சிம்மம்
சிம்ம ராசி 120 டிகிரி- 150 டிகிரிவரை உள்ளது. இதன் அதிபதி சூரியன். இது நெருப்பு வகை சார்ந்தது. அதனால் எப்போதும் சற்று உஷ்ணமாக பேசுவர். நெருப்பு எப்போதும் மேல் நோக்கியே பரவும். அதுபோல், இவர்களின் எண்ணம், நடவடிக்கைகள் அனைத்தும், உயர்வாக பிடிவாதமாக இருக்கும். சிலசமயம், சிம்மத்தைப்போல், ஆக்ரோஷமாகவும் இருப்பர். நடைமுறை சாத்தியமில்லாத, சில விஷயங்களை நடத்திவைக்க முற்படுவர். இதனால் நல்ல பெயர், கெட்ட பெயர் எல்லாம் சேர்ந்து கிடைக்கும். இது ஒரு ஸ்த்ர ராசி. எனவே கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பர். இவர்களுடைய அதீத தைரியமே இவர்களின் பலமும், பலவீனமும் ஆகும்.
சிம்ம ராசிக்கு 2026 புது வருட பலன்
இந்த வருடம், பண செழிப்பு வருடம் என்றே சொல்லலாம். மேலும் இந்த ராசிக்காரர்கள், அரசியலில் இருந்தால், தன், வாரிசுடன், அரசியல் பதவியை மாற்றிக்கொள்வர். சிலர், தனது தொகுதியை தனது, மகனுக்கு விட்டுக் கொடுத்து விடுவர்.அல்லது வாரிசு மற்றும் தனது தொகுதியை பரிமாற்றம் செய்து கொள்வர். அல்லது தந்தை அல்லது வாரிசு யாரோ ஒருவர் தேர்தலில் நின்று, மற்றவர் அவரின் வெற்றிக்கு வெகு பாடுபடுவர். ஆக இந்த வருடம் தேர்தல் நடக்கும்போது, சிம்ம ராசியார், அரசியலில் ஏதோ ஒரு அதிகளம் பண்ணுவர்.இந்த நிலையால், பண பரிமாற்றம் என்பது நம்ப முடியாத வகையில் அமையும். இந்த அரசியல் எனும் தொழில் மேன்மைக்கா இருக்கிற அத்தனை பணத்தையும் செலவளிப்பர். சக்கரைக்கட்டியாக பேசுவர். சில சமயம், பணம் கொடுக்காமல், பேசி, பேசியே ஓட்டு வாங்கிவிடுவார் என்றால் பாருங்களேன். இந்த வருடம் இவர்களின் சொற்களே, மிக லாபம் ஈட்டித் தரும்.உங்கள், இளைய சகோதரி, வாழ்வின் முன்னேற் றத்துக்கு மிக உதவுவார். பெண் பணியாளர்களின் அனுசரணை உண்டு. கலை, அழகு அடுக்குமாடி சம்பந்த ஒப்பந்தம் கிடைக்கும். தொழில் வசதிக்காக, அழகான சிறுதூரப்பயண, இரு சக்கர வாகனம் வாங்குவீர்கள். டி.வி. அல்லது செய்தி தொடர்பு வேலை கிடைக்கும். உங்கள் பூர்வீக நிலம், நல்ல லாபம் தரும். உங்கள் கல்வி, சற்று பழமையான வகையில் அமையும். உங்களின் சில பெற்றோர்கள் பூர்வீக இடம் நோக்கி வசிக்க நகர்ந்துவிடுவர். சிலர் குல தெய்வக் கோவிலுக்கு அடிக்கடி சென்றுவருவர்.விவசாயத்தில் உள்ளோர் நல்ல லாபம் காண்பர். பலர், பழமையான பயிர்களை இயற்கை முறையில் மட்டும் பயிரிட்டு லாபமும், மனதிருப்தியும் பெறுவர்.உயர்கல்வி, உயர்நிலை பள்ளி மாணவர்கள் நல்ல ஞாபக சக்தியுடன், பரிட்சை எழுதி உயர் மதிப்பெண் பெறுவர். தங்கள் பாடங்களை, நேர்மையாகவும், குயுக்தியுடன் எளிமையாகவும், படித்து தேர்வர். உங்களில் சிலர், போர் பம்பை விட்டுவிட்டு, கிணற்றை பயன்படுத்த ஆரம்பித்தவிடுவீர்கள்.நிறைய சிம்ம ராசியாருக்கு, இந்த புது வருடத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலரின் வாரிசுகளுக்கு திருமணமாகி, மருமகன்- மருமகள் வருவர். உங்கள் வாரிசுகளின் திருமணம்மூலம், திரண்ட சொத்து வந்து சேரும். உங்களில் சிலர் காதல் திருமணம் செய்துகொள்வீர்கள்.சினிமா, டி.வி. கலைஞர்கள், தாங்கள் நினைத்த அளவில் வாய்ப்பு கிடைக்கும். இவை அரிய வாய்ப்புகளாக மட்டுமல்ல நல்ல புகழ், வருமானம் இவற்றையும் தரும். சிலர் வெளிநாட்டு படங்களிலும் நடிக்க இயலும். உங்களில் சிலர் சில அரசியல் வாதிகள் பாத்திரத்தில் நடிப்பீர்கள். சில நடிகர்கள், நிஜமான அரசியலில் ஈடுபட்டு, சேவை செய்வர்.பங்கு வர்த்தகத்தை, பணவரவை அடிப்படையாகக் கொண்டு, ஒன்றுக்கு பதில் மற்றொன்று என மாற்றிக் கொள்வீர்கள். மருத்துவ முறையை மாற்றுவீர்கள். இந்த வருடம் நீங்கள் கேட்டவுடன், கடன் தருவார்கள். ஆனால், தயவுசெய்து கடன் வாங்கி விடாதீர்கள். அதுபோல் யாருக்கும் ஜாமீன் கையெழுத்தும் போடக்கூடாது.தம்பதிகளுக்குள் ஒன்று சண்டை வரும். அல்லது உடல்நிலை சரியில்லாமல் போகும்.ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்தவர்கள் நல்ல லாபம் காண்பர். மேலும் நீங்கள் ஒரு நாட்டிற்கு, ஒரு பொருளை ஏற்றுமதி செய்யும்போது, பதிலாக இன்னொரு பொருளை அங்கிருந்து பண்டமாற்று மாதிரி இறக்குமதி செய்து, நல்ல செல்வவளம் பெறுவீர்கள்.இன்ஷியூரன்ஸ் சம்பந்தபட்டவர்கள் நிறைய தொடர்புகள் கிடைக்கப்பெறுவர். நீங்கள் எந்த தளத்தில் தொழில் செய்பவராக இருந்தாலும், முதலீடு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு காரணம், உங்கள் வர்த்தகம் வெளிநாட்டு தொடர்பு பெறுவதாகும்.சமையல் கலைஞர்கள், பழமையான உணவு தயாரிப்பு மூலம் பேர், புகழ் பெறுவர். உங்கள் மூத்த சகோதரன் டெபுடேசனில், வேறிடம் செல்வார். இந்த வருடம், நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நன்கு நிறைவேறும். நீங்கள் ரொம்ப வருடமாக யோசித்துக் கொண்டிருந்த குலதெய்வ பிரார்த்தனைகள், சில கோவில்களின் பரிகார பூஜைகள், சில பழைய தங்க நகையை புதுப்பிப்பது, பூர்வீக வீட்டில் சீர்திருத்தம், குழந்தை பருவ நண்பர்களை சந்திப்பது, பண முதலீடுகள், நிரந்தர வைப்பு தொகை, வங்கி லாக்கர் கிடைப்பது, புதிய மொழி கற்றுக் கொள்வது சில பெண்கள் சொந்தமாக சிறுதொழில் ஆரம்பிப்பது, வெளிநாட்டை சுற்றி பார்ப்பது என இந்தமாதிரி நெடுநாள் ஆசைகள் இந்த வருடத்தில் நிறைவேறும்.இந்த வருடம், இத்துணை எண்ணம், ஆசைகள் நிறைவேறும் போது, அவை சார்ந்த அலைச்சல்கள் இருக்கும்தானே! நிறைய அலைச்சல்கள் இருக்கும். தொழில் சார்ந்து, கௌரவம் சார்ந்து அலைய வேண்டியிருக்கும். தொழில் விஷயமாக, வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டி வரும். சில முதலீடுகள் உங்களை அலையச் செய்யும். தண்ணீர் சார்ந்த தொழிலுக்கு நிச்சயம் பயணம் ஏற்படும். சிலர் நன்கொடைகள் வாங்க அலைவார்கள் சிலர் தூக்கமே வரவில்லை என்று, அதிக நடைபயிற்சி மேற்கொள்வர். சில இரகசிய திட்டங்கள் சார்ந்த பயணமுண்டு. சிலர், சில விலங்குகளின் விபத்தை தவிர்ப்பதற்கு அலைய வேண்டியிருக்கும் உங்களில் சிலர் தாய்நாட்டு பாதுகாப்பு கருதி, அலைச்சல் மேற்கொள்வீர்கள். கவனம் தேவை: உங்கள் தந்தையின் நலன் கவனிக்கப்பட வேண்டும். அதுபோல், உங்களுக்கு நிறைய நல்லது நடப்பதால், ரொம்ப திருஷ்டி படும். அந்த திருஷ்டி. அசூயையாக மாறும். அந்த அசூயை, உங்கள்மீது வீண்பழி, பொல்லாப்பு சுமத்தும். உங்களுடன் நல்ல தொடர்பில் உள்ளவர்களே, இதனைச் செய்வர். உங்கள் வீடு, தோட்டம், வாகனம் இதில் கொஞ்சம் திருட்டு நடக்க வாய்ப்புண்டு. இன்ஷியூரன்ஸ் தொகையை ஒழுங்காக கட்டிவிடுங்கள். பொருட்களில் பாதிப்பு ஏற்பட்டால் பணம் திரும்பக் கிடைக்கும்.
பரிகாரம்: நெல்லை காந்திமதி அம்மனை வணங்கவும். சூரியனார் கோவில் சென்று வழிபடுவது நல்லது.
