"நல்லனாரின் உடல் எரிகின்றதே! வீரர்களே, அவரைக் காப்பாற்ற வாருங்கள்...' எனக் கதறிக்கொண்டே ஓடம் இருபுறமும் ஆடி நிலைகுலைந்து கவிழும் அளவிற்கு கைகளை நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓடத்தின் நுனிப்பகுதிக்கு ஓடி, எரியும் கப்பலுக்கருகில் கல்லாடனார் செல்லமுற்பட்டார். கப்பலில் கட்டப்பட்டிருந்த பெரிய கயிறுகள் அறுந்து விழும்படி கப்பலின் மேற்தளம் வெடித்தது.
கல்லாடனாரின் செயல்பாடுகளால் அவரது ஓடம் கடலில் மூழ்கிவிடுமோ என அவரது ஓடத்திற்கு இருமருங்கும் ஓடங்களிலிருந்த வீரர்கள் அஞ்சினர். ஆதலால், அவர்கள் தங்கள் ஓடங்களை அவரது ஓடத்தை நோக்கி விரைந்து செலுத்தி அவ்வோடத்தின் இருபுறமும் ஒட்டி நிறுத்தினர். அவரது ஓடம் அசையாதவாறு இரு வீரர்கள் இறுகப் பிடித்துக்கொண்டனர்.
மீதமிருந்த இரண்டு வீரர்கள் மூன்று ஓடங்களும் கப்பலைவிட்டு பின்னோக்கி நகரும்படி, தங்கள் பலம்கொண்ட மட்டும் முயன்று துடுப்பு வழிக்கத் தொடங்கினர்.
சேந்தன் நல்லனார் குதித்த பகுதியிலிருந்த எரிகலன்கள் வெடிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பகுதிகளிலிருந்த எரிகலன்களும் வெடிக்கத் தொடங்கின. அவை வெடித்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்த தீப்பிழம்புகளும் அவற்றில் சிக்கிய பகைவர்களின் உடல்களும் கப்பலைவிட்டு ஓடங்களில் சிதறி விழத் தொடங்கின.
கப்பலிலிருந்து வந்த நெருப்புச் சுவாலையின் வெப்பம் தாங்காமல் கப்பலைச் சுற்றி நிறுத்தியிருந்த ஓடங்களைக் கப்பலுக்கு அப்பால் பின்னோக்கிச் செல்லும்படி அனைத்து வீரர்களும் துடுப்புகளை வழிக்கலானார்கள். கப்பலில் இருந்த பகைவர்களின் ஓலம் விண்ணைப் பிளந்தது.
கல்லாடனார், ஓடத்தின் நுனிப்பகுதியிலிருந்து கடலுக்குள் குதித்து அக்கப்பலில் ஏற முற்படத் தொடங்கினார். அதையறிந்த இரண்டு வீரர்கள் தங்களது ஓடங்களிலிருந்து குதித்தோடி அவரது இடையை இறுகப்பற்றினர். கல்லாடனார், "என்னை விட்டுவிடுங்கள். நான் கப்பலுக்குள் செல்லவேண்டும். சேந்தனாரைக் காப்பாற்றவேண்டும்' எனக் கூறிக்கொண்டு கப்பலிலிருந்து அறுந்து தொங்கிக்கொண்டிருந்த கோடிப்பாய்க்கயிறைப் பற்றி ஏற, தன் இருகைகளையும் நீட்டினார்.
அவர் நீட்டிய கைகளில் தீப்பற்றி எரிந்த எரிகலன் வெடித்ததில் சிதறிய உடலிலிருந்து பிய்த்து எறியப்பட்ட வலது கரம் வந்து விழுந்தது.
