Advertisment

சுற்றுச்சுழலுக்கு ஆதரவாக வனப்பேச்சியின் சங்கநாதம்! - சென்னை மியூசிக் அகாடமியில் பிரளயனின் நாடகம்!

drama

லை கலைக்காக மட்டுமல்ல... கலை மக்களுக்காகவே, மக்களுக்காக மட்டுமே எனும் முற்போக்கு இலக்கியப் படைப்புக்களின் பயணத்தில் சென்னை கலைக்குழுவின் புது வரவாக நவீன நாடக ஆசிரியரான பிரளயனின் வனப்பேச்சி எனும் பேரண்டச்சி மேடை நாடகம் அரங்கேறியது.

Advertisment

சென்னை மியூசிக் அகாடமி இதுவரை கண்டிராத ஒரு வித்தியாசமான கலை நிகழ்வு. கதைக்களம். நாடகக்கலை வரலாற்றில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஓர் அரங்குக்குள் ஈர்த்து அவர்களின் மனசுக்குள் ஊடுருவிப் பாய்ந்தது இயற்கை வளம் காக்கும் போர்க்களத்தின் அஸ்திரங்கள் சரம்சரமாய். வெப்பமும் குளிருமாய் ஒரு  நாடகம். இந்த நிகழ்வு ப்ரோவோக் கலைத் திருவிழாவின் நிகழ்வுகளின் ஒரு அம்சமாக நிகழ்த்தப்பட்டது.

Advertisment

ஒரு தனியார் பள்ளியின் மாணவ- மாணவிகள் அழிந்து அல்லது மறைந்து கொண்டிருக்கும் வன உயிர்கள் பற்றி அறிந்து கொள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 

அவர்களில் சுறுசுறுப்பான ஒரு மாணவி, ஒரு  மாணவன். புலிக்குருளை ஒன்று பாறைப் பொந்திலிருந்து எட்டிப்பார்க்கிறது. அதைப் பார்த்த குஷியில் அந்தப் பாறையை ஒட்டி  மாணவன் சிறு கல்லெறிய எட்டிப்பார்த்த புலிக்குருளைகள் பாறைச் சந்துக்குள் மறைகின்றன. தாய்ப்பாலுக்காக அந்தப் புலிக்குருளைகள் இரை தேடிப்போன தாய்ப்புலியை எதிர்பார்த்து தவிக்கின்றன. இந்தக் காட்சியில் நாடகம் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் இமை அசையாமல் ஆயிரக்கணக்கான மனிதக் கண்களின் குவியமாக மேடையையே நோக்கி குவிந்திருந்தன. அரங்கில் அப்படியொரு அமைதி.

கல்லெறிந்ததால் வன விலங்கு சரணாலய அதிகாரியிடம் சிக்குகிறார்கள் மாணவனும் மாணவியும். இது பாதுகாக்கப்பட்ட பகுதி. புலிக்குருளைகளின் மீது கல் எறிய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்கிறார் அந்த கடமைத் துணிவு மிக்க அதிகாரி. தனியார் பள்ளிகளின் பசப்புத்தனமான ஆடம்பரக் கல்வி முறை, கற்பிக்கும் பாடத்திற்கும் கற்கும் மாணவ- மாணவிகளின் நடவடிக்கைகளுக்கும் உள்ள சம்பந்தமின்மை, ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளை அணுகும் அக்கறையின்மை, பள்ளி நிர்வாகங்களின் பொறுப்பற்ற பதில்கள், மாணவர்கள் பிரச்னைகளில் விளம்பரத்துக்காகவும் லாபநோக்கத்துடனும் பள்ளியின் பெயர் தெரியாமல் மறைக்கப்படுதல், மாணவர்களின் உயிர்களைப் பற்றிக் கவலைப்படாத பள்ளியின் பொறுப்பின்மையால் வெறுத்துப்போன வனப்பாதுகாப்பு அதிகாரி கல்லெறிந்தவர்கள் மீது வனச் சட்டப்படி சிறைத் தண்டனை, அபராதம் என்கிறார். 

அரண்டு மிரண்டு போன அந்த சேட்டைக்கார மாணவனும் மாணவியும் நைசாக தப்பித்து அடர்ந்த காட்டுக்குள் சென்றுவிடுகிறார்கள். அங்கே தாடகை எனும் கருணைத் தாயை சந்திக்கிறார்கள். இயற்கை சார்ந்த வனப் பொருளாதாரம், காடு பிடித்தல், வனங்களின் அழிவு, மூட நம்பிக்கை, கனிமக் கொள்ளை அரசியல் என எல்லாவற்றையும் கேள்விகேட்டு பதிலும் சொல்கிறாள் தாடகை எனும் வனப்பேச்சி!