கன்னி
இது 150 டிகிரி- 180 டிகிரிவரை உள்ளது. இதன் அதிபதி புதன். இவர் இந்த கன்னி ராசியில் உச்சமடைவது மிக சிறப்பு. புதன் கிரகம் சற்று பரபரப்பானதுதான். ஆனாலும், இந்த கன்னி என்பது நில ராசி. எனவே எந்த அவசர வேலையையும், பதறாமல் சிதறாமல் செய்து முடிப்பர். இவர்களின் யோசனைகள், நிறுத்தி நிதானமாக இருக்கும். இதனால் இவர்கள் வணிக, வியாபார விஷயத்துக்கு ரொம்ப பொருத்தமான ஆட்களாக இருப்பர். இதிலும் புதன் உச்சமான நபர்கள், கண்டிப்பாக வேலை, தொழிலில் முதன்மை இடத்தில் இருப்பர். தலைமை பண்புமிக்கவர்கள். இதனால் முதன்மை பதவி தேடிவரும்.
கன்னி ராசிக்கு 2026-ஆம் ஆண்டு பலன்
இந்த புதுவருடத்தில், கன்னி ராசியில் அனேக ருக்கு திருமணம் நடந்துவிடும். அது விருப்பம் மற்றும் அரேன்ஜ்க்கு மேரேஜாக இருக்கும். இந்த திருமணம் உங்களில் பலருக்கு, வீடு கிடைக்கும் வகையில் அமையும். கூடவே வாகனமும் கிடைக்கும். இந்த வருடம், நிறைய மறுமணத்திற்கு காத்திருப் பவர்களுக்கு, மிக அதிர்ஷ்டமான வரனுடன், மறுமணம் நடக்கும். அதனால் மறுமணம் நடக்க இருக்கும் கன்னி ராசியினர், இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ளவும்.விவசாயம் செய்பவர்கள், நல்ல பண பலன் பெறுவர். தோட்டம், வயல், பண்ணைகள் மீன் குட்டைகள் மற்றும் கிணறு, குளம் இவை எல்லாம் உங்களுக்கு வருமான பெருக்கம் தரப்போகிறது.மேலும், இவை சம்பந்தமாக, நிறைய மனிதர்களை, அரசு அதிகாரிகளை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும். மேலும் உங்கள் சொற்களின் இனிமை, வேலை, வணிகத்தை எளிதாக்கும். உங்களின் பேச்சுமூலம் தொழில் நடத்தும் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள், ஜோதிடர்கள் இவர்கள் மிக மேன்மை அடையும் வாய்ப்புண்டு.சில இளைய சகோதரர்கள் செய்யும் அழிச்சாட்டியங் களை, ஒருமாதிரி சமாளித்து விடுவீர்கள். தொழில் ஒப்பந்தம் கொஞ்சம் தடுமாற வைத்து, பின் சரியாகும். உங்களின் பணியாளர்கள, ரொம்ப அடாவடி செய்வதால், சிலரை நீக்கிவிடுவீர்கள்.உங்கள் பயந்த சுபாவத்தின், பின் விளைவை உணர்ந்து, நீங்களே சற்று சுதாரிப்பாக இருக்கப் பழகுவீர்கள்.பழைய இம்சை கொடுக்கும் வாகனத்தை மாற்றுவீர்கள். நிறைய பேருக்கு, மாமனார் தொல்லை நீங்கும். இதனால் தன்னிச்சையாக மாமியாருடன் நல்லுறவு ஏற்படும்.இந்த வருடம், கூடியமட்டும், புதிதாக டி.வி. சேனல் அறிவிப்பாளர் பதவிக்கு போட்டியிட வேண்டாம். ஏற்கெனவே பணிபுரிபவர்களும் சற்று கூட வேலை செய்பவர்களின் தொல்லையை சந்திக்க வேண் டியிருக்கும். எனினும் சமாளித்துவிடலாம்.ரியல் எஸ்டேட், வீட்டுத் தரகர்கள் சற்று தடைக்குப் பிறகு, தொழில் ஏற்றம் காண்பர்.கன்னி ராசி குழந்தைகளின் அம்மாக்கள் இந்த வருடம் வேலை கிடைக்கப்பெறுவர். வயல், வீடு, வாகன யோகமுண்டு. அசையா சொத்துகளின் சேர்க்கை அதிகரிக்கும். உங்களில் சிலர். தொழில் செய்யும் இடம் அருகே வீட்டை மாற்றிக்கொள்வீர்கள். வேறு சிலர், உங்கள் வீட்டின், ஒரு பகுதியில், தொழில் தொடங்கிவிடுவீர்கள். ஆக, இந்த வருடம் கன்னி ராசியாருக்கு, வீடு, தொழில் சம்பந்தம் கண்டிப்பாக உண்டு.மாணவர்கள், தங்கள் தொழில் கல்வியின் பிரிவை மாற்றும் வாய்ப்புண்டு. உங்கள் தாயார் வீடு மாற்றுவார். உங்கள் வாழ்க்கைத்துணை, தன்னுடைய தொழிலை இடம் அல்லது வேறுவிதமாக மாற்றும் வழி உள்ளது.உங்களில் சிலர் வீட்டில், உங்கள் தாயாரின் வயல், தோட்டத்தை, உங்கள் மாமியாரின் வயல், தோட்டத்துடன் பண்ட மாற்று வழியில் மாற்றிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்படும்.சில பள்ளி குழந்தைகள். வீடு மாற்றத்தால் பள்ளிகூடத்தையும் மாற்ற வேண்டி இருக்கும்.கலைஞர்கள் நிறைய வாய்ப்பு பெறுவர். பிறமொழி படங்களிலும் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கலைஞர்களில் சிலர், சினிமா துறையில் முதலீடு செய்வர். பங்கு வர்த்தகம் சராசரி நிலையில் ஓடும். உங்களின் வாரிசுகள் வேலை விஷயமாக இடம் மாறுவர்.உங்களில் சிலருக்கு, மருமகள் வரும் நேரமிது. மருமகள் மிக செல்வாக்கான இடத்தில் இருந்து வருவாள்.பூர்வீக பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அது குலதெய்வத்துக்கு சென்று செய்வீர்கள்.உங்களில் சிலர், பழைய கடன்களை அடைப்பீர்கள். நெடுநாள் வியாதிகள் தீரும். வம்பு, வழக்குகள், கோர்ட்டுக்கு வெளியே, பொது மனிதர்மூலம் சமாதானமாக முடிக்கப்படும். தனியார் துறை வேலை கிடைக்கும். அது வெளிநாட்டு சம்பந்தம் அல்லது இஸ்லாமிய பெரு மக்கள் சம்பந்தம் கலந்திருக்கும்.உங்களில் சிலர், உங்கள் வணிக பங்குதாரரின்கூட, இடமாற்றம் செய்துகொள்வீர்கள். சில வியாபாரிகள் பங்குதாரரை மாற்றிக் கொள்வர்.வீடு சம்பந்தமாக ஒரு வில்லங்கம் வந்து சரியாகும். சிலர் வீட்டு, வாகன இன்ஷியூரன்ஸ் எடுத்துக்கொள்வீர் கள். ஏற்றுமதி- இறக்குமதியாளர்கள், தங்கள் சரக்குகளை கையாள, ஒரு குடோனுடன் அல்லது ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வர். அல்லது இது சார்ந்த ஒரு இடம், கட்டடம் வாங்கிவிடுவர்.உங்கள் மூத்த சகோதரி, வெகு அதிர்ஷ்டம் பெறப் போகிறார். உங்கள் பெற்றோர் பெரிய நல் பாக்கியம் பெறுவர். அல்லது உங்கள் குடும்பத்தில் ஒரு பெண் அரசியல் வாதி, முதன்மை இடத்துக்கு வருவார். உயர்கல்வி கற்கும் பெண்கள் முதல் மதிப்பெண் பெறுவர். சில சபை பெண்கள், நீதிபதி அல்லது சட்டசபை, பாராளுமன்ற, கார்ப்பரேஷன், மாநகர, பஞ்சாயத்து தலைவி ஆவார்கள்.பெரிய மாளிகை கட்டுவதால், நல்ல கௌரவம் கிடைக்கும். கல்வி சார்ந்து நல்ல பதவி பெறுவீர்கள். வாகனம் மற்றும் படகுகள் சார்ந்த தொழில் பெருகும். கட்டடம் கட்டும் ரியல் எஸ்டேட் துறையினர், ஜாயிண்ட் வென்சர் என்ற முறையில், நிறைய வேலை பெறுவர். தோட்ட நிர்மாண துறை வேலை வெகுமதி தரும். அகழ்வாராய்ச்சி துறையில் உள்ளவர்கள் பாராட்டு பெறுவர். பால் பண்ணை உரிமையாளர்கள், பலன் பெறுவர். காணாமல் போன கிணறு கண்டு பிடிக்கப்படும். இந்த வருடம் கன்னி ராசி பெண்கள் மிகுந்த ஆதாயம் பெறுவர். முக்கியமாக அரசியல் சார்ந்தவர்கள் கண்டிப்பாக ஒரு பதவியை பெறுவர். அது தலைமை பதவியாக இருக்க வாய்ப்புள்ளது.பிற ஆண் அரசியல்வாதிகளும் மிக நல்ல பலன் பெறுவீர்கள். உங்களின் வெற்றி, உங்கள் குடும்ப பராம்பரியம் சார்ந்து கிடைக்கும். மற்றும் உங்களின் வாக்கு, பேச்சு மற்றும் உங்கள் குடும்பத்தினரின் தான தர்மம் இவை வெற்றியை எளிதாக்கும். பெண்களின் முன்னேற்றுத்துக்கான, நீங்கள் செய்திருக்கும் பல முன்னேடுப்புகள், வெற்றி பாதையை எளிதாக அடையச் செய்யும்.இந்த வருடம் பிறந்த இடம் சார்ந்த அலைச்சல் அதிகமிருக்கும். அது உறவினர் திருமணம், தொழில் சில குத்தகை விஷயங்கள் பூமி அல்லது வீட்டை விற்பது என ஏதோ ஒரு காரணத்தை தொட்டு அலைய வேண்டியிருக்கும்.கவனம் தேவை: இந்த வருடம் காவல் துறையினரிடம் வம்பு வைத்துக்கொள்ள வேண்டாம். முக்கியமாக வாகன பயண சட்டங்களை மிக மதித்து நடக்கவேண்டும். அதுபோல் காவலர்களும், கைதிகளிடம் ரொம்ப கோபம் காட்ட வேண்டாம். ஏற்றுமதி- இறக்குமதி துறையினர், பழைய ரசீது போன்றவைகளை கவனமாக பராமரிக்க வேண்டும். வெகுதூரப் பயணங்களில், காசு கார்டு விஷயங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். பணியாளர்களிடமும், இளைய சகோதரிடமும் -மிட்டோடு பழகவும். சைக்கிள் போன்றவற்றை திருடி எடுத்துப் போய்விடுவர்.