கப்பலின் மேற்புறமிருந்து கீழ்நோக்கி நெருப்பு பரவி கப்பலின் குறுக்கே உள்ள பருமன் பகுதியும் வெடிக்கத் தொடங்கின. கப்பல் முழுவதும் பற்றி எரியும் நெருப்பின் பிரகாசத்தில் தன் கைகளில் விழுந்த சிவந்த வலக் கரத்தை, கல்லாடனார் மெல்லக் கண்ணுற்றார். கண்ணீர் ஊறிய கண்களின் வழியே அக்கரத்திலிருந்த மோதிரத்திலிருந்து மரகதப் பச்சை ஒளி பிசிறடித்துப் பிரகாசித்தது. தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அதை நன்றாக உற்று நோக்கினார். அவரது இதயம் கப்பல் வெடித்துச் சிதறியதுபோல் வெடித்து வலித்தது.
தன்னைப் பிடித்திருந்த வீரர்களின் மார்பில் மயங்கி அவரது உடல் சரிந்தது.
அவரையும் அவர் பிடித்திருந்த வலக்கரத்தையும் நன்றாகப் பற்றிக்கொண்டு, சரிந்த அவரது உடலை ஓடத்தின் மையப்பகுதிக்குத் தூக்கிச்சென்று, வீரர்கள் இருவரும் தங்கள்மீது சாய்த்து அமரவைத்தனர்.
கப்பலின் கோடிப்பாய்க் கயிற்றில் நெருப்பேறி பாய்மரக் கம்பங்கள் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கின. அது அக்கடல்பரப்பு முழுவதையும் சிவந்த பொன் நிறமாகக் காட்சியளிக்கச் செய்தது. இதேவேளையில் மருங்கூரில் பாண்டியர் மாளிகையின்முன் உயரமான கம்பத்தில் கட்டப்பட்டிருந்த, இமைகள் வெட்டப்பட்ட பகைவனின் விழிகளின் வழியே இக்கப்பல் எரியும் காட்சி உள்ளே செல்லச் செல்ல, அவனது உயிர் உடலிலிருந்து மெல்ல மெல்ல வெளியேறிக்கொண்டிருந்தது. இந்நிகழ்வின்மூலம் சேந்தன் நல்லனார் எடுத்த உறுதிமொழி மெய்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
கல்லாடனாரின் ஓடத்திலிருந்த வீரர்கள், அவர் கைகளில் விழுந்த சிவந்த வலக்கரத்தை எடுத்து, கப்பலில் எரிந்த நெருப்பு வெளிச்சத்தில் பார்த்தனர்.
அதைக்கண்ட ஓடத்திலிருந்த வீரர்களில் ஒருவன் உரக்கக் கூக்குரலிட்டான். "வீரர்களே இது நம் சீராளர் சேந்தன் நல்லனாரின் வலக்கரம். இது எனக்கு நன்றாகத் தெரியும். அவரோடு சேர்ந்து அவரது ஓடத்திற்கு வலப்புறம் நாங்கள் கடலுக்குள் வந்துகொண்டிருந்தபோது அவர் தீவெட்டிகளை அசைத்து முன்னே வரும்படி சைகை காட்டினார். அப்போது அத்தீவெட்டி வெளிச்சத்தில் இந்த மரகத மோதிரம் நன்றாக ஒளி வீசியதை நான் மறக்கமுடியாது. எனவே, வீரர்களே, நம் சேந்தன் நல்லனார் கப்பலில் உயிர்த் தியாகம் செய்துவிட்டார்...' எனத் தன் சக்திக்கேற்ப உரக்கக் கத்திக்கொண்டே, "இதைக் கண்டுதான் கல்லாடனார் மயக்க மடைந்துவிட்டார். நல்லனாரின் உடல் இக்கப்பலிலிருந்து சரிந்து வீழ்ந்துவிட்டதா? என விரைந்து கண்டறியுங்கள்' எனக் கூறினான்.
அவனது கூக்குரலைக் கேட்ட வீரர்கள், தனக்கு அடுத்தடுத்து நின்றிருந்த ஓடத்திலிருந்த வீரர்களிடம் இச்செய்தியைக் கடத்தலானார்கள். இதனையறிந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். ஏனெனில், இக்கப்பல் திடீரென எப்படி வெடித்தது என்பது ஓடத்தில் அங்கு வந்திருந்த அநேகம் வீரர்களுக்குத் தெரியாது. சேந்தன் நல்லனார் இருந்த இடத்திற்கு எதிரே கப்பலுக்கு அப்பால் ஓடத்தில் இருந்தவர்களுக்கு, நல்லனார் கப்பலின் மேல் ஏறியதும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் தெரியாது.
ஆதலால், அவர்கள் தங்களது தலைவனின் உயிர்த் தியாகத்தைக் கேட்டு அதிர்ச்சியுற்றனர்.
அந்தச் சமயம் கப்பலின் மேலிருந்து கீழ்ப் பகுதி முக்கால் பாகம்வரை நெருப்பு கீழிறங்கிப் பரவி எரிந்ததுகொண்டிருந்தது. கப்பலின் "எரா' என அழைக்கப்படும் கீழ்ப்பகுதி, தனது மிதவைத் தன்மையை இழந்துகொண்டிருந்தது. கப்பலை நிலைநிறுத்தப் போடப்பட்டிருந்த நங்கூரத்தின் எடை எராவைக் கடலுக்குள் மெல்ல மெல்ல மூழ்கடித்துக்கொண்டிருந்தது. அதனால், பாய்மரக் கப்பலின் மேல்நுனிவரை எரிந்துகொண்டிருந்த நெருப்பானது, கடலுக்குள் மெல்லமெல்ல மூழ்கித்தன்னை அணைத்துக்கொள்ளத் தொடங்கியது. கடலில் பழைய நிசப்தம் உருவாகத் தொடங்கியது. கடற்பரப்பில் ஆங்காங்கே மரச்சட்டங்களும், எரியாத மிகப்பெரிய நீண்ட கயிற்றுத் துண்டுகளும், வெடிப்பால் பிய்த்து எறியப்பட்ட உடல் பாகங்களும் மிதக்கத்தொடங்கின. பாண்டிய வீரர்கள் நாலாபக்கமும் ஓடங்களை ஓட்டி தேடியும் சேந்தன் நல்லனாரின் உடல் கிடைக்கவில்லை. அப்போது அதிரா விண்மீன் கடலில் கீழ்வானில் பிரகாசமாக உதித்துக்கொண்டிருந்தது. அதிரா விண்மீன் என்பது கண் சிமிட்டாத, அதாவது சுக்கிரன் எனப்படும் விடிவெள்ளி. அது அன்றைய இரவின் கடைசி யாமம். அந்தக் காட்சியானது முத்தூற்றுக் கூற்றத்தில் பகை சூழ்ந்த இருளை நீக்கி விடியலைத் தரவிருக்கும் விடிவெள்ளியாய், சேந்தன் நல்லனாரே உதித்தது போலிருந்தது வீரர்களின் கண்களுக்கு.
இந்த நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த அதே வேளையில், மருங்கூர் துறைமுகத்தில் வடக்குத் திசையிலிருந்த கலங்கரை விளக்கத்தைச் சிதைத்துக்கொண்டிருந்த பகைவர்களைச் சுற்றிலும் இளந்திரையனின் தலைமையிலான படை கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டது. காரணம், அங்கிருந்த பகைவர்கள் சோழர்களின் போர்ப்பயிற்சி முகாமான கொல்லிமலையில் பயிற்சி எடுத்தவர்கள். ஆனால், அவர்களது கைகளில் போர் ஆயுதங்கள் இல்லை. கலங்கரை விளக்கங்களைத் தகர்ப்பதற்கான கடப்பாரைக் கம்பிகளை மட்டுமே அச்சமயம் வைத்திருந்தனர். அவர்கள் அங்கிருந்து சென்று அருகிலிருந்த அவர்களது முகாம்களில் ஆயுதங்களை எடுத்துவருவதற்கான வாய்ப்பைக் கொடுக்காமல், இளந்திரையன் தனது படையைக் கலங்கரை விளக்கத்தைச் சுற்றி நிறுத்தினான்.