தாடகையாக திரைக்கலைஞர் ரோகிணி  நடித்திருக்கிறார். "போர் என்பதே ஒருவகை பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்பதும் ஒரு போர்த் தந்திர முறைதான். கல், மண், ஜல்லி, கம்பி கலந்த கரப்பான் பூச்சிகள்தான் மனிதர்கள். ஏ.. மனிதா இயற்கையை நீ வென்றுவிட்டதாக பெருமை பீத்துகிறாயே தோற்றது யார்?' என்று பேரண்டச்சி கர்ஜிக்கும்போது சுனாமியும் பூகம்பமும் நிலச்சரிவுகளும் பனிச் சரிவுகளும் அணுகுண்டு வெடிப்புகளும் புத்தம்புது நோய்களும் பார்வையாளர்களைப் பயமுறுத்துகின்றன. 

"உங்கள் வீடும் பள்ளியும் காட்டைவிட பயங்கரமா' என்கிறாள் வனப்பேச்சி. எந்த வேறுபாடுகளும் இன்றி மண், விதை, காற்று, நீர், சுற்றுசூழல் என எல்லாமும் எல்லாருக்கும் சொந்தம், கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமல்ல என்கிறாள். 

எல்லாமே கதைதான், ராமரும், நானும் கதையே! ஆனால், இந்த அம்புகள் எல்லாம் நிஜம் என இன்றைய காடுகளின், சுற்றுச்சூழலின் அழிவு, மனிதர்களின் கொடிய பேராசை.. வன வளங்களின் கொள்ளை  என நம்மை நிகழ்கால உண்மைகளைச் சிந்திக்க வைத்துள்ளார் பிரளயன். 

பள்ளி மாணவி தாடகையிடம் கேட்கிறாள், "ராட்சசி என்றால் பயங்கரமானவள், பிள்ளைகளைப் பிடித்து விழுங்குபவள் என்றுதானே எனக்கு சொன்னார்கள்.'' 

"ரட்சை எனும் வடமொழிச் சொல்லின் பொருள் பாதுகாப்பு. இந்தக் காட்டை பாதுகாப்பவள் நான்.. ரட்சிப்பவள் என்பதால் என் பெயர் ராட்சசி'' என்கிறாள் வனப்பேச்சி.

நாடக இறுதிக் காட்சியில், பள்ளிக்குப் புறப்படும் அவசர நேரத்தில் அம்மாவுடனான வாய்ச் சண்டையில் "ராட்சசி' என்று மாணவியின் தாய் சொல்லும்போது, "ஆமாம்.. நான் ராட்சசிதான்' என்று அந்த மாணவி பெருமையுடன் கம்பீரமாகச் சொல்லுமிடத்தில் பார்வையாளர்களின் கரவொலியால் அதிர்கிறது மியூசிக் அகாடமி அரங்கம். 

வனப்பேச்சியாக,  பேரண்டச்சியாக அதிர வைக்கிறது ரோகிணியின் நடிப்புத் திறன். அது நடிப்பல்ல கம்பீரம். அன்பு, பாசம், கருணை, நளினம், உறுதி, வீரம் என வனப் பேச்சியாகவே மாறிவிட்ட ரோகிணி பேரண்டச்சியாக வாழ்ந்து காட்டியுள்ளார். சின்னஞ்சிறு அசைவுகளாக உடல்மொழிகள்... பார்வையாளர்களை சிந்திக்க வைத்து, அதிர வைத்து, அழ வைத்து உறைய வைத்தாள்  வனப்பேச்சி. அசாத்தியமான  நடிப்பு. நேர்த்தியான முகமாற்றங்கள், உடல் மொழி என அவரது உழைப்பு பெரும் பாராட்டுக்குரியது. ஆசிரியை பாத்திரத்தில் கவின்மலர், மாணவியாக அசத்தும் அமலா மோகன் உள்ளிட்ட நாடகத்தின் மூலம் வாழ்ந்து காட்டியுள்ள அனைத்துக் கலைஞர்களுமே மிக சீரிய நடிப்பை வழங்கியுள்ளனர். 

அடர்ந்த வனத்தின் தோற்றத்தை உருவாக்கும் ஒளியமைப்பு, நுண்ணிய இசையமைப்பு என இயக்குனர் பிரளயன் அசத்தியிருந்தார். 

இயற்கை வளம் காக்கும் போராட்டத்தில் மறைக் கப்பட்டவர்களின் போர்க்குரல்... போர் முரசாக... பிரளயம் காக்க ஒலித்த பிரளயனின் கருத்தியல் போராக வனப்பேச்சி வெளிப்பட்டிருக்கிறது.. கார்ப்பரேட் உலகின் சவால் மிகுந்த இந்தக் காலத்தில், மனிதர்களுக்குள் வெறுப்பு தேவையில்லை அன்பே தேவை என்கிற கலகக்குரலை பண்பாட்டுத் தளத்தில் நாடகக் கலை வடிவில் எழுப்பியிருப்பது பாராட்டுக்குரியது. நாடக இயக்குனர் பிரளயன் படைப்புகளில் வனப்பேச்சி மிகமிக உயர்ந்து நிற்கிறாள். தெருத்தெருவாக வீதி வீதியாக அனைத்துப் பள்ளிகளிலும் நிகழ்த்தப்படவேண்டிய நாடகம் இந்த பேரண்டச்சி.

uday010226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe