. சில இடங்களில் குகை போன்ற தோற்றமும் காணப்படுகிறது. ஒரிடத்தில் மரம் ஒன்று சாய்ந்து கிடந்தது. அதையெல் லாம் தாண்டிச் செல்கிறோம். எங்கும் பசுமையாக இருக்கிறது.
ஜமீன்தார்கள் காலத்தில் மிகவும் ரம்மியமாக இருந்த இடம். இந்த வழியாக தாமிரபரணியின் துவக்க இடமான பாணதீர்த்தம் கூடச்சென்று விடலாமாம். வில் வண்டி மற்றும் குதிரைகளில் ஜமீன்தார்கள் இந்த வழியில் சென்று வந்துள்ளார்களாம்.
முற்காலத்தில் ஆற்றைக்கடந்து செல்ல பாலங்கள் அமைக்கப்பட்டிருந்ததாம். அதன் சுவடுகள் பல கிடந்தது. சில இடங்களில் இரும்பு பாலம் இருந்த சுவடு இருந்தது. ஆங்கிலேயர்கள்கூட இந்த வழியாகத்தான் பாணதீர்த்தம் சென்றுள்ளார்கள். அங்கிருந்த பங்களாவில் தங்கியுள்ளார்கள். ஜமீன்தார்கள் ஆடி அமாவாசையன்று பாணதீர்த்தத்தில் திதி கொடுக்க வரும் பக்தர்களுக்காக பல கலை நிகழ்ச்சிகளை இந்தப் பங்களாவில் நடத்தியுள்ளார்கள். பிரபலங்களின் நாட்டியங்கள் அரங்கேறிய இடமிதுவாகும். தற்போது நடந்தே செல்லமுடியாத அளவுக்கு பாதைகள் அழிந்துவிட்டது. முன்னால் செல்லும் ஒருவர் அடர்ந்து செடிகளை அகற்றி எங்களுக்கு வழியை உருவாக்கிக் கொண்டி ருந்தார். யாராவது வழி தப்பிச்சென்று விடக்கூடாது என்பதில் குழுத்தலைவர் கட்ட பொம்மனும் ஊர் தலைவர்களும் கவனமாக இருந்தார்கள்.
எனவே அவர்கள் எங்கள் முன்னும் பின்னும் அரணாக வந்தனர்.
சுமை தூக்கிச்செல்பவர்கள் எங்கள் முன்னே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இந்த பூமி செழிக்கவேண்டும். அதற்காக பூஜை பொருளை சுமக்கவேண்டும் என கடினமான இந்த வேலை செய்தவர்களை பாராட்டாமல் இருக்கமுடியுமா? எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு எங்களோடு சுமார் 20 அர்ச்சகர்கள் இருந்தனர். அதில் வயதான அர்ச்சகர் ஒருவர் தலைவராக வருகை தந்திருந்தார். அவருக்கு சமதளத்திலேயே நடக்க இயலாது. ஆனால் ஆர்வத்தில் இந்த கரடு முரடான பாதையில் நடந்து கொண்டிருக்கிறார். எல்லோருக்குமே இந்த பூமி செழிக்க மழை பொழிய வேண்டும் என்ற ஆசை தான். மணிமுத்தாற்றங் கரையில் மூன்று இடங்களில் ஆற்றை கடக்கவேண்டும். ஆற்றில் ஆழம் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பாறைகளில் தத்தி தாவித்தான் மறுபுறம் சென்றோம். சில இளைஞர்கள் எங்களை பிடித்து தூக்கிவிட்டனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/hill1-2026-01-03-18-37-04.jpg)
இப்போதுதான் ஒரு சம்பவம் நடந்தது. எங்களோடு பூஜை பொருள்களை தூக்கிவந்த சுமை தூக்கிகள் பாதை மாறி சென்று விட்டனர். பூஜை பொருள் இல்லாமல் பூஜை வைக்க முடியுமா? எங்கள் குழுவே தவித்து நின்றது.
முற்காலத்தில் இந்த ஆற்றங்கரையில் பழங்குடிகளான காணிகளின் மிகப்பெரிய குடியிருப்பு இருந்துள்ளது. இங்கு ஏற்பட்ட காலரா நோயினால் மிக அதிகமான உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இங்குள்ள காணி இனமக்கள் தங்கள் குடியிருப்புகளைத் தாமிரபரணி கரையான காரையாறு மற்றும் மயிலாறு பகுதிக்கு மாற்றிவிட்டார்கள். குடியிருப்புகள் மாறிய காரணத்தினால்இவ்விடம் அடர்ந்த காடாக மாறி விட்டது.