இருந்தபோதிலும் அப்பகைவர்கள் ஆயுதமற்ற மல்யுத்தப்போர் செய்வதிலும், மனிதர்களின் நரம்பு மண்டலங்களைச் செயலிழக்கவைக்கும் முடக்கு வர்மங்களைச் செய்வதிலும் திறம்படைத்தவர் களாக இருந்தனர். ஆகவே, குதிரைகளின் கால்களையும், மனிதர் களின் கால்களையும் உருண்டுவந்து தாக்கி, அவற்றைச் செயலிழக்கச் செய்து, கீழே விழவைக்கத் தொடங் கினர். எனவே, தான் கணித்ததுபோல் அவர்களை வென்றெடுப்பது எளிமையான காரியமில்லை என்பதை இளந்திரையன் புரிந்துகொண்டான். அவர்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து யானையின்மீது குதித்து, அதன்மீதிருக்கும் வீரர்களின் கழுத்துப் பகுதியைத் தாக்கி, அவர்களை மயக்கமுறச் செய்துவிட்டனர்.
இதனைக்கண்ட இளந்திரையன், தன் படைகளைச் சற்றுப் பின்னோக்கி நகரச்செய்து காவல் வட்டத்தைப் பெரிதாக்கி, அவர்கள் கலங்கரை விளக்கத்திலிருந்து நேரடியாக தம் படையினர்மீது குதிக்க இயலாத தூரத்தில் சுற்றிவளைத்து நிலைநிறுத்திக்கொண்டான். கடம்பர்கள், தூரத்திலிருக்கும் பகைவர்களை குறிதப்பாது எறிந்துகொள்ளும் திறம்படைத்தவர்கள். ஆகவே, முதல் வட்டத்தில் இருந்த காலாட்படையினரை பலங்கொண்ட மட்டும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் பகைவர்கள் மீது ஈட்டிகளை எறிந்து கொல்லும்படி உத்தரவிட்டான். அதன்படி, கூரிய ஈட்டிகள் அனைத்து திசைகளிலிருந்தும் ஒரேநேரத்தில் பகைவர்களின் மீது வேகமாகப் பாய்ந்தன. அவர்கள் எப்படி விலகினாலும், ஒரு ஈட்டியாவது அவர்களைத் தாக்கும் அளவிற்கு ஒரே நேரத்தில் பாய்ந்தன.
விசைகொண்ட மட்டும் கடம்பர்களால் எறியப்பட்ட ஈட்டி பாய்ந்தவர், கலங்கரை விளக்கத்தின் மேல் பகுதிகளிலிருந்து எதையும் பற்றி நிற்க இயலாமல் சரிந்து விழுந்தனர். கலங்கரை விளக்கத்தில் இடிக்கப்படாத பகுதிகளிலிருந்த சுழல்படிகளில் நின்றிருந்தவர்கள், தாங்கள் தப்பிக்கத் தங் கள் கைகளிலிருந்த கடப்பாரைக் கம்பிகளையும், தீவெட் டிக் கம்புகளையும் சிலம்பம் சுற்றுவதுபோல் விரைவாக சுழற் றிக்கொண்டு, தங்கள்மீது ஈட்டி பாயாதவாறு மளமளவென கீழிறங்கத் தொடங்கினர்.
அவர்கள் கீழிறங்கும்பொழுதே, உயிர் பயத்தினாலும் எதிராளிகளை அச்சுறுத்தும் விதமாகவும், ஒருவிதமான உரத்த ஓசைகளில் உறுமிக்கொண்டு, முதலைத் தோலாலான கடினமான கவசங்களுடன் இளந்திரையனின் படையை நோக்கி ஓடிவந்தனர்.
அதனைக்கண்ட இளந்திரையன், "யானைகளை முன்னிறுத்துங்கள். குதிரைகளும் காலாட்படையினரும் விரைவாக யானைகளுக்குப் பின்னால் செல்லட்டும். ஈட்டிகளை எறிந்த வீரர்கள் இக்கடற்கரையில் விரிக்கப்பட்டிருக்கும் அனைத்து மீன்பிடி வலைகளையும் ஓடிப்போய் எடுத்துவாருங்கள்' எனக் கர்ச்சித்தான். கர்ச்சனைகள் தொடரும்...
தொடர்புக்கு 9944564856
தொகுப்பு: சி.என்.இராமகிருஷ்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/03/arula-2025-12-03-18-16-19.jpg)