துலாம்
துலா ராசியின் 3-ஆம் அதிபதி தனுசு குரு ஆவார். 3-ஆம் அதிபதி குரு என்பதால் கட்டுப்பாடான தைரியமும், முறையான உபரி வருமானமும் கிடைக்கும். எல்லா செயல்களும், வருமானமும் சட்டப்படியே கிடைக்கும்.
துலா ராசி 3-ஆம் அதிபதி குருவும்+சூரியனும்
இந்த இணைவு பெரும்பாலும் அரசியல் சார்ந்த வருமானம் தரும். அரசியல்வாதிகளின் செய்தி பரப்புரை செய்யும் பணியில், பகுதி நேரமாக வேலை செய்து, உபரி வருமானம் பெறுவர். அரசியலில் உள்ள செய்திகளை, கைபேசி மற்றும் கண்ணியில் பதிவிடும் பொறுப்பில் இருப்பர். அரசியல் கட்சிகளின் தொண்டனாக இருந்து, சிறிது அல்லது பெரும் தொகையை உபரி வருமானமாக பெற்றுக்கொள்வர். அரசியல் கூட்டம் ஏற்பாடு செய்வது, அதற்குரிய ஒளி, ஒலி கேமரா அமைப்பது, வருகிறவர்களை ஒழுங்குபடுத்துவது என இதையே, அதன் சமயத்துக்கு ஏற்ப உண்டாகும் வாய்ப்பை பயன்படுத்தி, உபரி வருமானம் ஈட்டுவர். மேலும் எல்லா கட்சி பரப்புரைக்கும் மற்றும் தெரு தெருவாக நோட்டீஸ் கொடுத்தும், உபரி வருமானம் பெறுவர்.
துலா ராசி 3-ஆம் அதிபதி குரு+சந்திரன்
இவர்களில் பெரும்பாலோர், எந்த வேலை, தொழில் செய்தாலும், குடிதண்ணீர் கேன் போடுவது மாதிரி, பகுதி நேர வேலை, ஒப்பந்தம் எடுத்து உபரி பணம் சம்பாதிப்பர். மளிகைக்கடை அல்லது உணவு விடுதி வைத்திருந்தாலும், அங்கும் பால், தயிர், மோர், இனிப்பு பானம் என இவைசார்ந்த ஏஜென்சி எடுத்து வைத்துக்கொள்வர். சிலர் வீடு, வீடாக பால் பாக்கெட் போடுவதை சைடு வேலையாக வைத்திருப்பர். கோவில், அறநிலையத்துறை, நீதிமன்றம் என இது போன்ற அலுவலகங்களுக்கு காபி, டீ என இவற்றை சப்ளை செய்வர். கட்டடம் கட்டும் தொழிலாளர்களுக்கு, வீதியில் காபி, டீ சப்ளை செய்வர். சிலர் பதநீர் போன்ற இயற்கை பானங்களை சீசனுக்கு ஏற்றுவாறு விற்று உபரிபணம் சம்பாதிப்பர்.
துலா ராசி 3-ஆம் அதிபதி குரு+செவ்வாய்
இந்த இணைவு அனேகமாக திருமணம் சம்பந்தமான உபரி வருமானம் தரும். திருமணம் நடக்கும் மாதங்களில் மட்டும், திருமணம் மண்டபங்களில் உணவு பரிமாறுவது, வரவேற்பது, தாம்பூல பை போடுவது, சமையல் வேலைகளில் உதவுவது என இதுபோன்ற வேலைகளை பகுதி நேரமாக பார்த்துக்கொள்வர். சிலர் திருமணத்தை நடத்திவைக்கும் ஐயர், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலை, பந்தக்கால் நடும் சடங்கு செய்வது என இவைசார்ந்த ஒப்பந்த வேலைகளைச் செய்வர். பெரும்பாலும் இந்த அமைப்பு யாகம், வேள்வி போன்ற அக்னி சார்ந்த வேலைகளைத் தரும். எனவே இவர்கள் எந்த வேலையில் இருப்பினும், பகுதி நேரமாக, வேள்வியின் யாக குண்டம் சார்ந்து, அக்னி வளர்த்து, அதனை உபரி வருமானமாக கொள்வர். மிகச் சிலர் கோவில் மடப்பள்ளியில் பிரசாதம் தயாரிப்பர்.