பரிகாரம்: கன்னியாகுமரி அம்மனை வணங்கவும். உங்களுக்கு இஷ்டமான ஸ்ரீரங்கம் போன்ற பெருமாள் ஸ்தலம் சென்று வணங்கவும்.
துலாம்
துலா ராசி 180 டிகிரியிலிருந்து 210 டிகிரிவரை உள்ளது. துலா ராசியின் அதிபதி சுக்கிரன். இது ஒரு காற்று ராசி. இவர்களின் வேலையில் ஒரு வேகம் இருந்தாலும், அதிலும் ஒரு நேர்த்தி இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் உழைப்பாளர்களாக திகழ்வர். இந்த ராசி, வணிகத்துக்குரிய ராசி. எனவே இந்த ராசி ஜாதகர்கள் வியாபாரத்தில் முன்னெடுப்பு கொள்வர். வீட்டிலுள்ள பெண்களும் சிறு, சிறு கைவேலைகள் செய்து, கைக்காசு சேர்த்துக்கொள்வர். பொழுதுபோக்காக மேற்கொள்ளும் வேலைகளில்கூட, முழு முயற்சியுடன் உழைத்து, அதன் தலைமையாளர் ஆகிவிடுவார்கள். இது உழைப்பும், அழகும் சேர்ந்த ராசியாகும்.
துலா ராசிக்கு 2026 புது வருட பலன்
இந்த 2026-ஆம் வருடம் தகவல் மற்றும் மாற்றத் திற்கான வருடமாக துலா ராசியினருக்கு இருக்கும். இந்த வருடம் அனேகருக்கு வேலை கிடைத்துவிடும். அதில் பலர் அரசு பணி கிடைக்கப்பெறுவர். சிலருக்கு தனியார் வேலை கிடைக்கும். இந்த வருடத்தில் நீங்கள் கவனிக்க வேண்டியது ஒன்று உள்ளது. இந்த வருடம் மட்டும், உங்கள் தொழில்களை வெளிப்படையாக, செயல்படுத்த வேண்டாம். ஒன்று, உங்கள் தொழிலை, வேறு ஒருவருக்கு ஒப்பந்தம் கொடுத்துவிடுங்கள். அல்லது உங்கள் தயாரிப்புகளுக்கு, வேறு ஒருவர், அவரது லேபிள் ஒட்டி விற்கட்டும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்பவர்கள், நேரிடையாக களத்தில் நிற்க வேண்டாம். ஒரு வயதான பெண் பெயரில், உங்கள், துலா ராசியாரின் தொழில் நடந்தால், தொழில் தொய்வடையாமல் நடக்கும். இந்த ஒரு வருடம் மட்டும் இவ்விதம் செய்யவும். நீங்களோ, உங்கள் பெயரோ முன்னிலை வகிக்க வேண்டாம்.இந்த வருடம் பணவரவு செழிக்கும். அது திருமணத்தாலும் இருக்கலாம். அல்லது உங்கள் வியாபார பங்குதாராலும் இருக்கலாம். உங்கள் மனை, செங்கல் சூளை, கனிம வளம் மற்றும் மணல் இவை நல்ல பண வரவை அள்ளித்தரும்.உங்கள் வாக்கு எப்போதும்போல் கடுமையானதாக இருந்தாலும், அதையும் ஒரு ப்ளஸ்ஸாக பிறர் ஏற்றுக்கொள்வர். உங்களுக்குரிய, அதிக ஞாபக சக்தியுடன்கூடிய பேச்சு, பிறரை வாயடைத்துவிடும். இதன்மூலம், எந்த ஒரு ஒப்பந்தம் செய்யும் ஆட்களையும், மறுபேச்சு பேசவிடாமல், உங்கள் ஆணைப்படி பண விவாகாரத்தை முடித்து விடுவீர்கள்.இந்த வருடம், நிறைய குத்தகை ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டி இருக்கும். அது அரசு சார்ந்தும் அமையும். தனியார் வகையிலும் இருக்கும். சிலர் உங்கள் தந்தையுடன் இந்த ஒப்பந்தத்தை பரிமாற்றம் செய்துகொள்வீர்கள். சிலர் தாய்மாமனுடன் அல்லது இளைய சகோதரனுடன் மாற்றிக்கொள்வீர்கள். சிலர், உங்கள் சகோதரியின் கணவருடன் இந்த ஒப்பந்த பரிமாற்றம் செய்வீர்கள். உங்களில் சிலர், இந்த ஒப்பந்த ஆபீஸில் வேலைக்கு சேர்வீர்கள்.சில, இளைய உடன்பிறப்புக்கு திருமணம் ஆவதால் செலவு கையை கடிக்கும். இந்த வருடம் வீடு வாங்க இயலும். அதற்கு கடன் கிடைக்கும். சிலர் வீட்டை ஒத்திக்கு எடுப்பர். உங்கள் வாகனத்தை, இளைய சகோதரனிடம் கொடுத்துவிட்டு, நீங்கள் புதிய வாகனம் வாங்குவீர்கள். இதுபோல் நீங்கள் வாங்கிய தோட்டம், வயலை, உங்கள் பணியாளர்களிடமே குத்தகை போட்டுக்கொள்வீர்கள். மாணவர்கள், பிட் அடித்தோ, பக்கத்து பிள்ளையை பார்த்து எழுதியோ, பாஸாகிவிடுவார்கள். உங்கள் தாயார், தகப்பனாரை, கொஞ்சநாள், மற்ற உடன்பிறப்புகள் பார்த்துக்கொள்ளட் டும் என்பீர்கள். பக்கத்து வயலுக்கு வரும் தண்ணீரை உங்கள் வயலுக்கு மடை மாற்றிவிடுவீர்கள்.உங்களுக்கும், வாரிசுக்கும் இடையே இணக்கம் குறையும். இதற்கு உங்கள் மருமகள் அல்லது மருமகன் காரணமாக இருப்பார். சினிமா, கலைஞர்கள் வாய்ப்புகள் வரும் நேரம். மன நெருடலும் சேர்ந்தே வரும். ஊதியத்தை, தாமதமாக தருவார்கள். சில, கலைஞர்கள், வெளியே சொல்ல முடியாத, பெரிய இன்னலை சந்திக்க நேரிடும். பங்கு வர்த்தகம் பார்த்து, கவனமாக முதலீடு செய்யவும். பணம் அதிகப்படியாக இருந்தால், பங்குகள் வாங்கி போடுங்கள். கடன் வாங்கி, பங்கு பத்ரம் வாங்காதீர்கள். உங்களில் சிலருக்கு, நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது.காதல் விஷயங்கள், பணிபுரியும் இடத்தில் வரும். ஆனால் நீடித்து நிற்பதுபோல் தோன்றவில்லை. முக்கியமாக, காதல் வேறு மத நபருடன் உண்டாவதால் பிரச்சினைகள் வரும். காலில் வலி வந்து மருந்து எடுத்துக்கொள்வீர்கள்.இந்த வருடம் திருமணம் நடக்கும். அதில் ஒருவர் அரசு வேலை செய்வார். அல்லது திருமணம் ஆனபிறகு வேலை கிடைக்கும். இந்த திருமணத்தில் உங்கள் தந்தை அல்லது மாமனால் நிறைய செலவை இழுத்து விட்டு விடுவர்.திருமணமான தம்பதிகள், நல்ல புரிதலுடன், அன்யோன்யமாக இருக்கலாம். இதற்கு நல்ல பணவரவும், பதவி உயர்வும் காரணமாகும்.வியாபாரத்தில் கிடைக்கும் பங்குதாரர், ஒரு பணியாள் போல் மாங்கு, மாங்கென்று உழைப்பார். தொழிலில் நல்ல வேலையாட்கள் கிடைப்பார்.உங்கள் இளைய சகோதரி விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு பயணங்களில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.உங்கள் இளைய சகோதரனும், உங்கள் தந்தையும், வேலை அல்லது வீட்டை மாற்றிக்கொள்வர். இதற்கு பயண தூரம் காரணமாகும்.உங்களில் சிலர் வெளிநாடு செல்கிறோம் என்று எண்ணி, கேரளாவில் இறங்கிவிட வாய்ப்புள்ளது. வெளிநாடு செல்லும்போது, சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளை நன்கு விசாரித்து பணம் கட்டடவும். ஏமாறுவதற்கு நிறைய வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள், ஏதோ ஒரு விதத்தில் புகழ் பெறுவர். இந்த புகழ், இவர்களின் தொண்டர்கள் கூட்டத்தை அதிகரிக்கும். அதிகரிக்கும் தொண்டர்கள் கூட்டம் செலவை அதிகரிக்கும். அதிகப்படி செலவு, அதிர்ஷ்டத்தை அழைத்துவரும் வாய்ப்புண்டு. தேர்தல் வந்தால் இடம் மாறி நிற்பீர்கள்.நிறைய சமையல் கலைஞர்கள், அரசு மற்றும் குழந்தைகள் சார்ந்த ஒப்பந்தப்படி சமைக்க இயலும். இந்த வருடம் பயணம் அடிக்கடி இருக்கும். அது கோவில் யாத்திரை, பங்காளிகளின் விசேஷம், குழந்தைகள் சார்ந்த விழாக்கள், திருமணங்கள் என வரிசையாக விசேஷம் வருவதால், மொய் பணம் வைத்தே ஒரு வழி ஆகிவிடுவீர்கள்.கவனம் தேவை: வியாபார விஷயங்களில் கூடியமட்டும் வெளிப்படையாக, படோபடமாக இருக்கக் கூடாது. அடக்கி வாசிக்கவும். பெண் பணியாளர்களிடம் கட்டுப்பாடாக பழக வேண்டும். இல்லை எனில் மிக பெரும். அவமானம் வந்து சேர்ந்துவிடும். அரசியல்வாதிகளும் ஆண் தொண்டர்களிடம் மட்டுமே ஆதரவு கேட்க வேண்டும். வயதான பெண்தானே- திருமணம் ஆன பெண் தானே என்று சற்று அனுகூலம் எடுத்துக்கொள்ளக் கூடாது. காசு கொடுக்கல்லி வாங்கலில் கணக்கு வைத்துக்கொள்வது நல்லது.