தொடர்ந்து ஆற்றங் கரை வழியாக நடந்தோம். ஒவ்வொரு இடத்துக்கு ஒவ்வொரு பெயர் இருக்கிறது எனக் கூறினார்கள். கட்டபொம்மன் அய்யா அவ்விட பெயர்களை எங்களிடம் கூறிக்கொண்டே வந்தார். சுரைக்காய் ஓடை, கீழ கண்டம்பாறை, மேலகண்டம்பாறை என பெயர்களை கூறிக் கொண்டே அவர் முன்னால் நடந்தார். நாங்களும் அவர் பின்னாலேயே நடந்தோம்.
மிகப்பெரிய ஏற்றத்தில் ஏறினோம். சருக்கி விழுந்துவிடுவோம்போல இருந்தது. ஒரு பக்கம் அதாள பாதாளம். மறுமக்கள் மலை குன்றின் சரிவு. அந்த பாதையில்தான் நடந்து செல்கிறோம். பல குகைகள் இருந்தன.
அதையும் கடந்தோம். மணிமுத்தாற்றை மூன்று தடவை கடந்தோம். ஆற்றை கடந்தோம்.
மிகப்பெரிய பாறைகளில் இங்கிருந்து மறுபுறத்துக்கு தாண்டி குதித்தோம். இளைஞர்கள் மற்றவர்களை கையைப் பிடித்து தாங்கி மறுபுறம் கடத்திச் சென்றனர்.
ஒவ்வொரு இடத்திலும் ஆறு வரும் போது தலைகீழாக இறக்கத்தில் இறங்க வேண்டியதிருக்கிறது. ஆற்றைக் கடந்தவுடன் சரியான முட்டு ஏத்தம் ஏறவேண்டியிருந்தது. அர்ச்சகர்களில் பலர் சோர்ந்துவிட்டனர். இதில் ஏறுவதற்காக யாத்திரிகர்கள் அனைவர் கையிலும் கம்பு ஒன்றை கொடுத்துவிட்டார் கள். அதை தரையில் ஊன்றித்தான் ஏறுகிறார்கள்.
சுமார் ஐந்து வருடத்துக்குமுன்பு இது போன்ற ஒரு பூஜைக்கு மக்கள் வந்து இருக்கிறார்கள். அதன்பின் யாருமே இந்த பகுதியில் வரவில்லை. எனவே பாதை முழுவதுமே அடர்ந்து காணப்பட்டது. மனிதர்கள் நடந்தே செல்ல முடியாத இந்த பாதையில் பக்தர்கள் மிகவும் கஷ்டப்பட்டு, உயிரை பணயம் வைத்து பயணம் செய்து கடக்கிறோம். எங்குமே ஓய்வு எடுக்க முடியவில்லை.
இந்தப் பயணத்தின்போது அகத்தியரை வேண்டியபடியே நடந்தோம்.
பொதிகை மலை முழுவதும் அகத்தியரின் கட்டுப்பாடுதான். அவரை லாட சன்னியாசி என்று அழைப்பார்கள். ஆங்கிலேய துரை ஒருவன் அகத்தியரை வணங்கும் பக்தர்கள் உடலில் அகத்தியர் புகுந்து அருளாசி கூறுவதை கண்டு, வெகுண்டான். "அகத்தியர் உண்மையான தெய்வம் என்றால் இதோ சாமியாடுபவனை இந்த நெருப்பில் இறங்க சொல். அவன் உயிரோடு திரும்பிவந்தால் அகத்தியர் இருப்பதாக நம்புகிறேன்' என்று கூறியுள்ளான்.
