இந்திய ஆட்சிப்பணியிலுள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மத்தியில் மட்டுமல்ல… வருங்கால ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கனவுகளை சுமந்துகொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் மத்தியிலும் பேரதிர்ச்சியை உண்டாக்கிவிட்டது பிரபல ஐ.ஏ.எஸ். அகாடெமியின் நிறுவனத்தலைவர் சங்கரின் மரணச்செய்தி.
2018 அக்டோபர் 12- ந்தேதி அதிகாலை அப்படியொரு பொழுதாக விடியும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மயிலாப்பூரிலுள்ள அவரது வீட்டில் பிணமாய்த் தொங்கிய சங்கரின் உடல் தனியார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனைக்குப்பின், இராயப்பேட்டை மருத்துவமனையின் பிணவறைக்கு கொண்டுவரப்பட்டது. பதற்றத்துடன் விரைந்துவந்தார் நமது ஆசிரியர். இணை கமிஷனர் சுதாகர் ஐ.பி.எஸ்., எம்.எல்.ஏ. கருணாஸ், நடிகர் சூரி, இயக்குநர் சற்குணம், துணைகமிஷனர் அரவிந்த் ஐ.பி.எஸ். உள்ளிட்ட பிரபலங்களும் சங்கரின் பயிற்சி மையத்தில் படித்த மாணவ-மாணவிகளுடன் திரண்டுவந்து கண்ணீரால் மூழ்கடித்தனர். அங்கிருந்து, அவரது பயிற்சி மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல், அங்கே அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அவரது சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்தியாவின் தலைநகரான டெல்லிக்குச் சென்று படித்தால்தான் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 24 சிவில் சர்வீஸ் தேர்வுகளிலும் வெற்றிபெற முடியும் என்ற நிலையை மாற்றி, தமிழகத்தின் தலைநகரான சென்னையின் அண்ணாநகரையே மாணவர்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் இடமாக மாற்றியவர் சங்கர். இலவச பயிற்சி கொடுக்கிறோம் என்ற விளம்பரங்களால் ஏழை-எளிய மாணவர்கள் ஏமாற்றப்படும் சூழலில்...… பணக்கார மாணவர்களிடம் கட்டணமும் ஏழை எளிய மாணவர்களிடம் குறைந்த கட்டணமும் பெற்றுக்கொண்டு சிவில் சர்வீஸ் வெற்றியாளர்களை உருவாக்கிய கிங்மேக்கர் சங்கர். இப்போது, அண்ணாநகரில் பயிற்சி மையங்களை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் இவரது பயிற்சி மையத்தில் பயிற்சி கொடுத்தவர்கள் அல்லது பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள்தான்.
""எத்தனை பயிற்சி மையத்துக்குப்போனாலும் சங்கர் சார் சொல்லிக்கொடுக்கிறமாதிரி வராது. அவர் கொடுத்த தன்னம்பிக்கைதான் பல பேரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக்கியிருக்கு''’என்று வெளிமாநிலங்களிலிருந்து வந்து சங்கரிடம் படிக்கும் மாணவ-மாணவிகள் பலருண்டு. ""ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற முடியாமல் தொடர்ந்து தோல்விகளைத் தழுவிய சங்கர், துவண்டுபோகாமல் பயிற்சி மையத்தை தொடங்கி பல ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.களை உருவாக்கிய தன்னம்பிக்கையாளர். அப்பேர்ப்பட்டவரின் இந்த மரணம் அதிர்ச்சியளிக்கிறது'' என்கிறார்கள் இவரைப்பற்றி அறிந்தவர்கள்.
தொழில்ரீதியான பல்வேறு நெருக்கடிகள், தனிப்பட்ட சூழல்களின் தாக்கம் இத்தகைய பேரிழப்புக்கு தள்ளிவிட்டது.
"சமூகநீதிப் பார்வை -இந்தி ஆதிக்க எதிர்ப்பு -தமிழ்மொழியில் பயிற்சி' என எளிய மாணவர்களின் தோழரான சங்கரின் ஐ.ஏ.எஸ். அகாடெமியில், இந்த பேரிழப்புக்குப் பிறகும் உடனடியாக பயிற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன என்பதுதான் இந்த பெருஞ்சோகத்திலும் ஒரு ஆறுதல்.
-மனோசௌந்தர்