பரிகாரம்: மதுரை மீனாட்சியம்மனை வழிபடவும். ஒப்பிலியப்பன், பூமி நாச்சியாரை வணங்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி, 210 டிகிரிமுதல் 240 டிகிரிவரை பரந்துள்ளது. இதன் அதிபதி செவ்வாய். இது ஒரு நீர் ராசி. இதன் அதிபதி செவ்வாய், ஒரு நெருப்பு கிரகம். எனவே ஒரு நீர் ராசியில், நெருப்பு கிரகத்தின் ஆட்சி வீடு அமைந்துள்ளதால், இவர்கள் சற்று மாறுபட்டவிதமாக நடந்துகொள்வர். எப்போதும் குளிர்ச்சியாக பேசி நடந்துகொள்வர். எப்போது எரிமலையாக வெடிப்பர் என யாருக்கும் புரியாது. மேலும் இங்கு சந்திரன் நீசமாகும். எனவே இவர்கள் சற்று மறைத்து ஒளித்து பேசுவர். இவர்களின் சில நடவடிக்கைகள், பிறருக்கு புரியாதவகையில் அமையும். விருச்சிகத்தின் உருவம் தேள். எனவே அடுத்தவர்களை இம்சித்து பார்ப்பதில், உள்ளூர் மகிழ்ச்சி கொள்வர்.
விருச்சிக ராசிக்கு 2026-ன் பலன்கள்
இந்த வருடம் விருச்சிக ராசியினர் பண விஷயங்களில் வெகு கவனமாக இருக்கவேண்டும். நேரிடையான முறையில் சட்ட பூர்வமாக பணம் கிடைக்க, ரொம்ப குறைவான வாய்ப்புக்களே உள்ளது. வரும் வருமானங்கள் சட்டப்புறம்பான வழியல் கிடைக்கும். லஞ்சப் பணம் வரும். கணக்கில் காட்ட முடியாத தொகையை, நீங்கள் கையாள்வீர்கள். உங்களில் சிலர், சில மத்திரிகளின் கறுப்பு பண கொடுக்கல்- வாங்கலை கையாள வேண்டிய நிலை ஏற்படும். சில அரசியல்வாதிகள் உங்கள்மூலம் சட்டபுறம் பான பண பரிமாற்றம் செய்ய நிர்ப்பந்திப்பர். உங்களின் சில வாரிசுகள், தங்களின் தொழில் சார்ந்த கள்ளக் கணக்கு, உங்கள் பெயரை கோர்த்துவிடுவர். இயல்பிலேயே, நீங்கள் நல்ல மனிதராக இருப்பினும், இந்த வருடம். உங்களை பொய் சொன்னால்தான் ஆச்சு என பாடாய்படுத்தும். நீங்களும், அட நல்ல விஷயத்திற்கு பொய் சொல்லலாம் என வள்ளுவரே கூறியிருக்கிறாரே என்று சமாதானமாகி கொள்வீர்கள். இந்த பொய் பேசும்போது, வாக்கில் இனிமை சேர்த்துக்கொள்வீர்கள். நிறைய கள்ளபண புழக்கம், தங்க காசு வாங்கி சேர்க்கச் செய்யும். மஞ்சள் வேளாண் விற்பனையாளர்கள் மேலும் மஞ்சள், தங்க நிறம் கொண்ட வணிகம் செய்வோர், கொஞ்சம் அப்படி இப்படி என தில்லாங்கடி வேலை செய்து காசு சேர்த்துவிடுவார். உங்கள் இளைய சகோதரம், இந்த வருடம் உங்களை பாடாய்படுத்தி விட்டுத்தான் ஓய்வான். அவனால், நீங்கள் காவல்துறை வரை சென்றுவர வேண்டி இருக்கும்.அதேபோல் பணியாளர்கள், விஷயத்தில் அதிக கவனம் தேவை. அதிலும் பிற மொழி, பிற இன வேலையாட்களிடம் பதவிசாக நடந்துகொண்டால், நீங்கள் பிழைத்தீர்கள்.நீங்கள் கையெழுத்து போட்ட ஒப்பந்தம், உங்களை காலை வாரிவிடும். உங்கள் இரு சக்கர வாகனம் திருட்டு போகும். கூடவே மறதி தொல்லை ஏற்பட்டு, பத்திரங்கள், நகைகள், வைப்புதொகை ரசீதுகள் இவற்றை பத்திரமாக வைத்து, பின் எங்கு பத்திரம் படுத்தினோம் என்று மறந்துவிடுவீர்கள். இது கைபேசி, வாகனம், வாகனச்சாவி என எல்லாவற்றிற்கும் பொருந்தும்.மாணவர்கள், பள்ளி மாணவர்கள் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் உயர்நிலை, கல்லூரி, ஆராய்ச்சி மாணவர்கள் மிக நல்ல மேன்மை காண்பர். கல்வி சார்ந்து, நிறைய மனிதர்களை சந்திப்பர். அதிலும் பெண்களைப் பற்றிய குறிப்பு, செய்திகளை அதிகம் சேகரிப்பீர்கள்.வயல், தோட்டம், பண்ணைகள், குட்டை மீன், தோப்பு இவை சொந்தமாக கொண்டோர் கவனமாக இருக்கவும். தாயார் உடல் கவனமாக இருக்கவும். தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழிலில் வில்லங்கம் வந்து போகும். நீங்கள் எண்ணெயில் கால் வைத்து, வழுக்கி விழும் வாய்ப்பு தெரிகிறது.வாரிசுகளுக்கும், உங்களுக்கும் வாய் வார்த்தை தடித்துவிடும். இதனால் குடும்பத்தில் கலவரம் தோன்றும். இந்த வருடம் விருச்சிக ராசிக்காரர்கள் பங்கு வர்த்தகம் பக்கம் தலை வைத்து படுக்கக்கூடாது. பங்குவர்த்த பக்கத்தை லாக் செய்துவிடுங்கள்.கலைஞர்கள், இந்த வருடம் ஓய்வு எடுத்துக்கொள்வது அல்லது பிரேக் எடுத்துக்கொள்வது. என இவை உங்களுக்கு நல்லதாக அமையும். இல்லையெனில் நடித்த காசும் கைக்கு வந்து சேராது. நடிக்கும்போது, அவ்வப்போது அடிப்பட கொள்ள நேரிடும். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அவமானத்தை சந்திக்க நேரிடும். கவனம் தேவை.கர்ப்ப ஸ்திரிகள் வெகு கவனமாக இருக்கவேண்டும். கால் அல்லது கழுத்து பகுதி வீங்கி, தொல்லைக் கொடுக்கும் நிலை காண்கிறது. கடன் வாங்குவதை கூடியமட்டும் குறைத்துக்கொள்ளுங்கள். நல்ல மனதுடன், நீங்கள் செய்யும் உதவிகள், சேவைகள் அனார்த்தமாகிவிடும். காவல்துறையுடன் இணக்கமாக நட்பாக இருப்பது உங்களுக்கு நல்லது. சிறைக்கு போகக்கூடிய நிலை இருப்பவர்களுக்கு, இந்த வருடம் சிறைவாசம் கிடைக்கும். இந்த வருடம், நிறைய பலன்களை மோசமாக கூறும்படி இருப்பினும், கல்யாண விஷயம் மட்டும் ஓஹோதான். சிலர் காதல் பண்ணிவிட்டு, ஓடிவிட்டாலும், திரும்ப கூட்டிவந்து, சிறப்பாக, நல்லபடியாக திருமணம் செய்து கொடுப்பர். இந்த திருமணம் நல்ல அதிர்ஷ்டம் கொண்டு வரும். அரசு அதிகாரிகள், வெகுஜன சந்திப்புடன் பொருந்திய, உயரிய பதவி பெறுவர். விருச்சிக ராசி குழந்தைகளின் பெற்றோர் மேன்மையான நிலை பெறுவர். குறிப்பாக, இந்த ராசி குழந்தையின் தந்தை பேர், புகழ் சன்மானம் பெறுவார்.இந்த ராசி, தொழில் முதலாளிகள், அட, இந்த அரசியல்வாதிகள் தொல்லை தாங்கலைடா சாமி என தெறித்து ஓடும் நிலை ஏற்படும். அனைத்து அரசியல் கட்சி அரசியல்வாதிகளும், நன்கொடை கேட்டு லைனில் நிற்பர்.இந்த விருச்சிக ராசி அரசியல்வாதிகள் இந்த வருடம், சும்மா பணம் கேட்க மாட்டார்கள். பணம் கேட்டு, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுவார்கள். கட்சி வளர்ச்சி நிதி கொடுக்காவிட்டால், உன் கதி அதோ கதிதான் என்பர். ஏனோ இந்த வருடம், இவர்கள் வெகு ஆக்ரோஷமாக நடந்துகொள்வர். இவர்களைப் பார்த்து, அனைவரும் குலை நடுங்கும் நிலை ஏற்படும்.சமையல் கலைஞர்களின் பெயர் ரொம்ப கெட்டுவிடும் வாய்ப்பு தெரிகிறது. உங்கள் மூத்த சகோதரன், ஒரு பண சிக்கலில் மாட்டிக் கொள்வார். இந்த வருடம் சில தம்பதிகள் பிரியும் நிலை ஏற்பட்டா லும், குடும்பத்திலுள்ளவர்கள் பேசி தீர்த்துவிடுவர். சிலர் வெளிநாடு செல்ல முயலும்போது, சில பண விஷயம் அல்லது பண பரிவர்த்தனை தரவுகள் இம்சை கொடுக்கும்.கவனம் தேவை: வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களிடம் நட்புடன் பழகவும். தொழில் விஷயம் அதிகப்படியான செலவைக் கொடுக்கும். அதனை முன்கூட்டியே கணித்து, மனதளவில் தயாராக இருக்கவும். இந்த வருடம் மறைமுக வருமானம் அதிகரிப்பதாலும், பணம் கொடுத்து வைத்தவர்கள், உங்கள்மீதே அனைத்து குற்றத்தையும் திருப்பிவிடும் வாய்ப்பு தெரிகிறது. பண விஷயத்தில் கவனமாக இருங்கள்.
