காலங்காலமாக மலைவாழ் மக்களின் உடைமைகள் மீதும், அவர்களின் உரிமைகள் மீதும் அரசுகளும், கார்பரேட் நிறுவனங்களும் அடக்குமுறைகளை நிகழ்த்தி வருகின்றன. அவை, பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைக்கப்படுவதும் அவர்களுக்கான நீதி மறுக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. அதற்கு வச்சாத்தி சம்பவம் ஓர் உதாரணம். இப்படி தங்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை உலகிற்குத் தெரியப்படுத்தவும் இயலாதவர்களாக இருந்த மலைவாழ் மக்கள் முதன்முறையாகக் காட்டை விட்டு நகருக்குள் வந்து தங்களுக்கான நீதியை வேண்டிப் போராடிய சம்பவம் தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தது. அதுகுறித்து 02.07.1992 தேதியிட்ட நக்கீரனில் வெளியான கட்டுரை:-
அரசியல் கட்சிகளின் கற்பனை ஊர்வலம், ஆசிரியர்களின் கோரிக்கை ஊர்வலம், மாதர் சங்கங்களின் எதிர்ப்புப் பேரணி என்று பழக்கப்பட்ட சென்னைத் தெருக்கள் கடந்த ஜூன் பத்தாம் தேதி மாலை முதன் முறையாக மலைவாழ் மக்களின் ஆவேசமான பேரணியைச் சந்தித்தது.
சராசரி குடிமக்களிடம் இருந்தும் வெளி உலகத்தோடும் தொடர்பை முழுதாய் அறுத்து விட்டு மலைப் பகுதிகளில் வாழும் மலைவாழ் மக்கள் தங்கள் கோரிக்கைகளைச் சொல்வதற்காக முதன் முறையாக மலைகளை விட்டு சென்னை நோக்கி வந்தனர். பேரணியை பூங்காவிலிருந்து துவங்கிய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கப் பேரணி அம்பேத்கார் திடலில் தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது.
அவர்களின் ஆவேசத்துக்கு காரணமான பிரச்னைகளை அவர்களிடம் பேசித் தெரிந்து கொண்டோம். பல்வேறு விதமான அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் அவர்களிடம் இருந்து வந்தன.
சந்தன மரக் கடத்தல்காரர்களும், லேவாதேவிக்காரர்களும் மலைவாழ் மக்களை சித்திரவதை செய்வது ஒரு புறமிருக்க இன்னொரு புறம் வனத்துறை அதிகாரிகளும் காவல் துறையினருமே இந்த மக்களை கொடுமைப்படுத்தும் கொடூரம் சகஜமாக நடந்து வருகிறது. அதாவது தமிழக அரசுக்கு சொந்தமான வீடற்ற பல ஏக்கர் நிலங்கள் வனத்துறை இலாக்கா விடம் உள்ளது. இந்த நிலங்களை ஆர்.டி.ஓ., தாசில்தார் போன்ற அதிகாரிகளின் தகிடுதத்தங்களோடுதனியார் முதலாளிகளுக்கும் ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கும் வனத்துறை அதிகாரிகள் தாரை வார்த்துக் கொடுத்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சித்தேரி மழைத் தொடர்களில் வனத்துறை அதிகாரிகள் அப்பாவி மலைவாழ் மக்கள் மீது பொய் வழக்குகள் போட்டு தங்களின் கடமை உணர்ச்சியை நிரூபித்து வருகின்றனர். இதற்காக வனத்துறை அதிகாரிகள் அப்பாவி மலைவாழ் பெண்களின் கூந்தலைப் பிடித்து அடிப்பதற்கும் தயங்குவதில்லை! எதிர்த்துக் கேட்கும் ஒன்றிரெண்டு இளைஞர்களை அதிகாரிகளின் பூட்ஸ் கால்கள் மிதித்து நசுக்குகின்றன. இப்படி அப்பாவி மக்களை மிரட்டி ஆயிரக்கணக்கில் பணம் பறிப்பதோடு மட்டுமன்றி பெரும்பாலான மக்கள் மீது சந்தனக்கட்டை கடத்தியதாக பொய்வழக்கு போடப்பட்டு வருகின்றது.
ஆவாலூர் தாதான்கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வெங்கண் என்பவருக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை சந்தைக்குப் போன வெங்கணை கைது செய்து அடித்து மிதித்துள்ளனர் கோட்டப்பட்டி வனத்துறை அதிகாரிகள். இதேபோல செலம்பை குலுத்தம்பி, நத்தம் தேக்கனாம்பட்டி ஆகிய கிராம மக்கள் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது.