அடுத்த நிமிடம் நெருப்பு உருவாக்கப் பட்டது. அதில் அகத்தியர் அருள் கொண்ட வரோ, உருட்டிய விழியுடன், பல்லை கடித்துக்கொண்டு வெறி வந்தவர்போல இறங்கினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/03/hill2-2026-01-03-18-37-16.jpg)
அவருக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே அதிர்ந்தே போய்விட்டான் துரை. "லாட் சன்னியாசி' என தன்னை மறந்து கத்தி யுள்ளான். "லாட்' என்றால் மிகப்பெரியவன் என அர்த்தம். எனவே அகத்தியர் லாட சன்னியாசி ஆகிவிட்டார். அகத்தியர் போன்ற பதினெட்டு சித்தர்களை வணங்குபவர்கள் இங்கே அவர்களை சித்தர்களாக மட்டும் வணங்குவதில்லை. தங்களது குலதெய்வ மாகவே வணங்குகிறார்கள். எனவேதான் இங்கே அகத்தியரை நம்பியே இந்த பயணம் நடைபெறுகிறது. அதுவும் இடைக்காடரை போலவே நவகிரகங்களை மயக்கி மழை பெய்ய வைத்ததுபோலவே, தெய்வங்களை மயக்கி மழை பொழிய வைக்க இந்த அப்பாவி பக்தர்கள் கடினமாக நடந்துகொண்டிருக்கி றார்கள்.
சித்தர்கள் நவக்கிரங்களை ஏமாற்றி விட்டார்கள். அவர்களுக்கு அறிவு இருக்கிறது.
தவ வலிமை இருக்கிறது. ஆனால் நாமே சாதரண மனிதர்கள். இந்த பூவுலகில் வசிக்கும் ஒரு பாவ ஜென்மங்கள். நாங்கள் இந்த பூஜையை சிறப்பாக செய்ய முடியுமா?
இன்று நாம் நடத்தபோகும் பூஜைக் கும் இடைக்காடர் நவகிரங்களை மயக்கி மழை பொழிய வைத்த சம்பவத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்கிறார்களே.
அப்படி இங்கே என்ன தான் பூஜை நடக்கப்போகிறது. குழுத்தலைவர் கட்டபொம்மனிடம் கேட்டோம். அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்.
"அய்யா. நாம போற இடம் இருக்கே. அது ஆள் நடமாட்டம் இல்லாத இடம். இங்க மிருகங்கள் மட்டும்தான் சுத்தும். அதே நேரம் சப்த கன்னிகளும் இந்த பக்கம்தான் சுத்துவாவ. அவுக நாம போய் பூஜை செய்யப் போறோமே அந்த இடத்திலதான் தினமும் வந்து விளையாடுவாக. அதுக்கப்புறம் அந்த பக்கத்தில இருக்கிற அருவியில குüப்பாவ. அது சரி. நாம கீழ வயக்காட்டுல மழை தண்ணி இல்லாம கஷ்டப்படுதோம். அவுக மட்டும் அருவியில குüச்சிக்கிட்டு இருக் காவலே, நாம அதை தடுக்கணுமுன்னு நினைச்சி ஒரு வேலை செய்வோம்.
அங்கே போய் நாம கூட்டிட்டு போறோமே இந்தவேத அந்தணர்கள். அவுகளை நல்லா வேதம் பாடி பூஜை செய்ய சொல்வோம்.
சப்தகன்னிகள் அந்த பூஜைக்கு மயங்கி அந்த இடத்துக்கு வருவாவ. அதுக்குள்ள முன்னால ஒரு கூத்து பண்ண ஆரம்பிச்சிடுவோம். அது என்ன கூத்து தெரியுமா? அதோ முன்னால போவுதே இரண்டு கிடாய். அந்த கிடாயை வெட்டி அதன் ரத்தத்தை அங்கன சப்த கன்னிகள் விளையாடும் பாறை மேலே தேய்ச்சு அசிங்கப்படுத்திட்டு, அந்த கிடாய் தலையை ஒரு உலை மூடியில வச்சு அருவி கசத்துல போட்டுட்டு மேல் பகுதிக்கு போயிருவோம்.
பூஜை மணத்துல அங்க சப்த கன்னிக வருவாவ. இங்க ரத்தம் தோய்ந்த இடத்தில கிடக்கிற அசிங்கத்தை பார்த்து அதிர்ச்சி அடைவாவ. நாம விளையாடுற இடம் இப்படி கிடக்கேன்னு, வருண பகவானைநோக்கி வேண்டி நிப்பாவ. உடனே வருண பகவான் இவுக கோரிக்கையை ஏத்து மழை பொழிய வைப்பாவ. வேணுமுன்னா பாருங்க நாம ஊருக்கு கிளம்பி மலையை விட்டு இறங்குமுன்பே மழை பொழிய ஆரம்பிச்சிடும். புது தண்ணி மணிமுத்தாறு அணைக்கு வந்திரும்னு" சொன்னார்.