இந்த குரு அல்லது செவ்வாய் நீசமாக இருப்பின் ஆகாத வீடுகளில் சமையல் செய்வர்.
துலா ராசியின் 3-ஆம் அதிபதி குரு+புதன்
இவ்விணைவு, பெரும்பாலும் வெளிநாட்டு பயணம் சம்பந்தமான உபரி வருமானம் தரும். வெளிநாட்டில் படிக்கச் செல்லும் மாணவர்களின், டெபாசிட் தொகை ஏற்பாடு செய்வது மற்றும் அவர்களின் பயண டிக்கெட் ஏற்பாடு செய்வது என உபரி வருமானம் அமையும். சிலர் இது சார்ந்த கல்வி அமைப்புகளில், வெளிநாட்டில் உயர் கல்வி கற்க செல்லும் மாணவர்களை, இண்டர்வியூ எனப்படும் நேர்காணல் நிகழ்ச்சிக்கு தயார்படுத்தும் வேலையை பகுதி நேரமாக செய்வர். வேறு சிலர் வெகு தூர ஆன்மிக யாத்திரை சார்ந்த பணிகளை மேற்கொள்வர். யாத்திரை ஏற்பாடு, ஆன்மிக பயண டிக்கெட் எடுப்பது, அங்கு அவர்களை பத்திரமாக பார்த்துக் கொள்ளும் கைடு என இவ்விதமான பணிகளை மேற்கொண்டு, சீசனுக்கு ஏற்ற வருமானம் பெறுவர். ஐயப்பன் கோவில் தரிசனத்திற்கும், அதற்குரிய பயண ஏற்பட்டாளராக பணி புரிந்து, உபரி பணம் பெறுவர்.
துலா ராசி 3-ஆம் அதிபதி குரு+சுக்கிரன்
இந்த இணைவுப்படி, சுக்கிரன் உச்சமாக இருந்தால் மட்டுமே உபரி வருமானம் கிடைக்கும். மற்றபடி வரும்படி கிடைக்கும் வாய்ப்பு குறைவுதான். சுக்கிரன் உச்சமாக இருந்தால், எதிர்பாராத வருமானம் நிறைய கிடைக்கும். அது அனேகமாக சேவை செய்வதன்மூலம் கிடைக்கும். அது ஆசிரியப்பணி, வழக்கறிஞர்கள், ஜோதிடம், கோவில் பணி, கடன் சம்பந்த வேலை, அடுக்கு மாடி கட்டுமானம், வாகனங்களை வாடகைக்கு விடுவது, பஞ்சாயத்து பண்ணுவது, சில சட்ட சிக்கல்களை தீர்க்க யோசனை கூறுவதன் மூலம் உபரி பண வரவு, பெரிய தொகை கடன்களை பெற்று கொடுப்பதன்மூலம் கிடைக்கும் கமிஷன் இன்சூரன்ஸ் மற்றும் ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்த கமிஷன் என இவைமூலம் உபரி பணம் பெற இயலும்.