பரிகாரம்: காளஹஸ்தி ஞானம்பிக்கையை வணங்கவும். பழனி முருகனை வணங்கவும்.
தனுசு
தனுசு ராசி 240 டிகிரிமுதல் 270 டிகிரிவரை உள்ளது. இதன் அதிபதி குரு ஆவார். இங்கு எந்த கிரகமும், உச்சம் நீசம் ஆகாது. எனவே நடுநிலையாளர்களாக இருப்பர். இது ஒரு நெருப்பு ராசி. ஆனாலும் ஆன்மிகம் சார்ந்த விளக்கின் வெளிச்சமாகவே, இந்த நெருப்பு ராசி பரிமளிக்கும். தனுசு ராசியில் பிறந்தவர்கள் எந்த விஷயத்தையும் ஆர்ப்பாட்டமின்றி, அமைதியாக கைகொள்வர். இந்த தனுசு ராசியின் உருவம் வில்லி அம்பு. எனவே இராமரின் தனுசை குறிக்கும் ராசி என்பர். கூடவே, இது காலபுருசனின் 9-ஆமிடம்.
அதுவே தர்ம வீடாக சுடர்விடுகிறது.
தனுசு ராசிக்கு 2026-ஆம் வருட பலன்கள்
இந்த வருடம், நிறைய தனுசு ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்கும். அது உங்கள் சொந்தத்தில், பெண் கொடுத்து, பெண் எடுப்பதாக இருக்கும். சில வீடுகளில் ஒருத்தருக்கு பார்த்த வரன், இன்னொருவருக்கு கட்டி கொடுப்பதாகவும் அமையும். காதல் திருமணம் என்றாலும், அதுவும் உங்கள் குடும்பத்துக்குள் தான் உண்டாகும். திருமணம் தொழிலை கொடுக்கும். அல்லது தொழில் பங்குதாரர்களுடன் சம்பந்தம் ஏற்படும். திருமணம் ஆனவுடன், தம்பதிகள் பங்குதாரராக இருந்து, புது தொழிலை தொடங்குவர். உங்களின் சில வழக்குகள், நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக்கொள்வீர்கள்.இந்த வருடம், நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும், நிறைய மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். இது உங்கள் சொந்தத் தொழில், வியாபார சம்பந்தமாக அமையும். இந்த அமைப்பு பேச்சுமூலம் தொழில்புரியும், வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், ஜோதிடர்கள், பத்திரிகை நிருபர்கள் போன்றோருக்கு ஆதாயம் கொண்டு தரும். வாக்கில் சற்று குயுக்தி கலந்திருக்கும். இந்த வருட பணவரவு, மேற்கண்ட இனங்கள்மூலம் அமையும்.இந்த தொடர்புகள், ஒப்பந்தம் பெற்றுத் தரும். மேலும் நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். அவர்கள் வேறு மொழி பேசுபவர்களாக அமைவர். உங்கள் இளைய உடன்பிறப்பு திருமணம் நடக்கும். அதில் அரசு சம்பந்தம் இருக்கும். உங்கள் வீடு விற்க வேண்டும் எனும் எண்ணம் இருப்பின், அதனை தெரிந்தவர்களுக்கே விற்பீர்கள். உங்கள் வயல், தோட்டம் இவற்றையும் இவ்விதமே விற்பீர்கள். அல்லது தெரிந்தவர்களிடம் குத்தகைக்கு விடுவீர்கள். உங்கள் பெற்றோர்கள். தெய்வ தரிசனம் செல்வர். மாணவர்களின் கல்வி நன்கு அமையும். உயர்கல்வி மாணவர்கள் சட்டம், மருத்துவம், காவல், பொதுஜன தொடர்பு என இந்த கல்வியில் விருப்பம் கொள்வர். சிலர் வாழ்க்கைத் துணையின், தொழிலை விரிவுபடுத்த தகுந்த முயற்சி செய்வர்.குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பங்கு வர்த்தகம் பதவிசாக நடக்கும். கலைஞர்கள், நிறைய வாய்ப்பு, நல்ல மக்கள் தொடர்பு பெறுவர். சில கலைஞர்கள் திருமணம் செய்துகொள்வர். உங்கள் வாரிசுகள் வேலை கிடைக்கப்பெறுவர். இந்த வருடம், தனுசு ராசியார், நிறைய பொழுதுபோக்கு, சுற்றுலா, கண்காட்சி, விளையாட்டு, விழாக்கள், டிராமா, நாடகம் என இவ்விதம் டைம் பாஸ் விஷயமாக நன்கு அனுபவிப்பார்கள். இந்த வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை கிடைக்கும்தான். ஆனால் ஊரைப்போல், நாட்டைப்போல், சாதாரண வேலையெல்லாம் கிடைக்காது. மருத்துவ மனையில் வேலை கிடைக்கும். அங்கும் மயக்க மருந்து கொடுக்கும் வேலையாக இருக்கும். இன்ஷுயூரன்ஸ் சம்பந்த வேலை கிடைக்கும். திருட்டு போன இடத்தில் தடயங்களை சேகரிக்கும் பணி கிடைக்கும். பெரிய வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து, மக்களை பத்திரமாக மீட்கும் வேலை கிடைக்கும். ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்த, கடல் மற்றும் கப்பலில் வேலை கிடைக்கும். சிலர் வட்டி வசூலிக்கும் கெடுபிடி பணியில் ஈடுபடுவர். பிராணிகளிடம் இருந்து ஜனங்களை பாதுகாக்கும் வேலை கிடைக்கும். சிலருக்கு சிறைச் சாலையில் வேலை கிடைக்கும். மன நல மருத்துவமனை வேலையும் உண்டு. ஆக இந்த வருடம், பிறர் சட்டென்று ஒப்புக்கொள்ள தயங்கும் வேலைகளே பெரும்பாலும் கிடைக்கும்.இந்த வருடம், ஒரு ஆபத்து, விபத்து அருகில் வந்து நீங்கிவிடும். ஆனால் அது சம்பந்தப்பட்ட வழக்கில் சிக்கிக்கொண்டு படாதபாடு பட்டு விடுவீர்கள். இது தவிர்க்க முடியாதது. காளியை வணங்கவும். அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் சந்திப்பு தொடர்பான இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். சட்ட தொடர்பான, நீதிபதிகளும், சில சிறப்பு வழக்குகளுக்கு நியமிக்கப்படுவர். அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் சொத்து நிலங்கள் இவற்றை கண்காணிக்கும் அதிகாரி ஆவார்கள். சில மடங்கள், புதிய குருவை, சந்திதானத்தை பெறும் வாய்ப்புண்டு. சிலர் கல்வி பல்கலைக் கழகங்களுக்கு தலைமை பதவி வகிக்கும் வாய்ப்பு வரும். அரசு சார்ந்த செய்தி நிறுவனத்துக்கு தலைவராக இயலும்.இந்த வருடம் தொழில் ஆரம்பிக்க விருப்பம் உள்ளவர்கள், கண்டிப்பாக பங்குதாரருடன் கூட்டு சேர்ந்து ஆரம்பித்துவிடுவீர்கள். திருமண மையம், திருமண ஏற்படுகள், திருமண நகைகள், திருமண மண்டபம் இவை சார்ந்த தொழில்கள் நன்கு விருத்தி யாகும். அரசியல்வாதிகள் அனேக சேவை செய்ய வேண்டியிருக்கும். வெளிப்படையாக சொன்னால், பெண்டு நிமிர்ந்துவிடும். அதிலும், இந்த தேர்தலில் நின்றால், இதுவரையில் இல்லாத புது அனுபவம் பெறுவர். ஒன்று நல்லவிதமாக, இவர்களிடம் நடந்துகொள்வர். அல்லது கேள்வி கேட்டு, நொந்து போக வைத்துவிடுவர். மேலும் நிறைய வாக்காளர்களை சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால், கழுத்து வலி அல்லது கால் பிடித்துகொள்வது என பெரும் அவஸ்தை ஏற்படும். ஆக இந்த வருடம் அரசியல்வாதிகளுக்கு, மலர் கிரிடமாக அமையாது. முள் படுக்கையாகவே இருக்கும். அரசியல்வாதிகள் நேரிடையாக அரசியலில் ஈடுபடாமல், நிற்பது நல்லது.இந்த வருடம் செலவு, அலைச்சல், என இவை அதிகமாக இருந்தால், ரொம்ப பயன் உண்டாகாது. அப்படியே பயனும், பலனும் ஏற்பட்டாலும், அது சற்று நிதானமாகவே இருக்கும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் சற்று தடை ஏற்பட்டு பின் சரியாகும். சிலசமயம், பயண வழிகளை தவறவிட்டு பின் சரியான இடத்துக்கு சேரமுடியும்.கவனம் தேவை: ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலைக்கு சேரும்போது, அது பற்றி நன்கு விசாரித்துவிட்டு சேரவும். தர்மம் செய்யும்போது சற்று கவனமாக இருங்கள். மருத்துவரிடம் செல்லும் போது, அவர் உங்களுக்கு ஏற்ற டாக்டரா என விசாரித்து தெரிந்து, தெளிந்துகொள்ளுங்கள். செலவு செய்யும்போது, யோசித்து செய்யவும். பயணங்களின்போது கவனம் தேவை.