எங்களுக்கு வித்தியாசமாக இருந்தது. இதுபோல ஒரு பூஜையை நினைக்கும் போது வித்தியாசமா தான் இருந்துச்சு. இது ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துற பூஜையா இருக்கே. இது சாத்தியப்படுமா? கண்ணப்பன் தனது கண்ணைஎடுத்து சிவனுக்கு வைத்தானே அதுபோன்ற ஒரு முரட்டு பூஜையாக அல்லவா இது இருக்கிறது என்று எண்ணினோம். ஆனாலும் அவர்கüன் நம்பிக்கை எனக்கு பிரமிப்பாக இருந்தது.
சரி இந்த சப்த கன்னியர்கள் யார்? அவர்களுக்கு வருண பகவானை மிரட்டி மழை பொழிய வைக்கும் சக்தி உள்ளதா? அப்படி யென்றால் முதலில் நாம் சப்த கன்னியர்களை பற்றி அறியவேண்டும்.
சப்தகன்னியர் அல்லது சப்தமாதர் என்று தான் இவர்களை நாம் அழைக்கிறோம். இவர்கள் பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய ஏழுபேர் ஆவார்கள். இவர்கள் யார்? இவர்கள் சக்தி தேவி தான். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் ஆதிசக்தி எடுத்த திருமேனிகளே, சப்த கன்னியர் என்னும் சப்த மாதாக்கள் .
ஒருவருக்கு குலதெய்வமே தெரியவில்லை என வைத்துக்கொள்வோமே. அவர்கள் தங்களது குலதெய்வமாக இந்த சப்த கன்னியர் களை தான் வணங்க வேண்டும். இந்த சப்த கன்னிகள் தோன்ற காரணம் என்னதெரியுமா? அசுரர்களை அழிக்க நமது உமையவள் எடுத்த அவதாரம் தான்.
ஒரு சமயம் சிவன் அநீதியை அழிக்க அந்தகாசூரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்தார். அந்த அரக்கன் சாதாரணவன் அல்ல.
அவன் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் விழுந்தாலும் கூட அதில் இருந்து மற்றொரு அசுரன் தோன்ற விடுவான். பல நாள் போராடியும் அசுரனை அழிக்க முடியவில்லை. போர் நடைபெறும் போது பல அசுரர்கள் தோன்றினார்களே தவிர அவர்களுக்குஅழிவு ஏற்படவில்லை. என்ன செய்ய என சிவன் யோசித்தான். உடனே விஷ்ணு பிரம்மா உள்பட தேவாதி தேவர்களுடன் ஆலோசனை செய்தான். உடனே ஒரே நேரத்தில் அவர்கள் சப்தகன்னிகளை உருவாக்கினார்கள்.
சிவன் தன் வாய் அக்னியிலிருந்து யோகேசுவரி என்ற சக்தியை தோற்றுவித்தார். யோகேசுவரி மகேசுவரி என்ற சக்தியை உருவாக்கினார். மகேசுவரிக்கு துணையாக பிரம்மா பிராம்மியை தோன்றுவித்தார். விஷ்ணு வைஷ்ணவியை தோற்றுவித்தார். இந்திரன் இந்திராணியையும், முருகன் கௌமாரியையும், வராக அவதாரம் வராகியையும், சண்டி சாமுண்டியையும் தோற்றுவித்தனர். இந்த சப்தகன்னிகள் ஒன்று கூடி அசுரனை அழித்தனர்.
இதுபோன்று பல்வேறு புராணங்கள் இவர்களைப்பற்றி உண்டு. மார்க்கண்டேய புராணத்திலும், காüதாசனின் குமார சம்பவம் என்ற காவியத்திலும் இவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
சும்ப - நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பத்தி செய்யப்பட்டனர் என்றும் அதன் பிறகு அவர்கள் அரக்கர்களை அழித்தனர் என்றும் மார்க்கண்டேய புராணம் கூறுகிறது. காüதாசனின் குமாரசம்பவம் என்ற காவியத்தில் சப்த கன்னியர் சிவனின் பணிப்பெண்டிர் என்ற குறிப்பும் கூறப் படுகிறது.
சப்தகன்னியரின் தோற்றத்தினைப் பற்றி மற்றொரு புராணக் கதை வேறு விதமாக பேசப்படுகிறது. மகிசாசுரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டுமென வரம் பெற்றிருந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசுரனால் துன்பமடைந்தனர். அனைவரும் சென்று சிவனிடம் தங்களை காத்தருள வேண்டி னர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருள வேண்டினார் சிவன். அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்த கன்னியர்களை தோற்றுவித்து மகிசாசுரனை அழித்தார். மகிசாசுரன் கொல்லப் பட்டதால் சப்த கன்னியர்களை கொலைப்பாவம் சூழ்ந்தது.
அதனை நீக்க வேண்டி சப்தகன்னியர் சிவனை வேண்டினர்.
சிவன் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டு வரும்படி கூறினார். சப்த கன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்த கன்னியருக்கு தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப்பாவத்தினை நீக்கினார். என்று கோயில் தலபுராணம் கூறுகிறது.
மொத்தத்தில் அரக்கனை அழிக்க பிறந்தவர்கள் சப்த கன்னியர். இந்த சப்த கன்னியருக்கு கோபம் வரவழைத்து மழைபொழிய வைக்க வேண்டும் என்று நம்மோடு விவசாயிகள் நடுக்காட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனாலும் எவ்வளவு தைரியம், சப்த கன்னிகள் குüக்கும் இடத்தில் வந்து பாறையில் அசிங்கப்படுத்தி, அந்த இடத்தினை சுத்தப்படுத்த கன்னிகள் வருணபகவானை அழைப்பார்கள் என்று இவர்கள் பூஜை செய்ய வந்து கொண்டிருக்கிறார்கள்.
சப்தகன்னி வருவாரா? வருண பகவானை அழைப்பார்களா? அல்லது கோபத்தில் இந்த பூமியை வறண்ட பூமியாக மாற்றுவாரா? பல எண்ண ஓட்டங்கள் நமக்குள் இருந்தது.
வீறுகொண்டு நடந்தார்கள் பக்தர்கள். நாங்களும் அவர்கள் பின்னால் நடந்தோம். இந்த சமயத்தில்தான் மிகப்பெரிய சோதனை எங்கள் குழுவினருக்கு ஏற்பட்டது..
சுமை தூக்கிகüல் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் பாதை மாறிச் சென்று விட்டனர். இவர்கள் மேலகண்டம்பாறை என்னும் இடத்தில் இருந்து பாதை தவறுதலாக கடந்து விட்டனர். இதனால் தாமிரபரணி நதி ஓடும் முக்கிய இடமான வானதீர்த்தம் செல்லும் பகுதிக்கு சென்று இருக்க வேண்டும். உடன் வந்தவர்கள் அவர்களை காணாமல் பதை பதைக்க ஆரம்பித்து விட்டனர். செல் போனில் தொடர்பு கொள்ளலாம் என்றால், யாருக்குமே டவர் கிடைக்கவில்லை. நட்ட நடு காட்டுக்குள் எப்படி தேடுவோம். எங்கே தேடுவோம்.
எல்லோருமே அதிர்ந்து விட்டனர். திக்கு தெரியாத காட்டில் எங்கே போய் தேடுவது. எப்படி தேடுவது?. பூஜை செய்யும் பொருளும் அவர்கüடம் தான் இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் இல்லாமல் எப்படி பூஜை செய்வது. அர்ச்சகர்கள் மட்டும்தான் இங்கே இருக்கிறார்கள். மாலைக்குள் பூஜை செய்ய வேண்டும்.
இரவு மற்றொரு இடத்தில் தங்கி, கிழே இறங்கவேண்டும். சப்தகன்னிகளுக்கு பூஜை செய்யக்கூடிய பூ, பழங்கள், ஆடை அணிகலன்கள், வாசனை திரவியங்கள் எல்லாமே அவர்கள் வசமே உள்ளது. அந்த பொருட்கள் இல்லாமல் எப்படி பூஜை செய்வது?
(பயணத்தினை தொடர்வோம்)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/hill-2026-01-03-18-36-53.jpg)