துலா ராசி 3-ஆம் அதிபதி குரு+சனியுடன் சேர்ந்தால்
துலா ராசி, லக்னத்துக்கு சனி ஒரு இராஜயோக கிரகம் ஆவார். எனவே துலா ராசியினருக்கு இந்த இரு கிரக சேர்க்கைகளும் நல் யோகம் தரும். ரியல் எஸ்டேட், வீடு மாற்றுவது, வாகன மாற்றம், தோட்டங்கள் விற்பனை, படகு விற்பது, சினிமாவில் நடிக்க, இயக்க செய்யும் ஒப்பந்தங்கள், சினிமா சார்ந்த ஒளி, ஒலி இயக்குனர்கள், பங்குவர்த்தகம், வர்த்தக முன்பேரம், சிலரின் பூர்வீக சொத்துகளை நிர்வகித்தல், குலதெய்வ சம்பந்தமான வழிபாடு, காணிக்கை, கட்டளை பூஜை, மாத, வருட பூஜை என இவற்றை கைபேசி மூலம் நிர்வகித்து நிறைவேற்றி, பிரசாதம் அனுப்புதல், சில தரிசு நிலங்களையும், விளை நிலமாக மாற்றும் ஒப்பந்தம் என இவைமூலம் உபரி பணம் ஈட்டுவர்.
துலா ராசி 3-ஆம் அதிபதி குரு+ராகுவுடன்
இவ்வமைப்பு, அனேகமாக வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஒப்பந்த நிறுவனமாக இருக்கும். இதில் சிலர் வேலை செய்வர். சிலர் இந்நிறுவனத்துக்கு உறுப்பினர்களை சேர்த்து, அதற்கு தகுந்த அளவு உபரி பணம் சம்பாதிப்பர். இங்குள்ள முதியோர் இல்லம், ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள் இவர்கள் சார்ந்து வெளிநாட்டிலிருந்து உதவிப் பணம் பெறும் அமைப்பை நடத்துவர். அதன்மூலம் எக்ஸ்ட்ரா பணம் ஈட்டுவர். சிலர் கடன் வாங்கி கொடுக்கும். வங்கிகள், தனியார் கடன் நிறுவனம், நகை அடகு வைக்கும் அமைப்பு என இவற்றில் தரகராக செயல்பட்டு, இருவரிடமும் பணம் வாங்கிவிடுவர். படிப்பில் மந்தமான குழந்தைகளுக்கு, வெளிநாட்டு முறையில், பயிற்சி கொடுக்கி றோம் என கிளம்பிவிடுவர். அதன்மூலம் வெளிநாட்டு கல்வி பயிற்சி நிறுவனத்திடம், உபரி பணம் பெற்றுக்கொள்வர்.
துலா ராசி 3-ஆம் அதிபதி குரு+கேது
இவ்வமைப்பு, பெரும்பாலும் ஆசிரமம், மடம், ஆதரவற்றோர் இல்லம், சன்யாசிகளின் வாழ்விடம், மலைக் குகைகளில் பூஜை, சித்தர் சமாதியில் வழிபாடு செய்வது, மலைகளில் ஏறி, அங்குள்ள கோவிலில் பூஜைசெய்வது, சமய சம்பந்தமான நிறுவனங்களில் பணிபுரிவது, சமயம் சார்ந்த புத்தகங்கள் வெளியிடுவது, ஞானிகளை தேடி அலைவது, மத போதர்களாக திகழ்வது, தர்ம ஸ்தாபத்தில் வேலை, ஜோதிடம் கூறுவது, குறி சொல்வது, சாமியாடுவது, திருஷ்டி கழிப்பது, தோஷம் போக்குகின்றேன் எனக் கூறுவது என இதுபோன்ற சமயம் சார்ந்த இனங்களில் ஈடுபட்டு உபரிபணம் சம்பாதிப்பர். அல்லது ஒருமுட்டாக பிச்சைக்காரர்களாகி, உபரி பணம் நிறைய சம்பாதித்து, கோடீஸ்வரனாக மாறிவிடுவர்.
துலா ராசியின் 3-ஆம் அதிபதி உச்சம்
பெற்றால் உங்களின் 10-ஆமிடத்தில் உச்சம்பெறுவார். எனவே எந்த தொழில் செய்தாலும், அதில் உபரி வருமானமும் வரும் அளவிற்கு ஒருவழி பண்ணிவிடுவீர்கள்.
செல்: 94449 61845
Follow Us