பரிகாரம்: பாபநாசம் உலகம்மையை வணங்கவும். குருவாயூரப்பனை வணங்குதல் சிறப்பு.
மகரம்
மகர ராசி 270 டிகிரி முதல் 300 டிகிரிவரை உள்ளது. இதன் அதிபதி சனி ஆவார். இங்கு செவ்வாய் உச்சமும் குரு நீசமும் அடைவார்கள். இது ஒரு நில ராசி. கூடியமட்டும், எல்லா விஷயத்திலும், பூமியை போல் பொறுமையாக இருப்பார்கள். ஆனால் கோபம் வந்துவிட்டால், மிக ஆக்ரோஷமாகிவிடுவர். இதற்கு இங்கு செவ்வாய் உச்சமடைவது காரணமாக இருக்கும் போலும். இந்த ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலையையும் அனுசரித்து, அடாப்ட் ஆகிகொள்வர். இதற்கு காரணம், இந்த ராசி உருவம் முதலை ஆகும். அது நிலத்திலும் வசிக்கும் நீரிலும் வசிக்கும். அதுபோல், எந்த இடத்தில் இருப்பினும், அதற்கு ஏற்றாற்போல், தங்கள் வாழ்வை வடிவமைத்துக்கொள்ளும் தகைமையாளர்கள் ஆவர்.
மகர ராசிக்கு 2026-ன் பலன்கள்
இந்த 2026-ஆம் வருடம், பல நல்ல மாற்றங் களை தரப்போகிறது. உங்களில் பலர் பணி மாற்றம் பெறுவீர்கள். அது உங்கள் மனதுக்கு உவப்பானதாக அமையும். சிலர் பதவி உயர்வும், இடமாற்றமும் பெறுவீர்கள். சிலர் அரசு வேலையும், இடமாற்றமும் பெறுவீர்கள். சிலர், வேறு இடத்தில், வெளிமாநிலத்தில், வெளிநாட்டில் வேலை கிடைத்து, சூட்கேஸுடன் கிளம்பிவிடுவீர்கள். சீருடை பணிபுரிபவர்கள், தாங்கள் விரும்பிக் கேட்ட மாற்றம் பெறுவர். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பதவி பெறுவர்.எப்போதும் அரசு சார்ந்த இனங்கள், என்றாலே மக்கள் ஜெர்க் ஆகிவிடுவார்கள். துட்டு கொடுக்காமல் ஒன்னும் நடக்காது என்பது பழமொழி மாதிரி உள்ளது. ஆனால் இந்த முறை 8-ஆமிட அதிபதி, 12-ல் மறைவதால், லஞ்சம், பரிசு, லட்டு என எதையும் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருக்காது. ஆகவே மகர ராசியார் இந்த கிரக கோட்சாரத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். (மகர ராசிக்கு மட்டும்தான் இது நடைமுறையில் அமையும்.இந்த வருடம் பணவரவு என்பது அனேகமாக, உங்களின் சம்பளம் சார்ந்தே அமையும். இதனால் பணவரவு ஏற்ற- இறக்கமின்றி சீராக கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பணம் சம்பளமாக கிடைக்கும். இதிலிருந்து லஞ்சப்பணம், இந்த வருடம் ரொம்ப கிடைக்காது என்று புரிந்துகொள்ளவும்.இளைய சகோதரன், கல்வி, வேலை சார்ந்து இடம் மாறுவார். வேலை சம்பந்தமாக, வாகனத்தை மாற்றுவீர்கள். பணியாளர்களை மாற்றுவீர்கள். வேலை ஒப்பந்தங்கள் வேறு ஒருவருடன் பங்கிட்டு கொள்வீர்கள். சிலர் உங்கள் தந்தை எடுத்த ஒப்பந்த, குத்தகையை நீங்கள் தொடர்வீர்கள். பணி சார்ந்த பயிற்சி பெற வேறிடம் செல்வீர்கள். இளைய சகோதர திருமணத்தை, தேர்ந்தெடுத்த இடத்தைவிட்டு, வேறு இடத்தில் நடத்துவீர்கள். வீடு மாற்றம் உண்டு. வாகனத்தை கொடுத்துவிட்டு, வேறு வாங்குவீர்கள். பள்ளியை மாற்றுவீர்கள். உங்கள் தாயார், வேறு உடன்பிறப்புகளுடன் செல்வார். மனையை விற்கக்கூடும். ரொம்ப நாள் தரிசாக விட்டு வைத்த பூமியை, பண்ணை தோட்டமாக மாற்றுவீர்கள். இந்த வருடம், மகர ராசி கலைஞர்கள் நிறைய வாய்ப்பு பெறுவதோடு, ஜன சந்திப்பும் பெறுவர். இதன்பொருட்டு நிறைய இடங்களுக்கு அலைந்து, திரிய வேண்டியிருக்கும். சில கலைஞர்கள் தங்கள், வாழ்க்கைத் துணையின் உயர்வினால், மிக புகழ் அடைவர். சில வயதான கலைஞர்கள், பட்டம் பெற்று கௌரவிக்கப்படுவர்.காதல் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். சிலர் வெளிநாட்டினரோடு காதல் திருமணம் செய்து கொள்வர். அல்லது வெளிநாட்டில் காதல் திருமணம் செய்துகொள்வர்.மகர ராசி பெண்கள், மந்திரி பதவி வகிக்கும் வாய்ப்புண்டு. இது இவர்களின், வேகமான சிறந்த சிந்தனையால் கிடைக்கும். இந்த வருடம், குழந்தை பிறந்தால், அது அனேகமாக பெண் குழந்தையாக இருக்கும். ஆரோக்கியம் சார்ந்து, நடைபயிற்சி மேற்கொள்வீர்கள். பெண் பங்குதாரர் கிடைப்பார்.இந்த வருடம், உங்களை பற்றிய தீச் சொற்கள், அவமானம், கெட்ட பெயர் இவை மறைந்துவிடும். சிலர் சிறைக்கு போக இருந்த சூழ்நிலை மாறி, விடுதலை ஆகிவிடுவர் பெரிய நஷ்டம் தவிர்க்கப்படும்.ஆனால் ஏற்றுமதி- இறக்குமதியாளர்கள் பொருட்களை அனுப்பும்போது, சில உடையவும், சில காணாமல் போகவும் வாய்ப்புள்ளது. உங்கள் தந்தையின் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உயர்கல்விக்காக, வேறு நாட்டினரோடு பண்ட மாற்று முறையில், வெளிநாடு செல்வீர்கள். பணி புரியும் இடத்தில் வெளியூர், வெளிநாடு அழைத்துச் செல்வர்.சில நீதிபதிகள், அறநிலையத் துறையினர் இடம் மாறுவார்கள். அர்ச்சகர்கள், வெளிநாட்டு கோவிலுக்கு பூஜை செய்ய செல்வர். சொந்தத் தொழில், அதிக முதலீடு கேட்கும். அப்படியாயின், நீங்கள் தொழிலை விஸ்தரிக்கிறீர்கள். நிறைய கிளைகள் ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது. இதன்பொருட்டு, நிறைய பணியாட்டுகளை வேலைக்கு அமர்த்துவீர்கள். சிலருக்கு, திருமணமாகி, அதனால் புதுதொழில் தொடங்கும் யோகம் கிடைக்கும்.இந்த வருடம், மகர ராசி அரசியல்வாதிகள், சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த முடிவு எடுப்பது என தெரியாமல், கலங்கி நிற்பீர்கள். எந்த கலர் துண்டு போடுவது என்பதில், ரொம்ப குழப்பம் உண்டாகும். அரசின் சில சட்ட நடவடிக்கைகளால், நீங்கள் அரசியலில் இருக்கலாமா, வேண்டாமா என்றும் யோசிக்கத் தோன்றும். இந்த சங்கடத்தினால், சிலர் உங்கள் பெண்ணை அரசியலில் குதிக்கச் சொல்வீர்கள்.கவனம் தேவை: உங்களுக்கும், உங்கள் தாயாருக்கும் இடையே மனசங்கடம் வராமல் பார்த்துக் கொள்ளவும். வீடு விஷயங்களில், அடிக்கடி மனம் மாறாதீர்கள். அரசியல்வாதிகள் சற்று அமைதியாக- அடக்கமாக இருப்பது அவர்களுக்கு நல்லது.
பரிகாரம்: திருவானைக்காவல், ஸ்ரீ அகிலாண்டேஸ் வரி அம்மனை வணங்கவும். சனீஸ்வரரையும், சிவனையும் வணங்கவும்.
கும்பம்
கும்ப ராசி 300 டிகிரிமுதல் 330 டிகிரிவரை உள்ளது. இதன் அதிபதி சனி. இங்கு எந்தக் கிரகமும் உச்சம் நீசம் ஆவதில்லை. இது ஒரு காற்று ராசி. ஆனால் இந்த ராசியின் உருவம் குடம் அல்லது கும்பம். எனவே இந்த ராசியின் தன்மை, ஒரு குடத்துக்குள் அடைபட்ட காற்று போன்றது. "குடத்துகள் உள்ள காற்றை நம்மால், எவ்விதம் உள்ளது எனக் கணிக்க முடியாது அல்லவா.' அதுபோல, இந்த கும்ப ராசியாரின் மனதில் என்ன இருக்கிறது என நம்மால் யூகிக்க முடியாது. இது ஒரு ரகசிய ராசி. கும்ப ராசியாருடன் பழகும் போது கவனமாக இருக்கவேண்டும். இது காலபுருசனின் 11-ஆம் வீடு. எனவே இவர்கள் தாங்கள் நினைத்ததை முடிக்க, கமுக்கமாக, எந்த செயல் செய்யவும் தயங்க மாட்டார்கள்.
கும்ப ராசிக்கு 2026-ஆம் ஆண்டு பலன்கள்
இந்த புது வருடத்தில், மனதில் உறுதியும் நம்பிக்கையும் பலமாகும். இந்த வருடம் உங்கள் வாரிசுகளின் திருமணம் கண்டிப்பாக நடக்கும். புது மருமகள் மருமகன் அல்லது மருமகள் வந்தவுடன் உங்கள் உத்வேகம் அதிகரிக்கும். ஏற்கெனவே, மருமகன்- மருமகள் கொண்டவர்களும், இந்த புத்தாண்டில், அவர்களை அனுசரித்து போக முடிவு எடுத்துவிடுவீர்கள். காரியம் முக்கியமா, எடுத்து வீர்யம் முக்கியமா என யோசித்து காரியம்தான் முக்கியம் என முடிவுசெய்து. மருமகன்- மருமகளை சப்போர்ட் பண்ண ஆரம்பித்து விடுவீர்கள். இந்த விஷயம் கொஞ்சம் திருட்டுத்தனமும், தில்லால்கடியும், குசும்பும் நிறைந்திருக்கும்.மேலும் சிலர், இந்த அரசியலும் வேண்டாம், மந்திரி பதவியும் வேண்டாம் என வெறுத்து, விலகி இருந்தவர்கள், இந்த புத்தாண்டில், அட, அரசியலில் கொஞ்சம் ஈடுபாடுதான் கொள்வோமே என, மாறுபட்ட எண்ணம் தோன்றும். எனவே விலகியிருந்த அரசியல் தலைவர்கள், மறுபடியும் அரசியல் களத்துக்குள் களமாட இறங்குவர்.சிலர், தங்களின் பரம்பரை ஓட்டல் தொழிலில் இருந்து, விலகி இருந்தவர்கள், இந்த புது வருடத்தில், தங்களின் பூர்வீக சம்பந்த உணவு விடுதியை மறுபடியும் ஆரம்பித்து விடுவார்கள்.இதுவரையில் வாரிசுகளுடன் சண்டையிட்டு பேசாமிருந்தவர்கள் இந்த புத்தாண்டில் பேரன்- பேத்திகள் வாரிசுகளின் குடும்பத்தோடு கூடி குதூகலிப்பர்.இந்த வருட பண பெருக்கம் என்பது உங்கள் பூர்வீகம் மற்றும் உங்கள் எண்ணங்களே கொடுக்கும். உங்கள் குடும்ப ஒற்றுமை, செல்வம்தரும். வாக்குகள், உள் குத்தோடு, பதவிசாரும் மனதில் ஆயிரம் வன்மம் இருப்பினும், வெளியே சர்க்கரை கட்டியாக பேசுவீர்கள்.உங்களின் பழைய பணியாட்கள் திரும்ப வந்து வேலை செய்வர். உங்கள் இளைய சகோதரர், நன்கு ஒத்தாசை செய்வார். மனை சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும். வீடு மாற்றி, பெரிய வீட்டுக்குச் செல்வீர்கள். சீருடை பணியாளர்கள், சிறு மாற்றம் கொண்ட பணியும், வீடும் கிடைக்கப்பெறுவர்.
உங்களில் சிலருக்கு டி.வியில் வேலை கிடைக்கும். அல்லது பத்திரிகை துறையில் பணி கிடைக்கும்.இந்த வருடம், அனேக கும்ப ராசியார் கடன் வாங்கி, பெரிய வீடு கட்டி விடுவீர்கள். அதுபோல் வாகனமும் பெரியதாக வாங்கி விடுவீர்கள். உங்கள் நிலத்துடன், பக்கத்து நிலம் அல்லது வயல், தோட்டம் வாங்கி, அதனை பெரிதுபடுத்துவீர்கள். உங்கள் தோட்டத்தில் சிறு குட்டை உண்டாக்கி, அதில் மீன் வளர்ப்பீர்கள். அல்லது கிணற்றை, ஆழப்படுத்துவீர்கள். நிறைய வீடு வாங்கும் யோகமுண்டு. வாங்கிய வீடுகளை, நல்ல வாடகைக்கு விடுவீர்கள். தாயார் நலம் மேம்படும். கும்ப ராசி குழந்தைகளின் தாயார் நல்ல வேலை பெறுவார்.மாணவர்கள், தொழில் சார்ந்த கல்வியில் முதன்மை பெறுவர். மாணவர்கள் மருத்துவம், என்ஜினீயரிங், சட்டம் என இத்துறைகளில் சேர இயலும். ஏற்கெனவே படித்துக்கொண்டிருப்பவர்கள் முதல் மதிப்பெண் பெற இயலும்.காதல் உணர்வு பொங்கி வழியும். சிலர், பழைய காதலை புதுப்பித்துக்கொள்வர். சிலர் புது காதல் பெறுவர். சிலர் பல காதல் கொள்வர். சில மறுமணம், காதல் வழி நடக்கும். சில ரகசிய திருமணம், வீட்டுக்கு தெரியாமல் நடக்கும். சில கள்ள திருமணம். பொண்டாட்டிக்கு தெரியாமல் நடக்கும். ஆக, கும்ப ராசியார், காதலை பன்மடங்கு பெருக்கி, அதனை நாறகடித்து விட்டுத்தான் மறுவேலை செய்வர்.இந்த வருடம், வாரிசு பெருக்கம் உண்டு. அனேகருக்கு இரட்டை குழந்தை, நான்கு குழந்தை என்றெல்லாம் பிறக்கும் வாய்ப்பு தெரிகிறது.வேலை, தனியார் சார்ந்து கிடைக்கும். அது தண்ணீர் சம்பந்தம், வீடு கட்டுவது, அணை சார்ந்து, கல்வி சம்பந்தம் பால், தயிர், பால் இனிப்பு பொருட்கள் சார்ந்து அரிசி, எண்ணெய், அலுமினியம் சார்ந்து, பயணங்கள், விவசாயம் என இவை சம்பந்தப்பட்ட வேலை, நல்ல வேலை கிடைக்கும்.உடலில் சளி, ஜலதோஷம் பிடித்தால், உடனே மருத்துவரிடம் சென்று, மருந்து வாங்கி சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் நோய் அதிகமாகிவிடும்.ரொம்ப நாள், திருமணம் தடை பெற்றிருந்த, கும்ப ராசியாருக்கு, இந்த வருடம், திருமணம் நடந்துவிடும். சிலருக்கு மறுமணமாகவும் அமையும். சிலருக்கு கொஞ்சம் கலப்பு மணமாகவும் இருக்கும். சிலருக்கு அரசியல்வாதி தலைமையில், திருமணம் நடக்கும்.உங்கள் வழக்குகள், வெற்றிபெரும். சில விவாகரத்து வழக்கில், நீங்கள் விரும்பியபடி தீர்ப்பு கிடைக்கும்.ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்வோர் பழைய முறை அல்லது குத்தகை அல்லது ஒப்பந்தம் இவை வழியே மிகுந்த லாபம் காண்பர். சிலர் வெளிநாட்டு வர்த்த கர்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வர். பெற்றோர் நலன் மேன்மையாக அமையும். சில நீதிபதிகள், வேறு இட பரிமாற்றம் பெறுவர். அறநிலையத் துறை அதிகாரிகள் வேறு கோவிலுக்கு மாறுவர். தர்மம் பெருகும். இதனால் வரி குறையும். பெண்கள் சார்ந்து, உங்கள் வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப, நிறைய உதவிகள் செய்வீர்கள். குலதெய்வக் கோவிலுக்கும், நிறைய நற்பணிகள், சீரமைப்பு செய்து கொடுப்பீர்கள்.இந்த வருடம், தொழில் நல்ல லாபம் தரும். இந்த அதிக லாபம், அதிக கிளைகள் திறக்கச் செய்யும். அதிக வணிக கிளைகள், அதிக பணியாளர்களை நியமிக்கச் செய்யும். சில வணிக நிறுவனங்களை உங்கள் வாரிசு பார்த்துக்கொள்வார். உங்கள் வாரிசும், அவரது வாழ்க்கைத் துணையும் மாற்றி மாற்றி கவனித்து, நிர்வாகம் செய்வர். தொழில் இடத்தில், சிறு மாற்றம் செய்ய வேண்டியிருக்கும். தொழில் பற்றிய விளம்பரத்தை, விமரிசையாக வெளியிடுவீர்கள்.கும்ப ராசி அரசியல்வாதிகளுக்கு, மிக செம்மையான வருடம் ஆகும். அரசியலில், நீங்களும், உங்கள் வாரிசும் சேர்ந்து நின்று, அரசியல் அதிகளம் செய்வீர்கள்.சில அரசியல்வாதிகள், தங்கள் தொகுதியையும், தங்கள் வாரிசின் தொகுதியையும், பண்ட மாற்றாக மாற்றிக்கொள்வர். அட, குடும்பத்தில் ஒருத்தர் மந்திரி ஆனாலும் போதுமே!உங்கள், அரசியல் வெற்றிக்கு, உங்கள் நலன் விரும்பிகள், தொண்டர்கள். நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தினர், பெற்றோர் என அனைவரும் சேர்ந்து உழைத்து, பதவியை பலனாகக் காண்பர். அரசியல் கட்சியின், மருமகன்- மருமகள் என இவர்களும் பங்கெடுப்பர்.எனவே இந்த வருட செலவுகள், அனேகமாக அரசியல் சார்ந்து அமையும். சிலருக்கு, ஓட்டல் வைக்க செலவாகும். சில வாரிசுகள், வெளிநாடு செல்வதற்குள் நிறைய பணம் செலவளிந்துவிடும்.கவனம் தேவை: சிலசமயம், தொழிலாளர்கள், பணியாளர்கள் சோம்பேறியாக வேலை பார்த்தால், ரொம்ப கடிந்து கொள்ள வேண்டாம். திருமண நிகழ்வில், வழக்குகளில் நண்பர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து போகவும். தொழில் சுறுசுறுப்பாக நடக்கும்போது, திருஷ்டி மாதிரி, சில தடைகள் வரும். அதை அப்போதே சரி பண்ணிவிடுங்கள்.
பரிகாரம்: திருக்கடையூர் அபிராமி அம்மனை வழிபடவும். சிவனை வணங்கவும்.
மீனம்
மீன ராசி 330 டிகிரியிலிருந்து 360 டிகிரி வரை பரவியுள்ளது. இதன் அதிபதி குரு ஆவார். இங்கு சுக்கிரன் உச்சமும், புதன் நீசமும் அடைவார். இது ஒரு நீர் ராசி. அதிலும் மீன ராசி கடலைக் குறிப்பது. இதனால் இந்த ராசி, பள்ளிகொண்ட பெருமாளையும், அவர் பாதத்தில் அமர்ந்துள்ள தாயாரையும் குறிக்கும். இது ஒரு நீர் ராசி என்பதால், இவர்கள் நிறைய பயண விருப்பம் கொண்டவர்கள். நிறைய வெளிநாடுகளை, சுற்றி பார்ப்பதில் ஆர்வம் கொள்வர். சுக்கிரன் இங்கு உச்சமாகும் நிலை உள்ளதால், ஆடம்பர செலவு அதிகம் செய்வர். இங்கு புதன் நீசமாகும் நிலை ஏற்படுவதால், வாழ்க்கைத்துணை அனுசரணை, அவ்வளவாக கிடைக்காது.
மீன ராசிக்கு 2026-ஆம் புத்தாண்டு பலன்
மீன ராசிக்கு, இந்த புது வருடம், தொழில் சார்ந்த அனேக மாற்றங்கள் கொடுக்கும். தொழில் செய்யும் இடத்தை மாற்றுவீர்கள். தொழில், பங்குதாரரை மாற்றுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணையின் தொழிலை உங்கள், தொழிலுடன் சேர்த்து செய்வீர்கள். சிலர் உங்கள் தாயார் அல்லது உங்கள் மாமியாரின் தொழிலை, உங்கள் தொழிலுடன் சேர்த்துவிடுவீர்கள். அல்லது அவர்கள் தொழிலை, உங்கள் தொழிலுடன் மாற்றிக்கொள்வீர்கள்.தொழில் சார்ந்த வாகன மாற்றமுண்டு. பள்ளிக்கூடம் நடத்துபவர்கள், கல்வி சார்ந்த நிறுவனங்கள் நடத்துபவர்கள், பள்ளி, கல்லூரியின் இடம், வாகனம் என இவையெல்லாமும், கொஞ்சம் மாறுதலுக்கு உள்ளாகும்.வேளாண்மையை தொழிலாக கொண்டவர்கள், தங்கள் வயல் சார்ந்து ஒரு திருத்தம் செய்வர். தோட்டம், பண்ணைகள் வைத்திருப்போர், அவை சார்ந்த செடி, மரம்,
கொடிகள் என இவை பற்றிய ஒரு வேறுபாடு கைகொள்வர்.ஆக, மீன ராசியார், வாழ்க்கையின் தளத்தில், எந்த படியில் இருந்தாலும், தங்கள் தொழில் சார்ந்து, ஒரு வேறுபாடான முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். நீங்கள் கோடீஸ்வரராக இருந்தால், தொழில் சார்ந்த விமானத்தை மாற்றுவீர்கள். சாலையில், வண்டியில் பழம், காய் விற்றால், அந்த வண்டியை மாற்றுவீர்கள். இந்த வருடம் பணவரவு பற்றிய கவலை வேண்டாம். அது பாட்டுக்கு வந்துசேரும். அது சரி, குடும்பத்தில் உள்ளவர்களின் தொழிலை, நீங்களே எடுத்து நிர்வாகம் பண்ணும்போது, பணத்துக்கு என்ன குறைச்சல்.வாக்கில் இனிமையும், கண்டிப்பும் சரிவிகிதமாக இருக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். புதுமனை புகுவிழா கிரகப் பிரவேசம, வாஸ்து பூஜை, நிலைப்படி வைப்பது என ஏதோ ஒன்று நடக்க வாய்ப்புள்ளது. உங்கள் குடும்பத்தில், ஒரு பெண், மந்திரி ஆகும் வாய்ப்பு கிடைக்கும். அல்லது உங்கள் தாயார் நல்வாய்ப்பு பெறுவர். அல்லது உங்கள் மாமனார், இந்த அதிர்ஷ்டம் பெறுவர். இந்த வருடம் உங்கள் பெண் அல்லது இளைய சகோதரி, அரசியலில், தேர்தலில் நிற்க ஆசைப்பட்டால், உங்கள் முழு ஒத்துழைப்பையும் கொடுங்கள். அறிவார்ந்த, அனுபவமுள்ள பெண் பணியாளர் கிடைப்பர். நீர் சார்ந்த ஒப்பந்தம் கிடைக்கும் செய்தி வாசிக்கும் ஒரு பெண் மிக புகழ் பெறுவார். தகவல் தொடர்பில் பெண்கள், மிக ஈடுபாடு கொள்வர்.உங்களின் பெண் வாரிசு, ஏதோ ஒரு வகையில் புகழும், பாராட்டும், பெறுவார். பங்கு வர்த்தகம், சிறப்பாக இருக்கும். உங்கள் கைபேசி பங்கு வர்த்தகத்தில் மிக முக்கியம் பெறும் வேகமான லாபம் கிடைக்கும்.காதல் விஷயங்கள் அவசர அவசரமாக வரும். இந்த வருட மீன ராசியாரின் சிலரின் காதல், பணியாளர்களுடன் ஏற்படும். சிலரின் காதல் வயதான பெண்களுடன் வரும். ஆக இந்த வருடம் காதலுக்கு உகந்ததா என உறுதியாக கூற முடியவில்லை. காதல் காமம் என இந்த விஷயத்தில் ரொம்ப கட்டுப்பாடாக இருப்பது நல்லது. காதல் கல்யாணம் இந்த வருடம் தவிர்த்துவிடுவது நல்லது.சினிமா கலைஞர்கள். புகழின் உச்சிக்கு செல்வர். ஆனாலும் இந்த புகழ், தொழிலில் சில எதிர்மறை நிகழ்வுகளை கொடுத்துவிடும். எனவே கலைஞர்கள். சற்று நிதானமாக இருப்பது நல்லது.அனேக, மீன ராசியார், வேலை கிடைக்கப் பெறுவர். முழுமையான அரசு வேலை கிடைக்க வாய்ப்பில்லை.
கடன் கிடைக்கும் என்றாலும், அது கைக்கு கிடைக்க தாமதமாகும். எதிரிகள் இம்சை, நோய் தாக்கம் இருக்காது.
திருமணம், இந்த வருடம் நடந்துவிடும். சிலருக்கு தாய்வழி வரன் அமையும். இந்த வருடம், ஒரு வரன் கொஞ்சமாவது நல்லபடியாக இருந்தால், சட்டென்று முடித்துவிடுங்கள். இல்லையெனில் வரனை தேர்ந்தெடுக்க, ரொம்ப குழப்பம் ஏற்படும். திருமணத்தில் வீடு சம்பந்தமான கௌரவ பிரச்சினை தோன்றும். சிலர் வீட்டு திருமணம், வியாபார பங்குதாரருடன் நடக்கும்.வணிகத்தில், சில வில்லங்கங்கள் தவிர்க்க முடியாதது.
சில வியாபார சம்பந்த திருமணங்களால், பல இம்சைகள் வந்துசேரும். ஏற்றுமதி- இறக்குமதி தொழில் செய்வோர். சில தகவல், தரவுகள் பிழைக்கு ஆளாகக்கூடும்.பணவசதி, அதிகரிப்பதால், குலதெய்வக்கோவில், இஷ்ட தெய்வக் கோவிலுக்கு, நிறைய காணிக்கை செலுத்துவீர்கள். மேலும் கோவில் தேவை கேட்டும் வேண்டியதைச் செய்வீர்கள். இந்த வருடம், உங்கள் தொழில், நல்ல கௌரவம் தரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்வோர் மிக நல்ல ஏற்றம் பெறுவர். அதுபோல், திருமண மையம் வைத்துள்ளோரும் தொழில் சுறு சுறுப்பு பெறுவார்கள். வழக்கறிஞர்கள் நலம் காண்பர். சிலர் இதுவரையில் தாங்கள் செய்த வேலையை, அடிப்படையாக கொண்டு, சொந்த தொழில் ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களில் சிலர், ஏடிஎம்-ல் பணம் வைக்கும் பணியும், அது சார்ந்த ஒப்பந்த தொழிலும் பெறுவீர்கள். வயதான பெண்களின் மறதி நோய் மற்றும் கர்ப்ப நோய் சார்ந்த உதவிகள் மற்றும் தொழில் பெறுவீர்கள்.
மீன ராசி அரசியல்வாதிகள், இந்த வருடம் நிறைய அலைச்சல், செலவும் பெறுவீர்கள். இந்த வருடம் தேர்தல் வந்தால், உங்கள் வாழ்க்கைத்துணை அல்லது சக நண்பர்களின் இடத்தை மாற்றி நிற்பீர்கள். இந்த தேர்தல் உங்கள் கௌரவம் சார்ந்ததாக இருக்கும். எனவே, பிற இனத்தவர், வேறிடம், வேறு மாநிலத்தில் இருந்து, இங்கு வசிக்கும் மனிதர்களுக்கும், பாராட்சமின்றி, செலவு செய்வீர்கள். இதனால் உங்கள் குடும்பத்தார் ரொம்ப எரிச்சல் அடைந்து தடை ஏற்படுத்துவர். இதனால் அரசியல்வாதிகள், வெகு குழப்பம் அடைய நேரிடும். எனவே மீன ராசி அரசியல்வாதிகள், ஒரு முறைக்கு, பல முறை யோசித்து தேர்தலில் நிற்கவும்.கவனம் தேவை: பேச்சில் கவனமாக இருங்கள்.
உங்களின் சொற்கள் சிலசமயம் தவறாக புரிந்து கொள்ளப்படும். பண செலவில் தடை ஏற்படும். உங்கள் பணியாளர்கள் சிறு தொந்தரவு தரக்கூடும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர்கல்வி, வெளிநாட்டு பயணம், நீதிமன்றம் இவற்றில் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மனை வணங்கவும். சிவனை வணங்கவும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/02/year-palan-conted-2026-01-02-17-03-00.jpg)