கோட்டப்பட்டி வனத்துறை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தன் ரௌடி ராஜ்ஜியம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவ்வப்போது உயர் அதிகாரிகளுக்கு அன்பளிப்புகள் கொடுத்து சமாளித்து விடுகிறார். கிருஷ்ணமூர்த்தியின் அடாவடித்தனங்களுக்கு பயந்து கொண்டு பெரும்பாலான மக்கள் கோட்டப்பட்டியை விட்டு மூட்டை முடிச்சுக்களோடு வேறு கிராமத்துக்கு சென்று விட்டனர்.
கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி என்பவர், ‘‘ஏற்கெனவே வறட்சியால் துடிச்சிட்டுருக்கோம். ஆபீசருங்க தொல்லையால் பொட்டப்பசங்க வெளீல நடக்க முடீலீங்க. போனவாரம் வீடு புகுந்து எல்லோரையும் அடிச்சாங்க. ஐயோ, சாமி! விட்டுருங்கன்னு கத்தினோம். ஏண்டா செத்துப்போன ‘கெளமான’ திங்கிறீங்களே, உங்களைக் கொல்லாம என்ன பண்றதுன்னு சொல்லியே அடிச்சாங்க. அப்படித்தான் கேஸூம் போட்டுருக்காங்க,’’ என்றார் வருத்தமான குரலில்.
வெள்ளிமலை கல்வராயன் மலை போன்ற பகுதிகளுக்கு பஞ்சாயத்து அந்தஸ்துகள்கூட தராமல் அரசு தப்பித்து வருகிறது. அரசின் இந்த அலட்சியப் போக்கால் தங்கள் குறைகளை யாரிடம் போய் சொல்வது என்று தெரியாமல் மலைவாழ் மக்கள் குழம்பிப் போய் உள்ளனர். வி.ஏ.ஓ.போன்ற குட்டி அதிகாரிகளும் இதைச் சாக்காகப் பயன்படுத்திக் கொண்டு ‘இதுக்கு நான் பொறுப்பில்லை’ என்று சொல்லிவிட்டு சுலபமாகத் தப்பித்துக் கொள்கின்றனர்.
அணக்கரை கிராமத்தைச் சேர்ந்த கரலியா என்ற முதியவர் நம்மிடம், ‘‘ஒதுக்கப்பட்ட மக்கள் கவனிப்பில்லாமக் கெடக்கோம். ரொம்ப நாளா ஓட்டுப்போட்டுக்கிட்டு இருக்கோம். ஆனாலும் அன்றாடங்காய்ச்சி பொழைப்பு தான் எங்களுக்கு. அரவயிறு கஞ்சி குடிச்சிட்டு இருந்தோம். இப்போ அதுவும் முடியல. போலீசுகாரங்க பிடிச்சுட்டுப் போயி அடிச்சு வெரட்டுறாங்க. யார்ட்ட போய் அழுவுறதுன்னே தெரியல’’ என்றார். காலகாலமாய் அடிமைப்பட்டு வந்தாலும் மலைவாழ் மக்களின் புதிய தலைமுறையினர் தங்களுக்கான புதிய பாதையை உருவாக்கிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர்.
அரசின் கொடூரத் தாக்குதல்களுக்கு பதிலடியாக ‘‘தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்’’ உருவாக்கி சென்னையை நோக்கி கோரிக்கை அம்புகளை வீசவும் தொடங்கி விட்டனர். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சண்முகத்தை நாம் சந்தித்தபோது, ‘‘ஜனநாயகம் என்று நமது அரசாங்கம் சொல்லிக் கொண்டாலும் அனைத்து தரப்பு மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டுதான் வருகின்றனர். சொந்த நாட்டிலேயே அனாதைகள் போல தனித் தீவாக வாடும் இவர்களை யாரும் சீண்டுவதும் இல்லை. அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் வாழ்வு உண்டு.அரசை எதிர்த்து நாங்கள் சங்கம் துவங்கியுள்ளோம். மலைவாழ் மக்கள் மீது அரசு போட்டுள்ள பொய்வழக்குகளை வாபஸ் வாங்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை’’ என்றார் ஆணித்தரமாக.
தனித்தீவாக இருட்டு வாழ்க்கை நடத்தும் மலைவாழ் மக்களும் போராட்டத்தில் குதித்திருப்பதைப் பார்க்கும்போது அநியாயத்தையும் அதர்மத்தையும் கொள்கையாகக் கொண்ட அரசுக்கு முடிவு நெருங்கி விட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.